மகாவிஷ்ணு விவகாரம்
எதற்கெடுத்தாலும் ஆன்மீகம் சார்ந்து பதிலளித்துக் கேட்பவர்களைக் கவர்ந்து விடலாம் என்பதெல்லாம் அறிவியல் வளராத காலத்திற்கு வேண்டுமானால் பொருந்தலாம். இக்காலத்திற்குப் பொருந்தாது. பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கும் அந்தப் பள்ளியின் இரண்டு ஆசிரியர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
மகாவிஷ்ணு தனக்கிருந்த புரிதலையே சொல்லியிருந்தார் என்றால் அவரது புரிதல் தவறு தான். இப்படிச் சிந்திப்பவரை எப்படிப் பேச விட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
உதாரணம் சொல்லலாம். பள்ளி கல்லூரிகளில் 'மேலிடத்திலிருந்து' ஒரு ஆலோசனை வழங்கப்படும். விதி என்றே சொல்லலாம். பள்ளி விழாக்களில் பேசுவதற்கு சில அமைப்புகளை வலிந்து சேர்த்துக்கொள்ளும் படி நிர்பந்திப்பார்கள்.
எக்ஸ் என்றொரு அமைப்பு என்று வைத்துக்கொள்ளலாம். இந்த அமைப்பில் உள்ளவர்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஆஜர் ஆக விரும்புவார்கள். அதற்கேற்ப, பள்ளி கல்லூரிகளின் நடத்துனர்களுக்கு மறைமுகமாக நிர்பந்தம் அளிப்பார்கள். வெளி நாடுகளில் இருந்தால் நிர்பந்திப்பது சுலபம்.
சிலருக்கு 'ஆஜர் ஆவது என்பது' பாடல் பாடுவதாக இருக்கலாம். சிலருக்கு அது 'எழுத்தாளர்' என்று அழைக்கப்படுவதாக இருக்கலாம். சிலருக்கு அது 'கவிஞர்' என்று அழைக்கப்படுவதாக இருக்கலாம். சிலருக்கு 'மருத்துவர்' என்று அழைக்கப்படுவதாக இருக்கலாம். கோட் சூட் போட்டுக்கொண்டு கல்வியாளர்கள் சிந்தனாவாதிகள் பங்கேற்கும் அரங்கில் தாங்களும் பங்கேற்க வேண்டும் என்று கிளம்பிவிடுவார்கள்.
பாடகர் என்று அழைக்கப்பட நினைப்பவர் உண்மையில் 'All in all அழகுராஜா' திரைப்படத்தில் வரும் கதா நாயகி போலத்தான் கத்துவார். அவரைச் சுற்றி இருக்கும் கூட்டம் அவரை 'அடடா என்னமாய்ப் பாடுகிறார்' என்று சொல்லும். கவிஞர் என்பார்கள். எதுகை மோனை தாண்டி பயணப்பட்டிருக்கவே மாட்டார். அவரைச் சுற்றி இருக்கும் கூட்டம் அவரை 'அடடா! என்ன ஒரு கவிதை!' என்று சொல்லும் வகையினதாக இருக்கும். எழுத்தாளர் என்பார்கள். ஒரு வரி கூட இலக்கியப் பத்திரிக்கைகளில் எழுதியிருக்க மாட்டார். அவரைச் சுற்றி இருக்கும் கூட்டம் அவரை 'என்னமா எழுதுறார்!' என்று இவர்களாகக் கிளப்பி விடுவார்கள். பார்க்கப்போனால், இப்படிச் சொல்லும் கூட்டத்தைத் தங்களைச் சுற்றி வைத்திருப்பது தான் இவரது ஒரே தகுதியாக இருக்கும். இவர்களைச் சேர்த்துக்கொள்ளும் படிதான் 'பரிந்துரை' மேலிடத்திலிருந்து வரும்.
ஆசிரியர்கள் யாராலும் மீறவும் முடியாது. அந்த வகையில் ஆசிரியர்கள் சூழ்நிலைக் கைதிகளே. கடனே என்று அவர்களும் செவிசாய்ப்பார்கள். வேறுவழியில்லை. இருக்கும் வேலையைத் தக்க வைக்க வேண்டுமே?
இந்த 'ஆஜர்' பார்ட்டிகளும், நிகழ்ச்சிக்கு முன், சில காணொளிகளைப் பார்த்தும், சிந்தனாவாதிகள் பேச்சைக் கேட்டும், 'தயாரித்துக்கொண்டு' வந்து பேசுவார்கள். எல்லாமே எங்கிருந்தோ சுட்டதாகத்தான் இருக்கும். சொந்தக் கருத்தெல்லாம் இல்லை. இது ஒரு பெரிய அக்கப்போர். இதற்கெல்லாம் ஒரு முடிவே கிடையாது.
பள்ளி நாட்களில், இது போல் வந்து பேசுபவர்கள் பேசுவதை மிகவும் கர்ம சிரத்தையாகக் கேட்டிருக்கிறேன். இப்போது, இந்த சிஸ்டம் எப்படி எல்லாம் இயங்குகிறது என்பதைப் பார்த்துவிட்ட பிறகு, ச்சீய் என்றிருக்கிறது. விஜய் சேதுபதி சொல்வது போல் 'இவர்களையெல்லாம் அறிவாளிகள் என்று நினைத்ததுதான் நம் தவறு'.
எதில் வேண்டுமானாலும் , போலிகளை நிரப்பிக்கொள்ளுங்கள். அறிவுசார் துறைகளை விட்டுவிடுங்கள் என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. என்னைக் கேட்டால் சில வழிமுறைகளைக் கையாளலாம்.
1. மகாவிஷ்ணுவிடம் கண்பார்வையற்ற ஆசிரியர் கேட்டது போல், இப்படி ஆஜர் ஆகும் கோட் சூட் போட்டவனிடமெல்லாம் திடீரென்று ஒன்றுக்கு பத்து கேள்விகள் கேட்டுத் திணற அடிக்க வேண்டும். போலிகள் மாட்டிக்கொள்ளும்.
2. இப்படி, துறைக்கு சிறிதும் தொடர்பில்லாத பக்குவப்படாத ஆட்கள் நுழைகிறார்கள் என்றால் உடன் பங்குபெறும் மற்றவர்கள் நிகழ்ச்சியைப் புறக்கணிக்கலாம். ஆனால், இது எப்போதும் சாத்தியப்படுவதில்லை.
கேள்வி கேளுங்கள். நாலு கேள்வி கேட்டால் தான் போலிகளுக்கும் பயம் வரும். அமைதியாக இருந்து அப்படி எதைத்தான் சாதிக்கிறீர்கள்?