என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Sunday, 19 July 2020

ழகரம் - திரைப்படம்

ழகரம் - திரைப்படம்


பத்து லட்சத்தில் திரைப்படம் சாத்தியமா?
சாத்தியம் என்று நிரூபித்துக்காட்டியிருக்கிறார் கிருஷ். இந்தப்படத்தின் மூலமாக இயக்குனர் அவதாரமுமெடுத்திருக்கிறார் கிருஷ். பெரிய நட்சத்திரப்பட்டாளம் இல்லாமல் மிக மிக எளிமையாக எடுத்திருக்கிறார்கள்.

சினிமாவையே கனவாகக் கொண்டிருக்கும் ஏகப்பட்ட உதவி இயக்குனர்களுக்கு இந்தப் படம் ஒரு மாபெரும் நம்பிக்கையைத் தரவல்லது. இது போன்ற திரைப்படங்கள் இனி வரும் காலங்களில் அதிக அளவில் வெளியாக வேண்டும் என்று விரும்புகிறேன். Crowd funding முறையில் செய்ததாகச் சொல்லியிருக்கிறார் கிருஷ். இது ஒரு நல்ல மார்க்கம். சம்பளம் வாங்காமல் நடித்துக்கொடுத்த நடிகர் நந்தாவுக்கு எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.



'ப்ராஜக்ட் ஃ' நாவல் எழுதிய கவா கம்ஸ் மீது வெளிச்சத்தைப் படரச்செய்திருக்கிறது 'ழகரம்' திரைப்படம். வரவேற்க்கப்பட வேண்டிய ஒன்று. (இப்படியெல்லாம் நடக்காவிட்டால் சிலரது தனிப்பட்ட சுயநலக் கீழ்மைகளின் வடிகாலாகவே தொடர்ந்துவிடும் விதி தமிழ் அறிவுசார் உலகத்திற்கும், திரை இயக்கத்திற்கும்  நீடித்துவிடும் அபாயம் இருக்கிறது.)

'ப்ராஜக்ட் ஃ' ஐ கதாசிரியர் அறிவியல் புனைவு என்றே வகைப்படுத்தியிருக்கிறார். நூலுக்கு கிழக்குப்பதிப்பகம் எழுதியதாகச் சொல்லப்படும் முன்னுரையிலும் 'அறிவியல் புனைவு' என்றே அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இது அறிவியல் புனைவில் சேராது. இயக்குனர் கிருஷ் யூடியூபில் சொல்லும் ஒரு சலனப்படத்தில், தெளிவாக 'treasure hunt' என்றே வகைப்படுத்துகிறார். அப்படி வகைப்படுத்துவதும் தான் சிறப்பும் கூட.

'Treasure Hunt' என்ற வகைமையிலேயே இந்த நூலுக்கும், இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கும் தகுதிப்படும் வெளிச்சம் கிட்டிவிடும். அறிவியல் புனைவு என்றெல்லாம் வகைப்படுத்துவது  நூல் குறித்தும்,  நூலை எழுதிய கதாசிரியர் மீதும் படியத்துவங்கியிருக்கும் வெளிச்சத்தில் கரைபடிய வழி செய்வதாகிவிடலாம். ஆதலால், இணைய நண்பர்களை இப்படிச் செய்வதை தவிர்க்கும்படி உளமாறக் கேட்டுக்கொள்கிறேன்.

மற்றபடி, குமரிக்கண்டம், ராஜராஜ சோழன் குறித்த சரித்திர தகவல்களின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்களுக்கு இந்தப் படம் மிகவும் பிடிக்கலாம்.

ஒரு நல்ல மாற்றத்திற்காய், அவரவர் தரப்பிலிருந்து எதிர்பார்ப்பில்லாத உழைப்பை நல்கியிருக்கும் கிருஷ், நந்தா மற்றும் திரைப்படம் உருவாகக் காரணமாகிய அனைவருக்கும் தங்கள் ஆதரவை நல்கும்படி நண்பர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.


பி.கு: இந்தத் திரைப்படத்துடனோ, நூலுடனோ தொடர்புடைய யாரையும் எனக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூடத் தெரியாது.