என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday, 20 June 2020

தந்தையர் தினம்

தந்தையர் தினம்

இத்திவ்வியத்திரு நாளில் தந்தையர்களுக்கான என் வாழ்த்துக்களை இப்படிது துவங்கலாமென்று நினைக்கிறேன்,

இக்காலகட்டத்தில், ஒவ்வொரு ஆணும் யாருக்கோ தகப்பனாகத்தான் இருக்கிறான் என்கிற அடிப்படையில் தந்தையர் தினத்தை ஆண்களின் தினமாகவும் பார்க்கலாம் என்பது என் வாதம். அதே வேளையில், அன்னையர் தினத்தை பெண்கள் தான் கொண்டாடவேண்டுமென்பதில்லை என்பதுபோல், தந்தையர் தினத்தை ஆண்கள் தான் கொண்டாட வேண்டும் என்பதுவும் இல்லை.  ஆண்களாய்ப் பிறப்பதற்கும் மாதவம் செய்திட வேண்டும் தான் என்பது என் பார்வை. இப்பூமியில் பிறந்ததற்கு பெருமையும், கர்வமும் கொள்ளத்தக்க வகையில் ஆண்களும் நடந்து கொள்கிறார்கள் என்பதும் என் அவதானம்.



நான் அறிந்த ஆண்கள்/தந்தையர்களிடமிருந்து நான் அவதானித்த பொதுவான குணாதிசயங்களைப் பின்வருமாறு தொகுக்கலாம்.

1. அக்காள் , தங்கைகளுக்கு திருமணம் செய்து வைப்பதே அவர்களின் முதல் கடமையாக எக்காலமும் இருந்திருக்கிறது.  உடன் பிறந்தவளின் எதிர்கால வாழ்கைக்கனவை தூக்கிச்சுமந்தபடியே சதா சர்வ  காலமும் திரியும் ஆண்களாய் நானறிந்த ஆண்கள் இருந்திருக்கிறார்கள்.

2. ரிஸ்க் எடுப்பவர்கள் அப்பாக்கள். இதில் மாற்றுக்கருத்தே இல்லை.

3. தனக்கென்று எதையும் சேர்த்துக்கொள்ளாதவர்கள் அப்பாக்கள். நாள்/கிழமைகளில் தன் தேவைகளையும் தியாகம் செய்துவிட்டு பிள்ளைகளுக்கென துணி மணி பலகாரத்திற்கு செலவு செய்துவிட்டு அணிந்திருக்கும் லுங்கியின் கிழிசலை மறைத்துக்கொண்டு பிள்ளைகளின் சந்தோஷத்தில் தன் சந்தோஷத்தை தேடிக்கொள்பவர்களாகவே எக்காலமும் இருந்திருக்கிறார்கள் அப்பாக்கள்.

4. பொதுவாகவே தனக்குப்பின் யார் குடும்பத்தைக் காப்பாற்றுவது என்கிற அக்கறை, தனக்குப்பின் குடும்பப்பொறுப்பை தாங்க யாரையாவது உருவாக்கிக் கொண்டு வந்து விட வேண்டுமென்கிற முனைப்பு மிக்கவர்களாக அப்பாக்கள் இருப்பார்கள். இயங்குவார்கள்.

5. நண்பர்களை சேர்ப்பது, பணியிடங்களில் புழங்குவதின்  நெளிவு-சுளிவுகள் பிள்ளைகளுக்கு பெரும்பாலும் அப்பாக்களிடமிருந்து தான் கிடைக்கும் மிக மிக முக்கியமான அறிவுச்சொத்து என்பது என் வாதம்.

6. சமூகம் சார்ந்த முன்னெடுப்புகளில் அப்பாக்களின் எண்ணிக்கையே அதிகம். அப்பாக்களே அதிகம் அரசியல் தெரிந்து வைத்திருப்பார்கள். பேசுவார்கள். ஒரு சமூக இயக்கத்தின் நெளிவு, சுளிவு, வெளிப்படையாகப் பேசப்படாத ஆனால், மானுட வாழ்வியலின் மிக மிக முக்கியமான கட்டமைப்பு சார்ந்த விஷயங்களில் அதிகம் அக்கறை கொள்வது அப்பாக்கள் தான்.

7.  'நல்லதைச் சொல்லி கெட்ட பெயர் வாங்கிக்கொள்ளும் புண்ணிய ஆத்மாக்கள் அப்பாக்களே. குறிப்பாக பெண் பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் இதை மிக மிக வெளிப்படையாகவே அவதானிக்கலாம். பெண் பிள்ளைகளுக்கு அப்பாக்கள் தரும் அறிவுரைகள்,  குறிப்பாக எதிர்பாலினம் குறித்த கருத்துக்கள், பெரும்பாலும் பெண் பிள்ளைகளால் சரியாக உள்வாங்கிக் கொள்ளப்படுவதில்லை. இந்தப் பின்னணியில், அப்பாக்களின் அறிவுரைகள், அவைகள் சரியாகவே இருந்தாலும், அது அவர்களுக்கு கெட்ட பெயரையே பெற்றுத்தரும். ஆனாலும், அங்கிருந்துதான் அப்பாக்களுக்கு அறத்தை நிலை நாட்ட வாய்ப்பும் திணிக்கடும்.

8.  நம் சமூகமே புடவை சுற்றியிருந்தால் சற்று இளகிவிடும் தன்மையது தான். பெண்களை ஊக்குவிப்பதாக நினைத்து பெண்களுக்கு முக்கியத்துவம் தருவதாக நினைத்து, பக்கவிளைவாக ஆண்களின் நியாயமான உழைப்புக்கான  நேர்மையான அங்கீகாரம் கல்வி, மற்றும் பணியிடங்களில் மற்றும் அறிவு மற்றும் திறமைகள் சார் பொதுத்தளங்களில் மறுக்கப்படுவதும், புறக்கணிக்கப்படுவதும் எக்காலமும் நடந்துகொண்டுதானிருக்கிறது. இதையெல்லாம் மீறி சாதிப்பவன் தான் ஆண். எப்போதும் ஒப்பீட்டளவில் , இந்த விஷயத்தில் பெண்களைக் காட்டிலும், அதிக பிரச்சனைகளை, திறமைக்கான அங்கீகாரமின்மைகளை, தனக்கு நியாயமாகக் கிடைத்திருக்கவேண்டிய கவனங்களை எதிர்பாலினத்துக்கு விட்டுக்கொடுத்துவிட்டு  நிற்பவன் ஆண் தான்.

9. ஆண்களின் நிலைப்பாட்டை ஒரு விதமான suidical behaviour என்று கூட  பார்க்கலாம். உதாரணம் சுட்டிச் சொல்வதானால், டைட்டானிக் கவிழ்ந்தபோது, பெண்களும் குழந்தைகளுமே காப்பாற்றப்பட்டார்கள் என்பதைச் சொல்லலாம். எல்லா சூழல்களிலுமே ஒரு விதமான தற்கொலை நிலைப்பாட்டுடன் தான் ஆண் இயங்க நிர்பந்திக்கப்படுகிறான். குடும்பத்தின் வசதிகளுக்காக தன் வசதிகளை முதலில் தியாகம் செய்பவனாகத்தான் அப்பாக்கள் எக்காலத்திலும் இருந்திருக்கிறார்கள்.

ஈற்றாக, ஆணின் வாழ்வும் கஷ்டங்கள் நிறைந்தது.  வெளியிலிருந்து பார்க்க ஆண், எதையும் மிக மிக இலேசாக, பொறுப்புக்களைத் தட்டிக்கழிப்பவனாக, தாமரை இலை நீர் போல் இருப்பதாகத் தோன்றினாலும், அது வெறும் கானல் நீர், காட்சிப்பிழையே. ஆண்களின் வாழ்க்கையிலும் கஷ்டங்கள், துக்கங்கள், சங்கடங்கள், அவமானங்கள், துரோகங்கள், இருக்கும். ஆண் அவற்றைப் பெரிதாகக் காட்டிக்கொள்வதில்லை.  பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து விடுவான்.

இப்பூலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் முக்கியத்துவம் வாய்ந்ததே. அந்த முக்கியத்துவம்  சில மோசமான மற்றும் தவறான முன்னுதாரணங்களால் மறுக்கப்படும் நிலைப்பாட்டிலும், இந்த பூமியின் வாழ்வியல் நாடகத்தில் தன் பாத்திரத்தை தன் போக்கில் செய்துவிட்டு, கடந்து போகும் அத்தனை அப்பாக்களுக்கும் என் தந்தையர் தின வாழ்த்துக்கள்.