என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday 31 January 2022

Mentoring

Mentoring


இது குறித்து உள்பெட்டியிலும்  நேரிலும் சிலர் கேட்டிருக்கிறார்கள்  என்பதால் எல்லோருக்கும் பொதுவாக இதைச் சொல்லிவிடலாம் என்று இந்தப் பத்தி. 

முதலில் நானுமே 'Its doable' என்று தான் கருதியிருந்தேன்.  அதைத்தொடர்ந்து நாள்பட நாள்பட, சிலருடனான வாத-விவாதங்களின் வழி, ஒரு புரிதல் அடைந்தபிறகு தான் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது. 

எல்லாவற்றையும் சீர் தூக்கி யோசிக்குங்கால், கலையை mentor செய்ய முடியுமா என்பது உண்மையிலேயே தெரியவில்லை. Mentor செய்ய முதலில் , அது குறித்து முழுக்க தெரிந்திருக்க வேண்டும். அப்படி ஒருவர் இருக்கவே முடியாது. அது சாத்தியம் இல்லை. 

mentoring என்பதையே அர்த்தமற்றுப் போகச்செய்யக் கூடிய காரணங்கள் வேறு சிலதும் இருக்கிறது. அதில் முதலாவது, எந்த ஒரு கலை வடிவமும், அது இலக்கியமாக இருக்கலாம், ஓவியமாக இருக்கலாம், சிற்பமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும், அதை ஒவ்வொருவரும் உள்வாங்கி வெளிப்படுத்தும் விதம் எல்லோருக்கும் ஒன்றே போல் இருக்காது. 

ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ஒவ்வொரு விதமாக வெளிப்படும். சிலரது கலை, அவர்களது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து மட்டுமே வெளிப்படும். அனுபவப்படாமல் அவர்களால் எதையும் எழுத முடியாது. சிலருக்கு கலைக்கு தனிப்பட்ட அனுபவம் தேவையே இல்லை. சிந்தனையாலும், கற்பனையாலும் அந்தக் கலையை விஸ்தரித்து பலம் கூட்டிவிடுவார்கள். இவர்களை அனுபவம் கட்டுப்படுத்தாது. 

சிலருக்கு நிறைய வாசிக்க வேண்டும். எல்லா வாசிப்புப் போட்டிகளிலும் இவர்கள் இருப்பார்கள். 'சென்ற வருடம் வாசித்து நூல்கள்' என்று சுமார் அறுபது நூல்களைப் பட்டியல் இடுவார்கள்.  

வேறு சிலர் எதையுமே வாசிக்கமாட்டார்கள். ஆனால், நிறைய சிந்திப்பார்கள். சிந்தனையின் வாயிலாகவே வாசிக்காததையும் வாசித்துவிடுவார்கள்.


இன்னும் சிலர் இருக்கிறார்கள். அனுபவமே எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்திருக்கும். ஒன்றிரண்டு தான் வாழ் நாளிலேயே எழுதியிருப்பார்கள். ஆனால், நிலைத்த பெயர் இருக்கும். இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். 

ஆனால், ஒன்றை உறுதியாகச் சொல்லலாம். கலைக்கு இட்டுச்செல்லாத வழிகள் இருக்கின்றன.

இயல்பாகவே ஒருவருக்கு ஓவியம் என்னும் கலை கைவருகிறது எனில், ஒரு ஓவியம் எக்காரணத்திற்கெல்லாம் reject செய்யப்படுகிறது என்பதை ஓவியர் அறியமாட்டார். Rejectionஐ சந்திப்பவர்களுக்கு சொல்வதற்கு அவரிடம் எதுவும் இருக்காது. அவர் அப்படி எதுவும் சொல்வதில்லை என்பதாலேயே "நீங்கள் எந்த மெயில் ஐடிக்கு உங்கள் ஓவியங்களை அனுப்புகிறீர்கள்? அதைச் சொல்லுங்கள்.  நானும் அனுப்புகிறேன்" என்று கேட்க இயலாது.

தேர்வு செய்யப்படும் எல்லாமும் ஏதோ ஒரு தனிப்பட்ட உறவின் நிமித்தம் தேர்வாவது என்று எடுத்துக்கொள்வது, நம் ஆக்கத்தில் உள்ள தவறுகளை அடையாளம் காண முடியாமல் செய்துவிடும். இது ஒரு தவறான approach. தனிப்பட்ட உறவின் நிமித்தம் ஒன்றிரண்டை வேண்டுமானால் வெளியிட்டு விடலாம். தொடர்ந்து வெளியிட, தனிப்பட்ட உறவு உதவாது. என் வரையில், பத்திரிக்கைகளுக்கு அனுப்புவது, தேர்வாகாவிட்டால், நம் ஆக்கத்தில் என்ன தவறு என்று பார்ப்பது. தவறேதும் தென்படாவிட்டால், இன்னுமொரு பத்திரிக்கைக்கு அனுப்புவது. அங்கும் தேர்வாகாவிட்டால், எனக்கு ஏதோ தெரியவில்லை என்று எடுத்துக்கொள்வது. அது என்ன என்ற தேடலில் இறங்குவது. இதைத்தான் நான் 2009ல் எழுதத் துவங்கியதிலிருந்து பின்பற்றுகிறேன்.

இன்னுமொன்றையும் சொல்லலாம். எந்த ஒரு கலைவடிவமும் அடிப்படையில் எளிமையாகவே பார்வைக்குத் தோன்றும். ஓவியம் என்று எடுத்துக்கொண்டால், நிறங்கள். எழுத்து என்று எடுத்துக்கொண்டால், வார்த்தைகள். பத்து ஓவியங்களைப் பார்த்தால், பதினொன்றாக நமக்கும் ஒரு ஐடியா தோன்றும் தான். அதை வைத்தெல்லாம் நாமும் ஓவியர் என்று நினைத்துக்கொள்வது அபத்தமாகவே முடியும். 

எந்த ஒரு கலைவடிவமும், அது கை கொள்ளப்படாவிட்டால், அது ஒன்றும் பெரிய குற்றம் ஆகிவிடாது. வலிந்து அதற்குள் நம்மைத் திணித்துக் கொள்ளவும் வேண்டியதில்லை. எழுத்தாளர்கள், ஓவியர்கள், குறும்பட இயக்குனர்களை எல்லாம் பைத்தியக்காரர்கள் என்று சொல்லித்திரியும் ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது. அவர்களுக்குள்ளும் வெற்றிகரமான, பொறியாளர்கள், மருத்துவர்கள், தொழில் முனைவோர்கள் இருக்கிறார்கள். வாழ்க்கை, எவ்வித கலைகளின் உள்ளீடும் இன்றி, அவர்களுக்கும் ஆனந்தமாக, அமைதியாக, சந்தோஷமாகக் கழிகிறதுதான். அவர்களுக்கெல்லாம் கலை தெரியவில்லை என்பது ஒரு பொருட்டே இல்லை. எந்தக் கலைக்குள்ளும் நாம் நம்மை வலிந்து திணித்துக்கொள்ள வேண்டியதில்லை. அந்த அளவிற்கு கலை ஒன்றும் அத்தனை பெரிய சமாச்சாரமும் இல்லை. கலை வராதது ஒரு பெரிய குற்றமே இல்லை. அதையும் நாம் மனதில் கொள்வது நலம்.