Sunday, 10 January 2010

படுக்கையறைக்கொலை - 3

இன்று படுக்கையறைக்கொலை ‍ 3 என்ற தலைப்பிலான என் சஸ்பென்ஸ் சிறுகதையை வெளியிட்ட கீற்று இணைய இதழுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1934:-3&catid=3:short-stories&Itemid=89படுக்கையறைக்கொலை - 3


பங்களூர் கோரமங்களாவில் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணக்கார முதலைகளுக்கான தடபுடல் விருந்து மெதுவாக முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. தென்னிந்தியாவைச் சேர்ந்த எல்லா தொழிலதிபர்களும் கலந்துகொண்டிருந்தனர். மூன்றே மூன்று பெண்களைத்தவிர மற்ற அனைவரும் ஆண்கள். முடியும் தருவாயில் அந்த மூன்று பெண் அங்கத்தினர் சென்ற பிறகு மேடையேறிய நவனாகரீக உடை அணிந்த ஒருவன் புதிதாக தொடங்கப்பட்ட ஒரு கலாச்சார மையத்தை பற்றி எடுத்துச் சொல்லத்தொடங்கியிருந்தான். அவன் சொல்லச் சொல்ல கேட்டுக்கொண்டிருந்த எல்லாரையும் போல் விழிகள் விரிந்தது சேகருக்கும், சுப்புவுக்கும். சேகருக்கு சென்னையில் ரியல் எஸ்டேட் பிஸினஸ். சுப்புவுக்கு கடலூரில் கோழிப்பண்ணை, சாராய பிசினஸ் மற்றும் டெக்ஸ்டைல் பிஸினஸ்.

விருந்து முடிந்து அனைவரும் சென்னை திரும்பிக்கொண்டிருக்கையில், ஒரே ரூட் தான் என்பதால் தன் காரை பின்னே வரச் சொல்லிவிட்டு சுப்பு, சேகரின் காரில் ஏறிக்கொண்டார். காருக்குள்ளேயே தண்ணிப்பார்ட்டி தொடங்கி விட்டிருந்தது. பேச்சு முழுவதும் அந்த கலாச்சார மையத்தைப்பற்றியே இருந்தது. காலேஜ் அழகிகளுடன் வெளிநாட்டுச் சுற்றுலா, பணக்கார இளைஞிகளுடன் வீக்கென்ட் கெட்டுகெதர், அயல் நாட்டு சரக்கு, இறக்குமதி செய்யப்பட்ட மர்வானா, அபின், சமூகத்தின் பெரிய அந்தஸ்த்தில் இருக்கும் பணக்காரர்களின் நட்பு இப்படி நிறைய. இருவருக்கும் அப்போதிருந்த ஒரே கவலை, மையத்தில் சேர குறைந்தபட்சம் 50 லட்சம் கையிருப்பு காண்பிக்க வேண்டும், 5 லட்சம் பணம் கட்ட வேண்டும்.

அவர்களின் வசதிக்கு கொஞ்சம் அதிகம் தானென்றாலும், சொல்லப்பட்ட சொகுசு ஐட்டங்களும், காலேஜ் அழகிகளுடன் கொண்டாட்டமும் அதற்குள் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டுமென்ற முணைப்பை அதிகப்படுத்தியிருந்தது.

நேரம் செல்லச் செல்ல விஸ்கியை முந்திக்கொண்டு வக்கிரம் குடியேறிக்கொண்டிருந்தது. சென்னையில் சுப்பு தன் கார் மாறுகையில் இருவரும் பரஸ்பரம் எப்படியாவது அந்த மையத்தில் கட்டாயம் சேர்வதாக முடிவெடுத்துக்கொண்டு பிரிந்தனர். சேகர் முதல்வேலையாக புதிய‌ ரியல் எஸ்டேட் கான்ட்ராக்ட்டிற்கு என்ன வழியென்று யோசித்தான். ரெஸசனில் வீழ்ச்சி அடைந்த ரியல் எஸ்டேட் துறையில் இப்போது பழையபடி தில்லுமுல்லு செய்தால் தான் லாபம் பார்க்க முடியும். என்ன செய்யலாம் என்று யோசனையில் இருந்தவன் கண்களில் மெயின் ரோடை ஒட்டி இருந்த அந்த 10 ஏக்கர் நிலம் பட்டது. வெகு நாட்களாக யாரும் வந்து பார்க்காமல் கிடந்தது நிலம். சேகரின் கார் அந்த இடத்திலேயே ஓர் ஓரமாக நின்றது. ஒரு சிகரெட் பற்றவைத்தபடியே அந்த நிலத்தைப் பார்த்தபடி தன் அலுவலகத்திற்கு ஃபோன் செய்யலானான் சேகர்.

ரெண்டு நாளில் அந்த நிலத்தில் ரோடு போடும் இயந்திரங்கள் வந்து நின்றது. அரசாங்கத்து பட்டா கூட இல்லாத நிலத்தில் அவசரமாக தெரு விளக்குகள் பொருத்தப்பட்டன. அரசாங்கம் ரோடு போட்டதாய் செய்தி பரப்பப்பட்டது. சேகரின் ஆபீஸில் ஃப்ளாட் வாங்க கூட்டம் கூடியது. சேகரின் ரியல் எஸ்டேட் போர்ட் நடு நிலையாய் நிறுத்தப்பட்டு யாருடைய நிலமோ அநியாயமாய் கையகப்படுத்தப்பட்டது. சுப்புவிற்கு செய்தி போனது. தன்னுடன் இருந்தவன் தன்னை முந்திக்கொண்டு போய் விடுவானோ என்கிற பயம் வந்தது.

சுப்பு அவசரப்பட்டான். ஆனாலும் அவனால் அத்தனை பணம் சட்டென உருவாக்க முடியவில்லை. துணிமணி வியாபாரத்தில் பண்டிகை நாட்கள் போக, வெளி நாட்டு ஆர்டர் கிடைத்தாலே தவிர சட்டென அத்தனை பணம் பார்க்க முடியாது. கோழிப்பண்ணையிலும் அத்தனை லாபம் உடனே வராது. ஆனால் சேகரை முந்த வேண்டும். எப்படி? மனம் கணக்கு போட்டது. சுப்பு இடமும் வலமுமாய் தன் அலுவலக அறையில் நடந்துகொண்டிருந்த போது, கண்ணாடி சன்னல்களினூடே புதிதாய் வேலைக்குச் சேர்ந்த சங்கரியின் மேல் சுப்புவின் பார்வை நிலைகுத்தி நின்றது. அவளை விழுங்கி விடுவது போல் பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு மையத்தில் சேராமலேயே சேகரை முந்தும் எண்ணம் வந்தது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சென்னையை அடுத்த திண்டிவனத்தில், திண்டிவனம் டூ பாண்டிச்சேரி ரூட்டில் ஒரு பொட்டல் காட்டில் இரண்டு வாலிபர்கள் சந்தித்துக்கொள்கின்றனர்.

ஒருவன், ரவி, இன்னொருவன் சுரேஷ். இருவருக்கும் இடையே கண்ணீர் பொதுவாக இருந்தது. ரவி உறுமிக்கொண்டிருந்தான்.

'அந்த சேகர போடனும் டா'.

'அந்த சுப்புவ போட்டாத்தான் செத்துப்போன என் அக்கா மனசு சாந்தியாவும் டா'.

'எப்படி போடறது? நாமலாம் மிடில் க்ளாஸ். நாம இப்ப படிக்கிற இன்ஜினியரிங்க முடிச்சு வேலைக்குப் போனா தான் நம்ம குடும்பம் தலைதூக்கும். அவனுங்கலாம் பணக்காரனுங்க. என்ன வேணாலும் பண்வானுங்க. என் அப்பாவோட நிலத்தை எப்படி அமுக்கினான்னு சொன்னென்ல. என் அப்பாவால ஹார்ட் அட்டாக்ல போய் சேரத்தான் முடிஞ்சது. உன் அக்காவ, கூட படுக்கச் சொல்லி நிர்பந்தப்படுத்தினானே அந்த சுப்பு. உன் அக்கா தூக்குல தொங்கி மான‌த்தை காப்பாத்திக்கிட்டா. என்ன பண்ண முடிஞ்சிது நம்மளால. அவனுங்களுக்கு போலீஸ், மந்திரினு ஆளுங்கட்சி செல்வாக்கு இருக்கு. நம்மாள என்ன பண்ணிட முடியும்.'

'முடியும். நம்மால முடியும்.'

'என்ன சொல்ற நீ. எப்படி முடியும்'.

'நாம இன்டர் காலேஜ் கல்ச்சுரல்சுல சந்திச்சோம். நீ சென்னைல படிக்கிற. நான் கடலூர்ல படிக்கிறேன். அதனால உன் அப்பா பத்தியும் என் அக்கா பத்தியும் தெரியவந்து நாம இங்க நிக்கிறோம். இல்லைனா உன்னையும் என்னையும் தொடர்புபடுத்தவேண்டிய கட்டாயம் இல்ல. உன் அப்பா செத்ததுக்கு நீயும் போலீஸ் வரை போகல. என் அக்கா செத்ததுக்கு நானும் போலீஸ்க்கு போகல. சமூகத்தை பொறுத்தவரை உன் அப்பா செத்ததும், என் அக்கா செத்ததும் தினம் பேப்பர்ல வர்ற ஒரு நியூஸ். சோ, சேகரோ, சுப்புவோ செத்தா அவுங்கள கொலை பண்ற மோட்டிவ் இருக்குற ஆளுங்க லிஸ்ட்ல நம்ம பேர் வராது. சரியா?'.

'ஆமா, அதனால?'

'இது ஒரு பெரிய பலம் நம்ம சைடுல'.

'என்னடா சொல்ற? எனக்கு ஒண்ணும் புரியல'.

'இப்போ புரியவேண்டியது இல்ல. நான் சென்னை போய் சில விஷயங்கள் கன்ஃபர்ம் பண்ணனும். பண்ணினதும் உனக்கு கால் பண்றேன். சாமான்யன்னா என்னனு காமிப்போம் அவனுங்களுக்கு'.

ரவியும் சேகரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அந்த பார்வையில் ஒரு தீர்க்கம் இருந்தது. இருவரும் மீண்டும் இணைவதாக சொல்லிப்பிரிந்தனர். அடுத்து வந்த மாதத்தில் ஒரு சனிக்கிழமை மாலையில் ஊரை அடித்து உலையில் போட்டுத் தின்று கொழுத்த ஓநாய்கள் சேகரும், சுப்புவும் அவரவர் வீட்டின் படுக்கையறையில் கழுத்தறுத்த நிலையில் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தனர். வீட்டிலிருந்த நகை, லட்சக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. சேகர் வீட்டில் சென்னை போலீஸும், சுப்பு வீட்டில் கடலூர் போலீசும் சல்லடையாய்த் தேடியது. தப்புத்தப்பான ரேகைகளே கிடைத்தன.

அந்த மாதத்தின் இறுதியில், சென்னை போலீஸ் தலைமை அலுவலகத்தில் சென்னை, கடலூர் உள்ளிட்ட ஏரியாக்களிலிருந்து போலீஸார் கூடி அந்த மாதத்தில் கண்டுபிடிக்கப்பட மாட்டாத கொலைக்கேஸ்களைப் பற்றி விவாதித்தனர். அப்போது, நகை மற்றும் பணத்திற்காக வெளிமாநிலக் கொள்ளையர்கள் சென்னையிலும் சுற்றுவட்டாரத்திலும் மேலும் நான்கைந்து இடங்களில் கொலை, மற்றும் கொள்ளை செய்த்தாக பேசப்பட்டது. சேகர் மற்றும் சுப்பு கொலைகளும் அப்படி நடத்தப்பட்டிருக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு அந்த ரீதியில் அந்த இரண்டு கேஸ்களின் மேல் விசாரணை தொடரப்பட்டது. ஆனால் அடுத்து வந்த ஆட்சி மாற்றத்தில் கடைசியில் கேட்பார் யாருமின்றி கிடப்பில் போடப்பட்டது.

சில மாதங்களுக்குப் பிறகு செளகார்ப்பேட்டையில் ஒரு சேட்டு நகை வியாபாரியிடத்தில் வழக்கமாய் கள்ள பிஸினஸ் செய்யும் இளைஞர்கள் நால்வர் திருட்டுத் தங்க நகைகள் கொடுத்து பணம் வாங்கிச்சென்றனர் சத்தமில்லாமல். அந்தப் பணத்தில் அந்த இளைஞர்களின் கமிஷன் போக மூன்றில் இரண்டு பங்கு ரவி மற்றும் சுரேஷிடம் வந்துசேர்ந்தது.

அதற்கு அடுத்த வாரத்தில் சென்னையில் ஈ.சீ.ஆர் நெடுஞ்சாலையில் இருந்த ஒரு பொட்டல் காட்டில் தனிமையில் ஒரு நாள் ர‌வியும் சுரேஷும் ச‌ந்தித்துக்கொண்ட‌ன‌ர். ச‌ற்று நேர‌ மெள‌ன‌த்துக்குப்பிற‌கு ர‌வி ச‌ன்ன‌மாக‌ ஆர‌ம்பித்தான். 'சுரேஷ், உன் ஐடியா வொர்க் அவுட் ஆயிடிச்சு. நான் இப்போதான் விசாரிச்சுட்டு வ‌ரேன். சேக‌ர் சுப்பு கொலை கேஸ்ல‌ போலீஸ் பீகார்லேர்ந்து ந‌ம்ம‌ ஊருக்கு திருட‌ வ‌ர‌வ‌ங்க‌ள‌த் தான் தேடிக்கிட்டிருந்துது. இப்போ ஆட்சி மாறின‌தும் கொஞ்ச‌ ந‌ஞ்ச‌ம் விசாரிச்ச‌தையும் தூக்கி போட்டுட்டாங்க‌. போன‌ ஆட்சிலையே அவ‌னுங்க‌ள‌ தீத்துக்க‌ட்ட‌னும்னு தான் நினைச்சிருக்கானுங்க‌. ஆனா நாம‌ முந்திக்கிட்டோம்.' என்ற‌வ‌னைத் ஆசுவாசப்படுத்திவிட்டு ர‌வி தொட‌ர்ந்தான்.

'ஆமா, சேகரக் கொல்லனும். ஆனா, பழி உன் மேல வரக்கூடாது. சுப்புவையும் கொல்லனும். ஆனா, பழி என் மேல வரக்கூடாது. அதனால, சேகர நான் கொல்லனும். நான் கொல்றப்போ நீ பக்கத்துல இருந்த கடையில தகராறு பண்ணின. நீ சேகர் கொலைக்கு துரும்பளவு கூட‌ காரணம் இல்லனு அந்த மத்தவங்களே எவிடன்ஸ் ஆயிட்டாங்க‌. சுப்புவ நீ கொல்லனும். நீ கொல்றப்போ நான் ஒரு கடையில தகராறு பண்ணினேன். அதனால சுப்பு கொலைக்கு நானும் காரணம் இல்லனு அந்த கடைக்காரன் எவிடன்ஸ் ஆயிட்டான். சேகர் இருக்குறது சென்னைல. சுப்பு இருக்குறது கடலூர்ல. ரெண்டு இடத்துக்கும் 3 மணி நேரம் ஆகும் பஸ்ல வந்தா. நாம செஞ்சது, ஒரே நாள்ல ரெண்டு பேரும் அவுஙகவுங்க வீட்ல தனியா இருக்குற நேரம் பாத்து கொன்னோம். அவ்ளோதான். நல்லவேளை என் ஃப்ரண்ட் ஒருத்தன் கைரேகைகள வச்சி ப்ராஜக்ட் பண்ணினான். அவன்கிட்ட ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் தெரியாம இருக்க என்ன பண்ணலாம்னு கேட்டுக்கிட்டோம். அவன் ஹெல்ப் பண்ணினான். ஃபாரென்ஸிக்ல நாம மாட்டிக்கல‌. ஆனா அடுத்து ந‌ட‌ந்த‌து எல்லாம் க‌ட‌வுள் சித்த‌ம் தான். பாரேன். பெரிய‌ த‌லைங்க‌ சாவு. பெரிய‌ விஷ‌யாமாயிருக்கும். அந்த டைம்ல பீகார் கொள்ளைகாரனுங்க சென்னைல ஆட்டம் போட்ருக்கானுங்க. நாமளும் சேகர், சுப்பு வீட்ல கொள்ளையடிச்சது நாம எதிர்பாத்தாமாதிரி அவங்க பேர்ல விழுந்திடிச்சி. தொட‌ர்ச்சியா ஆட்சி மாறின‌து ந‌ம‌க்கு சாத‌க‌மா போச்சு. இதான் தெய்வ‌ம் நின்னு கொல்லும்னு சொல்ற‌து. ' என்ற சுரேஷ், சற்றே ஆழமாய் மூச்சுவிட்டுப்பின் தொடர்ந்தான்

'எனிவே, நம்ம அக்கா, அப்பா சாவுக்கு காரணமானவங்கள பழி தீத்தாச்சு. இந்த விஷயத்தை இதோட விட்டுடலாம். இனிமே நாம சந்திக்க வேணாம். நாம செஞ்சது சரியா தப்பாங்குற தர்க்கத்துக்கு நாம போக வேணாம். எனக்கு வட நாட்டுல வேலை கிடைச்சிருக்குடா. நான் நாளைக்கு குடும்பத்தோட கிளம்பறேன். நீயும் யு.எஸ் போறப்போ குடும்பத்தோட போயிடு. நாம மறுபடி சந்திக்கணும்னு இருந்தா காலம் நம்மள சந்திக்க வைக்கட்டும். நாம சந்திக்கிறதுக்கான காரணத்தை விதி தீர்மானிக்கட்டும்'. மனதில் உள்ளவற்றை முழுக்க கொட்டிவிட்டு நிறுத்தினான் சுரேஷ்.

ஆமோதிப்பாய் தலையசைத்து சுரேஷையே பார்த்து நின்றான் ரவி. இருவரும் பிரியும்முன் கடைசியாக ஒரு முறை கைகுலுக்கிகொண்டார்கள். அந்த கைக்குலுக்கலில் ஒரு கனிவான இறுக்கம் இருந்தது.

- ராம்ப்ரசாத்

No comments: