என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Tuesday 18 November 2014

மலைகள் 62 வது இதழில் எனது கவிதைகள்


மலைகள் 62 வது இதழில் வெளியான‌ எனது கவிதைகள்



http://malaigal.com/?p=5945



குடும்பம் – கவிதை


ஓங்கி உயர்ந்த ஓர் கட்டிடம்
அதைக் காட்டிக் காட்டியே
வைக்கிறீர்கள் ஒவ்வொரு செங்கல்லையும்
ஒன்றன் மீது ஒன்றாக‌
கட்டமைப்பாம்
நீள்சதுர கல்லுக்குள்
மூச்சுத் திணறுகிறது
அது பற்றி கவலையில்லை உங்களுக்கு
ஓரங்களில் பிசிறு வேண்டாம்
ஒழுங்காம்
சிதைக்கிறீர்கள் என் மேனியை
சத்தம் வரக் கூடாதாம்
வாயில் திணிக்கிறீர்கள் பிசினை
உடைந்துபோனால் தூக்கியெறிவீர்கள்
உடையவும் கூடாது
சேரவும், பிரியவும் வகுத்து வைத்திருக்கிறீர்கள்
அதற்கு
உச்சியிலிருந்து விழுந்து
செத்துப் போகலாம்
வேண்டாம் வேண்டாம்
காலால் மிதித்து இன்னுமொன்று செய்துவிடுவீர்கள்


விசிறியின் முதுகுக் கத்தியும், உப்பு நீரும்


யார் யாரோ பரிசளித்த‌
சிகப்பு நிற தடித்த சொற்கள்
என் அறையெங்கும்
இரைந்து கிடக்கின்றன
வாசல் கதவைத் திறந்தால்
குவிந்த உதடுகளின் மத்தியில்
மேலண்ணத்துடன் ரகசியமாய் சுகிக்கிறது நா
நீயே தேர்ந்தெடுத்த விசிறியின்
முதுகில் கூரான கத்தி
நீ வீசுகிறாய்
ரத்தம் வெடிக்கிறது
உன் பக்கம்
உப்பு கரிக்கும் நீர்…


பட்டை தீட்டப்படும் மக்கிய சொற்கள் – கவிதை


பட்டை தீட்டுகிறாய்
ரம்பம் கொண்டு
சிகப்பு நிறத்தில் சிதறுகின்றன‌
சூடான உன் மக்கிய சொற்கள்
இதோ அறுக்க இருக்கிறேன்
உனக்கும் எனக்குமான‌
ஒரே ஒரு விளிம்பை
இனி உன் மக்கிய சொற்களின்
நாற்றம்
உனது மட்டுமே…

பறத்தலும் வானமும் – கவிதை


உனது வானத்தை வளைக்க‌
ஏன் இத்தனை பிரயத்தனப்படுகிறாய்?
எல்லா பறவைகளும்
வளைந்த வானில் தான் பறக்கின்றன‌