என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday 3 March 2017

STALKER

STALKER



ஆணும் பெண்ணும் அறிவுப்பூர்வமான தளத்தில் அறிமுகம் கொள்ள ஏதுவாக நம் சமூகத்தில் எவ்வித தளமும் இல்லை என்று இதற்கு முன்னும் கூட ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

நீங்கள் அரும்பாடுபட்டு நாளுக்கு 17 மணி நேரம் படித்து, மிக மிக திட்டமிட்டு பொறியியல் கல்லூரியில் சீட் வாங்கி படித்து அதைவிட மிக மிக திட்டமிட்டு ஐடியில் வேலை வாங்கி சென்றுவிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் வீட்டிற்கு இரண்டு தெரு தள்ளியிருக்கும் வீட்டில் உள்ள பெண் அவரது கல்வி, சென்றுவரும் நூலகம், முக நூலில் பதியும் கருத்துக்களில் உங்களை ஈர்க்கிறார். உங்களுக்கு பழகிப்பார்க்கலாம் என்று தோன்றுகிறது. இப்போது வரை இது காதலோ, காமமோ, எந்த கண்றாவியும் அல்ல.



வெறும் அறிமுகம். இன்னும் சொல்லப்போனால் பழகியபின் அந்த பெண் உங்களுக்கு பிடிக்காமல் கூட போகலாம். ஆனால் இன்னும் அறிமுகம் இல்லை. இந்த சூழலில் உங்களால் அந்த பெண்ணை அண்டி பேசிவிட முடியுமா? உங்களுக்கும் அந்த பெண்ணுக்கும் பொதுவான பணியிடமோ, வீடோ இல்லை என்கிற பட்சத்தில் அறிமுகம் எப்படி சாத்தியம்? சரி.. ஒரு பேச்சுக்கு நீங்களாக ஒரு நாள் அந்த பெண்ணிடம் சென்று பேசுகிறீர்கள் என்று வைத்துக்கொண்டால்?
உங்களுக்கு அந்த பெண் தரும் பெயர் STALKER.

இதற்குள் சுற்று இருக்கும் நாற்பது கண்களில் நீங்கள் பட்டுவிடுவீர்கள். உங்கள் பெயர் ரிப்பேராகிவிடும். அதன் பிறகு நீங்கள் தெருவில் சென்றால் அண்ணன்களும், தகப்பன்களும், மாமன்களும் தங்கள் வீட்டு பெண்களை வீட்டுக்குள் போக சொல்லிவிடுவார்கள். ஆக உங்கள் பெயர் ரிப்பேரானது ரிப்பேரானதுதான்.

இந்த பின்னணியில் நீங்கள் "குடும்பப்பெண்கள் தங்களை கணவர் மதிப்பதில்லை" என்று புலம்புவதை தொடர்புபடுத்தி பார்க்கலாம். எப்படி எனில், இவர்கள் யாரை STALKER என்று நிராகரிக்கிறார்களோ, அவர்கள் எல்லோருமே நூற்றுக்கு நூறு சதம் உண்மையிலேயே STALKER கள் இல்லை.

இங்கே தான் , ஒரு பெண் தனக்கு தகுதி உள்ள ஆணைக்கூட STALKER என்று புறக்கணிக்கும் தவறு நிகழ்கிறது என்பதையும், அதை செய்வது பெண்கள் தான் என்பதையும் , அந்த நிராகரிப்பினால் பின்னாளில் தவறான ஓர் ஆணிடம் சென்று சேர நேர்ந்து அவதிப்படுவதும் யாரோ ஒரு பெண் தான் என்பதையும் எனது "உங்கள் எண் என்ன?" கணித நாவலில் ஒரு அட்டவணை மூலமாக விளக்கியிருந்தேன்.

உதாரணமாக, ஒரு நல்ல யோக்கியமான ஆண் நன்கு படித்து பன்னாட்டு நிறுவனத்தில் கை நிறைய சம்பளம் வாங்கும், எந்த பெண்ணுக்கும் தகுதியான ஆண் ஒருவர் B இருக்கிறான் என்று கொள்வோம்.
பெண்களை மதிக்காத , பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடும் ஆண் C இருக்கிறான் என்று கொள்வோம்.
பெண்களை விட மிக மிக திறமையான ஆண், தனக்கே தனக்கென ஓர் ஆளுமை கொண்ட ஆண் , தன் வாழ்க்கையில் தேவைக்கும் மேல் தன்னிறைவு பெற்ற ஆண் A இருக்கிறான் என்று கொள்வோம்.

இப்போது STALKER என்று சொல்லி நிராகரிக்கும் நம் நாயகி ஒரு Z என்று கொள்வோம்.

இந்த Z ஐ யார் அணுகுவார்?

இப்போது A தன்னிறைவு பெற்றுவிட்டதால் அவருக்கு Z ஐ விட வசீகரமான பெண்கள் ஈர்க்கலாம். ஆதலால் அவர் Z ஐ அணுகவேண்டிய தேவைகள் இல்லை.

இப்போது ஐடியில் பணிபுரியும் நல்ல குடும்பத்து பையன் B நமது நாயகியின் கம்பெனியிலோ, கல்லூரியிலோ படிக்கவில்லை. நாயகி வசிக்கும் தெருவிலும் இல்லை. ஆக அறிமுகத்துக்கு வாய்ப்பே இல்லை. இப்போது இந்த B க்கு  Z ஐ அணுகு ஃபேஸ்புக் மட்டும் தான் இருக்கிறது. ஆனால் அதில் அவர் அந்த Z ஐ அணுகினால், உடனே Z என்கிற நாயகி அவரை STALKER என்று ப்ளாக் செய்துவிடுவார்.

இந்த சூழலில் Z க்கு யார் மீதமிருக்கிறார் என்றால் Z ஐ விடவும் அழகான பெண்களை பார்த்துவிட்டு தன்னிறைவு பெற்றுவிட்ட ஆண் ஆன A தான் இருக்கிறார். ஆனால் அவர்தான் தன்னிறைவு பெற்றுவிட்டாரே? அவர் ஏன் Z இடம் வந்து பல்லிளிக்கவேண்டும்?

ஆக, Z என்கிற நம் நாயகிக்கு பெண்களுக்கெதிரான மூர்க்கத்தை , குற்றத்தை திரைமறைவில் புரியக்கூடிய C ஆணகளிடமே சென்று சேரும் வாய்ப்பு பிரகாசமாகிறது அல்லவா?

சரி. இதில் பிரச்சனை எங்கே?

நமது நாயகி B ஐ  STALKER என்று நிராகரித்தார் பாருங்கள். அங்கே தான்.

உடனே பெண்கள் "அதெப்படி எங்களுக்கு அவரு நல்லவருன்னு தெரியும்? நீங்கதான் ப்ரூவ் பண்ணனும் " என்கிறார்கள்.

அதைத்தான் நானும் கேட்கிறேன். ப்ரூவ் செய்வதற்கான தளம், வழிமுறை, அளவுகோல் என்ன? எங்கே? எது ப்ரூஃப்? அவர் ஏற்கனவே வைத்திருக்கும் 1100/1200 மதிப்பெண், மெரிட் பொறியியல் படிப்பு, ஐடி கம்பெனி வேலை..இதெல்லாம் என்ன காயலான் கடை இரும்பா? அது காயலான் கடை இரும்பென்றால், நம் நாயகியான Z ந் தகுதியும் காயலான் கடை இரும்புதானே? காயலான் கடை இரும்புக்கெல்லாம் அவர் ஏன் காதலிக்கப்பட வேண்டும்?

அறிவுப்பூர்வான அறிமுகத்திற்கான தளம் எங்கே? எது?

B என்கிற நம் கனவு நாயகன் போல் ஒரு நகரத்தில் எண்ணற்ற ஆண்கள் இருக்கலாம் அல்லவா? அவர்கள் எல்லோருக்கும் Z என்கிற நம் நாயகியை எப்படி தெரியும்?

இதற்கெல்லாம் பெண்கள் என்ன தீர்வு வைத்திருக்கிறார்கள் என்பதை பெண்கள் சொல்ல கேட்டால் நமக்கு சிரிப்பு  தான் வரும்.

"எங்களுக்கு எப்படி தெரியும்? நீங்க தான் உங்க திறமையை எங்க கிட்ட வந்து நிரூபிக்கணும்"

இதுதான் அவர்களது பதில்.

சரி. இந்த பதிலில் உள்ள பிரச்சனை என்ன?

1. ஏற்கனவே சொன்னது போல், நகரத்தின் மூலை முடுக்குகளில்லெல்லாம் இரைந்து கிடக்கும் B க்களுக்கு Z பெண்களை எப்படி தெரிய வரும் என்பதுதான்? சுருக்கமாக சொன்னால், கிணற்று தவளைகள் எப்படி கிணற்றுக்கு வெளியே அலையும் B க்களுக்கு தெரியும்?

2. வாழ்க்கை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. நல்ல துணையை தேட வேண்டிய நிர்பந்தம் இரு பாலருக்குமே உண்டு அல்லவா? சரியான துணையை அடைவதில் பெண்களின் பங்குதான் என்ன? இருந்த இடத்தில் அமர்ந்துகொண்டு " நல்ல ஆண்களே இல்லை " என்று புலம்புவது எப்படி தீர்வாகும்?

3. ஆண் பெண் சமம் என்னும்போது இந்த விஷயத்தில் ஆணே ஏன் அல்லாட வேண்டி இருக்கிறது? அதுவும் கெட்ட பெயர் வாங்கிக்கொண்டு?

4. கணிதம், அறிவியல், பொறியியல் கம்ப்யூட்டர் கற்ற பெண்ணுக்கு அதே கம்ப்யூட்டர் பொறியியல் கணிதம் கற்ற தகுதியான ஆணை அடையாளம் காண முடியாமல் ஏன் போக வேண்டும்?ஏன் STALKER என்று தவறாக அடையாளப்படுத்த வேண்டும்? ஏனெனில் பெண்களால் STALKER என்று அடையாளப்படும்  ஆண்களுள் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் , பிரிட்டனிலும் வாழ்கிறார்கள். குடும்ப கடமைகளை ஆற்றுகிறார்கள். பெண்களை மதிக்கிறார்கள். அப்படியானால் பெண்களுக்கு ஆண்களை சரியாக மதிப்பிடத்தெரியவில்லையா?

5. டெக்னிக்கலாக யோசிக்கலாம். பெண்கள் ஆண்களை " அடக்குமுறை செய்கிறார்கள், ஆளுமை மற்றும் மோசமான நடத்தை" என்று  குற்றம் சுமத்துகிறார்கள் எனில் பெண்கள் திறமைசாலிகளாக, நல்லவர்களாக‌ இருக்கிறார்கள் என்று அர்த்தப்படுத்தி அறியலாம். ஆனால் அப்படிப்பட்ட பெண்கள் தொடர்ச்சியாக "ஆளுமை மற்றும் மோசமான நடத்தை கொண்ட ஆண்களிடமே சென்று சேர்வதாக அல்லவா அர்த்தமாகிறது? அப்படியானால் அந்த ஆண்கள் அல்லவா சரியான தேர்வை செய்திருக்கிறார்கள் என்று அர்த்தமாகிறது?

6. சில கேள்விகள். சேலத்தில் இருக்கும் நல்ல திறமைசாலி ஆண், சந்தர்ப்ப சூழலால் தான் கடந்து வந்த கோயம்புத்தூரில் இருக்கும் நல்ல பெண்ணை எப்படித்தான் அணுகுவது?
(a)முக நூலா? அதில் தான் STALKER என்ற பெயர் கிட்டுகிறதே?
(b)கவிதை , விளையாட்டு போன்ற குழுமங்களிலா? அதற்கு முதலில் அந்த பெண் அவற்றில் மெம்பராக இருக்க வேண்டுமே? அப்படியே இருந்தாலும் முக நூலில் மீண்டும் STALKER என்ற பெயர் தானே கிட்டும்.
(c)தமிழ் சினிமாவில் காட்டப்படுவது போல் வேலை வெட்டி, படிப்பு எல்லாவற்றையும் விட்டுவிட்டு பையன் கோயம்புத்தூருக்கு படை எடுக்க வேண்டுமா? அப்படியானால் அவர் வேலை வெட்டியை யார் செய்வது?
(d)கோயப்புத்தூரில் எங்கோ ஓர் மூலையில் வாழும் நம் நாயகி Z தனது இருப்பு குறித்து  தகுதியான திறமையான நல்ல அதே நேரம் மா நிலம் முழுவதும் விரவிக்கிடக்கும் B க்களுக்காய், எந்த அறிவுப்பூர்வமான குழுமத்திலும் தன்னை இணைத்துக்கொள்ளாமல் எப்படித்தான் தெரிய படுத்துகிறாள்.
(e) எப்படியும் தெரியப்படுத்தவில்லை எனில் B என்கிற ஆணுக்கு Z என்ற ஒரு பெண் இருப்பது எப்படி தெரியும்?
(f) B க்கு தெரியவராது எனில் தெரியவருபவர்கள் யார் யார்? C ஆகத்தானே இருக்க முடியும்? அவர்களின் தரம் என்ன? அவர்களுடன் நட்புறவு கொள்ளும் Z ந் நோக்கம் என்ன? (இளவரசன் கொலை வழக்கு, கோகுல்ராஜ் கொலை வழக்கு, சங்கர் கொலை வழக்கு போன்றவைகளை இந்த பின்னணியிலும் யோசித்து பார்க்கலாம் என்பது நாவலில் சேர்க்க எண்ணி ஏதோ காரணத்தால் வேறொரு நாவலுக்கென எடுத்து வைத்த தகவல் என்பதை இங்கே பதிவு செய்கிறேன்)
(g) துணை தேர்வு முயற்சியில் தனது பங்காய் ஒரு பெண் முன்னிருத்துவது எதை? ஆண் பெண் சமம் எனும்போது துணை தேர்வில் ஆணுக்கு இருக்கும் பங்கிற்கு எவ்வகையிலும் குறைவில்லாத அளவினதாக அவளின் பங்கு என்றால் அது எது? "என் கண் பார்க்க நிரூபி" என்பதில் என்ன விதமான தன்முனைப்பு ஒளிந்துள்ளது?

இறுதியாக ஒன்றை சொல்லிக்கொள்ள விழைகிறேன்.

"தகுதியான ஆண் புறக்கணிக்கப்படுவதற்கு அர்த்தம் எங்கோ யாரோ ஒரு பெண்  பாதிக்கப்பட போகிறாள் என்பதுதான். அந்த பாதிப்புக்கும் ஆண்கள் காரணமல்ல. பெண்களின் தேர்வுகளே காரணம்,"

இதை இதுவரையிலும் எந்த நாவலும் சொல்லவில்லை. எனது "உங்கள் எண் என்ன?" நாவலில் மட்டுமே முதன் முதலில் சொல்லப்பட்டது. ஆவணப்படுத்தப்பட்டது. இதை இங்கே சொல்வதன் காரணம் "தற்பெருமை" அல்ல. நம் சமூகத்தின் பிரச்சனைகள் அறிவுப்பூர்வமான தளத்தில் விவாதிக்கப்படுகின்றன. ஆனால் அதை எத்தனை பேர் ஊக்குவிக்கிறார்கள்? எத்தனை பேருக்கு தெரியும் என்கிற கேள்விகளை வாசகர்களிடம் உருவாக்குவதே நோக்கம். இதே கருத்துக்களை நான் எழுதியிருக்காமல் வேறு யாரேனும் எழுதியிருந்தாலும் நான் இக்கட்டுரையில் ரெஃபரன்ஸ் கொடுத்து பேசியிருப்பேன்.

உங்கள் எண் என்ன நாவலில்  வருகிறது இந்த அட்டவனை. உண்மையில் இந்த கட்டுரை நாவலில் இரண்டொரு பக்கத்தின் விளக்க வடிவமே. அப்படியானால் நாவல் உருவாக்கும் ஒட்டுமொத்த கருத்தியல் என்ன என்பதை கற்பனை செய்து பார்த்துக்கொள்ளவும். ஆழ்ந்த வாசிப்பை கோரும் நாவல் "உங்கள் எண் என்ன?" என்பதை பதிவு செய்கிறேன். (இதுவும் கூட இந்த நாவலை நானன்றி வேறு யாராலும் எழுதப்பட்டிருந்தாலுமே இவ்வாறு எழுதியிருப்பேன்)

STALKING என்பது இன்றைய யுகத்தில், அதிலும் இம்மி கூட துணை தேடலுக்கென அசைந்திடாத பெண்கள் இருக்கும் சமூகத்தில் ஆணுலகம் கடந்து போக வேண்டிய நிர்பந்தம்..   ஆண் தனக்கான துணையை STALKING  செய்வதன் மூலமாகவே கண்டடைய வேண்டிய கட்டாயம் இருப்பது இன்றைய சமூகத்தின் அவலம்..

அதற்கு அவமானப்படவேண்டியது ஆண்களுக்கு இணையாக பெண்களும் தான் என்பது எனது கருத்து.. இந்த பின்னணியில் பெண்ணுக்கு எதிரான குற்றம் ஒன்று நடந்தால் உடனே ஆள் ஆளுக்கு "இந்த ஆண்களே மோசம்" என்று பேசுவதை ரசித்துக்கொள்ளலாம்.. அது ஒரு நல்ல காமெடி..

 - ராம்ப்ரசாத்