என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday, 14 November 2025

லைக், கமென்ட், & ஷேர்

 லைக், கமென்ட், & ஷேர்

**************************


இரண்டு நாட்கள் முன்பு என்னுடைய  முகநூல் பதிவுகளுக்கான விருப்பக்குறி/பார்வை விழுக்காட்டைப் பகிர்ந்திருந்தேன்.  நண்பர்கள் பலர் மூலமாக இங்கே 'விருப்பக்குறிகள் கலாச்சாரம்' பயிற்றுவிக்கப்பட்டேன். அது புதிதல்ல. ஏற்கனவே நானும் அறிந்தது தான். பதிவு மூலம் புதிதாகக் கிடைத்தனவற்றை இங்கே பகிர்கிறேன்.

ஒரு கருத்துக்கு எதிர்வினைகள் என்பது, உலகம் முழுவதிலும், இரண்டு விதமாக நடப்பதாகக் கொள்ளலாம்.

1.  'உன் பதிவுக்கு நான் விருப்பக்குறி இடுகிறேன். என் பதிவுக்கு நீ இடு' என்கிற எளிமையான ஒப்பந்தம். இது தான் பொதுவெளியில் பெரிதும் பின்பற்றப்படுகிறது என்பதை நானும் அறிவேன். 

2.  கரோனா வைரஸ் பரவியபோது தடுப்பூசி எடுத்துக்கொள்வது பற்றிய பரிந்துரைப் பதிவோ, எந்த ஸ்டாக்கில் பணத்தை முதலீடு செய்யலாம் என்பது குறித்த பரிந்துரைப் பதிவோ மேற்சொன்ன விதத்தில் வேலை செய்யாது. அதற்கு மக்களின் தார்மீக ஆதரவு இருக்கும். ஏனெனில், அவைகளில் மக்கள் தாங்களாகவே முன்வந்து புழங்குகிறார்கள். அது அவர்களுக்கான பொதுவான புழங்குதளமாக இருக்கும். அது சார்ந்த கேள்விகள், ஐயங்கள், விவாதங்கள் ஆகியனவற்றை மேற்கொள்ள இயல்பாகவே அவர்கள் ஒருவருக்கொருவர் லைக், கமென்ட், ஷேர் செய்துகொள்வார்கள். இங்கே, 'உன் பதிவுக்கு நான், என் பதிவுக்கு நீ' என்கிற ஒப்பந்தம் தேவை இல்லை.

2020ல் அறிவியல் புனைவுகள் எழுதத்துவங்கினேன். என் எழுத்தை கண்டெடுத்து, ஊக்குவித்து, வளர்த்தெடுத்தது இதே தமிழ்ச் சமூகம் தான். இவர்கள் ஒவ்வொருவருக்கும்  நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். எழுத்து மூலமாகவே அதைத் தீர்க்க முனைவதில் தான் மரபணுக்கள், தீசஸின் கப்பல், கம்ப்யூட்டா என்று அது விரிவடைகிறது. இவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள். 

நண்பர்களுடன் பேசியபோது, 'சிறுகதைகள் மக்களின் ரசனைக்கு இருந்தால் நல்லாதரவு பெருகும்' என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டது. அது சரிதான். எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார், சுஜாதா ஆகியோர் அவ்விதமே  இயங்கி வாசகர் பரப்பை அடைந்தனர். இதை எழுத்தாளர் சுஜாதா நேர்காணல்களில் ஒப்புக்கொண்டிருக்கிறார். அதே ரூட்டை நாமும் எடுக்கலாம் தான். பிரச்சனை இங்கே தான் துவங்குகிறது எனலாம்.

அவ்விதம் எழுதப்படும் சிறுகதை ஒன்றை அமெரிக்க ஆங்கில அறிவியல் புனைவிதழுக்கு அனுப்பினால், மறுதலிக்கப்படுகிறது. இப்படியாக எழுதப்படும் ஆக்கங்களை, அமெரிக்க ஆங்கில அறிவியல் புனைவிதழ்களுக்குத் தக்கவாறு நீட்டியும், குறைத்தும் தொடர்ந்து செப்பனிட செப்பனிட, அதில் இறுதியாக வரும் வர்ஷனில், தமிழ்மக்களின் ரசனைக்கென சேர்க்கப்பட்டவைகள் எல்லாம் நீக்கப்பட்டிருக்கக் காண்கிறேன். இதில் இருக்கும் consistency நிச்சயமாக இரண்டு கலாச்சாரங்கள் குறித்தும், இலக்கிய வடிவத்தின் இலக்கணக் கூறுகளை இரு கலாச்சாரங்கள் எவ்விதம் கையாள்கின்றன என்பது குறித்தும் ஆழமாக யோசிக்க வைக்கின்றன.

Survival of the Fittest என்பார்கள்.

இப்போது வார்த்தை ஒன்றுக்கு அறுபது சென்ட் ஊதியம் பெரும் அளவிற்கு வளர்ந்திருக்கிறேன்.  உலகெங்கிலுமுள்ள அறிவியல் புனைவு எழுத்தாளர்களுக்கான அமைப்பில் உறுப்பினராகியிருக்கிறேன். இதன் மூலம் நெபுலா போன்ற அமெரிக்க விருதுகளைத் தெரிவு செய்யும் இடத்திற்கு நகர்ந்திருக்கிறேன். இது, என்னால் ஏற்கக்கூடிய சவால்களுக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது என்பதே இத்தளம் மீது, இப்பாதை மீது பயணம் மேற்கொள்வதில் பேரார்வம் கொள்ள வைக்கிறது. 

அறிவியல் புனைவிலக்கியத்தைப் பொறுத்தவரையில், அமெரிக்க மற்றும் சீன அறிவியல் புனைவிலக்கியம் mainstream என்கிற ரீதியில் உலகிற்கே முன்மாதிரியாகச் செயல்படுகின்றன. மாறாக, இந்திய மற்றும் தமிழ் அறிவியல் புனைவிலக்கியத்திற்கென ஒரு தனிப் பாதையும், பார்வையும் ஞானமரபின் வழி வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது.

செண்டினல் தீவு மக்கள் குறித்து இங்கே நினைவூட்டுவது பொறுத்தமாக இருக்குமென்று நம்புகிறேன். செண்டினல் தீவில் உள்ள மக்கள் வெளி உலகுடன் தொடர்பில் இல்லாதவர்கள். தங்களுக்குள்ளே இயங்கிக்கொள்பவர்கள். இன்னமும் வில்லும், கூர் கற்களுடனும் வாழ்வை எதிர்கொள்கிறவர்கள். வெளி உலகை அவர்கள் ஏற்காமல் இருக்கலாம். அது, அவர்களுக்குத் தேவைப்படாமலும் இருக்கலாம். ஆனால்,  நான் செண்டினல் தீவுக்குள் தேங்கிவிட விரும்பவில்லை. வெளி உலகம் செல்ல விழைகிறேன். வெளி உலகுடனும் போட்டி போட விரும்புகிறேன். அதிலுள்ள சவால்கள், சிக்கல்கள் என் இயல்புடன் பொறுந்துகின்றன.

புதுச்சிக்கல் என்னவென்றால்,  நான் முழு நேர எழுத்தாளன் இல்லை என்பதுதான். என் பிரதான தொழில், கணினிக்களுக்கு அறிவை வழங்குவது. எழுத்து உபரி நேரங்களில் மட்டுமே. இதுதரும் முதல் சவால் நேரமின்மை. இந்த  நேரமின்மையில், தமிழுக்கென ஒரு வர்ஷன், ஆங்கிலத்திற்கென இன்னொரு வர்ஷன் வைத்து இயங்குவது குழப்பங்களுக்கும், தவறுகளுக்கும் வழி வகுக்கும். ஒரே வர்ஷன் தான் என்றால், நான் செண்டினல் தீவை விட்டு வெளியே வந்து வெளி உலகிற்கான வர்ஷனையே உருவாக்க விரும்புகிறேன். ஏனெனில், செண்டினல் கடைசி வரை செண்டினலாக இருக்க வாய்ப்பில்லை. என்றேனும் வெளி உலகிற்கு வந்துதான் ஆக வேண்டும் என்கிற தர்க்கப் பார்வை தான். 

நான், அந்த வெளிஉலகிற்கு மற்ற செண்டினல்வாசிகளைக் காட்டிலும் சற்று முன்பேயே வந்துவிடுகிறேன் என்பது மட்டும் தான் ஒரே வித்தியாசம்.

ஆக, எப்படி யோசித்தாலும் வெளி உலகுடன் இணைந்து இயைந்து செல்வதே என் சூழலுக்குப்பொறுந்தும் என்றே கணிக்கிறேன்.  நான் எக்காரணங்களால், இவ்வழியைத் தெரிவு செய்கிறேனோ அதே காரணங்களுக்காக, அதே வழியை மற்றவர்களும் தெரிவு செய்வதே அவர்களுக்கும் தொலை நோக்குப் பார்வையில் பலனளிக்கும் என்றே நம்புகிறேன். ஒரு கருத்தை, ஒரு தளத்தை பகிர்ந்துகொள்ளும் எவருக்கும் அத்தளம் குறித்த, அதன் செயல்பாடுகள், அதன் பயன்பாடுகள், சாதக பாதகங்கள், கேள்விகள், ஐயங்கள், விவாதங்கள் ஆகியனவற்றை மேற்கொள்ள இயல்பாகவே அவர்கள் ஒருவருக்கொருவர் லைக், கமென்ட், ஷேர் செய்துகொள்வார்கள். இல்லையா? அந்தப் பின்னணியில் தான், என் பதிவுகளுக்குக் காணப்படாத வாசகர் ஆதரவு, என் கருத்தை, தளத்தை 'எவரும் பகிரவில்லையோ' என்ற அவதானிப்பையே தருகிறது. நான் மட்டும் தனியனாய், ஒரு தளத்தில் பயணிக்கிறேனோ என்ற எண்ணத்தையே விதைக்கிறது. 

இதைத்தான் இரண்டு நாளுக்கு முன்னான பதிவிலும் பகிர்ந்தேன். ஆக, கேள்வி, 

"நான் ஏன் ஒரு தளத்தில் தனியனாய் பயணிக்கிறேன்?" என்பதுதான்.  

"நான் பயணிக்கும் தளத்தில் நான் காணும் நற்பயன்கள்,  நற்பயன்களாகப் பிறருக்கு ஏன் இல்லை?" என்பதுதான்.

நான் மக்களின் நல்லாதரவை வேண்டுகிறேன் தான். ஆனால், மக்கள் என் தளத்தைத் தங்கள் தளமாகவும் ஏற்கும்வரை, என் பாதையைத் தங்கள் பாதையாக கொள்ளும் வரை அது மெல்ல மெல்லத்தான் சாத்தியப்படும் என்பதையும் புரிந்துவைத்திருக்கிறேன்.