உ.பி. பாலியல் கொலை விவகாரம்
உ.பி.யில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கிறார்கள். நிர்பயா வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் அடைந்த சித்திரவதைகளுக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் இந்தப் பெண்ணிடமும் அரங்கேற்றியிருக்கிறார்கள்.
கொஞ்ச நாள் முன்பு ஆந்திராவில் ஒரு பெண் மருத்துவரை, இப்படிக் கடத்திப்போய் பலாத்காரம் செய்துவிட்டு பெட்ரோல் ஊற்றி எரித்தார்கள். எதிர்காலம் குறித்த எத்தனையெத்தனை கனவுகளுடன் இருந்திருப்பாள் அவள்?
பெண்களிடம் தான் பேச வேண்டி இருக்கிறது.
பொது வெளியில் தனக்கான சுய தனித்துவ அடையாளத்துக்காகவும், குடும்பத்தின் பொருளாதாரத்திற்காகவும், இன்னபிற கடமைகளுக்காகவும் கொஞ்ச நஞ்சம் தைரியத்தை திரட்டிக்கொண்டு உழைக்க வெளிவரும் பெண்களை, இந்த விதமான குற்றங்கள் மென்மேலும் பயமுறுத்தக்கூடும். வீட்டிற்குள்ளேயே அடைத்துவைக்கக் கூடும். அதற்கு வழி விட்டாற்போல் இருந்துவிடக்கூடாது.
இதன் பிறகு தான் முன்பிருந்ததைவிடவும் வேகமாய் இயங்கவும் வேண்டும். ஆதலால், இதற்கெல்லாம் பயப்படாதீர்கள் என்று அவர்களிடம் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டி இருக்கிறது.
நோ என்றால் நோ தான் என்று திரைப்படம் எடுத்தாகிவிட்டது. தண்டனைகளை கடுமையாக்கிவிட்டாயிற்று. பெப்பர் ஸ்பிரே, அவசர கால எண்கள், என்று எத்தனையோ தீர்வுகள் செயல்படுத்தியாகிவிட்டது. பெண்களுக்கெதிரான குற்றங்கள் நிற்பதாகத் தெரியவில்லை.
பெண்களுக்கான பாதுகாவல் மிக்க சமூகங்களை வேறெப்படித்தான் கட்டமைப்பது என்று புரியவில்லை.
மரியாதையும், மதிப்பும் மிக்கவர்களாக அவர்களை சமூக பொது தளங்களில் நிறுத்தாததால் வரும் பிரச்சனைகளோ என்று யோசிக்க வைக்கிறது. ஊடகம் ஒன்று தான் பெரும்பான்மை மக்களின் கல்விக்கான ஆதாரமாக இருப்பின் இந்த தேசத்தில் வேறென்ன நடக்க முடியும்?
பாதிக்கப்படும் பெண்களை பெருந்தன்மையுடன் ஆண்கள் ஏற்றுக்கொள்வதை இந்தச் சமூகம் ஊக்குவிக்கவும், அங்கீகரிக்கவும் வேண்டும். நம் சமூகம் இன்று அந்த இடத்தை நோக்கி ஓரளவு நகர்ந்திருக்கிறது எனலாம். இப்போதெல்லாம் பள்ளிகளிலேயே காதல்கள் துவங்கிவிடுகின்றன. கல்லூரி முடித்து வேலைக்கு வருகையில் பெரும்பான்மை ஒன்றிரண்டு உறவு முறிவுகளை சந்தித்திருக்கிறார்கள். ஆகையால், இது ஒரு பொருட்டாக இனி வரும் காலங்களில் இராது என்பது என் பார்வை.
ஆண்-பெண் இருபாலரையும் அவர்தம் தனித்துவ பண்புகளை வைத்தே அடையாளப்படுத்த வேண்டும் என்று நான் சொல்வதன் பின்னணியில் உள்ள பல காரணங்களுள் இதுவும் ஒன்று.
நீட் போன்ற தேர்வுகளை வலிந்து திணிப்பதில் பேரார்வம் கொண்டிருக்கும் அரசுகள், பாலியல் கல்விக்கென ஒரு பாடத்தை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.
பெண்களை, அவர்தம் அசலான விருப்பங்களுடனும், சிந்தனாமுறையுடனும், இயங்கு இயல்புடனும் புரிந்துகொள்ளவும், சமூகத்துக்குப் பயன்படும் நோக்கில் அவர்களுடனான சம்பாஷனைகளை உருவாக்கிக்கொள்ளவும் ஏது செய்வதான பாடங்களுடன் பாலியல் கல்விகள் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
எவ்விதம் ஆண்களுக்கு பெண்களின் அசலான சிந்தனாமுறை, இயல்புகள், அவர்களுக்கென்ரு ஒரு மனம், அதிலொரு புரிதல் என்று இருப்பது குறித்து தெரிவதில்லையோ, அதே போல் பெண்களுக்கும் ஆண்களின் இயங்குமுறை, இயல்புகள் புரிந்திருப்பது போல் தெரியவில்லை. இது போன்ற பாலியல் குற்றங்களில் 'ஆண்கள் பெண்கள் குறித்து பயிற்றுவிக்கப்பட வேண்டும்' என்று சொல்லப்படுவதிலேயே, மேற்கொண்டு வினவினால், 'பெண்கள் ஆண்களை பலாத்காரம் செய்கிறார்களா?' என்று கேட்க்கப்படுவதிலேயே இது புலனாகிறது. ஆக, இதுபோன்ற எதிர்பாலினம் குறித்து வெளிச்சம் பாய்ச்சும் பாலியல் கல்வி பாடங்கள் பாடத்திட்டங்களிலே சேர்க்கப்படவேண்டும் என்பது என் பரிந்துரை.