எங் கதெ - இமையம் Imayam Annamalai
எழுத்தாளர் இமையத்தை இதுவரை சந்தித்ததில்லை.
விபத்தொன்றில் கணவன் இறந்துவிட, அரசின் அனுதாபத்தில் கணவனின் அரசாங்க வேலை மனைவிக்கு கிடைக்க, தன் இரட்டைப் பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தன் ஊரிலிருந்து வேறொரு கிராமத்திற்கு அரசுப் பள்ளிக்கு ஆசிரியர் பணிக்கு வருகிறாள் கமலா!
அதே ஊரில் படித்துவிட்டு வேலை கிட்டாமல், முயன்று கொண்டிருக்கும் விநாயகத்துக்கு கமலா மீது ஒரு ஆர்வம் வருகிறது. அதை அவன் காதல் என்று கொண்டுவிடுகிறான். 28 வயதில் துவங்கும் இந்த அவனின் மயக்கம் பத்து வருடம் அவனை ஆட்டிப்படைத்து, அலைகழித்து இறுதியில் என்னவாக்குகிறது என்பதுதான் கதை.
கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களிலும் இது போன்ற அலைகழிப்புகளில் சிக்கிக்கொண்ட ஆட்களை கடந்திருக்கிறேன். ஆதலால் இது போன்ற உறவுச் சிக்கல்கள் கிராமங்களில் தான் நடக்கிறது என்றில்லை. நகரங்களிலும் நடக்கும் கதை தான்.
தங்கையின் மகள்கள் வந்து 'மாமா காசு கொடு' என்று கேட்கையில், பையில் பத்து பைசா இல்லாமல் திணரும் போதும், தங்கைகள் விநாயகத்தின் சட்டைப்பையில் பணத்தை வைக்கையிலும் விநாயகம் கமலா மீதான மையலில் என்னவெல்லாம் இழப்பதாக தான் நினைப்பதாக எழுத்தாளர் சிலவற்றை அடையாளங்காட்டுகிறார்.
கதை பெரும்பாலும் கமலா என்கிற பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்தே சுழல்கிறது. அவளும், அவளது பெண்களுக்கும் இடையில் விநாயகம் ஒரு இடைச்செருகலாக மட்டுமே கடந்து போகிறான். அவனுக்கு தரப்படும் சுதந்திரமும் அவ்வளவு தான். அந்த இடைச்செருகல் நிலைப்பாட்டில் தான் சிக்கிக்கொண்டிருக்கிறோம் என்பதையே உணராதவனாய் தான் விநாயகம் இருக்கிறான்.
இறுதியில் அவன் 'விழி'க்கிறான். ஆனால், அவனுக்கான காலம் கடந்துவிடுகிறது. காலம் எதற்குமே, யாருக்குமே நிற்பதில்லை.
க்ரியா பதிப்பகம் இந்த நாவலை வெளியிட்டுள்ளது.