என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday, 18 October 2024

Agora!

 Agora!


Agora ஒரு முக்கியமான திரைப்படம் என்பேன்.  அது கிருத்துவம் ஒரு மதமாக வேறூன்றத் துவங்கியிருந்த நேரம். அப்போது எப்படி கிருத்துவத்தின் வளர்ச்சி அப்போதைய அறிவுசார் தளங்களை அழித்தது என்பதைப் பேசும் கதை Agora.

இதில் வரும் Hypatia என்ற பெண் அப்போதிருந்த பூமியை மத்திமமாகக் கொண்ட Heliocentric model ஐ  கேள்விக்கு உட்படுத்தி ஆராய்வார். கிருத்துவம் அதைக் கடுமையாக எதிர்க்கும். தொடர்ந்து அவள் பணி செய்வதைத் தடை செய்யும் விதமாக, அந்த நூலகம் எரிக்கப்படும்.

அந்தக் காட்சிகள் தத்ரூபமாக, எப்படி மனித இனத்தின் பொக்கிஷங்களான நூல்கள் அழிந்தன என்பதைக் காட்டும் காட்சிகளாக அமைந்திருக்கும்.  

இஸ்லாம் இனங்களால் நாலந்தா, விக்ரமஷிலா அழிந்ததை , சீன ஹன்களால் தக்ஷஷீலா நூலகம் அழிந்ததை, பாரசீகர்களின் டெஸிபோன் நூலகம் அழிந்ததை, அலெக்ஸாண்டிரியாவின் செராபியம் நூலகம், இன்னும் இன்னும் பல நாடுகளில் பல நூலகங்கள் அழிந்ததை காட்சிப்பூர்வமாக ஆவணப்படுத்தும் விதத்தில் இந்தத் திரைப்படம் மிக முக்கியமான திரைப்படம் என்று கூடச் சொல்லலாம்.

ஒரு காலத்தில் எந்த நூல்களை நூலகங்கள் தேடித்தேடி அழித்தார்களோ, அதே நூல்களை, புராணக் கதைகளை இப்போது அவற்றின் வெகு மதியை உணர்ந்து தேடோ தேடென்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். கிடைக்க வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை.  




பூமியின் பூர்வீகம் குறித்த பல அகழ்வாராய்ச்சிகளை நடத்தியிருக்கும் போதிலும் ஒரு முக்கிய அகழ்வாராய்ச்சி மூக்கின் மேல் விரல் வைக்க வைத்திருக்கிறது. அது மனித மரபணுவில் பூமியின் சரித்திரத்தை, விலங்கின சரித்திரத்தை பின்னோக்கிச் செல்லுதல்.


இந்த விதமான ஆராய்ச்சியில் தெரிய வந்திருப்பது என்னவென்றால் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கூட பூமியில் நாகரீகமடைந்த இனங்கள் வாழ்ந்திருக்கின்றன என்பதுதான். அப்படியானால் அவர்கள் யார்? இப்போது அவர்கள் எங்கே? நாமெல்லாம் யார்? அவர்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு? இப்படிப் பல கேள்விகள் விடை தெரியவராமல் அறிவு சார் தளங்களைத் திணறடிக்கின்றன. பல மில்லியன் டாலர்கள் கொட்டி ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. அவர்கள் குறித்த தகவல் மத வளர்ப்பில் அழிந்த நூல்களில் இருந்திருக்கலாம் என்பது தான் அறிவியல் உலகின் பதைப்பாக இருக்கிறது. மத வளர்ப்பு குறித்து, இப்போது போல் வேறெப்போதும் மனித இனம் குற்ற உணர்வு கொண்டிருக்கவில்லை என்பது தெள்ளத்தெளிவு. மத வளர்ப்பு குறித்து செலவு செய்யப்படும் ஒவ்வொரு நாழிகையும், ஒவ்வொரு மனித ஆற்றலும் எதிர்காலத்தில் குற்ற உணர்வுக்கு மட்டுமே இட்டுச் செல்லும் என்பதும் திண்ணம்.

ஒரு மதத்தை, பிற மத நூல்களை அழித்து வளர்ந்தது எப்பேற்பட்ட தவறு என்பதை கடந்த சில நூற்றாண்டுகள் மனித இனத்துக்குப் புரிய வைத்திருக்கிறது எனலாம்.

நம் எல்லோருக்கும் ஒரு மதம் நிச்சயமாகத் தேவை என்றால் அது அறிவியல் மட்டும் தான் என்பதை இனி வரும் காலங்கள் நிரூபிக்கும் என்பதில் எள் அளவும் ஐயமில்லை. நாம் எத்தனை விரைவில் இதைப் புரிந்துகொள்கிறோம் என்பதை வைத்துத்தான் நம் மூளைச்சூடு தீர்மானிக்கப்படும்.

Thursday, 17 October 2024

Halley's Comet!

 Comet Tsuchinshan அக்டோபர் 20 தேதி வரை வானில் தெரியும் என்கிறார்கள். அதன் வெகு நீ......ளமான சுற்று வட்டப்பாதையை (80000 ஆண்டுகள்) கணக்கில் கொண்டால் ஒப்பீட்டளவில் ஹாலீஸ் காமட்டின் 75 ஆண்டுகள் சுற்றுவட்டப்பாதை ஒன்றுமே இல்லை எனலாம்.


ஆயினும், ஹாலீஸ் காமட்டை கிரேக்கத்தில் கி.முக்கு முன்பே கண்டுவிட்டதாக பிரிட்டீஷ் நூலகத்தில் இருக்கும் பாபிலோனியன் குறிப்புகள் சொல்கின்றன. ஆனால், அப்போது அது மீண்டும் மீண்டும் பூமியை அண்மிக்கும் காமட் என்பது தெரியாமல் அதன் ஒவ்வொரு அண்மையையும் தனித்தனி காமட் வரவாகத்தான் குறித்து வைத்திருந்திருக்கிறார்கள்.


காமட் தெரிந்தால் ஏதோ அசம்பாவிதம் நிகழப்போகிறது என்கிற அளவில் மட்டுமே அப்போதைய புரிதல் இருந்திருக்கிறது. 


அதன் பிறகு வந்த கோபர்னிகஸின் கணக்குகள் தாம் விண்வெளியில் தோன்றும் கற்களின் துல்லியமான இருப்பிடம், பயணப்பாதை ஆகியவற்றைக் கண்டுபிடிக்கும் கணக்குகளை உள்ளடக்கி வெளிவந்தன. உண்மையில் இந்தக் கணக்குகள் தான் அப்போதைய விடிவெள்ளி எனலாம். இந்தக் கணக்குகள் மட்டும் இல்லையென்றால் விண்ணில் தோன்றும் பலவற்றைத் தொடர்புபடுத்த இயலாமல் எல்லாவற்றையும் தனித்தனி நிகழ்வுகள் என்கிற அளவில் புரிந்துகொண்டிருந்திருப்போம். கொபர்னிகஸ் தான் முதன் முதலாக சூரியமை மையமாகக் கொண்ட உலகை முன்மொழிந்தார்.


கோபர்னிகஸுக்கு ஒரு மாபெரும் சல்யூட்.


கோபர்னிகஸின் கணக்குகளின் அடிப்படையில் வளர்ந்த வானியலின் அடுத்தடுத்த கட்டமாக, ஹாலீ தான், 1531, 1607 and 1682 ஆகிய வருடங்களில் வந்த காமட்டின் வரவுகளில் உள்ள ஒற்றுமைகளை ஆராய்ந்து, அது அனைத்திலும் வந்தது ஒரே காமட் தான் என்பதைக் கண்டுபிடித்தார். அதனால் அந்தக் காமட்டுக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது. அவர் மட்டும் அதைக் கண்டுபிடித்திருக்காவிட்டால், ஒரே காமட்டை பல்வேறு பெயர்களில் நாம் அழைத்துக் கொண்டிருந்திருப்போம். 



Sunday, 13 October 2024

எதிர்காலம்!!

 எதிர்காலம்!!


ஏதோ எதிர்காலத்திற்குள்ளேயே நுழைந்துவிட்டதைப் போலிருக்கிறது. 


டெஸ்லா humanoid robotகளை வெளியிட்டிருக்கிறார்கள். I, Robot படத்தில் இடம்பெரும் காட்சிகளைப் போலிருந்தது அந்த எந்திரங்கள் மனிதர்களுடன் பேசுவதையும், உரையாடுவதையும் பார்க்கையில்.


கல்லூரி மாணவர்களுக்கு உணவு எடுத்துச்செல்லும் இயந்திர டெலிவரி பாய்கள், உணவகங்களில் ஆர்டர் கேட்டு பரிமாறும் எந்திர சிப்பந்திகள் என்று திரும்பும் இடங்களிலெல்லாம் எந்திரங்களின் ஆக்ரமிப்பு தொடர்கிறது.


இனி வரும் காலங்களில், எந்திர மனிதர்களால் மட்டுமே  நடத்தப்படும் உணவகங்கள், கடைகள், வரவேற்பறைகள் என்று இது இன்னும் அடுத்தடுத்த கட்டங்களுக்குப் பயணிக்கும் என்பது போலத்தான் தெரிகிறது. 





அமெரிக்காவில் இது வந்துவிட்டால் இந்தியாவுக்கு இது வர ஒரு பத்தாண்டுகள் ஆகலாம். 2035களில் இந்தியாவிலும் முழுக்க முழுக்க இயந்திரங்களால் நடத்தப்படும் மால்கள், உணவகங்களைப் பார்க்கலாம் என்றே தோன்றுகிறது.


இன்னொரு பக்கம், "உணவகங்கள் நவீனமாகிவிட்டன, உணவுகள் நஞ்சாகிவிட்டதே"  என்கிற கூக்குரலும் கேட்டபடிதான் இருக்கிறது. இது இப்படித்தான் தொடர வேண்டுமா என்ற சோகம் இருக்கிறதுதான். நாம் எல்லோரும் முயன்றால், இந்தக் கதையின் அடுத்த கட்டம் வேறு விதமாகவும் இருக்கலாமே என்ற குரல் எனக்குள்ளும் ஒலிக்கிறதுதான்.

இந்தக் கூக்குரலில் உங்கள் குரலும் அடங்கும் என்று நீங்கள் நினைத்தால், இதைப் படியுங்கள்.


சமீபமாக ஒரு புத்தகக் கண்காட்சிக்குச் சென்று வந்த நண்பர் சொல்கிறார்.


"பிரிண்டிங் ப்ரஸ் வீணாயிடக்கூடாதுன்னு கண்டதையெல்லாம் பிரிண்ட் அடிச்சு புக்குன்னு விக்கிறாய்ங்க. எழுதின எவனுக்கும் எந்தப் பயிற்சியும் இல்ல. ஆக, நாலு நல்ல நூல்களைச் சுத்தி நாலாயிரம் குப்பை இருக்கு.. புதுசா வாங்க வர்றவன் நல்லதுன்னு எப்படிக் கண்டுபிடிப்பான்?" 


கிட்டத்தட்ட இதே வாதத்தைத்தான் உணவகங்களுக்கு மட்டுமல்லாமல் ஏனைய எல்லாவற்றுக்கும் சொல்ல வேண்டி இருக்கிறது. மட்டமான, ஆயுள் குன்றிய டிம்பர்களை வைத்து வீடு கட்டுகிறார்கள். 


"நான்கு நல்ல கட்டுமானங்களைச் சுற்றி நாற்பதாயிரம் மோசமான கட்டுமானங்கள்"


"நான்கு நல்ல உணவுப் பொருட்களைச் சுற்றி நாற்பதாயிரம் மோசமான உணவுகள்"


இப்போதெல்லாம் இந்த வாசகம் டெம்ப்ளேட் ஆகிவிட்டது...


"நான்கு நல்ல ................... சுற்றி, நாற்பதாயிரம் மோசமான .........." இதுதான் அந்த டெம்ப்ளேட். கட்டுமானங்களை, உணவகங்களை கூக்குரலிடும் நாம் தான் நடத்துகிறோம். நமக்காகத்தான் நடத்துகிறோம். "நாம மட்டும் தான் செய்யறோம், எல்லாரும் பண்றாங்க. நமக்காக கொஞ்சம் நாமளும் செஞ்சிக்கிட்டா தான் என்ன?" என்ற சமாளிப்புடன் நமக்கு நாமே ஒருவருக்கொருவர் செய்துகொள்வதன் ஒட்டுமொத்த பக்க விளைவு தான் இப்போது நடப்பது எல்லாமும்.

 

நமக்கெல்லாம் "உணவகங்கள் நவீனமாகிவிட்டன, உணவுகள் நஞ்சாகிவிட்டதே" என்று சொல்ல என்ன தகுதி இருக்கிறது? 

Thursday, 10 October 2024

பிக் பாஸ் - நாள் 4

 பிக் பாஸ் - நாள் 4


"இவர் அச்சுறுத்தலாக இருப்பார்..என்னுடைய கேமுக்கு இடைஞ்சலா இருப்பார்.. அதனால இவரை நான் நாமினேட் பண்றேன்.."

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மிகவும் பிரபல்யமான வாசகம் இதுவாகத்தான் இருக்கும்.

வாழ்க்கையின் அடி நாதமே இதுதான். 

நம்மை எல்லோரும் எளிதில் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால், அதன் பொருள், நாம் யாருக்கும் அச்சுறுத்தலாக இல்லை என்பதுதான். பெண்களில் அழகும், ஆண்களில் அறிவும், திறமையும் மற்றவர்களிடமிருந்து வெறுப்பைச் சம்பாதித்துத் தரும்.

ஒருவர் தனித்து இருக்கிறார் என்றால், அவர் introvert ஆக இருக்கிறார் என்பது முழுக்காரணமல்ல. அவர் மற்றவர்களால் இயல்பாக ஏற்றுக்கொள்ள முடியாத இடத்தில் இருந்தாலும் இந்தத் தனிமைப்படுத்தப்படுதல் நடக்கும். திட்டமிட்டு அவரை தனிமைப்படுத்துவார்கள். குறை கண்டுபிடிக்க முயல்வார்கள். ஒன்றுமில்லாததை ஊதிப் பெரியதாக்குவார்கள். பார்த்தும் பாராதது போல் கடந்து போவார்கள். கவனித்தும் கவனியாதது போல் நடிப்பார்கள். 

'உலகம் உன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்கிற வாசகமெல்லாம் இங்கே அர்த்தமற்றது. இன்னும் சொல்லப்போனால், இது திட்டமிட்ட சதியை உள்ளடக்கிய ஒரு வாசகம். சம்பந்தப்பட்டவர் சூதனமாக நடந்துகொள்ள வேண்டும். 

இதை நிஜ வாழ்வில் நம்மைச் சுற்றி நாம் வெகு இயல்பாக அவதானிக்கலாம். இன்னும் சொல்லப்போனால் if you know, you know மாதிரியானது தான் இது. தனித்துவமான திறனோ, வசீகரமோ இல்லாதவர்களுக்கு இவைகளெல்லாம் பெரும்பாலும் நடப்பதில்லை. ஆக இப்படி ஒரு உலகம் இருக்கிறது என்பதே அவர்கள் அறியாமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களால் சமூக இயக்கங்களைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் ஏன் பிரகாசிக்கவில்லை என்பதற்கு, இதுவும் ஒரு காரணம்.

நடிகர்/நடிகைகளை திரையில் காணும் வரை ஏற்றுக்கொள்ளும் சமூகம், வாடகைக்கு வீடு கேட்டு வந்தால் ஏற்கமாட்டார்கள். ஒரு பள்ளிக்கூடத்தை எடுத்துக்கொள்ளுங்கள். கடைசி பெஞ்சில் அமர்ந்திருப்பவர்களுக்கு இயல்பாகவே முதல் பெஞ்ச் மாணாக்கர்களைப் பிடிக்காது. இதெல்லாம் ஒரு உதாரணம் தான். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். 

இது எல்லாவற்றையும் மீறி, அழகாகவோ, தனித்திறமைகளுடனோ தொடர்ந்து நீடிப்பவர்கள், தொடர்ந்து இயங்குபவர்கள், மென்மேலும் வெற்றியை சுகிப்பவர்கள் உண்மையிலேயே GOAT தான்.  மற்றவர்கள், அவர்களை வெறுத்து தனிப்படுத்த எண்ணுவதற்கு பதில், அவர்களிடமிருந்து எப்படிக் கற்றுக்கொள்ளலாம் என்று யோசிப்பது ஒரு நல்ல மார்க்கம் என்பது என் வாதம்.

ஏனெனில், எத்தனை தான் தனிப்படுத்தினாலும், இப்படியானவர்கள் மீண்டும் எழுந்து நின்றுவிடுவார்கள். எப்படியும் அவர்கள் எழுந்து நிற்கத்தான் போகிறார்கள் என்றால், அவர்களைப் பகைத்துக்கொள்வானேன், மொக்கை வாங்குவானேன். 


அதற்கு பதில், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம் அல்லது அவர்களை இணைத்துக்கொண்டு எப்படி இயங்குவது என்று யோசிக்கலாம். 

Wednesday, 9 October 2024

பிக் பாஸ் - நாள் 3

 பிக் பாஸ் - நாள் 3



மனித குலம் நாகரீகமடைய அடைய, தனக்கென விதிகளை வகுத்துக்கொள்கிறான் மனிதன். ஆனால், இயற்கையின் விதிகளே இறுதியானவை.

நாளையே ஒரு விண்கல் மொதி இந்த பூமியில் மனித இனம் பேரழிவைச் சந்திக்குமானால் பிழைக்கப்போவது, உணவை உருவாக்கத்தெரிந்த, விவசாயம் தெரிந்த, காடுகளிலும் மேடுகளிலும் வாழப் பழகியவர்களே என்பதில் எள் அளவும் ஐயமில்லை.

அப்படியோரு பேரழிவில், ஆனந்த் அம்பானியை விடவும் அவரது வேலைக்காரர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம். (இந்தப் பின்னணியில் அவரது ஐயாயிரம் கோடி திருமணம், ஒரு ஜோக். அவ்வளவுதான்)

எதிர்கால, உலகிற்கு, எந்த மனிதன், தன் பிழைப்புக்குத் தேவையான அத்தனையையும் தானே செய்யத்தெரிந்து வைத்திருக்கிறானோ அவனே தேவைப்படுவான். Fermi paradoxற்குத் தரப்படும் விளக்கங்களில் பிரதானமானது, ஒரு கட்டத்துக்கு மேல் நவீனப்படும் முன், அந்த இனமே அழிந்துவிட நேர்வது தான், பிரபஞ்ச வெளியில் வேற்று கிரக வாசிகளை நாம் இதுகாறும் எதிர்கொள்ளாததற்குக் காரணம் என்பதுதான்.

'பிக் பாஸ் தான் என் பலம்' என்று சொல்லவே செய்கிறார் ரவீந்தர். என்ன எதிர்பார்க்கிறார்? தன்னுடைய 7 சீஸன் விமர்சன அறிவுக்காக மற்றவர்கள், தான் செய்யவேண்டிய உடல் உழைப்பு கோரும் வேலைகளைத் தனக்காக செய்வார்கள் என்றா? இப்படித்தான் சாதிகள் கட்டமைக்கப்பட்டது.

ஒரு தளத்தில், பிழைக்கத்தேவையான அத்தனையையும் ஒரு மனிதன் தன்னக்குள்ளாக சுவீகரித்துக் கொண்டிருக்க வேண்டும். அதுவே சாதிப் பாகுபாடுகளை அழிக்கும் வழி. அப்படிக் கொள்ளாதவர்களை, ஒரு சமூகம், அவரின் நலனுக்காக, சுவீகரிக்க ஊக்குவிக்க/கட்டாயப்படுத்த வேண்டும். நல்ல ஆரோக்கியமான சமூகங்களுக்கான அடையாளமாக இதனைச் சொல்லலாம்.

கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களைக் கூட 'Its a brain game' என்பார்கள். இல்லை. ஒரு கூட்டம் ஒரு விளையாட்டின் கடிவாளத்தைத் தன் கரத்திலேயே வைத்திருக்கச் சொல்லும் போலி வார்த்தைகள் தான் அவை. அந்த வார்த்தைகளில், உலகின் ஜனத்தொகையில் இரண்டாவதாக இருக்கும் நாடு வீழ்ந்தது துரதிருஷ்டமே. பிக் பாஸ் 8வது சீசனில் காணப்படும் அதே துரதிருஷ்டம்.

Boys or girls போட்டியில் இயற்கையின் விதிகளை மறந்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது.



மரபணுக்கள் சிறுகதைத் தொகுப்பு நூல் - படைப்பு சங்கமம் - 2024 காணொளி

 படைப்பு பதிப்பகம் வெளியிடும் எனது அடுத்த விஞ்ஞானப் புனைவுச் சிறுகதைத் தொகுப்பு நூலான 'மரபணுக்கள்' நூலுக்கு படைப்பு சங்கமம் - 2024 நிகழ்வில் வெளியிடப்பட்ட காணொளி.


பொருத்தமான படங்களுடன், இனிமையான இசையுடன் மிக அழகான காணொளியாக வந்துள்ளது. படைப்பு பதிப்பகத்தாருக்கு எனது நன்றிகள்.

https://www.youtube.com/watch?v=KjCPO6N5cLs

நூல் வாங்க தொடர்புக்கு:
----------------------------------------
அலைபேசி எண்: 7338897788 / 91 97908 21981
நூல் விற்பனை பொறுப்பாளர்கள்: ரூஃபஸ் வி ஆண்டனி / சலீம் கான்(சகா)

PADAIPPU KUZHUMAM,
No. 3, Ground Floor,
Ajantha Towers,
Corporation colony Street,
Kodambakkam, Chennai - 600 024
Mobile : +91 73388 97788 / 73388 47788

Monday, 7 October 2024

பிக் பாஸ் - நாள் 1

பிக் பாஸ் - நாள் 1



சாச்சனா முதல் ஆளாக, இருபத்து நான்கு மணி நேர இவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார்.

எதார்த்தமாக, மிகவும் அப்பாவித்தனமாக அவர் பகிர்ந்து கொண்ட ஒன்றை வைத்தே அவரை eliminate செய்திருக்கிறார்கள் போட்டியாளர்கள். இனி அவர் 'விழித்துக்கொள்வார்' என்று நம்பலாம். பார்க்கப்போனால் இது ஒரு சுழற்சி தான். ஏதாவது ஒரு கட்டத்தில் அப்பாவித்தனம் உதிர வேண்டும் அல்லவா? அந்த  'நல்ல' காரியத்தைத்தான் போட்டியாளர்கள் செய்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. சாச்சனா இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நம்மில் எல்லோருக்குமே இது ஏதாவது ஒரு கட்டத்தில் நடந்திருக்கும். அப்போதுதான் 'விழித்திருப்போம்'. அந்த வகையில் போட்டியாளர்களுக்கு நன்றிகளைச் சொல்வோம்.

இதில் சாதகமான விஷயம், அவரது இருபத்துயோரு வயது.

ஒரு தோல்வி நம்மை என்ன செய்கிறது என்பதில் தான் நாம் யார் என்பதையும் உலகம் தெரிந்துகொள்ளும். இந்தப் புள்ளியில் இரண்டே outcome தான். இந்தத் தோல்வியில் சாச்சனா துவண்டு காணாமல் போவதும், அதை விடவும் வலுவாக அடுத்த கட்டம் எடுத்து வைப்பதும் தான். 

இளம் வயதில் தோல்விகள் நம்மைப் பக்குவப்படுத்தும் என்பது என் வாதம் மட்டும் பார்வை. அந்தக் காரணத்தால், விரும்பியே தோல்வியைத் தழுவுங்கள் என்பேன். முதல் பாதி கடினமாக இருப்பவருக்கே இரண்டாம் பாதி நன்றாக இருக்க வாய்ப்பு அதிகமிருக்கிறது.  

பள்ளி, கல்லூரிகளில் மிகப்பெரிய அளவில் bullyingஐ சந்தித்திருக்கிறேன். என் வகுப்பில் படித்தவர்களுக்கு என் குறித்து, 'இவனெல்லாம் வேஸ்ட்' என்கிற அளவில் தான் ஒபினியன் இருந்தது என்பது எனக்கே தெரியும். என் முகத்துக்கு நேராகவே சொல்லியிருக்கிறார்கள். 'நாம வேஸ்ட் தானோ' என்று என்னையே கேட்டுக்கொண்ட நாட்களும் இருந்திருக்கின்றன. 

இன்று சாச்சனா அழுகையுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது, கல்லூரியில் கடைசித் தேர்வை எழுதிவிட்டு ஈர்மான கண்களுடன் வெளியேறிய என்னையே திரும்பிப் பார்த்தது போலிருந்தது.

நாள்பட நாள்பட தான் புரிந்தது, எல்லோருமே, பிறிதேதோ ஒருவரின் கண்களுக்கு 'வேஸ்ட்' ஆகத்தான் இருக்கிறார்கள். எல்லா தரப்புக்கும் ஒரு எதிர் தரப்பு இருக்கிறது. பறவைகள் பலவிதம். சாச்சனா இன்று தன் எதிர்தரப்பைப் பார்த்திருக்கிறார். 

ஒரு சிறுகதை எழுதுகிறோம். எல்லோருமா வாழ்த்துகிறார்கள்? குறை சொல்பவர்களும் இருப்பார்கள். அந்தக் குறைகள் என்ன என்பதை மட்டும் தான் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அந்தக் குறைகளின் மீது வேலை செய்ய வேண்டும். அந்தக் குறையின் தீவிரத்தைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும். அதன் மீது நம் உழைப்பை நல்க வேண்டும். இப்படியெல்லாம் செய்தால் வெற்றி கூடும் என்று அர்த்தமில்லை. வெற்றி நம் கையில் இல்லை, அது இயற்கையின் கையில். எப்போது எங்கு யாருக்கு வெற்றியைத் தர வேண்டும் என்பது அதன் கணக்காகிறது.

நம் வேலை உழைப்பை நல்குவது மட்டுமே என்று தான் சொல்கிறேன்.

சாச்சனா அதைச் செய்வார் என்று நம்புகிறேன்.  




Saturday, 21 September 2024

மரபணுக்கள் - விஞ்ஞானச் சிறுகதைகள் - புதிய நூல் வெளியீடு

 படைப்பு பதிப்பக வெளியீடாகவும் எனது பதினான்காவது நூலாகவும் "மரபணுக்கள்" என்ற தலைப்பிலான விஞ்ஞானப் புனைவுச் சிறுகதைத் தொகுதி நூல் வெளியாக இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் நண்பர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு வகையில், இது, தமிழ் நாடு அரசின் விருது பெற்ற விஞ்ஞானப் புனைவுச் சிறுகதை நூலான எனது 'வாவ் சிக்னல்' நூலின் தொடர்ச்சி எனலாம். அத்தொகுதியில் இடம்பெற்ற சிறுகதைகள் எழுதப்பட்ட காலகட்டத்தில் எழுதப்பட்ட சிறுகதைகள் தாம் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. ஒரே வித்தியாசம், இவைகளும் அறிவியல் புனைவுகள் தான் என்றாலும், மரபணுக்களை மையமாகக் கொண்ட பத்து சிறுகதைகளைக் கொண்ட நூல் என்பதுதான்.
எதிர்வரும் 28-09-2024 தேதியில் நடைபெற இருக்கும் படைப்பு சங்கமம் - 2024 நிகழ்வில், இந்த நூல் வெளியாக இருக்கிறது. வாய்ப்பிருக்கும் நண்பர்கள் நிகழ்வில் பங்குபெறலாம்.
விழா நாள் : 28-09-2024
இடம்: Sir Pitty Thiyagaraya Hall
68, Gopathi Narayanaswami Chetty Road, Parthasarathi Puram, T. Nagar, Chennai- 600017
(Opposite Kannadasan Statue)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 7 வரை
மதிய உணவு: அரங்கத்திலேயே வழங்கப்படும்
தேநீர் மற்றும் ஸ்னாக்ஸ்: காலை மற்றும் மாலை
எனது நூலை வெளியிடும் படைப்பு பதிப்பகத்தாருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். எனது இந்தப் புதிய நூலுக்குத் தங்கள் நல்லாதரவை நல்கும்படி வாசக, மற்றும் எழுத்தாள நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.




Sunday, 15 September 2024

LayOff - இணைய நண்பர்கள் மன்னிக்கவும்.

 LayOff - இணைய நண்பர்கள் மன்னிக்கவும்.

***********************************************



சுற்றி எங்கிலும் லேஆஃப் நடந்துகொண்டிருக்கிறது. எனது சமீபத்திய LayOff அனுபவம் விசித்திரமானதும், என் வகையானதும் கூட.


பிப்ருவரி 12ம் தேதி தமிழக அரசு விருது அறிவிப்பு குறித்து தகவல் வந்தது. பிப்ருவரி 14ம் தேதி என் தந்தை என் சார்பாக விருதைப் பெற்றுக்கொண்டதெல்லாம் இணைய நண்பர்கள் அறிந்ததே. இணைய நண்பர்கள் அறியாதது, பிப்ருவரி 16ம் தேதி layoff செய்யப்பட்டதாக தகவல் வந்தது. அலுவலக மடிக்கணிணி வேலை செய்யவில்லை. அது ஒரு வெள்ளிக்கிழமை மாலை. 


எனக்கு இப்படித்தான் நடக்கும். என் அனுபவத்தில், என் வாழ்க்கையை நான் திரும்பிப் பார்த்ததில் சில ஒற்றுமைகளை கவனித்திருக்கிறேன்.


1. அசந்தர்ப்பமான சூழல்களில் தான் நடக்க வேண்டிய விடயங்கள் நடக்கும்.

2. நல்ல விடயங்கள்/தகுதிப்பட்ட விடயங்கள் நடக்கும். ஆனால், தாமதமாக, அல்லது மிகத்தாமதமாக நடக்கும். ஆனால், நடக்கும்.


இதை என்ன சொல்வது என்று தெரியவில்லை. 2014ல் துவங்கிய உறவு அது. சுமார் ஒன்பதரை வருடங்கள் நீடித்து, சரியாக பிப்ருவரி 16ம் தேதி முடிவுக்கு வந்தது. நான் கான்ட்ராக்டர் என்பதால் முன்னறிவிப்பு, இரண்டு வார கெடு எதுவும் இல்லை. திடீரென்று layoff செய்துவிட்டார்கள். 90 பேர் வேலை பார்த்த ப்ராஜக்டில், இப்போது வெறும் 12 பேர்.


அதன் பிறகு மீண்டும் 12வது பொதுத்தேர்வுக்கு தயார் செய்ததையெல்லாம் நினைவுக்கு வரும் படி செய்துவிட்டது அதற்குப் பின்னான நேர்முகத்தேர்வுகளுக்கான தயாரிப்புகள். பிப்ருவரி இறுதிக்குள்ளாகவே ஒரு நிறுவனத்தில் ஆஃபர் வரை சென்றாகிவிட்டது. என்ன நடந்ததோ தெரியவில்லை. backed out. மீண்டும் தயாரிப்புகள்.


வேலைக்கு உலை வந்துவிட்டபிறகு என்ன எழுத? சிறுகதைகளிலோ, இலக்கியத்தின் எந்த வகைமையிலுமே வேலை செய்ய ஏற்ற மன அமைப்பு வாய்க்கவே இல்லை. அடுத்த வேலையைப் பெறும் வரை அந்த மனஅமைப்பு வாய்க்காது என்று தான் தோன்றியது. இணையம் பக்கமே வரமுடியவில்லை.  ஏன் நெடு நாட்களாக எதுவும் பகிரவில்லை என்று இணைய நண்பர்களிடமிருந்தெல்லாம் அவ்வப்போது அழைப்புகள், குறுஞ்செய்திகள் வரும். என்ன பதில் சொல்ல முடியும்? என் கவலைகளை மற்றவர்கள் மீது திணிக்க விருப்பமிருக்கவில்லை. 


தயாரிப்புகள். 16-17 மணி நேரம் தயாரிப்புகள். கண்கள் அயர்ந்து போகுமளவினதான தயாரிப்பு. இரண்டு கண்களும் எரியும். விளக்கெண்ணெய் தடவி படுத்த இரவுகள் பல. சில நேர்காணல்களிலிருந்து பதிலே இல்லை.  அதாவது ஏற்பு/மறுப்பு இரண்டுமே வராது. பல நேர்காணல்கள் கண்துடைப்பு நாடகம் என்று வெளிப்படையாகவே தெரிந்தன. இதில், அமெரிக்க வேலை வாய்ப்புச் சந்தையில் சில கள்ளப் பக்கங்களைக் கவனிக்க முடிந்தது. அது பற்றிப் பிறகு விலாவாரியாக எழுதுகிறேன். 


சற்றேறக்குறைய மேமாதம் தான் இறைவனின் அருளால் ஒரு Offer கிட்டியது.  'அப்பாடா!!' என்றிருந்தது.


பிப்ருவரி 16ல் தொலைந்த உறக்கம், சரியாக மூன்று மாதங்களுக்குப் பிறகே நிம்மதியான உறக்கம் உறங்க முடிந்தது. அதன் பிறகே மீண்டும் இணையம் வர முடிந்தது. 'ஏன் நெடு நாட்களாக எதுவும் பகிரவில்லை?' என்று கேட்ட அனைத்து நண்பர்களின் அன்புக்கும் அனேகம் கோடி நன்றிகள். அப்போது எனக்கிருந்த சூழலை எல்லோரிடமும் பகிர்ந்து எல்லோரையும் அதனுள் இழுக்க விரும்பவில்லை. அதனால், எனக்குள்ளேயே வைத்துக்கொண்டேன், யாரிடமும் அதிகம் பகிரவில்லை. பல மாத மெளனத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேன். 


இப்போதும் கிடைத்த, கிடைத்த வேலையில் செட்டில் ஆக மூன்று மாதங்கள் எடுத்துக்கொண்ட பின்னரே இதை எழுதும் மன அமைப்பு வாய்த்தது. இறைவனுக்கு நன்றிகள். இயற்கைக்கு நன்றிகள். 'விரும்பும்/எண்ணும் விடயங்கள் அனைத்தும் தாமதமாக நடக்கிறது' என்பதை மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 


இதற்கெல்லாம் என்ன பொருள் ? என்ன அர்த்தம்? இந்த இயற்கை அப்படி என்னதான் சொல்ல வருகிறது என்பதை இன்னமும் முழுமையாக விளங்கிக்கொண்ட பாடில்லை.


Monday, 9 September 2024

மகாவிஷ்ணு விவகாரம்

மகாவிஷ்ணு விவகாரம்



எதற்கெடுத்தாலும் ஆன்மீகம் சார்ந்து பதிலளித்துக் கேட்பவர்களைக் கவர்ந்து விடலாம் என்பதெல்லாம் அறிவியல் வளராத காலத்திற்கு வேண்டுமானால் பொருந்தலாம். இக்காலத்திற்குப் பொருந்தாது.  பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கும் அந்தப் பள்ளியின் இரண்டு ஆசிரியர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. 


மகாவிஷ்ணு தனக்கிருந்த புரிதலையே சொல்லியிருந்தார் என்றால் அவரது புரிதல் தவறு தான். இப்படிச் சிந்திப்பவரை எப்படிப் பேச விட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.


உதாரணம் சொல்லலாம். பள்ளி கல்லூரிகளில் 'மேலிடத்திலிருந்து' ஒரு ஆலோசனை வழங்கப்படும். விதி என்றே சொல்லலாம். பள்ளி விழாக்களில் பேசுவதற்கு சில அமைப்புகளை வலிந்து சேர்த்துக்கொள்ளும் படி நிர்பந்திப்பார்கள்.


எக்ஸ் என்றொரு அமைப்பு என்று வைத்துக்கொள்ளலாம். இந்த அமைப்பில் உள்ளவர்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. சம்பந்தா  சம்பந்தம் இல்லாமல் ஆஜர் ஆக விரும்புவார்கள். அதற்கேற்ப, பள்ளி கல்லூரிகளின் நடத்துனர்களுக்கு மறைமுகமாக நிர்பந்தம் அளிப்பார்கள். வெளி நாடுகளில் இருந்தால் நிர்பந்திப்பது சுலபம். 


சிலருக்கு 'ஆஜர் ஆவது என்பது' பாடல் பாடுவதாக இருக்கலாம். சிலருக்கு அது 'எழுத்தாளர்' என்று அழைக்கப்படுவதாக இருக்கலாம். சிலருக்கு அது 'கவிஞர்' என்று அழைக்கப்படுவதாக இருக்கலாம். சிலருக்கு 'மருத்துவர்' என்று அழைக்கப்படுவதாக இருக்கலாம். கோட் சூட் போட்டுக்கொண்டு கல்வியாளர்கள் சிந்தனாவாதிகள் பங்கேற்கும் அரங்கில் தாங்களும் பங்கேற்க வேண்டும் என்று கிளம்பிவிடுவார்கள்.


பாடகர் என்று அழைக்கப்பட நினைப்பவர் உண்மையில்  'All in all அழகுராஜா' திரைப்படத்தில் வரும் கதா நாயகி போலத்தான் கத்துவார். அவரைச் சுற்றி இருக்கும் கூட்டம் அவரை 'அடடா என்னமாய்ப் பாடுகிறார்' என்று சொல்லும். கவிஞர் என்பார்கள். எதுகை மோனை தாண்டி பயணப்பட்டிருக்கவே மாட்டார். அவரைச் சுற்றி இருக்கும் கூட்டம் அவரை 'அடடா! என்ன ஒரு கவிதை!' என்று சொல்லும் வகையினதாக இருக்கும். எழுத்தாளர் என்பார்கள். ஒரு வரி கூட இலக்கியப் பத்திரிக்கைகளில் எழுதியிருக்க மாட்டார். அவரைச் சுற்றி இருக்கும் கூட்டம் அவரை 'என்னமா எழுதுறார்!' என்று இவர்களாகக் கிளப்பி விடுவார்கள். பார்க்கப்போனால், இப்படிச் சொல்லும் கூட்டத்தைத் தங்களைச் சுற்றி வைத்திருப்பது தான் இவரது ஒரே தகுதியாக இருக்கும்.  இவர்களைச் சேர்த்துக்கொள்ளும் படிதான் 'பரிந்துரை' மேலிடத்திலிருந்து வரும்.


ஆசிரியர்கள் யாராலும் மீறவும் முடியாது. அந்த வகையில் ஆசிரியர்கள் சூழ்நிலைக் கைதிகளே. கடனே என்று அவர்களும் செவிசாய்ப்பார்கள். வேறுவழியில்லை. இருக்கும் வேலையைத் தக்க வைக்க வேண்டுமே?


இந்த 'ஆஜர்' பார்ட்டிகளும், நிகழ்ச்சிக்கு முன், சில காணொளிகளைப் பார்த்தும், சிந்தனாவாதிகள் பேச்சைக் கேட்டும், 'தயாரித்துக்கொண்டு' வந்து பேசுவார்கள். எல்லாமே எங்கிருந்தோ சுட்டதாகத்தான் இருக்கும். சொந்தக் கருத்தெல்லாம் இல்லை. இது ஒரு பெரிய அக்கப்போர். இதற்கெல்லாம் ஒரு முடிவே கிடையாது.


பள்ளி நாட்களில், இது போல் வந்து பேசுபவர்கள் பேசுவதை மிகவும் கர்ம சிரத்தையாகக் கேட்டிருக்கிறேன். இப்போது, இந்த சிஸ்டம் எப்படி எல்லாம் இயங்குகிறது என்பதைப் பார்த்துவிட்ட பிறகு, ச்சீய் என்றிருக்கிறது.  விஜய் சேதுபதி சொல்வது போல் 'இவர்களையெல்லாம் அறிவாளிகள் என்று நினைத்ததுதான் நம் தவறு'.


எதில் வேண்டுமானாலும் , போலிகளை நிரப்பிக்கொள்ளுங்கள். அறிவுசார் துறைகளை விட்டுவிடுங்கள் என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. என்னைக் கேட்டால் சில வழிமுறைகளைக் கையாளலாம். 


1. மகாவிஷ்ணுவிடம் கண்பார்வையற்ற ஆசிரியர் கேட்டது போல்,  இப்படி ஆஜர் ஆகும் கோட் சூட் போட்டவனிடமெல்லாம் திடீரென்று ஒன்றுக்கு பத்து கேள்விகள் கேட்டுத் திணற அடிக்க வேண்டும். போலிகள் மாட்டிக்கொள்ளும்.

2. இப்படி, துறைக்கு சிறிதும் தொடர்பில்லாத பக்குவப்படாத ஆட்கள் நுழைகிறார்கள் என்றால் உடன் பங்குபெறும் மற்றவர்கள் நிகழ்ச்சியைப் புறக்கணிக்கலாம். ஆனால், இது எப்போதும் சாத்தியப்படுவதில்லை. 


கேள்வி கேளுங்கள். நாலு கேள்வி கேட்டால் தான் போலிகளுக்கும் பயம் வரும். அமைதியாக இருந்து அப்படி எதைத்தான் சாதிக்கிறீர்கள்?