என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday, 6 March 2020

அமெரிக்க தமிழ் எழுத்தாளர் - வலைதமிழ் அறிமுகம்

அமெரிக்க தமிழ் எழுத்தாளர் - வலைதமிழ் அறிமுகம்


வலைதமிழ் இதழில் 'அமெரிக்க தமிழ் எழுத்தாளர்' என்ற தலைப்பில் அமெரிக்காவிலிருந்து கொண்டு தமிழில் நூல்கள் எழுதும் எழுத்தாளர்களை அறிமுகம் செய்கிறார்கள்.

மார்ச் இதழில் எனது ஒன்பது நூல்கள் குறித்த அறிமுகம் வெளியாகியிருக்கிறது.








யோசித்துப் பார்த்தால், எனது ஒன்பது நூல்களின் அறிமுகம் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் இதுகாறும் எங்கும் இடம் பெற்றதில்லை. இதுவே இந்த வெளியீடை வாஞ்சையுடன் அணுக வைக்கிறது.

ஆயினும் வலைதமிழ் இதழில் இடம்பெறுவது இது முதல் முறையல்ல என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். கிட்டத்தட்ட ஆறேழு ஆண்டுகளுக்கு முந்தைய செய்தி இது. 2011ல் மதுரையில் ஒரு சிறுகதைப் போட்டி நடைபெற்றது.

மதுரையைச் சேர்ந்த அதிதி தொண்டு நிறுவனம் 2011 குடியரசு தினத்தையொட்டி நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான 'இறைவன் கொடுப்பது ஒரு வாழ்வு , மனிதன் கொடுப்பது மறுவாழ்வு' என்ற கருத்தை வலியுறுத்திய சிறுகதைப் போட்டியில்  நான் எழுதிய 'விதை' சிறுகதை மூன்றாம் பரிசை வென்றிருந்தது.

இந்த கால கட்டத்தில் சிறுகதை எழுதத்துவங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகியிருந்தன.  நாவல்கள் எழுதத்துவங்கியிருக்கவே இல்லை.

இந்தச் சிறுகதையை மார்ச் 2013ல் வலைதமிழ் இதழில் பதிவேற்றியிருந்தனர்.  சிறுகதையை வலைதமிழ் இதழில் வாசிக்க இந்தச் சுட்டியை சொடுக்கவும்.

http://www.valaitamil.com/seed_9144.html


அப்போது இந்தியாவில் சென்னையில் இருந்தேன். ஹெச்1பி விசாவுக்கு விண்ணப்பித்துவிட்டு லாட்டரி முடிவுகள் வர காத்திருந்த நேரம். எதையோ ஒன்றைத் தேடிக்கொண்டிருந்தபோது இது கண்ணில்பட்டிருந்தது.  அப்போது வலைதமிழ் பற்றி எதுவும் தெரியாது. அதை ஏதோ பத்தோடு பதினொன்றாக மற்றுமொரு இணைய இதழ் என்றே எண்ணியிருந்தேன். அமெரிக்கா புலம் பெயர்ந்துவிட்ட பிறகே வலைதமிழ் குறித்தும், அமெரிக்கத்தமிழர்களிடையே அதன் வீச்சு குறித்தும் தெரிந்துகொண்டேன்.

வலைதமிழில் அசோகமித்திரன், ஜெயகாந்தன், சுஜாதா, பிரபஞ்சன், தி.ஜா என்று நீளும் தமிழ் எழுத்தாளர்கள் வரிசையில் எனக்கும் ஒரு இடம் தரப்பட்டிருப்பது குறித்து 2013லேயே பெரு மகிழ்ச்சி. ஆனால், இது போன்ற அங்கீகாரங்களால் மகிழ்ச்சியை விடவும் பொறுப்பே அதிகம் கூடுகிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

யாரோ ஒருவரால் நம் ஆக்கம் எங்கோ வாசிக்கப்படுகிறது, அங்கீகரிக்கப்படுகிறது என்பதன் பின்னிருப்பது நூறு சதம் பொறுப்பு மட்டுமே என்று தோன்றுகிறது. இப்படியாகக் கிடைக்கும் அங்கீகாரங்கள் தான் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச்செல்கிறது. இந்த அங்கீகாரம் சிங்கப்பூர் மற்றும் ஜெர்மன் நூலகங்கள் என்று விரிந்திருப்பது பொறுப்பை இன்னமும் அதிகமாக்குகிறது.

இன்றைக்கு ஒரு கூட்டத்தை நட்பு வட்டமாகக் கொண்டிருக்கும் யார் ஒருவரும் எந்த பதிப்பகத்தின் வாயிலாகவும் நூல்கள் கொண்டு வந்துவிட முடியும். பதிப்பக லாபி அப்படி. பதிப்பக நடத்துனர்களில் யாரையாவது நன்கு தெரிந்திருந்தாலே போதுமானது. இப்படியாகப் புத்தகம் வெளியிட்டு, தெரிந்தவர்களை விமர்சனங்கள் எழுதவைத்து தன்னைப் பரபரப்பாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளவும் முடியும். இதை 'மார்கெட்டிங்' எனலாம். இதெல்லாம் இன்று எல்லோரும் செய்கிறார்கள். உண்மையில் இதிலெல்லாம் பெரிய சாகசமே இல்லை என்றாகிவிட்டது. யாருக்கு யாரைத் தெரியும் என்பது தான் இங்கே பிரதானப்படுகிறது. இப்படி எல்லோரும் செய்வதால் மக்களுக்கு வாசிப்பின் மேல் ஆர்வம் குறைந்து போய் விடுகிறது. ஏனெனில் திரும்பும் இடமெல்லாம் லாபி செய்யப்பட்ட புத்தகங்களே காரணம். மக்கள் இலக்கியம் என்றால் அது சங்க இலக்கியம் மட்டும் தான் என்று எண்ணுவதில் காரணங்கள் இல்லாமல் இல்லை.

ஆனாலும், இந்த லாபிக்களுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. ஒரு கட்டத்துக்கு மேல் இந்த லாபி உதவாது. இப்படியாக லாபி செய்தே பழகிய எழுத்தாளன் எதையும் புதிதாக எழுதிவிடுவதில்லை. எல்லோறும் சொன்னதையே இவன் வேறு வார்த்தைகளில் சொல்கிறான். இப்படிச் சுற்றிச்சுற்றிப் பார்த்தால், எல்லா  நூல்களிலுமே செக்கு மாட்டைப்போல் ஒரே விதமான வார்த்தைகள் இடம் பெறுவதைப் பார்க்கலாம். இது, எழுத்தாளர்கள், எழுத்தாளர்களுக்கும், தமிழுக்குமே ஆப்பு வைத்துக்கொள்வது என்று தான் நினைக்கிறேன். 

எல்லா எழுத்தாளர்களும் இப்படித்தான் என்று பொதுமைப்படுத்தவில்லை. ஆனால், பதிப்பகங்கள் வெளியிடும் நூல்களில் கணிசமானவை வெறும் 'சொன்னதையே சொல்லும்' வகையான எழுத்துக்களே. எழுத்தாளன் தன்னைச்சுற்றி வாசகன் இருக்க வேண்டும் என்பதையே முன்னிலைப்படுத்தி இயங்கிக்கொண்டிருந்தால், அசலான எழுத்தைக் கண்டடைய முடியாது என்பது என் வாதம்.

இன்று தமிழ் எழுத்துலகம் ஸ்தம்பித்து இருப்பதன் பின்னால் இதையும் விவாதிக்க வேண்டி இருக்கிறது. பதிப்பகங்கள் கூட, வாங்க ஆள் இருக்கும் நபர்கள் எதை எழுதினாலும் வெளியிடத் தயாராய் இருக்கின்றன. இந்த சூழலில் அசலான எழுத்தை காசு கொடுத்தே அச்சிட வேண்டிய தேவையும் உருவாகிறது என்பதையும் கவனிக்கலாம்.

முடிவாக, எழுத்து என்பது வெறும் திறமை அல்ல. அது ஒரு மாபெரும் பொறுப்பு. எல்லோரும் எழுதுவதை வாக்கியம் மாற்றி எழுதுவது எழுத்தை, தமிழை பல காத தூரம் பின்னுக்கே இழுத்துச் செல்லும். எழுதுபவன் மக்களுக்கு பயனுள்ளதை எழுத வேண்டும். மக்களுக்கு என்ன தேவை என்பது குறித்து ஒரு ஆழமான புரிதல் கொண்டிருக்க வேண்டும்.

எழுத்துக்கென்று ஒரு சமூகக் கடமை இருக்கிறது. தமிழுக்கு நல்லது நடக்க வேண்டுமானால், தமிழ் இனி வரும் காலங்களிலும் நிலைத்திருக்க வேண்டுமானால், தமிழ் நம் அடுத்தடுத்த சந்ததிகளுக்கும் தொடர வேண்டுமானால்,  நம் தமிழில் அந்தச் சமூகக் கடமையை அச்சாணியாய்க் கொண்டு இயங்கினால் மட்டுமே முடியும் என்று தீவிரமாக நம்புகிறேன்.