என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday 2 April 2022

சில கவிதைகள்

சில கவிதைகள்



வேட்டையும், கைவிடுதலும் - கவிதை

கைவிடத்தகுதியான‌
கற்பிதங்களால்
சமன்படும் வாழ்வியலை கொண்ட‌
ஓர் வேட்டை விலங்கின் வெறிக்கே
பலியாகின்றன‌
கைகொள்ளத் தகுதியான‌
கற்பிதங்களால்
சமன்படும் வாழ்வியலை கொண்ட‌
புள்ளிமான்கள்...

****************************************


தேர்வு - கவிதை
சருகுகள்
சிட்டுக்குருவிகளின் குடிசைகளுக்கெனவே
ஆசை ஆசையாய்
செய்யப்படும் மரங்களின் தேர்வுகள்...

****************************************

இறுதி ஆசை - கவிதை
மின் கம்பியிலிருந்து
தவறி விழுந்து
உயிரிழக்கும் முன்
ஆசை தீர
ம‌ஞ்சள் சூரியனை
கடைசி உணவாய்
விழுங்கிக்கொள்கிறது
ஒரே ஒரு துளி மழை ...


****************************************


போர் - கவிதை

அடர்த்தியான சூரியனை
சல்லடையாய் துளைக்கின்றன‌
மரத்தின் இலைகள்...

குற்றுயிராய் விழுந்து கிடக்கிறது
சூரியன்...

****************************************

கலைந்து கிடக்கும் பாதைகள் - கவிதை

அதனதன் போக்கில்
வேர்விட்டு வளர்ந்த மரங்களின்
நெரிசலில் சிக்கி
கலைந்து கிடக்கின்றன பாதைகள்
யாரேனும் தங்களை மீட்டெடுக்க
வருவார்கள் என்று...

****************************************

கோணம் - கவிதை


விண்கல்லடி பட்ட,
கொப்புளங்கள் கூடிய,
முற்றிலும் உயிர்ப்பற்ற,
ஆங்காங்கே கருத்த‌
தனது முகத்தை
பூமியில்
வெண்ணிலவாகத்தான் பார்க்கிறார்கள்
என்கிற உண்மை
நிலவுக்கு தெரிந்திருக்குமா?...

****************************************



ராம்பிரசாத்
- 2016-09-11