சமீபமாக, சூர்யா சேதுபதி சந்திக்கும் ட்ரால் பெரிதாக ஆச்சர்யமூட்டவில்லை.
சொல்லப்போனால், நம்மை யார் தான் சரியாக புரிந்து வைத்திருக்கிறார்கள்? நெருங்கிய சொந்தங்கள் என்று நாம் நினைப்பவர்கள் கூட, அந்தப்பக்கம் போனால், நம்மைப் பற்றி வேறு விதமாகத்தான் பேசுவார்கள். இல்லை என்று யாராவது ஒருவர் சொல்ல முடியுமா? அப்படிச் சொல்கிறாரென்றால், விவரம் தெரியாமல் சொல்கிறார் என்று தானே பொருள்?
அதெல்லாம் நமக்குத் தெரியவராதவரைக்கும் தான் சொந்தங்களாக இருக்க முடியும். அடுத்தவர் மனக்குரல்கள் நமக்குக் கேட்டுவிட்டால், இங்கே நண்பன், உற்றார், உறவினர், சொந்தங்கள் என்று எந்த உறவும் எவருக்கும் இருக்காது.
மறதியும், டெலிபதி தெரியாமல் இருப்பதுவும் தான், நம்மை சக மனிதர்களுடன் நட்புறவாக வாழ வைக்கிறது என்றால் அது மிகையில்லை.
இப்படிச் சொல்வதால், விஜய் சேதுபதியின் மகனுக்காக வரிந்து கட்டுகிறேன் என்று எண்ண வேண்டாம். அது நோக்கமில்லை. உண்மையிலேயே, நம்மை முழுமையாக, துல்லியமாகப் புரிந்து வைத்திருப்பவர் நாம் மட்டும் தான். அதில் மாற்றுக்கருத்தே இல்லை. நாம் என்ன நினைத்து ஒன்றைச் செய்தோம், அதை மற்றவர்கள் எப்படியெல்லாம் புரிந்துகொண்டார்கள் என்பதெல்லாம் நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. ஆண் துணை இல்லாமல் இருக்கும் பெண் என்றால் வெகுஜனப் பார்வை என்ன? கருப்பாக இருப்பவன் மீதான மற்றவர்களின் அணுகுமுறை என்ன? எளியவன் மீது அதிகாரம் மிக்கவனுக்கு இருக்கும் பார்வை என்ன? துல்லியமான புரிதலின் அடிப்படையிலா இதெல்லாம் நடக்கிறது? அஜித்குமார், ம்குமார் போன்றவர்கள் யார்?
மற்றவர்களிடம் இருப்பதெல்லாம் அவரவர் பார்வையில் நாம் பயன்படக்கூடிய ஒரு கோணம் மட்டுமே. அந்தக் கோணத்தின் வழி மட்டுமே நம்மைப் புரிந்து வைத்திருப்பார்கள். அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
மைக் முன்னால் நடிக்கும் பல நடிகர்கள் இருக்கிறார்கள். மைக்கில் சொல்வதற்கெண்று ஒத்திகை பார்க்கப்பட்ட வரிகளை மனனம் செய்து ஒப்புவிப்பவர்கள் இருக்கிறார்கள். ஒருமுறை, ஷாருக்கானிடம் 'ஜோக்கர்கள் யார்?' என்று கேட்டபோது 'Voters' என்றார். அது நகைச்சுவைக்குச் சொல்லப்பட்ட பதில் அல்ல. ஒரு தயாரிப்புடனே மைக்குகளை அண்டுவார்கள். காமிரா முன்னால் நிற்பார்கள். சூர்யா அப்படி தயார் செய்தது போல் தோன்றவில்லை. அப்படித் தயார் செய்திருந்திருந்தால் இப்படி வாயில் பபுள்கம்முடன் வந்து மீடியாக்களுக்குக் கன்டன்ட் கொடுத்திருக்க மாட்டார் என்கிற அளவில் மட்டுமே எனக்குப் புரிகிறது.