என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Sunday, 13 October 2024

எதிர்காலம்!!

 எதிர்காலம்!!


ஏதோ எதிர்காலத்திற்குள்ளேயே நுழைந்துவிட்டதைப் போலிருக்கிறது. 


டெஸ்லா humanoid robotகளை வெளியிட்டிருக்கிறார்கள். I, Robot படத்தில் இடம்பெரும் காட்சிகளைப் போலிருந்தது அந்த எந்திரங்கள் மனிதர்களுடன் பேசுவதையும், உரையாடுவதையும் பார்க்கையில்.


கல்லூரி மாணவர்களுக்கு உணவு எடுத்துச்செல்லும் இயந்திர டெலிவரி பாய்கள், உணவகங்களில் ஆர்டர் கேட்டு பரிமாறும் எந்திர சிப்பந்திகள் என்று திரும்பும் இடங்களிலெல்லாம் எந்திரங்களின் ஆக்ரமிப்பு தொடர்கிறது.


இனி வரும் காலங்களில், எந்திர மனிதர்களால் மட்டுமே  நடத்தப்படும் உணவகங்கள், கடைகள், வரவேற்பறைகள் என்று இது இன்னும் அடுத்தடுத்த கட்டங்களுக்குப் பயணிக்கும் என்பது போலத்தான் தெரிகிறது. 





அமெரிக்காவில் இது வந்துவிட்டால் இந்தியாவுக்கு இது வர ஒரு பத்தாண்டுகள் ஆகலாம். 2035களில் இந்தியாவிலும் முழுக்க முழுக்க இயந்திரங்களால் நடத்தப்படும் மால்கள், உணவகங்களைப் பார்க்கலாம் என்றே தோன்றுகிறது.


இன்னொரு பக்கம், "உணவகங்கள் நவீனமாகிவிட்டன, உணவுகள் நஞ்சாகிவிட்டதே"  என்கிற கூக்குரலும் கேட்டபடிதான் இருக்கிறது. இது இப்படித்தான் தொடர வேண்டுமா என்ற சோகம் இருக்கிறதுதான். நாம் எல்லோரும் முயன்றால், இந்தக் கதையின் அடுத்த கட்டம் வேறு விதமாகவும் இருக்கலாமே என்ற குரல் எனக்குள்ளும் ஒலிக்கிறதுதான்.

இந்தக் கூக்குரலில் உங்கள் குரலும் அடங்கும் என்று நீங்கள் நினைத்தால், இதைப் படியுங்கள்.


சமீபமாக ஒரு புத்தகக் கண்காட்சிக்குச் சென்று வந்த நண்பர் சொல்கிறார்.


"பிரிண்டிங் ப்ரஸ் வீணாயிடக்கூடாதுன்னு கண்டதையெல்லாம் பிரிண்ட் அடிச்சு புக்குன்னு விக்கிறாய்ங்க. எழுதின எவனுக்கும் எந்தப் பயிற்சியும் இல்ல. ஆக, நாலு நல்ல நூல்களைச் சுத்தி நாலாயிரம் குப்பை இருக்கு.. புதுசா வாங்க வர்றவன் நல்லதுன்னு எப்படிக் கண்டுபிடிப்பான்?" 


கிட்டத்தட்ட இதே வாதத்தைத்தான் உணவகங்களுக்கு மட்டுமல்லாமல் ஏனைய எல்லாவற்றுக்கும் சொல்ல வேண்டி இருக்கிறது. மட்டமான, ஆயுள் குன்றிய டிம்பர்களை வைத்து வீடு கட்டுகிறார்கள். 


"நான்கு நல்ல கட்டுமானங்களைச் சுற்றி நாற்பதாயிரம் மோசமான கட்டுமானங்கள்"


"நான்கு நல்ல உணவுப் பொருட்களைச் சுற்றி நாற்பதாயிரம் மோசமான உணவுகள்"


இப்போதெல்லாம் இந்த வாசகம் டெம்ப்ளேட் ஆகிவிட்டது...


"நான்கு நல்ல ................... சுற்றி, நாற்பதாயிரம் மோசமான .........." இதுதான் அந்த டெம்ப்ளேட். கட்டுமானங்களை, உணவகங்களை கூக்குரலிடும் நாம் தான் நடத்துகிறோம். நமக்காகத்தான் நடத்துகிறோம். "நாம மட்டும் தான் செய்யறோம், எல்லாரும் பண்றாங்க. நமக்காக கொஞ்சம் நாமளும் செஞ்சிக்கிட்டா தான் என்ன?" என்ற சமாளிப்புடன் நமக்கு நாமே ஒருவருக்கொருவர் செய்துகொள்வதன் ஒட்டுமொத்த பக்க விளைவு தான் இப்போது நடப்பது எல்லாமும்.

 

நமக்கெல்லாம் "உணவகங்கள் நவீனமாகிவிட்டன, உணவுகள் நஞ்சாகிவிட்டதே" என்று சொல்ல என்ன தகுதி இருக்கிறது?