என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday, 7 October 2024

பிக் பாஸ் - நாள் 1

பிக் பாஸ் - நாள் 1



சாச்சனா முதல் ஆளாக, இருபத்து நான்கு மணி நேர இவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார்.

எதார்த்தமாக, மிகவும் அப்பாவித்தனமாக அவர் பகிர்ந்து கொண்ட ஒன்றை வைத்தே அவரை eliminate செய்திருக்கிறார்கள் போட்டியாளர்கள். இனி அவர் 'விழித்துக்கொள்வார்' என்று நம்பலாம். பார்க்கப்போனால் இது ஒரு சுழற்சி தான். ஏதாவது ஒரு கட்டத்தில் அப்பாவித்தனம் உதிர வேண்டும் அல்லவா? அந்த  'நல்ல' காரியத்தைத்தான் போட்டியாளர்கள் செய்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. சாச்சனா இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நம்மில் எல்லோருக்குமே இது ஏதாவது ஒரு கட்டத்தில் நடந்திருக்கும். அப்போதுதான் 'விழித்திருப்போம்'. அந்த வகையில் போட்டியாளர்களுக்கு நன்றிகளைச் சொல்வோம்.

இதில் சாதகமான விஷயம், அவரது இருபத்துயோரு வயது.

ஒரு தோல்வி நம்மை என்ன செய்கிறது என்பதில் தான் நாம் யார் என்பதையும் உலகம் தெரிந்துகொள்ளும். இந்தப் புள்ளியில் இரண்டே outcome தான். இந்தத் தோல்வியில் சாச்சனா துவண்டு காணாமல் போவதும், அதை விடவும் வலுவாக அடுத்த கட்டம் எடுத்து வைப்பதும் தான். 

இளம் வயதில் தோல்விகள் நம்மைப் பக்குவப்படுத்தும் என்பது என் வாதம் மட்டும் பார்வை. அந்தக் காரணத்தால், விரும்பியே தோல்வியைத் தழுவுங்கள் என்பேன். முதல் பாதி கடினமாக இருப்பவருக்கே இரண்டாம் பாதி நன்றாக இருக்க வாய்ப்பு அதிகமிருக்கிறது.  

பள்ளி, கல்லூரிகளில் மிகப்பெரிய அளவில் bullyingஐ சந்தித்திருக்கிறேன். என் வகுப்பில் படித்தவர்களுக்கு என் குறித்து, 'இவனெல்லாம் வேஸ்ட்' என்கிற அளவில் தான் ஒபினியன் இருந்தது என்பது எனக்கே தெரியும். என் முகத்துக்கு நேராகவே சொல்லியிருக்கிறார்கள். 'நாம வேஸ்ட் தானோ' என்று என்னையே கேட்டுக்கொண்ட நாட்களும் இருந்திருக்கின்றன. 

இன்று சாச்சனா அழுகையுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது, கல்லூரியில் கடைசித் தேர்வை எழுதிவிட்டு ஈர்மான கண்களுடன் வெளியேறிய என்னையே திரும்பிப் பார்த்தது போலிருந்தது.

நாள்பட நாள்பட தான் புரிந்தது, எல்லோருமே, பிறிதேதோ ஒருவரின் கண்களுக்கு 'வேஸ்ட்' ஆகத்தான் இருக்கிறார்கள். எல்லா தரப்புக்கும் ஒரு எதிர் தரப்பு இருக்கிறது. பறவைகள் பலவிதம். சாச்சனா இன்று தன் எதிர்தரப்பைப் பார்த்திருக்கிறார். 

ஒரு சிறுகதை எழுதுகிறோம். எல்லோருமா வாழ்த்துகிறார்கள்? குறை சொல்பவர்களும் இருப்பார்கள். அந்தக் குறைகள் என்ன என்பதை மட்டும் தான் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அந்தக் குறைகளின் மீது வேலை செய்ய வேண்டும். அந்தக் குறையின் தீவிரத்தைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும். அதன் மீது நம் உழைப்பை நல்க வேண்டும். இப்படியெல்லாம் செய்தால் வெற்றி கூடும் என்று அர்த்தமில்லை. வெற்றி நம் கையில் இல்லை, அது இயற்கையின் கையில். எப்போது எங்கு யாருக்கு வெற்றியைத் தர வேண்டும் என்பது அதன் கணக்காகிறது.

நம் வேலை உழைப்பை நல்குவது மட்டுமே என்று தான் சொல்கிறேன்.

சாச்சனா அதைச் செய்வார் என்று நம்புகிறேன்.