தமிழின் நூறு சிறந்த சிறுகதைகள் வரிசை - 1
செல்லம்மாள் - சிறுகதை - புதுமைப்பித்தன்
பணம் கண்டுபிடிக்காத காலகட்டத்தில் உணவில் தன்னிறைவு அடைந்து விட்ட காலகட்டத்தில் பண்ட மாற்றாகத்தான் எல்லாமும் இருந்தது. இப்போது போல், குளிர் சாதனப்பெட்டிகள் இல்லை. அன்று பழுத்த பழத்தை அன்றே உண்டுவிட வேண்டும். உண்டது போக எஞ்சியது ஊர் பொதுவில் வைக்கப்படும். வழிப்போக்கர்கள், ஏதுமற்றவர்களுக்கு உணவாகிட. ஆகையால் அக்காலகட்டங்களில் திருட்டு, பிச்சைக்கான தேவைகளெ எழவில்லை இல்லை.
களவையும், வறுமையையும், பிச்சையையும் உருவாக்கியது பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்ட பணமும், தொழில் நுட்பமும் தான்.
கதை செல்லம்மாள் என்கிற கதாபாத்திரத்தின் அந்திமக்காலத்தில் துவங்குகிறது. பிரம்ம நாயகம் பிள்ளை ஒரு துணிக்கடையில் வேலை பார்க்கிறார். அந்த வேலைக்கு சொற்ப பணமே சம்பளமாகப் பெறுகிறார். அது எத்தனை என்பது குறிப்பிடவில்லை. 'ஒரு ஜோடி உயிர்கள் கீழே போட்டுவிடாமல் இருக்கக் கூடிய சம்பளம்' என்ற வரி அது எத்தனை என்று சொல்லிவிடுகிறது.
இத்தனாம் தேதி சம்பளம் என்று கூட இல்லை என்பதிலிருந்து தொழிற்சங்கங்கள், பணியாளர் நலச்சங்கங்கள் தோன்றிடாத காலகட்டம் என்று புரிந்துகொள்ளலாம். முதலாளிக்கு தோன்றினால் கிடைக்கும் சம்பளம். அதற்கே பிரம்ம நாயகம் பிள்ளை முதலாளியை மனதளவில் தயார் செய்ய வேண்டும்.
செல்லம்மாளின் மருத்துவத்திற்கே அவரின் பெரும்பகுதி சம்பளம் போய்விடுகிறது. இதனால் கஷ்ட ஜீவனம் தான். இருந்தும் இருக்கும் பருக்கை உணவையும் இருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதை கதையீனூடே புரிந்துகொள்ள முடிகிறது. தன் மனைவியை அவளின் அந்திமக்காலத்தில் கொஞ்சமேனும் சந்தோஷமாக வைத்திருக்க துணிக்கடையிலிருந்து மூன்று சேலைகள் எடுத்து வருகிறார். ஆனால், அந்த சேலையும் அவளின் சடலத்தின் மீது போர்த்தமட்டுமே பயன்படுகிறது.
இப்படியாக மிக மிக விளிம்பு நிலையில் வாழ நேர்ந்த ஒரு எளிமையான குடும்பத்தின் வாயிலாக அக்காலகட்டத்தின் வாழ்வியலை சொல்லிச்செல்கிறார் புதுமைப்பித்தன்.
புதுமைப்பித்தன் தனக்குப்பின் விட்டுச்சென்ற நவீனச் சிறுகதை மரபு மிக நீளமானது. இன்னும் சொல்லப்போனால், சிறுகதை வடிவத்தை முதல் முதலில் தமிழில் எழுதித்தீர்த்தவர் புதுமைப்பித்தன் தான்.