என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

கண்காட்சி சிறுகதை - சொல்வனம் ஏப்ரல் 220 இதழ்





‘அந்த ஆண் விந்தணு சுரைக்காய்க்குள் வைக்கப்பட்டு நாற்பது ண்-நாள்கள் ஒரு குதிரையின் கர்பப்பைக்குள்ளோ அல்லது அதற்கு சமமான வேறொன்றிலோ அசைவு தெரியும் வரை வைக்கப்பட வேண்டும். இப்படிச் செய்யின் அது உருவத்தில் ஓரளவிற்கு ஒரு மனித ஆணையொத்த ஆனால் உடல் முழுவதும் ஒளி ஊடுறுவும் வகையினதாக மாறிவிடும். இதற்குப் பிறகு மனித ரத்தம் அதற்குள் புகுத்தப்பட வேண்டும். இப்படி நாற்பது வாரங்கள் அந்த கரு உயிர்ச் சத்தூட்டப்பட வேண்டும். பிறகு அது மீண்டும் ஒரு குதிரையின் கர்ப்பப்பையில் வளர அனுமதிக்கப்பட வேண்டும். இப்படிச் செய்தால் ஒரு பெண்ணின் கருவில் உருவாகும் மனிதக் குழந்தைப் போல் ஒரு மனித இனம் உருவாகும். ஆனால் அது உருவத்தில் மிக மிகச் சிறியதாக இருக்கும்.’
சித்திரக் குள்ள மனிதர்களை உருவாக்க ஒரு ஜெர்மானிய ரசவாத வல்லுனரால் பரிந்துரைக்கப்பட்ட செயல்முறை விளக்கத்தின் ஒரு பகுதிதான் இது. ஆனால் நான் இப்படி உருவாகவில்லை.
ஆயினும், நான் எப்படி உருவானேன் என்பது குறித்து எனக்கே இன்றைக்கு வரை ஒரு சரியான தெளிவான வடிவம் இல்லை. நான் அவதானித்தவரை என்னை ஓர் பரிசோதனைக்கூடத்தின் உயிரியல் வல்லுனர்கள், ஆராய்ச்சியாளர்கள் உணவளித்து வளர்த்தார்கள். சமயத்தில் அவர்களின் அன்பு குறித்து நான் வியந்திருக்கிறேன். இத்தனை அன்பு கொள்ள நான் என்ன புண்ணியம் செய்திருக்கவேண்டும்? அன்பில்லாவிட்டால் என்மீது அவர்களுக்கேன் அத்தனை அக்கறை?
என்மீது அவர்களுக்கு எத்துனை அன்பென்றால் என் உடல் நலத்தை பல்வேறு கருவிகள் கொண்டு மிக மிகக் கவனமாக அவதானித்தார்கள். நான் என்ன சாப்பிடுகிறேன், அதை எத்தனை அவுன்ஸ் சாப்பிடுகிறேன், எப்போது சாப்பிடுகிறேன் என்பதையெல்லாம் வாரக் கணக்கில் மாதக் கணக்கில் தங்கள் கணினிகளில் குறித்துக் கொண்டார்கள். அதை வைத்து ஒவ்வொரு நாளும் எனக்கான பிரத்தியேக உணவு தயாரித்தார்கள். எனக்கு கொடுக்கப்பட்ட தண்ணீர் சுத்தமாக இருக்க ஒரு தனிக் குழுவையே வைத்திருந்தார்கள். அவ்வப்போது என்னை ஓர் அறைக்குக் கொண்டு சென்று ஆளுயர கண்ணாடி முன் நிறுத்தி புகைப்படங்கள் எடுப்பார்கள்.
அவ்வாறு முதல் முறையாகப் புகைப்படம் எடுத்தபோது என்னை நானே கண்ணாடியில் பார்த்து சற்று அதிர்ந்துதான் போனேன். அப்போது எனக்கு பதினைந்து வயது. ஆனால், நானோ பதினைந்தே சென்டி மீட்டர் உயரம்தான் இருந்தேன். அவர்களின் அத்தனை கவனிப்புக்கு அப்பாலும் நான் 15 சென்டி மீட்டர்தான் இருந்தேன் என்பதே என்னிடம்தான் ஏதோ பிரச்சனை என்று நான் ஊகிக்கப் போதுமானதாக இருந்தது. அந்த பிரச்சனையைத்தான் அவர்கள் அத்துனை பேரும் ஒன்றாகச் சேர்ந்து சரி செய்ய முனைந்தார்கள் என்று தெரிந்தபோது அவர்கள் எப்படி என்னைப் பூப்போல பார்த்துக் கொண்டார்கள் என்றெண்ணி நான் கரைந்தே போனேன்.
துவக்கத்தில் எனக்குப் பதினைந்து வயது என்பதால் நான் பதினைந்து சென்டிமீட்டர் உயரம் இருந்தேனோ என்று எண்ணினேன். ஆனால், அந்த மருத்துவக்கூடத்தில் ஒருவருக்குப் பிறந்த நாள் கொண்டாடியபோது, அவர் முப்பத்து நான்கு வயதில் நூற்றியெண்பது அடி இருப்பதை அவதானித்து என் எண்ணம் தவறு என்றுணர்ந்தேன். அப்போது எனக்குக் குழப்பமாக இருந்தது. என்னால் யாரையும் கேட்க முடியவில்லை. ஏனெனில் நான் அளவில் மிக மக்ச் சிறியதாய் மட்டுமல்லாமல், ஊமையாகவும் இருந்தேன். என்ன காரணத்தினாலோ என்னால் ஏதும் பேச முடிந்திருக்கவில்லை. நானாக ஏதேனும் வாயசைத்தாலும் என் சத்தம் எனக்கே கேட்கவில்லை. ஆனால், என்னால் மற்றவர்களின் சத்தங்களை கேட்க முடிந்தது.
அப்படியும் இப்படியுமாக தர்க்க ரீதியாக நானாகவே யோசித்து அவர்கள் எனக்களித்த உணவில்தான் ஏதோ பிரச்சனை என்று நான் ஓரளவு ஊகித்துக்கொண்டேன். ஆனால், நான் என்ன உணவைத்தான் உண்ண வேண்டும் என்பது குறித்து எனக்கு எந்த அவதானிப்பும் இருக்கவில்லை. ஆதலால், அத்தனை அன்புடன் அவர்கள் அந்த உணவை எனக்கு தருகிறார்கள் எனில், அந்தளவிற்கு என் உடலில் ஏதோ பிரச்சனை என்றுதான் என்னால் எடுத்துக்கொள்ள முடிந்தது.
தோற்றத்தில் ஒரு மானுட ஆண் போல் நான் இருந்தாலும் உடல் அளவில் என்னிடம் சில மாறுதல்கள் இருந்தன. என் தலையில் முடி கொட்டிவிட்டிருந்தது. தசைகளில் இறுக்கம் இல்லை. ஆதலால் சற்றே பலவீனமாகத்தான் இருந்தன. சருமமானது நீர்ச்சத்து குன்றிப்போய் வெளிரித்தான் இருந்தது. கைகளும், கால்களும் அவ்வப்போது குளிர்ந்துவிடும். நாளின் பெரும்பாலான நேரம் உறக்கத்திலேயேதான் இருப்பேன். அது உறக்கமா, மயக்கமா என்று பிரித்தரிய எனக்குப் போதுமான அறிவிருக்கவில்லை. நானாக அதை உறக்கம் என்றுதான் ஊகித்திருந்தேன். வெகு சுலபமாக ஏதாவதொரு நோய் பீடித்தது. ஆதலால் எப்போதும் ஏதாவதொரு மருந்து உட்கொண்டவாறுதான் இருந்தேன்.
துவக்கத்தில் என் உடலில் ஒரு சில பாகங்களில் ஒரு சில மணி நேரங்களுக்கு சுரணையற்று போயின. பிற்பாடு அந்த சில மணி நேரங்கள் நாள்கணக்கில் நீடிக்கவும் நான் அதிர்ச்சியடைந்தேன். அப்படி நடக்கையிலெல்லாம் பரிசோதனைக்கூடத்திலிருந்து யாரேனும் ஒருவர் ஏதாவது மருந்து தருவார். அந்த சுரணை இழந்த பகுதியில் உணர்ச்சி மீளும். ஆனால் பிறிதொரு இடத்தில் சுரணை போய்விடும். அதற்கும் அவர் ஒரு மருந்து தருவார். அதை உட்கொண்டவுடன் அந்தப் பகுதி சரியாகும். ஆனால் பிறிதொரு இடத்தில் சுரணை போய்விடும். இது ஒரு சுழற்சி முறையில் நிகழத்துவங்கியது. தலைவலி, வயிற்றுவலி, முதுகு வலி போன்றவைக்கெல்லாம் பரிசோதனைக்கூடத்தில் இருந்தவர்கள் வெவ்வேறு மருந்துகளை உட்கொள்வதை பார்த்திருந்தமையால் எனக்கு இது ஒரு பெரிய விஷயமாகத் தோன்றவில்லை. ஆனாலும் அவர்கள் என் போல் அடிக்கடி மருந்து உட்கொள்ளவில்லைதான் என்பது மட்டும் லேசாக உறுத்தத்தான் செய்தது.
உடல் அளவில் நான் மிகச் சிறியதாகத்தான் இருந்தேன். இது அந்த பரிசோதனைக்கூடத்தில் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை ஊகிக்க உதவியது. அவர்கள் ஒரு மனிதக் குள்ளனை உருவாக்க முனைந்தார்கள். நான் அவர்களுடைய பெருமைக்குரிய படைப்பு. நான் கொஞ்சம் கொஞ்சமாக என் உடல் கட்டுப்பாட்டை இழந்துகொண்டிருந்த வேளையில் என்னை உருவாக்கிய பெருமை அவர்களுள் யாரைச் சேரும் என்று அவர்கள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
இதையெல்லாம் நான் உணரவே செய்தாலும் உள்ளுக்குள் எதுவோ இதையெல்லாம் நம்ப மறுத்தது. அவர்கள் என் மீது எல்லையில்லா அன்பைக் கொண்டிருக்கிறார்கள் என்றே நான் எனக்குள் ஒரு நூறு முறை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேன். அந்த ஒரு நினைப்பால் மட்டுமே என்னால் அந்த பரிசோதனைக்கூடத்தில் நடப்பவைகளைக் கடந்து போக முடிந்தது.
ஒரு நாள் நான் கண்காணிப்பு அறையில் வழமையான பரிசோதனைகளுக்கு மத்தியில் இருந்தபோது என் வலது கையிலிருந்து ஒரு விரல் தானாகத் துண்டாகி கீழே விழுந்தது. அதில் ஆச்சர்யத்தக்க விஷயம் என்னவெனில், எனக்கு வலியே இருக்கவில்லை. அது ஏதோ விரல் நகமொன்றுத் துண்டாகி விழுந்ததைப்போன்றே இருந்தது. ஒரு விரல் எப்படி தானாகவே துண்டாகிக் கீழே விழும் என்று நான் ஆச்சர்யப்பட்டேன்.
அதைத் தொடர்ந்து ஒட்டுமொத்தப் பரிசோதனைக்கூடமும் பரபரப்பானது. ஒரு எலும்பு நிபுணர் வந்து ஏதேதோ சோதனைகள் செய்துவிட்டு எலும்புகள் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் அதனால் எலும்புகளை இணைப்பது சாத்தியமல்ல என்றும் சொன்னார். ஒரு நரம்பியல் நிபுணர் வந்து இதற்கு மேல் மயக்க மருந்து கொடுக்கப்படின் என் மூளைச் செயல் இழந்துப் போகும் என்று என்னையும் சேர்த்துப் பயமுறுத்தினார்.
எனக்கு அந்தப் பரிசோதனைக்கூடத்தில் என்ன விதமான பரிசோதனைகள் செய்தார்கள் என்பது குறித்து எந்த தெளிவான புரிதலும் இருக்கவில்லை. ஆனால், நான் அவர்களது பரிசோதனையில் ஒரு தடங்கலாகிவிட்டேன் என்பதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதையெல்லாம் தாண்டி அவர்கள் எனக்குத் தொடர்ந்து உணவளித்தார்கள். ஆனால் இப்போது அந்த உணவில் எவ்விதக் கணக்குகளும் இருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் தாங்கள் உண்பதையே எனக்கும் தரத் துவங்கினார்கள். அப்படி அதற்கு முன் நிகழ்ந்ததே இல்லை.
அவர்களின் நடத்தையில் இருந்த மாறுதல்களை வைத்து நான் சில விஷயங்களை புரிந்து கொண்டேன். அவர்களின் அறிவியல் என் விரல்களை குணப்படுத்தும் அளவிற்கு முதிரவில்லை என்பது முதலாவதான புரிதலாக இருந்தது. தாங்கள் செய்துகொண்டிருந்த ஆராய்ச்சியைக் கைவிடுவதா அல்லது என்னைக் கைவிடுவதா என்ற கேள்வி வந்தபோது அவர்கள் என்னைக் கைவிட முடிவெடுத்தார்கள். அதை நான் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை.
என்னை ஒரு குளிர்சாதனப் பெட்டியில் வைத்து காலித் என்பவனிடம் விற்றுவிட்டார்கள். அவர்கள் என் மீது வைத்திருந்த அன்புக்கு என்னை இறுதிவரை கைவிட மாட்டார்கள் என்று நம்பியிருந்தேன். அப்படியே கைவிட நேர்ந்தாலும் கடைசியாக ஒரு முறையேனும் எனக்கு ஒரு பிரிவுபசார விழா எடுப்பார்கள் என்று நான் நம்பி இருந்தேன். அப்படி ஏதும் நடவாதபோது நான் அதிர்ச்சியுற்றேன். ஒரு வேளை காலித்தின் ஆட்கள் அதற்கு வாய்ப்பையே வழங்கவில்லையோ என்று தோன்றியது. நான் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று தீவிரமாக நம்பத் துவங்கினேன். என் இழப்பு அவர்களுக்கு ஒரு பொருட்டே அன்று என்பதை நான் நம்பவே இல்லை. நான் ஏன் நம்பவேண்டும்? அவர்கள் என்னை பரிபூரணமாகத்தான் விரும்பினார்கள். அந்த அன்பில் கிஞ்சித்தும் களங்கமில்லை என்பது என் நம்பிக்கையாகவே தொடர்ந்தது.
காலித் பற்றிச் சொல்ல வேண்டுமானால், காலித் ஒரு கடை வைத்திருந்தான். பள்ளிக்கூடங்களில் பள்ளி செல்லும் பிள்ளைகள் செய்து எடுத்துவர நிறைய ப்ராஜெக்டுகள் தருவார்கள். அவற்றைக் காலித் தன் கடையில் ஏற்கெனவே செய்து வைத்திருப்பான். அவனிடம் காசு தந்துவிட்டால் போதும். காலித் எல்லாவற்றையும் வாங்குவதில்லை. அவனுடைய வியாபாரத்திற்கு உகந்தவைகளை மட்டுமே வாங்கும் வழக்கம் அவனுக்கு இருந்தது. கல்லூரி செல்லும் பிள்ளைகள் செய்ய வேண்டிய ப்ராஜெக்டுகளைக்கூட அவன் செய்து விற்பான். அவனுக்கென ஒரு கிடங்கும் இருந்தது. அங்கே அவனுக்கென சில தொழில் நுட்ப வல்லுனர்கள் பணியில் இருந்தார்கள். காலித் வாங்குபவைகளைச் சோதிப்பதும், அவைகளை அட்டவணைப்படுத்துவதும், ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அவற்றை சரி செய்வதும் அவர்களது பணியாக இருந்தது.
காலித்தின் இணைய தளத்தில் அவனிடமிருந்த எல்லா ப்ராஜக்டுகளும் பட்டியலிடப்பட்டிருந்தன. எவருக்கு எது வேண்டுமோ அதை அவர்கள் வாங்கிக்கொள்ளலாம். அப்படி காலித்தின் இணைய தளத்தில் சற்றேறக்குறைய அறுநூறு ப்ராஜக்டுகள் பட்டிலிடப்பட்டிருந்தன.
காலித்தின் கிடங்கில் இரண்டு தொழில் நுட்ப வல்லுனர்கள் என்னைப் பிரித்து மேய்ந்தார்கள். என் துண்டான வலது கை விரலை அவர்கள் கவனிக்கத் தவறவில்லை. அத்துணை பாரிய பரிசோதனைக்கூடத்தில் இருந்த ஆராய்ச்சியாளர்களாலும், உயிரியல் வல்லுனர்களாலுமே சரி செய்ய முடியாத என் வலது கை விரலை இவர்கள் எவ்விதம் சரி செய்ய இருக்கிறார்கள், எனது குறையை எவ்விதம் களைய இருக்கிறார்கள் என்று எனக்கு யோசனையாக இருந்தது. அது ஒரு விதமான ஆவலையும் தூண்டியது. அவர்களில் ஒருவன் சட்டென என இடது கையிலிருந்த அதே விரலை ஒடித்து பிய்த்து எறிந்தான். இப்போது என் இரண்டு கைகளும் ஒரே விதமாக நான்கு நான்கு விரல்களுடன் சமமாக இருந்தன. அவர்கள் என் குறையைச் சரிசெய்த விதத்தில் நான் பேயறைந்தாற்போல் அதிர்ந்து ஒடுங்கினேன்.
அதற்குப்பிறகு அவர்களுள் ஒருவன் என்னிடம் ஒரு விதையை நீட்டினான். அதை விழுங்கவும் பணித்தான். நானும் கர்ம சிரத்தையாக அதை விழுங்கினேன். அதன் காரணமாக என் நினைவை இழந்தேன். நான் கண் விழித்தபோது என்னை ஒரு அட்டைப் பெட்டியில் இழுத்துக் கட்டி வரவேற்பறை கண்ணாடி அலமாரியில் வைத்திருந்தார்கள். முதலில் என்னை அவர்கள் ஒரு மரத்தோடு பிணைத்து கட்டியிருக்கிறார்கள் என்றுதான் நினைத்தேன். சற்று கூர்ந்து கவனித்தபோதுதான் நான் நினைத்தது தவறு என்று எனக்கு புரிந்தது. என் உடலில் ஒரு பகுதி மரமாகவும், கிளைகளாகவும், இலைகளாகவும் விரிந்திருந்தது. அப்போது நான் பாதி மனிதனாகவும், மீதி மரமாகவும் இருந்தேன். பாதி உடல் மரமாக உணர்ந்தேன். அவர்கள் எனக்கு என்ன பெயர் வைத்திருப்பார்கள் என்று யோசனையாக இருந்தது.
வயிறுக்கு பதிலாக சக்தியை உற்பத்தி செய்து உடலுக்கு அளிக்கும் இயந்திரம், மனித மூளைக்கான உபரியான ஒரு மெமரி சிப் போன்றவைகளுடன் நானும் அந்த கடையில் வீற்றிருக்கப் பெருமையாக இருந்தது. சில உபகரணங்கள் அந்தக் கடையில் மிக நீண்ட காலமாக விற்கப்படாமல் இருப்பதாகத் தெரிந்தது. நானும் அப்படி அந்தக் கடையிலேயே விலை போகாமல் இருந்துவிடுவேனோ என்று பயம் வந்தது.
அதிர்ஷ்டவசமாக அந்தக் கடையில் அதிக நேரம் நான் காத்திருக்க வேண்டி இருக்கவில்லை. ஒருவர் தன் மகனுடன் கடைக்கு வந்தான்.
“ஹாய், நான் சங்கரன். இது என் மகன், திலீப்.” என்றார் சங்கரன்.
“ஆங்.. தெரிகிறது.. நீங்கள் ஒரு கலை நுணுக்கம் வாய்ந்த போன்சாய் வேண்டுமெனக் கேட்டிருந்தீர்கள். இல்லையா?” என்றான் காலித்.
“ஆம்”
“அது உயிரோடு இருக்க வேண்டும். சரிதானே?”
“ஆம். சரிதான்.”
“என்னிடம் ஒரு பொருள் இருக்கிறது.”
காலித் என்னை அலமாறியிலிருந்து எடுத்து மேஜை மீது வைத்தான்.
“வாவ்! போன்சாய் மனிதன்! நான் எதிர்பார்த்த கலைப் படைப்பு” சங்கரன் ஆச்சர்யத்துடன் சொன்னார்.
அப்போது என் விரலை உடைத்த வல்லுனன் வந்தான். ஒரு இயந்திரத்தை கையில் வைத்திருந்தான். அதன் ஒரு முனை கூராக இருந்தது. அதன் மறு முனையில் ஒரு சிறிய திரை இருந்தது. அந்தத் திரையை அவன் சங்கரனை நோக்கி திருப்பினான். பின் அந்தக் கூர் முனையை என்னுள் செருகினான்.
“நீங்கள் பார்த்தீர்களானால், அந்த போன்சாய் மனிதனிடம் விலங்கின மற்றும் தாவர இயல்புகள் இரண்டையுமே காணலாம்” என்றான் காலித்.
சங்கரன் அங்கீகரிப்பாய்த் தலையசைத்தார். அதன் பின் அந்த வல்லுனன் என்னுள் செருகியிருந்த இயந்திரத்தை வெளியே இழுத்துக்கொண்டான்.
திலீப் என்னை ஆர்வமுடன் பார்த்தான். அந்தப் பார்வையில் லேசாகப் பயமும் இருந்தது. அவன் பார்வையிலிருந்து நான் அவனை வெகுவாக ஈர்த்தேன் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. என்னைப் பார்த்தால் யாருக்குத்தான் ஈர்ப்பு வராது? நான் ஒரு புத்தம் புதிய கருத்தாக்கம். போன்சாய் மரங்களை இந்தப் பூமி பார்த்திருக்கலாம். மனிதனையும் பார்த்திருக்கலாம். நான் ஒரு போன்சாய் மனிதன். இப்போது காலித் ஏன் என்னை பரிசோதனைக் கூடத்திலிருந்து வாங்கினான் என்று புரிந்தது.
“எவ்வளவு?” என்றார் சங்கரன்.
திலீப் இன்னமும் தன் பார்வையை என்னிடமிருந்து விலக்கியிருக்கவில்லை.
“ஆயிரம்” என்றான் காலித்.
“ரொம்பவும் அதிகம்”
“இங்கே இது போன்ற கலைப் படைப்பு கிடைப்பது அரிது”
காலித்தின் அந்த ஒற்றை வாக்கியம் சங்கரனை சமாதானப்படுத்தியிருக்க வேண்டும்.
“கடன் அட்டை செல்லுமா?”
“செல்லும்”
அவ்வளவுதான். நான் விற்கப்பட்டுவிட்டேன்.
சங்கரன் காலித் நீட்டிய காகிதத்தில் கையொப்பமிட்டார். நான் கை மாறினேன்.
சங்கரனும், திலீப்பும் என்னை ஒரு மகிழுந்தில் ஏற்றினார்கள். மகிழுந்து சாலையில் விரையத் துவங்கியது. மகிழுந்தில் பயணிக்கையில் திலிப் என்னை விலாவாரியாக மேலிருந்து கீழாக அவதானித்தான். எனக்கு முதலில் கொஞ்சம் கூச்சமாக இருந்தது. பிற்பாடு அதுவும் பழகிவிட்டது. அதுவுமில்லாமல் அவன் வெறும் ஒரு பாலகன்.
யாருடையதாக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு பாலகனது அன்பையாவது பெற முடியும் என்றே நான் நம்பினேன். நேரம் செல்லச்செல்ல என் உடலில் ஒவ்வொரு பகுதியாக செயல் இழப்பதைப் போன்ற ஒரு பிரஞ்ஞை எனக்கு. என் வலது கை முழுவதுமாக கட்டுப்பாட்டை இழந்திருந்தது. தோலின் நிறம் கருமை படிந்திருந்தது. ஆனால் அதையும் சங்கரனும், திலீப்பும் இரண்டும் கெட்டானாக இருப்பதன் பக்க விளைவெனக் கொள்வார்கள் என்றே எண்ணினேன்.
திலீப்பின் கவனத்தை ஈர்க்க, என் இடது கையைப் பலமாக அசைத்தேன். எனது நோக்கம் என்னவென்றால் அவன் கவனத்தை ஈர்த்து என்னை விட்டுவிடும்படி கெஞ்சுவது. பெரிய ஆட்களைவிட சின்னஞ்சிறு பிள்ளைகளிடம் கருணை சற்று எளிதாக கிடைக்கும் என்ற எண்ணம்தான். ஆனால், அவன் ஏதோ நான் அவனைக் குதூகலிக்கச் செய்வதாய் நினைத்து பதிலுக்கு கையசைத்தான். அதற்கு மேலும் ஒரு கையை மட்டும் அசைத்தால் எங்கே அவன் அந்த வல்லுனன் போல் இடது கையை ஒடித்துவிடுவானோ என்று பயம் வந்தது. ஆதலால் திலீப்பை நோக்கி கையசைப்பதை நிறுத்தினேன். இதற்கு அர்த்தம் நான் திலீப் போன்ற பாலகனை சந்தேகப்படுவது அல்ல. ஆனால், என் கடந்த காலத்தில் எனக்கு நிகழ்ந்ததை வைத்து என்னால் இந்த அர்த்தமன்றி வேறெந்த அர்த்தத்திற்கும் வந்திருக்க இயலாது.
திலீப் என்னை ஒரு குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மூடினான். நான் பாதி தாவரமாக ஆகிவிட்டதால் குளிர்சாதனப் பெட்டிதான் என்னை வைக்கச் சரியான இடம் என்று நினைத்திருப்பானோ என்று தோன்றியது. அந்த குறுகலான குளிர் சாதனப் பெட்டியில் எனக்கு மூச்சடைத்தது. மறுநாள் அவனுடைய பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடப்பதாக இருந்தது. அந்த கண்காட்சிக்காகத்தான் என்னை அவன் வாங்கியிருப்பதாகப்பட்டது.
நான் எனக்குள்ளாக குளிராக இருப்பதாக உணர்ந்தேன். அந்தக் குளிர் என் உணர்ச்சியற்ற தன்மையை வெகுவாக அதிகரித்தது. என்னால் எதையுமே உணர முடியவில்லை. சற்றுக்கெல்லாம் மூச்சு விடவே பிரயாசைப்பட்டேன். என் போன்ற ஒரு மோசமான பிறப்பை வேறு எவருக்கும் கொடுத்துவிடாதே ஆண்டவா என்று வேண்டிக்கொண்டேன். இப்படி கஷ்டப்படுவதில் நானே கடைசி ஜீவனாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டேன். அடுத்த நாள் வரை உயிருடன் இருப்பேன் என்று நினைக்கவே இல்லை. எனக்கு எப்போது நினைவு தப்பியது என்றே நினைவிருக்கவில்லை.
திலீப் மறுநாள் கதவைத்திறந்தபோது நான் இறந்திருக்கவில்லை. உயிருடன்தான் இருந்தேன். அதை என்னால் ஓர் அதிசயமெனவே கருத முடிந்தது. நான் எப்படி இறக்காமல் உயிருடன் இருந்தேன் என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எனக்கு எவ்வித அசெளகர்யமும் இருக்கவில்லை. முந்தின இரவு எப்படியெல்லாம் புலம்பினோம் என்று நினைவுக்கு வந்தது. மனித மனங்கள் நெருக்கடியான தருணங்களில் எப்படியெல்லாம் வினோதமாக சிந்திக்கின்றன என்று யோசித்தால் எனக்கே நகைப்பாக இருந்தது.
திலீப் என்னைக் கையில் எடுத்துக்கொண்டான். சங்கரன் மகிழுந்தில் திலீப்பை ஏற்றிக்கொண்டார். மகிழுந்து சாலையில் விரைந்தது. மகிழுந்தின் கண்ணாடி ஜன்னலினூடே நாம் வெளி உலகை ஏறிட்டேன். கடந்து போன மரங்களும், தொடர்ந்து வந்த மேகங்களும் முன்னெப்போதையும்விட அழகாகத் தெரிந்தன.
அந்தக் காட்சிகள் விதி குறித்து ஆழமாக சிந்திக்க வைத்தன. ஒரு சில மணி நேரங்களில் விதி குறித்தான எனது பார்வைகள் இரண்டு முறைக்கு மேலாக மாறிவிட்டதை உணர்ந்தேன். ஒரு தத்துவவாதி இதை நான் எவ்விதம் அணுகி இருக்க வேண்டும் என்று விரும்பியிருப்பான்? அவன் விரும்பியதற்கு மாற்றாக எவ்விதம் நான் அணுகி இருந்தால் எனக்குப் பொருத்தமாக இருந்திருக்கும்? இக்கேள்விகளுக்கெல்லாம் விடை தேடி என் மனம் அலைபாய்ந்தது.
அன்று அறிவியல் கண்காட்சியில் நான்தான் எல்லோரையும் அதிகம் ஈர்த்தேன். திலீப் போல் எண்ணற்ற பிள்ளைகள் என்னென்னவோ செய்து கொண்டு வந்திருந்தார்கள். ஆனால், எதுவுமே என்னைப்போல் பலரின் கவனத்தையும் ஈர்க்கவில்லை. திலீப் என்னை ஒரு மேஜையில் வைத்து ‘போன்சாய் மனிதன்’ என்று பெயரிட்டான். போன்சாய் பலருக்கும் பரிச்சயமாகியிருந்தது. போன்சாய் மனிதன் என்பதே எல்லோருக்கும் புதிதாக இருந்தது. முதலில் ஒரு சிறு குழுதான் என்னைச் சுற்றி இருந்தது. அது பெரும்பாலும் திலீப்பின் நெருங்கின நட்பு வட்டத்தைச் சேர்ந்தவர்கள். நேரம் செல்லச்செல்ல அன்றைய அறிவியல் கண்காட்சிக்கு வந்திருந்த அத்தனை பேரும் என்னைச் சுற்றிக் கொண்டார்கள்.
திலீப்பின் நண்பர்கள் என்னுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். என்னருகில் நிற்க அங்கே ஒரு போட்டி உருவானது. நீ , நான் என்று அடித்துக் கொண்டார்கள். சற்றைக்கெல்லாம் நான் ஒரு பிரபல்யமானவனாக என்னை உணர்ந்தேன். ஈர்ப்பை வேண்டுபவனாக நான் எப்போதுமே இருந்ததில்லை. ஆயினும் திலீப்பின் பள்ளியில் எனக்கு கிடைத்த வரவேற்பு மிக மிக அதிகப்படியாக இருந்தது. நான் மிகவும் வேண்டப்பட்டவனாக, விரும்பப்பட்டவனாக என்னை உணர்ந்தேன். பரிசோதனைக் கூடத்தில் எனக்கு கிடைத்த கூண்டுக் கிளி வாழ்வை விடவும், திலீப்பின் நண்பனாக எனக்குக் கிடைத்த வாழ்க்கையை சுவர்க்கமாக உணர்ந்தேன். திலீப்பின் கைகளில் வந்து சேர்ந்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவர்களின் அன்பில் நான் திக்குமுக்காடிப் போனேன்.
அப்போது சட்டென அறிவியல் கண்காட்சிக்கு வந்திருந்தவர்கள், பள்ளிக் குழந்தைகள் மத்தியில் சலசலப்பு கேட்டது. தொடர்ந்து சில ஆசிரியர்களும், இளம் தொழில் நுட்ப வல்லுனர்களும் கூட்டத்தை பிரித்துக்கொண்டு என்னை அண்டினார்கள். அது என்னைக் கொஞ்சமாய் கோபமூட்டியது. அந்த இடைஞ்சலை நான் விரும்பவே இல்லை. ஆயினும் என்னால் ஏதும் செய்ய முடிந்திருக்கவில்லை.
“இன்று ஆகப் பெரும் ஈர்ப்பைப் பெற்ற ப்ராஜக்டிலிருந்து சோதனையை துவக்கலாம்” என்றார் ஒரு வயதானவர். பார்க்க தலைமை ஆசிரியர் போலிருந்தார். எல்லோரும் என்னையே பார்த்தார்கள்.
அந்த தொழில் நுட்ப வல்லுனன் என்னை அண்டி என்னுள் ஒரு இயந்திரத்தின் கூர் முனையை செலுத்தினான். அந்த இயந்திரம், காலித்தின் கடையில் என்னுள் செலுத்தப்பட்ட எந்திரத்தை ஒத்திருந்தது. சற்று நேரத்திற்குப் பிறகு,
“இதில் விலங்கின இயக்கமேதும் தெரியவில்லை” என்றான் அந்த வல்லுனன் திரையைக் காட்டியபடி.
எனக்குத்தான் அந்த பதில் அதிர்ச்சியூட்டுவதாயும், ஆச்சரியமூட்டுவதாயும் இருந்தது. சங்கரனும், திலீப்பும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். அவர்களாக என்னை உருவாக்கி இருந்தால்தானே ஏதேனும் பேசுவதற்கு.
“இது வெறும் போன்சாய் மட்டும்தான்” என்றும் அறிவித்தான் அந்த வல்லுனர்.
எல்லோரும் திலீப்பைப் பார்த்தார்கள். திலீப் இப்போது ஏதேனும் சொல்லியாக வேண்டும்.
“உனக்கு ப்ராஜக்ட் செய்வதில் ஏதேனும் இடையூறுகள் இருந்தால் என்னிடம் சொல்லியிருக்க வேண்டும். நான் உனது ஆசிரியர். இதை நான் ஒரு விதி மீறலாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும், திலீப்” என்றார் அந்தத் தலைமை ஆசிரியர்.
“விதிகளை மீற வேண்டும் என்று என்னிடம் எந்த நோக்கமும் இல்லை. இது நேற்று உயிருடன்தான் இருந்தது.” என்றான் திலீப்.
“அது சரியாகவும் இருக்கலாம். ஓர் உடலில் இரண்டு விதமான உயிரணு மூலக்கூறுகள் இருப்பின் அந்த உடலில் எந்த உயிரணு ஆதிக்கம் செலுத்துவதென்று இரு உயிரணுக்களுக்கும் போராட்டம் இருக்கும். அப்படியான போராட்டத்தில் எந்த உயிரணு பலவீனமாக இருக்கிறதோ அந்த உயிரணு அழிந்து போகவும் செய்யலாம்.” என்றான் அந்த வல்லுனன் தனக்கு தெரிந்ததைப் பகிரும் தோரணையில்.
“எதுவாக இருப்பினும், திலீப், நீ வாக்களித்தது ஒரு மனித போன்சாய்க்குத்தான். அது ஒரு புதிய கருத்தாக்கம் என்பதால்தான் நீ கடைசி நிமிடத்தில் உன் ப்ராஜக்டின் பெயரை மாற்றிக் கொள்ளவும் சம்மதித்தேன். இதில் மனித உயிரணுக்கள் இல்லை. இது ஒரு தெளிவான விதிமீறல். நம் பள்ளிக்கென ஒரு மரியாதை, மதிப்பு இருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த பள்ளிகளுக்கான தர வரிசைப் பட்டியலில் நம் பள்ளிக்கென ஒரு நல்ல இடம் இருக்கிறது. அது கீழிறங்க எக்காரணம் கொண்டும் அனுமதிக்க இயலாது. உன்னை அடுத்த அறிவிப்பு வரும் வரை பள்ளியின் செயல்பாடுகளிலிருந்து தள்ளி வைக்கிறேன்,” தலைமை ஆசிரியர் தீர்மானமான குரலில் சொன்னார்.
அதைக் கேட்டவுடன் என் உலகம் சுக்கு நூறாக உடைந்து தரை மட்டமானது. என்னைப் பற்றி யார் என்ன பேசுகிறார்கள் என்பதெல்லாம் என் கவனத்தில் பதியவே இல்லை. எனக்குள் என்ன நடக்கிறது என்று எனக்கு மெல்ல மெல்லப் புரிந்தது. நான் மனிதனாகப் பிறந்தவன். ஆனால் இப்போதோ முழுமையான தாவரமாகிவிட்டேன். அந்த ஆராய்ச்சிக்கூடத்தில் எனக்கு அளிக்கப்பட்ட உணவில் விஷம் இருந்திருக்க வேண்டும். அந்த விஷம் என் மனித உயிரணுக்களை மெல்ல மெல்ல அழித்துவிட்டது.
ஏமாற்றமடைந்த திலீப் கோபத்துடன் என்னை ஒரு கையால் அலட்சியமாக எடுத்துக்கொண்டு பள்ளிக்கூட வாயிலை நோக்கி நடக்க, கூடியிருந்த மாணவர்களும், ஆசிரியர்களும் அவனையும் அவன் கையிலிருந்த என்னையும் பார்த்து கள்ளப் புன்னகைகள் உதிர்த்தார்கள். வாயிற்கதவை அண்டியவுடன் திலீப் என்னை குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தான். பின் சாலையில் இறங்கி நடந்தான். அவன் ஒரு முறையாவது என்னைத் திரும்பிப் பார்ப்பான் என்று நான் தீவிரமாக நம்பினேன். ஆனால், அவன் என்னை ஒரு முறைகூட திரும்பியும் பார்க்காதது ஏமாற்றமாக இருந்தது. நம்மால் பயனில்லை என்று தெரிந்துவிட்ட பிறகு மனித மனங்கள் எப்படியெல்லாம் நம்மை அலட்சியப்படுத்துகின்றன என்று அவதானிக்க விசித்திரமாகவும், கேவலமாகவும் இருந்தது.
நான் ஏன் பிறந்தேன்? இந்த பூவுலகில் பிறக்க நேர்ந்த எல்லா உயிர்களுக்கும் இந்தப் பூவுலகில் வாழ எல்லா உரிமையும் உள்ளதுதானே? நான் ஏன் அப்படி ஒரு வீர்யமானதொரு ஆராய்ச்சியில் சோதனை எலி ஆக்கப்பட்டேன்? என்னிடம் யார் அனுமதி கேட்டது? நான் தரவில்லையே? எனக்கு ஏன் அப்படி ஒரு அன்பு அத்தனை சிறிய கால அவகாசத்திற்குக் கிடைக்க வேண்டும்? அது ஏன் பிற்பாடு அத்தனை மூர்க்கமாக என்னிடமிருந்து பிடுங்கப்படவேண்டும்? இந்த ஒட்டுமொத்த நாடகத்தில் எந்தப் பக்கம் நியாயம்? எது அநியாயம்?
நான் பிறந்தபோது ஆக்ஸிஜனை சுவாசித்தேன். இப்போதோ நான் கார்பன் டை ஆக்ஸைடை சுவாசிக்கிறேன். நான் என் எஞ்சிய வாழ்வை வெறும் ஒரு தாவரமாகவே கழிக்கக்கூட நேரலாம். என் வாழ்வின் எத்தனை சதவிகித நோக்கத்தை நான் விலங்காக இருந்து நிறைவேற்றினேன்? எத்தனை சதவிகித நோக்கத்தை நான் இனி தாவரமாக இருந்தபடி நிறைவேற்றுவேன்? நான் விலங்கிலிருந்து தாவரமானது இந்த பிரபஞ்சமென்னும் பாரிய ஒழுங்கின் எந்தப் புள்ளியை முழுமையடையச் செய்ய இருக்கிறது?
கேள்விகள் என்னைத் துளைத்தெடுத்தன. எதற்குமே என்னிடம் பதில் இல்லை. இந்தக் கேள்விகள் நான் இனி உயிருடன் இருக்கும் காலம் வரை என்னை எப்படியெல்லாம் அச்சமூட்டப் போகின்றனவோ என்று இப்போதே எனக்கு பயம் ஒரு நோய் போலப் பீடித்தது. ஆயினும், தற்போது முழுமையாக விடுதலை ஆனதில் கொஞ்சம் மகிழ்வாக உணர்ந்தேன். நான் என்ன பெரிதாக விரும்பினேன்? எல்லோருக்கும் கிடைத்திருப்பது போலான ஒரு சாதாரண வாழ்வைத்தானே? எல்லோரையும் போல நானும் என்னை விரும்பும் சில பேரின் மத்தியில் வாழ்ந்துவிட்டுப் போகத்தானே விரும்பினேன்?
இப்போது நான் மனிதனாகவே இல்லை. இன்னும் உடலாலும், மனதாலும் முழுமையாகத் தாவரமாகவும் மாறிவிடவில்லை. இன்னும் சொல்லப்போனால், விலங்குமல்லாத தாவரமுமல்லாத ஓர் இடைப்பட்ட நிலைப்பாட்டில் சிக்கிக்கொண்டு விட்டேன். விலங்கின் நிலைப்பாட்டிலிருந்து கடனாகப் பெறப்பட்ட ஒரு பிரஞ்ஞையுடன் தாவரமாகவே இருக்கிறேன். எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லை. சிறிதேனும் அன்பு கிடைத்தாலும் போதும். என் ஜென்மமே சாபல்யம் பெற்றுவிடும். நான் ஒரு முழுமையான, எல்லா சுகங்களும், ஆஸ்திகளும் கிடைக்கப்பெற்ற ஒரு வாழ்க்கைக்காக ஏங்கவில்லை. இந்த உலகின் முழுமையின்மைகளைக், குறைகளைக் கடந்து போக, அந்த குறைகளுடனே வாழ்ந்து மறித்துப் போக கொஞ்சமே, கொஞ்சம் அன்பு மட்டும்தானே கேட்கிறேன்?