அரசுப்பள்ளி மாணவ வாசகத் திட்டம்
5 அரசுப்பள்ளி மாணவர்களில் நன்றாகப் படிக்கும் மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களை ஊக்கப்படுத்துவிதமாகவும், அவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் முகமாகவும் உரையாற்ற ஒரு சிறப்பு விருந்தினரை அழைத்து ஒருங்கிணைக்கும் நிகழ்வு தான் 'அரசுப்பள்ளி மாணவ வாசகத் திட்டம்" என்பது.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள திரு ரவி சொக்கலிங்கம் அவர்கள் அழைத்தபோது ஆச்சரியமாக இருந்தது. 'எப்படிக் கண்டுபிடிக்கிறாங்க? மண்டை மேல கொண்டையை மறந்திட்டமோ" என்று தான்.
நான் அரசு உதவி பெறும் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில், அரசின் மெரிட் உதவித்தொகையுடன் பள்ளிப்படிப்பை முடித்தவன். பொறியியலும் மெரிட் சீட் தான். பெயருக்குத் தான் அரசு உதவி பெறும் பள்ளி. தரத்தில் அரசுப்பள்ளி அளவில் தான் இருக்கும்.
ஐந்து அரசுப்பள்ளி மாணவர்கள் முன் நான் போய் நின்றால் அந்த மாணவர்களுக்கு என்ன தோன்றும்?
"இவனாலேயே அமெரிக்கா போகமுடியுதுன்னா, அப்போ நம்மாளயும் கண்டிப்பா முடியும்" என்று தானே.
(உடனே "ஏம்பா அமெரிக்கா போறதுதான் சாதனையா"ன்னு கேக்கக்கூடாது. அந்த சின்ன முதிர்ச்சி அற்ற வயதில், இது போன்ற சில வார்த்தைகள் தான் நம் மனதில் இருப்பதை அவர்களுக்கு கடத்தும் என்கிற அடிப்படையிலேயே இந்த வார்த்தைப் பிரயோகத்தைக் கையாள்கிறேன்.. )
எனக்கும் அப்படித்தான் தோன்றியது. இதை வைத்துப்பார்க்கையில், நான் இந்த உயர்ந்த நோக்கத்துக்கு மிக மிகக் கச்சிதமான ஆள் தான் என்று தோன்றியது. ஆதலால், திரு ரவி சொக்கலிங்கம் அவர்கள் முகநூலில் அணுகி அழைத்தவுடன் ஒப்புக்கொண்டுவிட்டேன்.
நிகழ்வு நவம்பர் மாதம் ஆறாம் திகதி இந்திய நேரப்படி மாலை நான்கு மணிக்கு வலைதமிழில் நடக்க இருக்கிறது.
இந்த நிகழ்வில் பங்கு பெற இருக்கும் பள்ளிகள்:
1. அரசு உயர் நிலைப்பள்ளி, ஊனையூர், திருச்சி மாவட்டம்
2. அரசு உயர் நிலைப்பள்ளி, காருகுடி
3. ஊ.ஒ.தொடக்கப்பள்ளி, இடைமலைப்பட்டிபுதூர், திருச்சி
4. ஞானாம்பிகா அரசு உதவி பெரும் தொடக்கப்பள்ளி, கருப்பம்புலம், வேதாரண்யம் வட்டம், நாகை மாவட்டம்.
5. ஊ.ஒ. நடு நிலைப்பள்ளி, பரப்பாளையம், திருப்பூர்.
தயாரிப்பெல்லாம் ஒன்றும் தேவை இருக்காது என்றே எண்ணுகிறேன். அவர்கள் முன் நான் போய் நின்றாலே போதுமானது. மற்றதெல்லாம் தெள்ளத்தெளிவாக அவர்களுக்கே புரிந்துவிடும்.
இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக என்னை அழைக்கத் தேர்வு செயததற்கு திரு ரவி சொக்கலிங்கம் அவர்களுக்கும், நிகில் கம்யூனிகேஷன்ஸுக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.