என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday, 24 July 2020

(என்னமோ சொல்லணும்னு தோணுச்சு) - 1

21-ஜூலை-2020 ஆகிய இன்றைய தேதிக்கு தமிழ் சமூகத்தில் ஊடகங்களில் தீயாகிக்கொண்டிருக்கும் சில விஷயங்களைப் பார்த்துவிட்டு சொல்ல வேண்டும் என்று எனக்கு தோன்றியவைகளை பின்வருமாறு ஒழுங்குபடுத்தலாம்.

"கிழக்கு என்று ஒன்று இருந்தால், மேற்கு என்ற ஒன்றும் இருக்கவே செய்யும். வெறும் கிழக்கை மட்டும் வைத்து பூமி சுழலாது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் கிழக்கையும், மேற்கையும் எப்படி சமமாக ஏற்றுக்கொள்வது என்பதைத்தான். கிழக்கும் மட்டும் தான் இருக்க வேண்டும் என்றோ, மேற்கு மட்டும் தான் இருக்க வேண்டும் என்றோ நிர்பந்திப்பவர்கள் அரைவேக்காடுகளே. அரைவேக்காடுகளால் மட்டும் தான் அப்படியெல்லாம் எண்ணிக்கொண்டிருக்க  இயலும்.

ஆதலால், யாரும் யாருக்கும் எவ்விதமான அட்வைஸும் செய்யத்தேவையில்லை. பூமியின் ஜனத்தொகை 100 சதம் எனில் அதில் 90 சதம் எந்தப் புத்தகத்தையும் வாசிக்காதவர்களே. இவர்களால் தான் இந்த உலகத்தின் அச்சாணியும் சுழல்கிறது என்பதை நம்மில் யாரும் மறுக்க இயலாது.

ஒரு கட்டுக்கோப்பான பாதுகாவல் மிக்க இடம் தான் நாம் எல்லோரும் ஏங்குவது. ஆனால், அப்படியான ஒன்றில் இருக்க வாய்ப்பு கிடைத்துவிடுவதாலேயே, அது எல்லோருக்கும் சாத்தியம் என்று வாதம் செய்வது போலொரு அறிவிலித்தனம் வேறு இருக்க முடியாது.

அந்தப் பாதுகாவல் மிக்க இடத்தை அடைவதிலும் கூட உங்கள் சுய முயற்சிகளின் பங்கு வெறும் 50 சதமாகத்தான் இருக்க முடியும். எஞ்சியது, இந்த பிரபஞ்சத்தினுடையது. 'பிரபஞ்ச அமைப்பின் ஆசீர்வாதம்'. இதைத்தான் கடவுள் என்கிறோம். ஆதலால், நீங்கள் உங்களை அப்படியொரு பாதுகாவல் மிக்க இடத்தில் இருத்திக்கொள்ள வாய்ப்பளித்தமைக்கு இந்த பிரபஞ்சத்துக்கு வேண்டுமானால் நன்றி சொல்லிக்கொள்ளலாம். ஆனால், அதைத் தக்க வைக்கவும் கூட  நாளொருமேனியும் அதே பிரபஞ்சத்திடம் கைகட்டி யாசகம் வேண்டி நிற்கவும் வேண்டும் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

அந்த 'பிரபஞ்ச அமைப்பின் ஆசீர்வாதம்' 50 சதம் தங்களுக்கு சாதகமாக வாய்க்காதவர்களும் இந்த பூமியில் பிறக்கவே செய்கிறார்கள். விதி என்று ஒற்றை வார்த்தையில் அவர்களைக் கடந்து போவது போல் ஒரு கயவாளித்தனம் வேறு இருக்க முடியாது. அவர்களுக்கு, 'பிரபஞ்ச அமைப்பின் ஆசீர்வாதம்' சாதகமாக வாய்த்தவர்கள் உதவ வேண்டும். அப்படி உதவ மனமில்லையென்றாலும் உபத்திரவம் செய்யாமலாவது இருக்கலாம் என்பது என் பரிந்துரை.

'அடுத்தவர்களுக்கு அட்வைஸ் செய்வது' என்பது, அந்த 50 சதவிகித பிரபஞ்ச ஆசீர்வாதத்தை தங்களுக்கு சாதகமாக வாய்க்கப்பெற்றவர்கள், தாங்கள் ஏதோ கடினமாக உழைத்ததன் பலனாகவே அடைந்ததாய் எண்ணிக்கொண்டிருப்பதன் குறியீடு தான். அது ஒரு விதமான, உளவியல் பிரச்சனை. யாரேனும் நல்ல மனோதத்துவ நிபுணர்களை அவர்கள் அணுகி, மருத்துவம் பெற்றுக்கொள்வது அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கு நல்லது. "

 - எழுத்தாளர் ராம்பிரசாத்