என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Thursday, 17 October 2024

Halley's Comet!

 Comet Tsuchinshan அக்டோபர் 20 தேதி வரை வானில் தெரியும் என்கிறார்கள். அதன் வெகு நீ......ளமான சுற்று வட்டப்பாதையை (80000 ஆண்டுகள்) கணக்கில் கொண்டால் ஒப்பீட்டளவில் ஹாலீஸ் காமட்டின் 75 ஆண்டுகள் சுற்றுவட்டப்பாதை ஒன்றுமே இல்லை எனலாம்.


ஆயினும், ஹாலீஸ் காமட்டை கிரேக்கத்தில் கி.முக்கு முன்பே கண்டுவிட்டதாக பிரிட்டீஷ் நூலகத்தில் இருக்கும் பாபிலோனியன் குறிப்புகள் சொல்கின்றன. ஆனால், அப்போது அது மீண்டும் மீண்டும் பூமியை அண்மிக்கும் காமட் என்பது தெரியாமல் அதன் ஒவ்வொரு அண்மையையும் தனித்தனி காமட் வரவாகத்தான் குறித்து வைத்திருந்திருக்கிறார்கள்.


காமட் தெரிந்தால் ஏதோ அசம்பாவிதம் நிகழப்போகிறது என்கிற அளவில் மட்டுமே அப்போதைய புரிதல் இருந்திருக்கிறது. 


அதன் பிறகு வந்த கோபர்னிகஸின் கணக்குகள் தாம் விண்வெளியில் தோன்றும் கற்களின் துல்லியமான இருப்பிடம், பயணப்பாதை ஆகியவற்றைக் கண்டுபிடிக்கும் கணக்குகளை உள்ளடக்கி வெளிவந்தன. உண்மையில் இந்தக் கணக்குகள் தான் அப்போதைய விடிவெள்ளி எனலாம். இந்தக் கணக்குகள் மட்டும் இல்லையென்றால் விண்ணில் தோன்றும் பலவற்றைத் தொடர்புபடுத்த இயலாமல் எல்லாவற்றையும் தனித்தனி நிகழ்வுகள் என்கிற அளவில் புரிந்துகொண்டிருந்திருப்போம். கொபர்னிகஸ் தான் முதன் முதலாக சூரியமை மையமாகக் கொண்ட உலகை முன்மொழிந்தார்.


கோபர்னிகஸுக்கு ஒரு மாபெரும் சல்யூட்.


கோபர்னிகஸின் கணக்குகளின் அடிப்படையில் வளர்ந்த வானியலின் அடுத்தடுத்த கட்டமாக, ஹாலீ தான், 1531, 1607 and 1682 ஆகிய வருடங்களில் வந்த காமட்டின் வரவுகளில் உள்ள ஒற்றுமைகளை ஆராய்ந்து, அது அனைத்திலும் வந்தது ஒரே காமட் தான் என்பதைக் கண்டுபிடித்தார். அதனால் அந்தக் காமட்டுக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது. அவர் மட்டும் அதைக் கண்டுபிடித்திருக்காவிட்டால், ஒரே காமட்டை பல்வேறு பெயர்களில் நாம் அழைத்துக் கொண்டிருந்திருப்போம்.