என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday 3 May 2019

சுஜாதாவின் ' நகரம்'



'நகரம்' சுஜாதா எழுதியது. தமிழில் சிறந்து நூறு சிறுகதைகள் வரிசையில் இடம்பெற்றிருக்கிறது.

வள்ளியம்மாள், பாப்பாத்தி என்கிற தன் உடல் சுகமில்லா பெண்ணை மருத்துவமனையில் சேர்க்க அழைத்து வருவதில் துவங்குகிறது கதை. பிறகு, ஒரு எளிமையான கிராமத்து தாயிடம் அந்த மருத்துவமனை நிர்வாகம் நடந்து கொள்ளும் விதத்தில், அவள் அச்சமுற்று, குழம்பி, ரசீதுக்கும் இன்ன பிற மருத்துவமனை சார்ந்த ஸ்திதிகளுக்குமாய் அலைகழிந்து தன் மகளை கண் முன்னே போதரவாய் பார்த்து நடத்திக்கொள்ளும் மருத்துவமுறை எதுவோ அதற்கே திரும்பிவிடலாம் என்று எண்ணி மீண்டும் கிராமத்துக்கு பாப்பாத்தியுடன் பேருந்து ஏறுவதில் முடிகிறது கதை.

1940களில் புதுமைப்பித்தன் செய்ததை 1970களில் சுஜாதா செய்தார் என்றால் மிகையில்லை. சிறுகதைகளின் அத்தனை வடிவங்களிலும் முயன்று பார்த்தார் சுஜாதா. சுஜாதா மறைந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது என்றாலும்  இன்றைக்கு நடக்கும் புத்தக கண்காட்சிகளிலும் அவர் தான் பெஸ்ட் செல்லர். சுஜாதாவின் சிறப்பே அவரது உரை நடை தான். ஒரு விதமான ஹாஸ்யம்ம் ததும்பும் எழுத்து நடை அது. சுஜாதாவை ஊன்றிப்படித்தவர்களுக்கு அவருடைய நடை ஒரு வியாதி போல ஒட்டிக்கொண்டுவிடும்.

சொல்ல வந்ததை விதம் விதமாக சொல்லி சோதித்துப்பார்த்தார் எனலாம். ஒரு சிலவற்றில் காட்சியாக. ஒரு சிலவற்றில் வார்த்தைகளாக. ஒரு சிலவற்றில் வெறும் வெற்றிடமாக. இப்படி வார்த்தைகளைக்கொண்டு இஷ்டத்துக்கும் விளையாடியிருக்கிறார் சுஜாதா.   ஒரு நாவலில் வில்லன் தலை கீழாக விழுவான். அதை 'விழுந்தான்' என்பதை மட்டும் தலைகீழாக அச்சடித்திருப்பார்கள். உண்மையில் அது அவராக உருவாக்கியது அன்று.

சுஜாதாவுடன் ஆரம்ப கட்டத்தில் பழகியவர்களால் சுஜாதாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு அதை சுஜாதா தன் கதைகளில் பயன்படுத்திக்கொண்டார் என்பது நம்பத்தகுந்த தகவல். ஆயினும், இம்மாதிரி வார்த்தை விளையாட்டுக்களைப்பற்றி நினைத்தால் சுஜாதா நினைவு தான் வருகிறது. அது தான் சுஜாதா என்று நினைக்கிறேன். ஒரிஜினலையே மறக்கடிக்க வைக்கும் தன்மை இவருக்கு இருக்கிறது.

உண்மையில் இலக்கியம் என்பதை யாரொருவரும் எடுத்த எடுப்பிலேயே பழகிவிட முடியாது. அதற்கு முதலில் ஒரு பரிச்சயம் வேண்டும். அது வெகு ஜன எழுத்தில் தான் சாத்தியம். சுஜாதா என்னதான் வெகுஜன எழுத்தில் புழங்கினாலும், அவர் எழுதிய பல ஆக்கங்கள், பல சிறுகதை வகைமைகளுக்கு இப்போதிருக்கும் கிராமர் என்றால் அது மிகையில்லை.  

பாதசாரி விஸ்வநாதன் எழுதிய 'காசி'

பாதசாரி விஸ்வநாதன் எழுதிய 'காசி' சிறுகதையும் தமிழின் நூறு சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக தேர்வாகியிருக்கிறது.

காசி திறமைசாலி. புத்திசாலி. சாமான்ய மனிதர்கள் வாழும் தினசரி வாழ்க்கையில் விருப்பமில்லாதவன். அப்படியானால் அவன் வெற்றியாளனாகியிருக்க வேண்டுமே? இல்லை. அங்கு துரதிருஷ்டம் விளையாடிவிடுகிறது. ஆம். இதை குறித்துக்கொள்ளுங்கள். துரதிருஷ்டம். எந்த வேலையிலும் அவனால் ஒன்ற முடியவில்லை. இதற்கு அர்த்தம், அவனது திறமைக்கு ஏற்ற வேலை இல்லை அது என்பதுதான். ஓரிரு இடங்களில் ஒன்றிவிட்டு பின் தொடர்ச்சியாக இயங்க முடியாமல் வந்துவிடுகிறான்.

சாமான்ய மனிதர்கள் அளவுக்கு அறம் இன்றி, உண்மைகளை தேவைக்கேற்ப வளைத்து, அடுத்தவனை இறக்கி, ஏமாற்றி வாழ காசிக்கு வரவில்லை என்பதை விட அவ்விதமாக பிழைக்க விருப்பமில்லை. விளைவு, மன நலம் பாதிக்கப்பட்டவன் என்று முத்திரை  குத்தப்படுகிறான். அவனுக்கு பிறகு என்னாகிறது என்பது மீதிக்கதை.

காசி சிறுகதையை காசி போன்ற அத்தனை அதீத திறமைசாலியாக இருந்தும், துரதிருஷ்டத்தின் காரணத்தால் சாமான்ய மனிதர்களுடன் பிழைக்க நேர்ந்து எண்ணிக்கையில் அதிகமுள்ள சாமான்யர்களின் கூட்டுச்சதியால் வீழும் அத்தனை மனிதர்களுக்கும் பொருத்திப்பார்க்கலாம். பாராமுகம் , கள்ள மெளனம் போன்றவர்களால் வஞ்சகம் செய்யப்படுவதை எதிர்த்து நிமிர்ந்து நிற்கு ஓரளவுக்காவது அதிர்ஷ்டம் வேண்டும் என்பது சத்தியமான வார்த்தை.

கொள்ளை அழகாக இருந்து, சுமாரான தோற்றம் கொண்டவர்கள் வீட்டுக்கு மறுமகளாகிப்போய் ஒரே வருடத்தில் கிழிந்த நார் போல் ஆன பெண்களை கண்கூடாகப் பார்ததிருக்கிறேன். காசி கதையை இந்த சூழலுக்கு பொருத்திப்பார்க்கலாம்.

அதீத திறமைகள் கொண்டிருந்தும், சில்லறையாக நடந்து கொள்ளும் நான்கு பேருக்கு மத்தியில் அரசாங்க உத்தியோகத்தில் அமர நேர்ந்து, முப்பது வருட அனுபவத்தில், ஒன்றுமில்லாமல் வீணாய்ப்போனவர்களை பார்த்திருக்கிறேன். காசி கதை, இப்படிப்பட்டவர்களுக்கும் பொருந்தும்.

அதீத திறமைகள் இருப்பதாலேயே, 'இவனை வீட்டுக்குள் விட்டால் நம் இடம் போய்விடும்' என்கிற பயத்தில் பெண் வீட்டாரால் பெண் தரப்படாமல் புறக்கணிக்கப்பட்டு, பெண் கிடைக்காமல் போகும் ஆண்களை பார்த்திருக்கிறேன். காசி கதை, இப்படிபட்டவர்களுக்கும் பொருந்தும்.

நான் பள்ளியில் படிக்கிறபோது எனக்கு ஒரு ஆங்கில வாத்தியார் பாடம் சொல்லித்தருவார். அவரிடம் என் வகுப்பில் சில மாணவர்கள் டியூஷன் சென்றார்கள். அவர்கள் அவரை 'ஓரினச்சேர்க்கையாளன்' என்று சொல்லி நான் கேட்டிருக்கிறேன். அதனால் அவர் வகுப்பென்றால் கொஞ்சம் பயம். அவரை விட்டு ஒதுங்கிச்சென்றிருக்கிறேன். பன்னிரண்டாவது முடித்து நல்ல மதிப்பெண் எடுத்து கல்லூரி சேர கவுன்சிலிங் சென்றபோது எனக்கும் அந்த வாத்தியாருக்கும் தெரிந்த பொதுவான நபர்களால் அவர் அப்படி எல்லாம் இல்லை என்றும் ஆங்கிலத்தில் வெகு புலமை இருப்பதால், உடன் வேலை பார்த்த சிலர் இவர் பெயரை கெடுத்திருக்கிறார்கள் என்பதும் தெரியவந்தது. இதுவெல்லாம் ஒரு சாம்பிள் தான். காசி கதை, இப்படியும் புரிந்துகொள்ள பயன்படும்.

இப்படி காசி கதையை பல சூழல்களுக்கு பொருத்திப்பார்க்கலாம். அந்த காரணத்துக்காகவே சிறந்த கதைகளில் ஒன்றாய் தேர்வு செய்யப்ப்பட்டிருக்கும் என்பது என் அனுமானம்.

நல்ல விஷயங்கள் நம்மை சுற்றி எங்கெங்கும் விரவிக்கிடக்கின்றன. நாம் தான் அதை கெட்டதிலிருந்து பிரித்துப்பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

கெட்டது போல் தோற்றம் தரும் ஒன்று மிக மிக நல்லதாக இருக்கும். கெட்டது என்று புறக்கணித்தால் நஷ்டம் நமக்குத்தான்.
அதேபோல் நல்லதைப்போல் தோற்றம் தரும் ஒன்று உண்மையில் உள்ளுக்குள் மிக மிக மொன்னையாக இருக்கும். 'கெட்டதாக ஏதும் கேள்விப்படவில்லை' என்பதாலேயே அது நல்லதென்று கொள்வதிலும் நஷ்டம் நமக்குத்தான்.


காசி இந்த முரண் குறித்துத்தான் பேசுகிறது என்றே புரிந்துகொள்கிறேன்.

ஞானப்பால் - ந.பிச்சமூர்த்தி

ஞானப்பால் - ந.பிச்சமூர்த்தி

தவசிப்பிள்ளையின் சத்திரத்துக்கு லிங்கங்கட்டி வந்து சேர்ந்து ஒரு வருடம் ஆவதிலிருந்து சிருகதை துவங்குகிறது. லிங்கங்கட்டியிடன் சேறும் பணத்தின் மீது பொறாமை கொள்ளும் தவசிப்பிள்ளை அதை தங்கமாக்கி அணிந்துகொள்ள அறிவுறுத்துகிறார். தங்கமாக்கி அணிந்துவிட்ட பிறகு அதை ஒரு நாள் லிங்கங்கட்டி தொலைத்துவிடுகிறான். அதோடு அவன் சத்திரத்தை விட்டு வெளியேறுவது ஞானப்பால் அடைவதற்கு ஒப்பானது என்கிற ரீதியில் கதை முடிகிறது.

இரண்டு மனிதர்களுக்கிடையே உள்ள சம்பாஷனையின் மூலம் பிற எதையும் காண்பது என்பது அந்த இரண்டு மனிதர்களின் பார்வையிலான அக மற்றும் புற உலகின் அர்த்தங்களின் மூலம் பிற எதையும் அணுகுவதாகும். இந்த அர்த்தங்களுமே அந்த இருவரது பார்வைகளின் ஊடாக விரிபவைகள் மட்டுமே.

பிச்சமூர்த்தியின் கதைகள் இந்த பார்வைகளினூடே இயங்குபவை, பொருள் தருபவை என்பது என் புரிதல். இந்த வகையில் அமைந்த சிறுகதைகளின் முன்னோடி பிச்சமூர்த்தி எனலாம். இதனால் பிச்சமூர்த்தியின் கதைகளில் கதை மாந்தர்களும், அவர்களின் சமூக இடங்களும் குறித்த விவரணைகள் முக்கியப்படுகின்றன.

புதுமைப்பித்தன் சிறுகதை வகைமைகள் எல்லாவற்றையும் முயன்று பார்த்தார். ஒரு வித எக்ஸ்பெரிமென்டல் மனோ நிலை அது. மெளனி அக மன உணர்வுகளை பிரதிபலித்தார்.கு.ப.ராஜகோபாலன் மரபார்ந்த எழுத்தை விட்டு விலகி,  நவீனத்துவப்பாதையில் பெண் அபிலாஷைகளை பதிவு செய்தார். பிச்சமூர்த்தி மனிதர்கள் மூலமாக, மனிதச்செயல்பாடுகளில் வழி கடத்தப்பட்ட அர்த்தங்கள் வழி அர்த்தங்களை பதிவு செய்தார் எனலாம். 

விடியுமா - கு.ப.ரா

விடியுமா - கு.ப.ரா


இந்தக்கதையில் வரும் பெண்ணின் கணவன் சீரியஸ் என்று தந்தி வருகிறது. உடனே மனைவியானவள் சொந்தங்கள் சகிதம் ரயிலேறி சென்னைக்கு வருகிறார். வரும் வழியில் 'இவரால என்ன சொகத்தை கண்டேன்' என்கிற ரீதியில் புலம்புகிறார். வந்து சேர்ந்தபோது அவரின் கணவர் முந்தினம் இரவே இறந்திருப்பது தெரிய வரும்போதும் 'விடிந்துவிட்டதாக' அர்த்தப்படுகிறது.

கு.ப.ரா என்கிற கு.ப.ராஜகோபாலனின் சிறுகதைகளில் குடும்பம் என்கிற அமைப்பைத்தாண்டி, பெண்கள் அவர்களின் உண்மையான சுயத்தோடு  வெளிப்படுவார்கள். இது கு.ப.ராவின் காலத்திலான மரபார்ந்த பாத்திரப்படைப்புகளிடமிருந்து வெகுவாக விலகி இருக்கும். கு.ப.ரா அறியப்படுவதற்கு காரணம், கு.ப.ராவின் காலகட்டத்தில் அவர் சுவீகரித்துக்கொண்ட நவீனத்துவ சிறுகதை வடிவம். அந்த வடிவத்தில் அவருடைய பெரும்பாலான சிறுகதைகள் பேசியது பெண்ணுலகம். அந்த உலகின் அந்தரங்க அபியலஷைகள், அதற்கு எதிராக இயங்கும் குடும்ப அமைப்பு.

புதுமைப்பித்தன் சிறுகதை வகைமைகளை முயற்சித்தார் என்றால் கு.ப.ரா ஒரு குறிப்பிட்ட வகைமை, அதாவது நவீனத்துவ கதை சொல்லலில் பெண்களின் தீரா உளக்கிடக்கைகளை காட்சிப்படுத்துவதில் முன்னோடியாக தன்னை முன்னிருத்திக்கொண்டவர் என்று சொல்வது பொருத்தமாக இருக்கலாம்.

கு.ப.ராவின் எழுத்தின் அடையாளம் அதுதான் என்று நினைக்கிறேன். 

Thursday 2 May 2019

அழியாச்சுடர் - மெளனி

அழியாச்சுடர் - மெளனி


தமிழில் மிக முக்கியமான சிறுகதைகள் வரிசையில் அடுத்து மெளனியின் அழியாச்சுடர் சிறுகதை. புதுமைப்பித்தன் எல்லா சிறுகதை வகைமைகளையும் முயன்று பார்த்தான் என்றால், மெளனியின் சிறுகதைகளில் கதை மாந்தர்கள் தங்கள் 'உள்ளுக்குள்' பேசுபவர்களாய் இருப்பார்கள். இப்படியாக அவர் எழுதியிருக்கும் மொத்த சிறுகதைகள் 24 தானாம். ஆனால் இந்த 24ல் மெளனி தமிழ் சிறுகதையின் மிக முக்கிய கதாசிரியர் என்றாவது, அவரது சிறுகதைகளில் காணப்படும் 'மனதுக்குள்ளாக பேசிக்கொள்ளும்' தன்மையால் தான்.

இலக்கியத்தின் அழகியலை ஒட்டுமொத்தமாக உள்மன சம்பாஷனைகளை விவரிக்கவென பயன்படுத்தினால் விளைவது மெளனியில் சிறுகதைகள் என்பது என் வரையிலான புரிதல். உள்ளுக்குள்ளாக குழைந்து எழுதுவதால், தத்துவ விசாரங்களாக இருக்கக்கூடிய வாய்ப்புகளே அதிகம் என்பதால் மெளனியின் சிறுகதைகள், பெரும்பாலும் மற்ற சிறுகதைகள் போல், முதலாளித்துவம் , விளிம்பு நிலை மனிதர்கள், துக்கம், கண்ணீர் என்றெல்லாம் இருப்பதில்லை. இக்காரணத்தினாலேயே மெளனியின் சிறுகதைகளில், வட்டார வழக்கு, வட்டார அடையாளங்கள் என்பதெல்லாம் அதிகம் இராமல் இருப்பதை அவதானிக்க முடியும். அவைகளெல்லாம் அவரின் ஆக்கங்களில் முக்கியத்துவம் பெருவதில்லை.

உள்முகமாக சிறுகதைகள் இருப்பதாலேயே, மெளனியின் சிறுகதைகளில் வரும் கதை மார்ந்தர்கள் பெரும்பாலும் மெளனியின் சாயலிலேயே தான் இருக்க வேண்டும் என்றும் நான் கருதுகிறேன். பின்னாளில் பாலகுமாரன் இவ்வாறு எழுதியிருக்கிறார் எனினும், அவர் உள்முகமாக எழுதுவது பெரும்பாலும் ஒரு டூல் போன்றே அந்த ஆக்கத்திற்கு பயன்பட்டிருப்ப்பதை பார்க்க முடியும். ஆக என் வரையில், மெளனியின் சிறுகதைகள் வெறும் உள்முகமாக உள்மன சஞ்சரிப்புகளை மட்டுமே கற்பனை வளத்துடன் அழகான வார்த்தைக்கோர்வைகளால் வருணிக்கப்படும் சித்தரிப்பு என்றே புரிந்துகொள்கிறேன்.

இன்றைக்கு பலர் இந்த விதமான சிறுகதைகள் எழுதிப்பழகலாம். இவற்றுக்கெல்லாம் தமிழில் முன்னோடி என்கிற அடையாளமே மெளனியை மெளனி ஆக்குகிறது என்பது என் புரிதல்.

புதுமைப்பித்தனின் 'காஞ்சனை'

புதுமைப்பித்தனின் காஞ்சனை


மாய எதார்த்த கதைகளின் முன்னோடியாக தமிழில் காணப்படுவது புதுமைப்பித்தனின் காஞ்சனை.

எழுத்தாளன் ஒருவனின் மனைவி ஒரு நாள் ஒரு பிச்சைக்காரியை, வீட்டு வேலைக்கென எடுப்பதில் துவங்குகிறது. அதன் பின் அவள் மனுஷியா, பேயா என்பதில் தொடர்கிறது, அப்படியே முடிந்தும் விடுகிறது.

இன்றைக்கு இந்தக் கதையை வாசிக்கையில் இவ்வளவுதானா என்று தோன்ற வைக்கலாம். ஆனால் இந்தக்கதையின் சிறப்பு என்னவெனில், சிறுகதைகளின் எல்லா வகைமைகளையும் முயன்று பார்த்த புதுமைப்பித்தன் இந்த முயல்வுகளையெல்லாம் 1940 களிளேயே செய்திருக்கிறார்.

பெரும்பாலும் அற உணர்வுகளை வெளிப்படுத்தும், 'இறுதியில் எல்லாம் சுபமே' என்கிற தனமான குடும்ப கதைகளுக்கு மத்தியில் புதுமைப்பித்தனின் படைப்புகள் மிக மிக வித்தியாசமாகவும், அந்த  காரணத்துக்காகவே ஆங்காங்கே சலசலப்பையும் உருவாக்கியவதாகவும் இருந்திருக்கக்கூடும்.

இன்றைக்கு மாய எதார்த்த கதை உலகம் வெகுவாக விரிவடைந்துவிட்டது. அவற்றில் எனக்கு பிடித்தமானவை பெரும்பாலும் கணிதம் மற்றும் இயற்பியல் சார்ந்தவைகள். உதாரணமாக flatland. புதுமைப்பித்தனின் காஞ்சனையை இப்போது வாசிக்குங்கால் இன்றைக்கு முதிர்ச்சியுடன் எழுதப்படும் மாய எதார்த்த கதைகளின் வடிவத்துக்கு இந்த சிறுகதையின் வடிவம் துல்லியமாய் ஒத்திருப்பது ஆச்சர்யம்.

ஆயினும் புதுமைப்பித்தன் கணித சிறுகதை ஏதேனும் எழுதியிருக்கிறாரா என்று தேடிப்பார்க்கிறேன். ஒன்றும் சிக்கவில்லை. அதற்கு அவரை குறை சொல்ல இயலாது. ஏனெனில் கணிதம் இப்போது போல் அப்போது அத்தனை முதிர்ந்த நிலையில் இல்லை. நியாயமாக இந்த வகைமையை முயற்சித்திருக்க வேண்டியது சுஜாதா தான். ஆனால் அவரும் இந்த வகைமையை ஏனோ தொடவில்லை.

புதுமைப்பித்தனோ, சுஜாதாவோ இந்த காலகட்டத்தில் இல்லாதது எனக்குத்தான் இழப்பு. அவர்கள் உயிருடன் இருந்திருந்தால்,  நேரில் சந்திக்கையில் எனது 'உங்கள் எண் என்ன?' நாவலுக்கு ஒரு 'அட!' எனக்கு கிடைத்திருக்கலாம்.

புதுமைப்பித்தனின் 'செல்லம்மாள்'

புதுமைப்பித்தனின் 'செல்லம்மாள்'


செல்லம்மாள் பிரமநாயகம் பிள்ளையின் மனைவி.

பிரம நாயகம் பிள்ளை வேலை செய்யும் நிறுவனத்தின் முதலாளி அவருக்கு சம்பளத்தை அளந்து தான் தருகிறார். இந்த நிலையில் செல்லம்மாளுக்கு உடல் சுகமில்லாது போகிறது. இந்த சொற்ப சம்பளத்தில் பிரம நாயகம் பிள்ளையால் முழுமையாக பசியாறிக்கொள்ளவோ, முழுமையாக செல்லம்மாளின் வியாதியை குணப்படுத்தவோ முடியவில்லை.

வியாதி முற்றிக்கொண்டே போகிறது. இதனிடையே செல்லம்மாளின் வியாதியை குணப்படுத்தவும், அவளுக்கு போதுமான உணவை தந்திடவும், முதலாளியும் போதிய ஊதியம் கேட்க, தொடர்ச்சியாக இழுத்தடிக்கப்பட்டு , இறுதியில் ஒரு நாள் போதுமான பணம் கிடைக்கையில் செல்லம்மாள் நோய் முற்றி இறந்துவிடுகிறார். பிரம நாயகம் பிள்ளை முதலாளியிடமிருந்து கிடைத்த பணத்தில் செல்லம்மாளின் மரணம் குறித்து தந்தி அடிப்பதில் முடிகிறது சிறுகதை.

தமிழில் மிக முக்கியமான சிறுகதை என்று அடையாளப்படுத்தப்படும் சிறுகதைகளில் ஒன்று புதுமைப்பித்தனின் செல்லம்மாள்.

இன்றைக்கும் இதுதான் நிலை என்பதில் இந்த சிறுகதையின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளலாம். ஒயிட் காலர் பணிகளை விட்டுவிடலாம். அதெல்லாம் சொற்பமே. முதலாளி - தொழிலாளி உறவில் வெள்ளைக்காகிதத்தில் முத்திரை இட்டுத்தரப்படாத ஊதியம் தரப்படுகிற பணியிடங்களில் இன்றைக்கும் இதுதான் நிலைமை. கற்பனைக்கும் எட்டாத பணிகள். அங்காடித்தெரு போன்ற படங்களில் காண்பதெல்லாம் மிக மிக சொற்பம்.

முழுமையாக முதலாளிகளை குறை சொல்வதற்கில்லை என்பது என் வாதம். தொழிலாளி என்றொருவன் இல்லாவிட்டால் முதலாளி என்றொருவன் எப்படி உருவாக முடியும்? பார்ப்பது பத்தாயிரம் சம்பளத்தில் அரசாங்க உத்தியோகம் , ஆனால் நான்கு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தலைவர்களை பார்த்திருக்கிறேன். எந்த தைரியத்தில்? இதெல்லாம் விழிப்புணர்வு மிகுந்த இந்த கால கட்டத்திலும் நடக்கிறதுதான்.

ஐடியிலும் இதே நிலை. வாங்குகிற சம்பளம் என்பதாயிரம். அதில் நாற்பதாயிரத்துக்கு அபார்ட்மென்ட். மேற்கொண்டு எட்டாயிரம் இண்ஸ்டால்மென்டில் ஒரு சின்ன கார். மீதமுள்ள முப்பது சொச்ச ஆயிரங்களில் குடும்பம். இதில் ஸ்திரத்தன்மையற்ற இயல்புடையது தனியார்  நிறுவன வேலை. இவர்களுக்கெல்லாம் குருட்டுத்தனமாக பெண் கொடுத்து எடுத்து திருமணங்களும் செய்துகொள்கிறார்கள். திருமணம் செய்தால் அடுத்தது பிள்ளைகள் தானே. அப்படியானால் செலவுகள் மிகுக்கத்தானே செய்யும். செலவுகளை எதிர்கொள்ள இரண்டு பேருக்கும் வேலை. இப்படியாக செல்லம்மாள் சிறுகதை முக்கியத்துவம் பெறுகிறது என்றால் மிகை இல்லை.

இந்த லட்சணத்தில் பத்து வருட அனுபவம் பெற்றுவிட்டால் ஐடியில் தலைக்கு மேல் கத்தி தான். அதனால் உயிரைக்கொடுத்து வேலை பார்க்கிறார்கள். சில  சமயங்களில் நிஜமாகவே உயிரை கொடுத்துவிடுவதுதான் துரதிருஷ்டவசமானது. ஒரு பக்கம் ஜனத்தொகையை கட்டுக்கடங்காமல் பெறுக்குகிறோம். மறுபக்கம் திட்டமிடுவதே இல்லை. இப்படி இருந்தால் புதுமைப்பித்தனின் செல்லம்மாள் முக்கியத்துவம் பெறாமல் என்ன செய்யும்?

இந்த பின்னணியில் ஒரு சிறுகதை அது எழுதப்பட்ட காலகட்டத்தையும் தாண்டி  நிற்பதன், வாசிக்கப்படுவதன் உள்ளர்த்தங்களை புரிந்துகொள்ள முடியும் என்றே கருதுகிறேன். செல்லம்மாள் ஒரு நல்ல உதாரணம்.