என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Tuesday 30 June 2020

தமிழே அமுதே - நூல் அறிமுகம்

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் "தமிழே! அமுதே! " நிகழ்ச்சியில் இந்த வாரம் நம்முடன் நூல் அறிமுகம் செய்து கொள்ள வருகிறார்கள்,

எழுத்தாளர் திரு. ராம்பிரசாத்
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன” - ராஜ் சிவா

திருமதி மங்களா ஐயர்
" புயலிலே ஒரு தோணி” - ப. சிங்காரம்

வாருங்கள் நூல்களை வாசிப்போம், பகிர்வோம், கற்போம்!

கீழ்க்கண்ட நேரடி இணைப்பில் இணைவோம்!
Join URL: https://zoom.us/j/191911685
Meeting ID: 191-911-685
நாள்: சனிக்கிழமை, 06/27/2020
நேரம்: 8.30 PM (EST)



https://www.facebook.com/watch/?v=274400936959091


Tuesday 23 June 2020

12வது நூல் - 'ஹென்றியின் டைரியில் கிடைத்த கதைகள்'

எனது 12வது  நூலை கிண்டில் மூலமாக வெளியிடுவதும் பெருமகிச்சி கொள்கிறேன்.

நூலின் தலைப்பு 'ஹென்றியின் டைரியில் கிடைத்த கதைகள்'.

2011-2013 காலகட்டத்தில் நான் எழுதிய குற்றப்பின்னணியில் அமைந்த இந்த சிறுகதைகளில் சிலவற்றின் knotகள், 2013க்கு பின் வெளியான சில தமிழ்த்திரைப்படங்களின் knotஉடன் ஒத்துப்போவதை வினோதம் என்று சொல்லலாம். உதாரணம், இத்தொகுப்பிலுள்ள கூரியர் சிறுகதையும், 2017ல் வெளியான 'டோரா' திரைப்படமும்.

தொகுப்பு கிண்டில் அன்லிமிடெடில் இலவசமாகவே கிடைக்கும்.  தொகுப்பை வாசிக்கப் பின் வரும் சுட்டியைச் சொடுக்கவும்.

https://www.amazon.com/dp/B08BP1V4DP


Saturday 20 June 2020

தந்தையர் தினம்

தந்தையர் தினம்

இத்திவ்வியத்திரு நாளில் தந்தையர்களுக்கான என் வாழ்த்துக்களை இப்படிது துவங்கலாமென்று நினைக்கிறேன்,

இக்காலகட்டத்தில், ஒவ்வொரு ஆணும் யாருக்கோ தகப்பனாகத்தான் இருக்கிறான் என்கிற அடிப்படையில் தந்தையர் தினத்தை ஆண்களின் தினமாகவும் பார்க்கலாம் என்பது என் வாதம். அதே வேளையில், அன்னையர் தினத்தை பெண்கள் தான் கொண்டாடவேண்டுமென்பதில்லை என்பதுபோல், தந்தையர் தினத்தை ஆண்கள் தான் கொண்டாட வேண்டும் என்பதுவும் இல்லை.  ஆண்களாய்ப் பிறப்பதற்கும் மாதவம் செய்திட வேண்டும் தான் என்பது என் பார்வை. இப்பூமியில் பிறந்ததற்கு பெருமையும், கர்வமும் கொள்ளத்தக்க வகையில் ஆண்களும் நடந்து கொள்கிறார்கள் என்பதும் என் அவதானம்.



நான் அறிந்த ஆண்கள்/தந்தையர்களிடமிருந்து நான் அவதானித்த பொதுவான குணாதிசயங்களைப் பின்வருமாறு தொகுக்கலாம்.

1. அக்காள் , தங்கைகளுக்கு திருமணம் செய்து வைப்பதே அவர்களின் முதல் கடமையாக எக்காலமும் இருந்திருக்கிறது.  உடன் பிறந்தவளின் எதிர்கால வாழ்கைக்கனவை தூக்கிச்சுமந்தபடியே சதா சர்வ  காலமும் திரியும் ஆண்களாய் நானறிந்த ஆண்கள் இருந்திருக்கிறார்கள்.

2. ரிஸ்க் எடுப்பவர்கள் அப்பாக்கள். இதில் மாற்றுக்கருத்தே இல்லை.

3. தனக்கென்று எதையும் சேர்த்துக்கொள்ளாதவர்கள் அப்பாக்கள். நாள்/கிழமைகளில் தன் தேவைகளையும் தியாகம் செய்துவிட்டு பிள்ளைகளுக்கென துணி மணி பலகாரத்திற்கு செலவு செய்துவிட்டு அணிந்திருக்கும் லுங்கியின் கிழிசலை மறைத்துக்கொண்டு பிள்ளைகளின் சந்தோஷத்தில் தன் சந்தோஷத்தை தேடிக்கொள்பவர்களாகவே எக்காலமும் இருந்திருக்கிறார்கள் அப்பாக்கள்.

4. பொதுவாகவே தனக்குப்பின் யார் குடும்பத்தைக் காப்பாற்றுவது என்கிற அக்கறை, தனக்குப்பின் குடும்பப்பொறுப்பை தாங்க யாரையாவது உருவாக்கிக் கொண்டு வந்து விட வேண்டுமென்கிற முனைப்பு மிக்கவர்களாக அப்பாக்கள் இருப்பார்கள். இயங்குவார்கள்.

5. நண்பர்களை சேர்ப்பது, பணியிடங்களில் புழங்குவதின்  நெளிவு-சுளிவுகள் பிள்ளைகளுக்கு பெரும்பாலும் அப்பாக்களிடமிருந்து தான் கிடைக்கும் மிக மிக முக்கியமான அறிவுச்சொத்து என்பது என் வாதம்.

6. சமூகம் சார்ந்த முன்னெடுப்புகளில் அப்பாக்களின் எண்ணிக்கையே அதிகம். அப்பாக்களே அதிகம் அரசியல் தெரிந்து வைத்திருப்பார்கள். பேசுவார்கள். ஒரு சமூக இயக்கத்தின் நெளிவு, சுளிவு, வெளிப்படையாகப் பேசப்படாத ஆனால், மானுட வாழ்வியலின் மிக மிக முக்கியமான கட்டமைப்பு சார்ந்த விஷயங்களில் அதிகம் அக்கறை கொள்வது அப்பாக்கள் தான்.

7.  'நல்லதைச் சொல்லி கெட்ட பெயர் வாங்கிக்கொள்ளும் புண்ணிய ஆத்மாக்கள் அப்பாக்களே. குறிப்பாக பெண் பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் இதை மிக மிக வெளிப்படையாகவே அவதானிக்கலாம். பெண் பிள்ளைகளுக்கு அப்பாக்கள் தரும் அறிவுரைகள்,  குறிப்பாக எதிர்பாலினம் குறித்த கருத்துக்கள், பெரும்பாலும் பெண் பிள்ளைகளால் சரியாக உள்வாங்கிக் கொள்ளப்படுவதில்லை. இந்தப் பின்னணியில், அப்பாக்களின் அறிவுரைகள், அவைகள் சரியாகவே இருந்தாலும், அது அவர்களுக்கு கெட்ட பெயரையே பெற்றுத்தரும். ஆனாலும், அங்கிருந்துதான் அப்பாக்களுக்கு அறத்தை நிலை நாட்ட வாய்ப்பும் திணிக்கடும்.

8.  நம் சமூகமே புடவை சுற்றியிருந்தால் சற்று இளகிவிடும் தன்மையது தான். பெண்களை ஊக்குவிப்பதாக நினைத்து பெண்களுக்கு முக்கியத்துவம் தருவதாக நினைத்து, பக்கவிளைவாக ஆண்களின் நியாயமான உழைப்புக்கான  நேர்மையான அங்கீகாரம் கல்வி, மற்றும் பணியிடங்களில் மற்றும் அறிவு மற்றும் திறமைகள் சார் பொதுத்தளங்களில் மறுக்கப்படுவதும், புறக்கணிக்கப்படுவதும் எக்காலமும் நடந்துகொண்டுதானிருக்கிறது. இதையெல்லாம் மீறி சாதிப்பவன் தான் ஆண். எப்போதும் ஒப்பீட்டளவில் , இந்த விஷயத்தில் பெண்களைக் காட்டிலும், அதிக பிரச்சனைகளை, திறமைக்கான அங்கீகாரமின்மைகளை, தனக்கு நியாயமாகக் கிடைத்திருக்கவேண்டிய கவனங்களை எதிர்பாலினத்துக்கு விட்டுக்கொடுத்துவிட்டு  நிற்பவன் ஆண் தான்.

9. ஆண்களின் நிலைப்பாட்டை ஒரு விதமான suidical behaviour என்று கூட  பார்க்கலாம். உதாரணம் சுட்டிச் சொல்வதானால், டைட்டானிக் கவிழ்ந்தபோது, பெண்களும் குழந்தைகளுமே காப்பாற்றப்பட்டார்கள் என்பதைச் சொல்லலாம். எல்லா சூழல்களிலுமே ஒரு விதமான தற்கொலை நிலைப்பாட்டுடன் தான் ஆண் இயங்க நிர்பந்திக்கப்படுகிறான். குடும்பத்தின் வசதிகளுக்காக தன் வசதிகளை முதலில் தியாகம் செய்பவனாகத்தான் அப்பாக்கள் எக்காலத்திலும் இருந்திருக்கிறார்கள்.

ஈற்றாக, ஆணின் வாழ்வும் கஷ்டங்கள் நிறைந்தது.  வெளியிலிருந்து பார்க்க ஆண், எதையும் மிக மிக இலேசாக, பொறுப்புக்களைத் தட்டிக்கழிப்பவனாக, தாமரை இலை நீர் போல் இருப்பதாகத் தோன்றினாலும், அது வெறும் கானல் நீர், காட்சிப்பிழையே. ஆண்களின் வாழ்க்கையிலும் கஷ்டங்கள், துக்கங்கள், சங்கடங்கள், அவமானங்கள், துரோகங்கள், இருக்கும். ஆண் அவற்றைப் பெரிதாகக் காட்டிக்கொள்வதில்லை.  பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து விடுவான்.

இப்பூலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் முக்கியத்துவம் வாய்ந்ததே. அந்த முக்கியத்துவம்  சில மோசமான மற்றும் தவறான முன்னுதாரணங்களால் மறுக்கப்படும் நிலைப்பாட்டிலும், இந்த பூமியின் வாழ்வியல் நாடகத்தில் தன் பாத்திரத்தை தன் போக்கில் செய்துவிட்டு, கடந்து போகும் அத்தனை அப்பாக்களுக்கும் என் தந்தையர் தின வாழ்த்துக்கள்.

நானெல்லாம் அப்போவே அப்புடி

'நானெல்லாம் அப்போவே அப்புடி' என்று சொல்லத்தக்க ஒரு விஷயம் தான் இது...

2013ம் வருடம்... 'கூரியர்' என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதினேன்... சஸ்பென்ஸ், த்ரில்லர் வகைக் கதை...  அப்போதைக்கு உயிர்மையின் உயிரோசை இணைய இதழில் ஆத்மா என்ற எனது இன்னுமொரு புனைப்பெயரில் வெளியாகியிருந்தது...

நேற்று மீண்டும் நயன்தாரா நடித்த 'டோரா' திரைப்படம் பார்க்க நேர்ந்தது... 

இரண்டிலும் கதையின் knot ஆச்சர்யத்தக்க வகையில் ஒன்றே...  டோரா திரைப்படம் 2017 மார்ச்சில் வெளியாகியிருக்கிறது... 'கூரியர்' சிறுகதை ஜூலை 2013ல் வெளியாகியிருக்கிறது....



சிறுகதை இங்கே:


ஆத்மா

முகவரி முழுமையாகத்தான் இருந்தது.

அருளாளன்,
நம்பர் 199, ஜகன்னாதன் தெரு,
தளவாய் நகர்,
பெசன்ட் நகர் சுடுகாடு எதிரில்,
சென்னை – 600 090.

நான்காவது வரியை படித்துவிட்டு லேசாக பீதியுற்று மேனேஜரிடம் திரும்பினான் ஆத்மா.

‘ஸார், இது… இன்னிக்கே டெலிவெரியா?’

‘ஆமா ஆத்மா.. உன்னைத்தான் அந்த ஏரியாவுல போட்டிருக்கேன்.. பக்கம் தானே.. முடிச்சிடு.. நேரமாகுது’

கூரியர் கடை ஷட்டரை இறக்கி விட்டு வீட்டுக்கு செல்லும் அவசரத்தில் மேனேஜர் இருப்பது பேச்சிலேயே தெரிந்தது.

‘அதுக்கில்லை ஸார்.. மணி ஒன்பது ஆகப்போகுது… அதான்..’ இழுத்தான் ஆத்மா.

‘அதெல்லாம் பாத்தா முடியுமா…ஆத்மா??.. கிளம்பு கிளம்பு.. இதை முடிச்சிட்டு வீட்டுக்கு போ’

அவசரம் கிட்டத்தட்ட இரைஞ்சுதலுக்கு இறங்கி வந்திருந்தது பயமுறுத்தியது.

ந‌ந்தனம் கலைக் கல்லூரியில் படித்த சரித்திரம் எதற்கும் பெயரவில்லை. அங்கே இங்கே என்று வேலைக்கு அலைந்ததில் ஒரு ஓட்டு வீட்டில் இயங்கிய நிறுவனமொன்று ஆத்மாவிற்கு வேலைக்கு உத்திரவாதம் சொல்லி, அவனிடமிருந்து நான்காயிரம் பிடுங்கிக்கொண்டு, பெயருக்கு கொஞ்சம் ஆங்கிலம் கற்பித்து, இந்த கூரியர் கம்பெனியில் தள்ளிவிட்டிருந்தது.

மேனேஜர் ஒரு எடக்கு நாட்டான். குல தெய்வம் பெயரில் தான் அலுவலகம் ஆரம்பிக்கவேண்டும் என்று சொல்லி ஆரம்பித்திருக்கிறான். கோளாத்தம்மன் கூரியர் சர்வீஸ்.

எவன் வருவான்!!

அதனால் கஸ்டமர் பிடிக்க கிட்டத்தட்ட தள்ளுமுள்ளு தான். எத்தனை லோ க்ளாஸ் சர்வீஸாக இருந்தாலும் வளைத்துப் போடுவதில் மேனேஜர் கில்லாடி. இறுதியில் கூரியரை உரியவரிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஆத்மா போன்ற கடை நிலை ஊழியர்களுடையதுதானே.

அலுவலகத்தின் வாசலைக் கடந்து இரவு ஒன்பது மணியின் வெற்றுச் சாலையை அசுவாரஸ்யமாய்க் கடக்கையில் எதிர்பட்டான் சுந்தரேசன்.

‘என்ன கிளம்பிட்டயா ஆத்மா, வீட்டுக்கு?’

‘ஆங்.. இல்லை.. காட்டுக்கு’

‘என்னது!! காட்டுக்கா?’

‘ஆமா, சுடுகாட்டுக்கு.. பெசன்ட் நகர் சுடுகாட்டுக்கு..’

‘என்னடா சொல்ற?’

‘பெசன்ட் நகர் சுடுகாட்டுக்கு பக்கமா ஒரு டெலிவரிடா..’

‘பேஷ்..பேஷ்.. இப்போல்லாம் பேய் பிசாசுங்க கூட கூரியர் பண்ணுதுங்களா? அப்படி எதைடா கூரியர் பண்ணியிருக்கும்?’

முக‌த்தை ப‌டு சீரிய‌ஸாக‌ வைத்துக்கொண்டு சுந்த‌ரேச‌ன் கேட்க‌, ஆத்மாவின் அடிவ‌யிற்றில் கிரைன்ட‌ர் உருண்ட‌து.

‘டேய் சுந்த‌ரேசா, உன‌க்காக‌ எத்த‌னை ப‌ண்ணியிருக்கேன்… என‌க்காக‌ இந்த‌ ஒரே ஒரு த‌ட‌வை, இதை நீ ப‌ண்ணிடேன்.. உன‌க்கு தான் தெரியுமே என‌க்கு பேய் பிசாசுன்னா ரொம்ப‌ ப‌ய‌ம்னு’ என்றான் ஆத்மா பரிதாபமாக.

‘நீ ஏன் பயப்படணும் ஆத்மா.. நீ தான் ஆத்மாவாச்சே.. என் பாட்டி கூட‌ உன்னைப் பத்தி நான் கொழந்தையா இருக்கச்சே‌ சொல்லிருக்கா?’

‘என்ன‌து? நீ குழ‌ந்தையா இருக்க‌ச்சேயே உன் பாட்டி என்னைப் ப‌த்தி சொல்லிருக்காளா? உன்னையே என‌க்கு இப்ப‌ கொஞ்ச‌ நாளாதானே தெரியும்?’

‘செத்த‌ பின்னாடி உட‌ம்பிலேருந்து ஆத்மா வெளியேறி வேற ஒரு உடம்புல புகாம நின்னுட்டா அதுதான் பேய் பிசாசெல்லாம்ன்னு என் பாட்டி கூட‌ சொல்லிருக்கா. ஆக, அதெல்லாம் ஆத்மா தானாம்.. அதாவது நீ தானாம்’

‘நெரங்கெட்ட நேரமா கடிக்காத சுந்தரேசா…எனக்கு என்ன வழி?’

‘வழியா!! அதைப் பத்தியெல்லாம் என் பாட்டி ஒண்ணும் சொல்லலையே!!’

‘கடுப்பேத்தாத சுந்து … ஏதாவது சொல்லித் தொலையேன்’

‘என்னத்தை சொல்ல?.. இதோ பாரு.. நான் ஒண்ணும் ப்ரேவ் ஹார்ட் மெல் கிப்சன் கிடையாது.. ஆனா உன்னைப் பாத்தாலும் கொஞ்சம் பாவமாத்தான் இருக்கு.. அதனால் கொஞ்சம் ஐடியா வேணும்னா சொல்லித் த‌ரேன்..’

‘சொல்லித்தொலை’

‘தோ பார்.. ஒன்பது மணி ரொம்ப சீக்கிரம்.. இத்தனை நேரத்துக்கு எல்லா பேயும் இரண்டாவது ஜாமத்துல தூங்கிட்டு இருக்கும்ன்னு சொல்வா பாட்டி.. அதுவுமில்லாம, நாய்க்கும் மாட்டுக்கும் பேய் கண்ணுக்கு தெரியுமாம்… பேயை பாத்துட்டா குலைக்கிற நாய் கூட ஒரு மாதிரி ஊளையிடுமாம்… பாட்டி சொல்வா.. பேய்க்கு நாய்ன்னா பயமாம். நாயை பேயால ஒண்ணும் செய்ய முடியாதாம்.. இந்த குழப்பத்தை பயன்படுத்தி சமாளிச்சிடு. நாய் ஒண்ணு கூட துணைக்கு இருக்குறது பெட்டர். அதனால ஒரு நாய் கிடைச்சா விட்றாத‌’

‘போடாங்க.. இந்த அர்த்த ராத்திரியில நாய்க்கு நான் எங்க போவேன்?’

‘நீ எங்கயும் போக வேண்டாம்.. பெசன்ட் நகர்ல நிறைய வீடுங்கள்ல நாய் இருக்கும்.. அது குலைக்கிதா, ஊளையிடுதா பாரு.. குலைச்சா பரவாயில்லை’

‘ஊளையிட்டா?’

‘நாயை கட்டிப்புடிச்சிக்கோ’

‘ஆங்.. நாய் கடிச்சிட்டா?’

‘பேய் கிட்ட‌ அடி வாங்கி சாகுற‌துக்கு, நாய்கிட்ட‌ க‌டி வாங்கி பொழைக்கிறது பெட்ட‌ர் ஆத்மா…’

ஆத்மா, தோளில் கைபையுடன் குறிப்பிட்ட அந்த பெசன்ட் நகர் தெருவில் நுழைந்த போது தெருவே அமைதியாக இருந்தது. எந்த வீட்டிலும் நாய் குரைக்கும் சப்தம் கேட்கவில்லை. நாய் குரைக்காமல் இருப்பது குறித்து சுந்தரேசன் ஏதும் சொன்னானா என்று மனதிற்குள்ளாக நினைவூட்டிப் பார்த்து புருவம் சுருக்கினான் ஆத்மா. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை ஏதோ ஒரு தனித்துவ நரம்பின் இருப்பை உணர முடிந்த கணத்தில், பதற்றம் பற்றிக்கொண்டது. இதயத்துடிப்பை துல்லியமாக கேட்க முடிந்தது. இந்த அர்த்த ராத்திரியில், பயமுருத்தும் மயானத்திற்கு அருகில், இருந்து இருந்து சுந்தரேசன் தந்த ஒரே உருப்படியான உதவி ஒரு நாயின் துணை! இப்போது அது கூட இல்லை என்றாகிவிட்ட‌போது ஆத்மாவிற்கு உள்ளுக்குள் உதறலே வந்துவிட்டது.

மயான கட்டிடத்தின் கதவுகள் ஒருக்களித்து சார்த்தப்பட்டிருந்தன. அதன் மதில் சுவர்கள் ஓங்கி உயர்ந்து லேசான பயம் தந்தது.

கூரியரில் இருந்த முகவரி கனகச்சிதமாக எரி மயான கட்டிடத்தின் எதிரால் சற்று தள்ளி அமைந்திருந்தது. மோசமான விஷயம் என்னவெனில், அந்த வீட்டை அடைய மின்மயான கட்டிடத்தை கடக்கவே வேண்டியிருந்தது.

ஆத்மா அடி மேல் அடி எடுத்து வைத்தான். மெல்ல மயான கட்டிடத்தின் பிரதான வாசலை நெருங்கினான். முகத்தை தாழ்த்தி நிலத்தை மத்திமமாக பார்த்தபடி அவசரமாக இரண்டு மூன்று அடி எடுத்து வைத்து வாசலைக் கடந்தவன், ஏதோ ஒரு பிரஞை ஏற்பட்டு, காதுகளின் பின்னால் ஏதோ ஒர் உருவத்தை தொடர முயன்று அவசரமாக திரும்ப, யாரும் இல்லாமல், அமைதியான காலியான தெரு போக்கு காட்டியது.

ஏமாற்றத்துடன் திரும்பி மீண்டும் அடி மேல் அடி எடுத்து வைத்து குறிப்பிட்ட அந்த வீட்டின் வாசலை அடைந்தான் ஆத்மா. அந்த வீட்டின் கதவுகள் சார்த்தப்பட்டிருந்தது. வாசலில் பொறுப்பாக ஒரு மின் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. பக்கவாட்டின் ஜன்னல்களினூடே ஹாலில் விளக்கெரிவதை பார்க்கவும், சன்னமாக தொலைக்காட்சி குரல்களை கேட்கவும் முடிந்தது. தெருவே என்ன நடக்கிறதென அவதானிக்கும் பொருட்டு பேரமைதி காத்தபடி அவனையே உற்று கவனிப்பது போன்ற பிரஞை ஏற்பட்டது.

ஆத்மா மனத்தின் சந்து பொந்துகளில் மிச்சமிருந்து கொஞ்ச நஞ்ச தைரியங்களை திரட்டிக்கொண்டு, வாசலில் கட்டங்கள் கட்டிய இரும்பு கேட்டில் தேட, பக்கவாட்டில் அழைப்பு மணி இருப்பது தெரிந்தது. ஆத்மா, மெல்ல தன் வலது கையை உயர்த்தி, அழைப்பு மணியை தழுவ நீளுகையில், முதுகின் பின்னால் ஏதோ நிழலாட, அதிர்ந்து திரும்பினான் ஆத்மா.

தூர‌த்து தெருவிள‌க்கின் பின்ன‌னியில் தெரிந்த‌ அந்த‌ நிழ‌ல் மெல்ல‌ மெல்ல‌ பெரிதாகிக் கொண்டே வர, இதயத்திற்கு வெகு அருகாமையில் ஏதோவொரு ரத்த நாளம் மக்கர் செய்வது போல் உணர்ந்தான் ஆத்மா. அந்த உருவம் கிட்டத்தில் நெருங்க நெருங்க, இதயத்துடிப்பு பலமாக ஆக, கிட்டத்தில் அது ஒரு நாய் என்று கண்டுகொண்டான் ஆத்மா. ஒடுங்கிய உடலாய், முகம் கழுத்து பிடறி முதுகில் என எங்கிலும் சொறி வந்து பார்க்கவே அசூயையாக இருந்தாலும், அந்த நாய். ஆத்மாவிற்கு அந்த நொடியில், ஆபத்மாந்தவனாகத்தான் பட்டது. த‌ன‌து நீண்ட‌ நாக்கை வெளியே நீட்டி, த‌னது கீழ்த்தாடை ப‌ற்க‌ள் மீது விலாவி வாயை அகலத் திற‌ந்து சாக‌ச‌மாக‌ கொட்டாவி விட்ட‌து அந்த‌ நாய்.

சுந்த‌ரேச‌ன் சொன்ன‌து போல் அல்லாம‌ல், அது குலைக்காமல் நின்ற‌தில் ஆறுத‌லாக‌ உண‌ர்ந்தான் ஆத்மா. யார் வீட்டு நாய் என்று தெரியவில்லை!.. ஆபத்மாந்தவனாக திடீரென்று தோன்றி நம்பிக்கை அளித்துவிட்டு, உடனே எங்கேனும் ஓடிப் போய் விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் வந்து மீண்டும் பயம் வந்தது ஆத்மாவிற்கு. அந்த நாயின் கழுத்தில் சங்கிலியோ, கயிறோ இருக்கவில்லை எனும்போது கொண்டு வந்திருந்த கூரியரை தந்துவிட்டு போகும் வரை அந்த நாய் எங்கும் ஓடிப்போகாமல் அங்கேயே நிற்க வேண்டுமே என்று தோன்றி மேற்கொண்டு தைரிய‌ப்ப‌ட்டு அவ‌ன் த‌ன‌து விர‌ல்க‌ளால் அழைப்பு ம‌ணியை ஒற்றினான். தொட‌ர்ந்து தொலைக்காட்சியின் ச‌த்த‌ம் ச‌ன்ன‌மாக‌, க‌த‌வின் கீழே நிழ‌லாடுவ‌து தெரிந்த‌ நொடிக‌ளில், ஆத்மாவின் முதுகின் பின்னால் கேட்டது அந்த ஒலி.

‘ஒஓஉ உ உ ஊ ஊ ஊ ‘

அதிர்ந்து திரும்பினான் ஆத்மா. உருண்ட விழிகளுடன், அந்த‌ நாய் வெறித்துப் பார்த்தபடி நின்றிருக்க, அதன் ஊளைச்சத்தம் அந்த தெருவின் அமைதியை கலைத்தது.

‘நாய்க்கும் மாட்டுக்கும் பேய் கண்ணுக்கு தெரியுமாம்… பேயை பாத்துட்டா குலைக்கிற நாய் கூட ஒரு மாதிரி ஊளையிடுமாம்…’ என்று சுந்தரேசனின் பாட்டி இப்போது ஆத்மாவிற்கும் சொன்னாள்.

துரதிருஷ்டவசமான அந்த சூழல் அமானுஷயமாகிக் கொண்டிருப்பதாகப் பட்டது ஆத்மாவிற்கு. யாரும் துணைக்கில்லாமல் தனியாக மாட்டிக்கொண்டது பலவீனமாகத் தோன்றிய நொடிக‌ளில், அந்த‌ வீட்டின் க‌த‌வு திற‌க்க‌ப்ப‌ட‌, அழைப்பு ம‌ணியை அழுத்திய‌ பிற‌கு ஊளையிட‌த் துவ‌ங்கிய‌ நாயையும், க‌த‌வு திற‌ப்ப‌தையும், உள்ளுக்குள் அப‌த்த‌மாக தாம‌தமாக‌‌ தொட‌ர்புப‌டுத்தி ஆத்மா, க‌த‌வின் ப‌க்க‌ம் அதிர்ச்சியுட‌ன் திரும்ப‌….

இந்த இடத்தில் கதையின் வாசகர்களாகிய உங்களுக்கெல்லாம், கதாசிரியனாகிய ஆத்மா என்கிற நான் சில விஷயங்கள் சொல்லிக்கொள்ள விழைகிறேன். செளகர்யமாக இந்தக் கதை இதுவரை பயண‌ப்பட்டு வந்துவிட்டது. இங்கிருந்து, இந்தக் கதையை, எப்படியெல்லாம் முடிக்கலாம்? அழைப்பு மணி ஒலி கேட்டு ஒரு பெரியவர் உள்ளிருந்து வந்தார், அவர் கால்கள் தரையில் இருக்கவில்லை என்று முடிக்கலாமா? கதவு தானாக திறக்க, யாரும் கண்ணுக்கு புலப்படாமல், வெறும் குரலாக ‘யாரு வேணும்?’ என்று மட்டும் கேட்டது என்று முடிக்கலாமா? முடிக்கலாம். இப்படியெல்லாம் கூட முடிக்கலாம் தான். ஆனால், அதிலெல்லாம் எனக்கு உடன்பாடில்லை. ஏனென்றால் நான் அப்படி ஆசாமி இல்லை. இந்தக் கதையை மேற்கொண்டு பின்வருமாறு தொடர விரும்புகிறேன்.

அழைப்பு மணி ஒலி கேட்டு ஒரு பெரியவர் உள்ளிருந்து கதவு திறந்து வெளியே வந்தார்.

ஆத்மா அவரின் கால்களை ஆர்வமுடன் தேடினான். அவரின் பாதங்கள் தரையில் அழுத்தமாக பதிந்திருப்பதை ஊர்ஜிதம் செய்த போது, ‘அப்பாடா!!’ என்று உள்ளுக்குள் நிம்மதி பரவியது.

ஆத்மா தோள்பையில் கைவிட்டு கூரியரை பேனாவுடன் எடுத்து நீட்ட, அந்த பெரியவர் வாங்கிக் கொண்டு, ஆத்மா நீட்டிய காகிதத்தில் தனது கையெழுத்தை கிறுக்கிவிட்டு பேனாவை ஆத்மாவின் கைகளில் செருகிவிட்டு நிமிர்ந்த அந்த பெரியவரிடம் வாய் திறந்தான் ஆத்மா.

‘ஏன் சார், இந்த கத்து கத்துதே இது உங்க வீட்டு நாயா?’

‘எந்த நாய்?’

‘இதோ, ஊளையிடுதே இந்த நாய்ங்க?’

‘நாயா? இந்த தெருவிலே நாயே கிடையாதேங்க. இரண்டு நாள் முன்னவரை ஒண்ணு இருந்திச்சு. வீட்டுல என்ன மீந்தாலும் அதுக்கு போடுவேன்.. நல்லா திண்ணும். காவல் காக்கும். சொறி புடிச்சு போச்சு. தெருப்பசங்கதான் கல்லால அடிச்சே கொன்னாங்க. இந்த மயானத்துலதான் ஓரமாய் பொதைச்சது. தெருவே வெறிச்சோடிப்போய் கிடக்கு. நீங்க என்னடான்ன நாய் குளைக்கிதுங்கறீங்க?’ என்றார் அந்த பெரியவர்.

ஆத்மா, அதிர்ச்சியுடன் அந்த நாயை திரும்பிப் பார்க்க, அந்த நாய் இப்போது அவனையே உற்று பார்த்தபடி ஊளையிட்டுக் கொண்டிருந்தது.


Thursday 11 June 2020

எலிப்பொறி - ஆனந்த விகடன் சொல்வனம்

எலிப்பொறி - ஆனந்த விகடன் சொல்வனம்

இதை எப்படி கவனிக்காமல் விட்டேன் என்று தெரியவில்லை.
(சென்ற வாரம் அலுவலகத்தில் வேலை கொஞ்சம் அதிகம். அதனால் இருக்கலாம்.)

சென்ற வாரம் 10.6.2020 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் சொல்வனம் பகுதியில் எனது கவிதை 'எலிப்பொறி' வெளியாகியிருந்திருக்கிறது. வேலைப்பளுவில் நான் கவனிக்கவில்லை. இப்போதுதான் கவனித்தேன்.

எனது கவிதையைத் தேர்வு செய்து வெளியிட்ட ஆனந்த விகடன் சொல்வனம் ஆசிரியர் குழுவுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நண்பர்கள் யாரேனும் கவிதை வெளியான பக்கத்தை ஸ்கேன் செய்து பகிர இயலுமா?




Monday 8 June 2020

குற்றக்கதைகள் - கிண்டில் தொகுப்பு

என்னுடைய 11வது நூலை கிண்டில் வாயிலாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

'குற்றக்கதைகள்(பகுதி-1)' என்ற தலைப்பிலுள்ள இந்தத் தொகுப்பில் சுமார் 12 சிறுகதைகள் இருக்கின்றன. பெரும்பான்மை உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழிலும், ஒன்று குங்குமம் இதழிலும் வெளியாகியிருக்கிறது என்பதால் கிண்டிலில் வெளியிட்டாலும், இவைகள் நூல்கள் என்று தகுதிப்படும் என்றே எண்ணுகிறேன்.

இந்தக் கதைகள் குற்றப்பின்னணியில் அமைந்த சஸ்பென்ஸ் வகைக் கதைகளே. ஆகவே ஓஹென்றித்தனமான எதிர்பாராத ட்விஸ்டுகள் இந்த கதைகளின் பொதுவான அம்சம். இந்தக் கதைகள் எனக்குச் சில திரைப்பட உதவி இயக்குனர்களின் நட்பை பெற்றுத்தந்திருக்கிறது. இதுவே, இவ்வகைக் கதைகளை தொடர்ந்து எழுதும் ஊக்கத்தையும், உந்துசக்தியையும் நான் தொடர்ந்து பெறுவதற்கான அடிப்படை எனலாம். என்றேனும் ஒரு நாள் இந்த முயற்சிகள் வெளிச்சத்தைக் கண்டடையும் என்று நம்புகிறேன்.

https://www.amazon.com/dp/B089S9K16F

கிண்டிலில் வாசிக்கக் கிடைக்கும் என் இதர நூல்கள்

கதாவனம் - https://www.amazon.com/dp/B089Q2XXSR
குறுங்கதைகள் - https://www.amazon.com/dp/B089KQ2MM3
காதல் சோலை - https://www.amazon.com/dp/B089454W6X

- எழுத்தாளர் ராம்பிரசாத்

Sunday 7 June 2020

மூன்று முகம் - வாசகசாலை

வாசகசாலையில் 'மூன்று முகம்' என்ற தலைப்பிலான என் சிறுகதை வெளியாகியிருக்கிறது.

எனது சிறுகதையைத் தேர்வு செய்து வெளியிட்ட வாசகசாலை ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

சிறுகதையை வாசிக்க பின்வரும் சுட்டியை சொடுக்கவும்.

Thursday 4 June 2020

கதாவனம் - கிண்டில் சிறுகதைத் தொகுப்பு

கதாவனம் - கிண்டில் சிறுகதைத் தொகுப்பு


ஏகத்துக்கும் தோன்றுகிறது. எழுத்தாளன் தோன்றுவதற்கெல்லாம் வார்த்தை வடிவம் தந்துவிடுகிறான். காலப் போக்கில் அவைகளெல்லாம் 'சேர்ந்துவிடுகின்றன'. யாருக்கும் பயனின்றி இருப்பதில் என்ன பலன் இருக்கப்போகிறது?

தமிழின் சிறந்த அச்சு வெகுஜன பத்திரிக்கைகளிலும், பதிப்பக இதழ்களிலும் வெளியான சமூகச் சிறுகதைகளின் தொகுப்பே 'கதாவனம்'. ஆம். இந்தத் தொகுப்பு, சமூகக் கதைகளின் தொகுப்பு மட்டுமே. துப்பறியும் கதைகள், க்ரைம் கதைகள் வெவ்வேறு தொகுப்புகளில் பின்னால் வர இருக்கின்றன.

தமிழின் சிறந்த அச்சு வெகுஜன பத்திரிக்கைகளிலும், பதிப்பக இதழ்களிலும் வெளியான சமூகச் சிறுகதைகளின் தொகுப்பே 'கதாவனம்'.

இந்தத் தொகுப்பில் 2012 முதல் 2016 வரையிலான
கணையாழியில் வெளியான ‘முடிச்சு’, ‘சொள்ளமாடன் விட்ட வழி’ ஆகிய சிறுகதைகளும்,
உயிர்மை இதழ்களில் வெளியான ‘கோலங்கள்’, ‘இடைவெளி’ சிறுகதைகளும்,
குமுதத்தில் வெளியான ‘கண்ணாடி நெஞ்சம்’ சிறுகதையும்,
ராணி இதழில் வெளியான ‘அம்மி அம்மா’ சிறுகதையும்,
ராணிமுத்து இதழ்களில் வெளியான ‘கண்களைத்திற கண்மணி’, ‘நெருக்கடி’ ஆகிய சிறுகதைகளும் இடம் பெறுகின்றன.

தொகுப்பை Kindle Unlimited ல் வாசிக்க பின்வரும் சுட்டியை சொடுக்கவும்.

Tuesday 2 June 2020

குறுங்கதைகள் - கிண்டில் தொகுப்பு

குறுங்கதைகள்




இந்தத் தொகுப்பை வெளியிடக் காரணம்: சிறுகதைகள் எழுத விரும்புவோர்களுக்கு குறுங்கதைகள் ஒரு நல்ல பயிற்சி மட்டுமல்ல நல்லதொரு துவக்கம். அது ஒரு தந்திரமும் கூட. குறுங்கதைகள் எழுத முதலில் அவைகளை அதிகமாக, விதம் விதமாக வாசித்துப் பார்க்க வேண்டும். பெரும்பாலான குறுங்கதைகள் 'ஓ ஹென்றி'த்தனமான கதை முடிவுகளைக் கோருபவை. அதுதான் குறுங்கதைகளின் வசீகரமும் கூட. குறுங்கதைகளில் இந்த அம்சம் மிக மிக முக்கியம்.

கவிதைகளிலிருந்து சிறுகதைகளுக்கு சற்று அவசரமாகத் தாவியதில் இடைப்பட்ட காலத்தில் சில குறுங்கதைகள் எழுதியிருக்கிறேன். இப்போது கணக்கெடுத்துப் பார்த்தால் எண்ணிக்கையில் 59 வருகிறது. இத்தொகுப்பிலுள்ள சில கதைகள் குங்குமம், ராணி, வல்லினம், உயிர்மையின் உயிரோசை இதழ்களில் வெளியாகியிருக்கிறது. இப்போது எழுதும் சிறுகதைகளின் அடிப்படை வடிவத்தைப் பெற இந்த குறுங்கதைகள் எழுதிய அனுபவம் பெரிதும் உதவியது என்பதை மறுப்பதற்கில்லை.

kindle unlimitedல் இலவசமாகவே வாசிக்கலாம். தொகுப்பை வாசிக்க சுட்ட வேண்டிய சுட்டி:

குறுங்கதைகள் - https://www.amazon.com/dp/B089KQ2MM3

கிண்டிலில் இலவசமாகக் கிடைக்கும் என் இதர நூல்கள்:

காதல் சோலை - https://www.amazon.com/dp/B089454W6X