என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday 12 September 2022

முக நூல் அழைப்புகளும், பாதுகாப்பின்மையும்

 முக நூல் அழைப்புகளும், பாதுகாப்பின்மையும்

*************************************************************

இது குறித்து எழுதவேண்டுமா என்று நினைத்திருந்தேன். இதோடு அழைப்புகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கங்களை எட்டிவிட்டதால் இது குறித்து ஒரு விளக்கம் தர வேண்டிய உந்துதல் வந்துவிட்டது. அவமதிப்பு செய்துவிட்டதாக யாரும் நினைத்துக்கொள்ளக் கூடாதல்லவா?

இரண்டு நாட்களுக்கு முன் வந்த அழைப்பு இது. யார் என்றே தெரியவில்லை. அவருடைய முகப்பக்கம் போனால், வெறும் forward கள். முக நூல் ஐடி பெண் பெயரில் இருக்கிறது என்பதற்காக அழைத்தவரது பாலினம் பெண் என்று எடுத்துக்கொள்ள முடியாதல்லவா? அப்படியே எடுத்துக்கொண்டாலும் அறிமுகம் இல்லாமல் நேரடி அழைப்பு சரியாக இருக்காதல்லவா?




அழைத்த அத்தனை ஐடிக்களும் பெண் பெயர்களில் தான் இருக்கிறது. சொல்லி வைத்தாற்போல் ஒரே விதமாக இருக்கிறது அவர்களது முகப்பக்கம்: இன்னாரென்று அடையாளப்படுத்த முடியாத வகைக்கு. என் வாசகர்களில் யாரும் இவ்விதமான சம்பாஷனைகளுக்கு பழகாதவர்கள் என்பது என் அவதானம். ஆயினும் அழைப்பவர் விஷமத்தனமாக அழைக்கிறார் என்றும் கணிக்க முடியவில்லை. ஏனெனில், ஒரு முறை அழைத்தவர், உள்பெட்டியில், தொடர்ந்து அறிவியல் சார்ந்த கேள்விகளையே கேட்டுக்கொண்டிருந்தார். சில நேரங்கள் கேட்கக் கடினமான கேள்விகளை வாய்ஸ் ரெக்கார்டு செய்து அனுப்புவார். அதில் அசலாக பெண் குரல் கேட்டிருப்பதால், அழைப்பவர் எல்லோரும் fake id என்றும் எடுத்துக்கொள்ள முடியவில்லை.

ஆனால் அப்படித் தொடர்ந்து கேட்டவர் எக்காரணத்தினாலோ, எவ்வித அடையாளமும் காட்டாமலே இருந்தார். ஆனால் கேள்விகள் தொடர்ந்தபடியே இருந்தன. ஒருகட்டத்தில் எனக்கே insecurity ஏற்பட்டு விட்டது. யாரென்றே தெரியவில்லை. நான் சொல்லும் தகவல்களை அந்தப் பக்கம் இருந்துகொண்டு யார் எவ்விதம் பயன்படுத்திக்கொள்வார் என்பது தெரியாது. ஒவ்வொரு முறை பதில் சொல்கையிலும் அந்தப் பக்கம் அமர்ந்து யாரோ ஒருவர் notes எடுத்துக்கொள்வது போலவும் தோன்றும். எதற்கு வம்பு என்று ஒரு கட்டத்துக்கு மேல் பதிலே சொல்வதை நிறுத்திவிட்டேன்.

இன்னொருவரும் பெண் தான் என்பது அவருடைய வாய்ஸ் மெஸேஜில் தெரிந்தது. தொடர்ந்து கவிதைகள் குறித்துக் கேள்விகள். ஆனால் தான் யாரென்று அடையாளப்படுத்திக்கொள்ளவே இல்லை. ஒருகட்டத்தில் எனக்கே insecurity ஏற்பட்டு அதையும் கைவிட்டுவிட்டேன். இப்போது அந்த முகப்பக்கமே இல்லை. இதை வைத்து நான் என்ன புரிந்துகொள்வது?

இப்படி அனாமதேயமாக கேள்விகள் கேட்க விரும்புகிறார்கள் என்பது புரிந்து குபூல் ஐடி உருவாக்க வேண்டி வந்தது.

என்னிடம் உள்பெட்டியில் அனேகம் பேர் அனேகம் விஷயங்களைப் பகிர்கிறார்கள். அவர்களில் பலர் பெண்களே. சிலர் தொடர்ந்து பற்பல நூலக்ள் குறித்து எழுதுகிறீர்கள். சிலர், ஓடிடி திரைப்படங்களின் லிங்க் அனுப்பி கருத்துக் கேட்கிறீர்கள். சிலர் வேலை வாய்ப்பு குறித்த தகவல்கள் கேட்கிறீர்கள். சிலர் தங்கள் பிரச்சனைகளைப் பகிர்ந்து தீர்வு அல்லது ஒபினியன் கேட்கிறீர்கள். வேலை வாய்ப்பு தேடி, மேற்படிப்பு படிப்பது குறித்து, வாழ்வில் அடுத்தக் கட்டம் நகர்தல் குறித்து இப்படி பற்பல கருத்துப்பகிர்வுகள் என் உள்பெட்டியில் நடக்கிறது. அவர்களெல்லாம் இப்படி எல்லாவற்றையும் மூடி மறைத்துக் கேட்பதில்லை. சொந்த வாழ்க்கையில் எழும் பிரச்சனைகள் குறித்துக் கூட சிலர் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். (அவர்களின் தகவல்களை நானும் கர்ம சிரத்தையாக ரகசியமாகவே between the two of us என்கிற ரீதியில் அணுகுகிறேன்). இவர்களுக்கெல்லாம் இல்லாத insecurity உங்களுக்கு இருப்பதாக நீங்கள் நினைப்பது உங்கள் தனிப்பட்ட உரிமையாக இருக்கலாம்.

Insecurity பொதுவானது. அது எனக்கும் இருக்கிறது. முக நூலில், சமூக நலன் என்ற அனுமானத்தில் எதை எதையோ எழுதுகிறோம். எல்லாமும், வாசகர்களுக்குச் சர்க்கரையாக இனிக்குமென்று நம்புவதற்கில்லை என்பதை நான் அறிந்தே வைத்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால், நாம் என்ன எழுதினாலும், அதை பாதகமாக நினைப்பவர்கள் தான் எண்ணிக்கையில் அதிகம் இருப்பார்கள் என்கிற நிதர்சனமும் அறிந்தே வைத்திருக்கிறேன். அதனாலேயே முக நூலில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கையாள வேண்டி இருக்கிறது. பல சமயங்களில் ஏதெனும் எழுதத் தோன்றினாலும், இதையெல்லாம் யோசித்து எழுதாமல் விடுவது தான் அதிகம். எழுதும் பதிவுகள் எல்லாம், இப்படி எழுதாமல் விடுவதிலிருந்து தப்பிப் பிழைத்தவைகளே.

ஆதலால், உங்களைப் போலத்தான் நானும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நேரடி அழைப்பை நீங்கள் தவிர்ப்பீர்கள் என்றால், நானும் எவ்விதத்திலும் குறைந்தவன் அல்ல. நீங்கள் தவிர்க்க நினைக்கும் ஒன்றைத் தவிர்க்க எனக்கும் உரிமை இருக்கிறது. அது யாராக இருந்தாலும் சரி, அறிமுகம் இல்லையெனில் நேரடி அழைப்பு உதவாது. அறிமுகம் செய்துகொள்ளுங்கள். முதலில் உள்பெட்டியில் எது குறித்துப் பேச வேண்டும் என்பதைத் தெரிவியுங்கள். ஏற்புடையதாக இருப்பின் பேசலாம்.

ஏதெனும் தவறாகச் சொல்லியிருந்தால் மன்னிக்கவும். புரிதலுக்கு நன்றிகள்.