என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Sunday 19 November 2017

உங்கள் எண் என்ன? – தமிழில் முதல் கணிதப்புனைவு நாவல்

உங்கள் எண் என்ன? – தமிழில் முதல் கணிதப்புனைவு நாவல்

அருணா சுப்ரமணியன்

இவ்வுலகில் அனைவரையும் ஈர்க்கும் ஒரு விஷயம் உண்டென்றால் அது காதல் என்று சொல்லிவிடலாம். ஆனால், கணிதம் என்பதோ பலருக்கும் ஒரு கசப்பு மருந்தை போன்றது தான். இதற்குக் காரணம் கணிதம் என்பது இதுகாறும் கண்டுபிடிப்புகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும், தத்துவக் கோட்பாடுகளுக்கும் ஆதரவாகத் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. எண்கள், சூத்திரங்கள், தேற்றங்கள், சமன்பாடுகள் பெரிதும் கல்வியில் சிறக்க மட்டுமே பயன்படுகின்றன. தினசரி வாழ்க்கையில் உணர்ந்து பயன்படுத்தப்படுவதில்லை. முரண் யாதெனில் நம் வாழ்கையைப் பெரிதும் வழிநடத்துபவை எண்களே!!
மனித வாழ்வில் மிக முக்கியப் பங்கு வகிப்பது ஆண் -பெண் உறவு . அதுவே இன்று நிலவும் பல பிரிச்சனைகளுக்கும் மூலம்.நவீன உலகின் பல சமூகச் சிக்கல்கள் நேரிடையாகவோ மறைமுகமாவாகவோ இந்த உறவுச் சிக்கல்களுடன் தொடர்புடையவை. நவீனத்துவம் மனித உறவுகளைக் கவலைக்கிடமான முறையில் பாதித்துள்ளது என்பதை மறுக்க முடியாது.
இதில் சுவாரசியம் என்னவென்றால் “உங்கள் எண் என்ன?” என்னும் நாவல் காதலையும் கணிதத்தையும் இணைத்து எழுதப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாது, காதலினால் ஏற்படும் சில சிக்கல்களுக்குக் கணிதம் மூலம் தீர்வையும் முன் வைக்கிறது.
உறவுகளில் மனிதனின் விருப்பங்கள் மற்றும் தேர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒரு கணித மாதிரியை வடிவமைப்பது என்பது ஓர் அசாத்திய சவால். எழுத்தாளர் ராம்பிரசாத் இத்தனித்துவமான பணியினை மேற்கொண்டு சிறப்பான முறையில் தலைசிறந்த ஒரு படைப்பை நமக்கு அளித்துள்ளார். நாவலின் நோக்கம் ஏற்புடைய நல்ல மனித உறவுகளை ஏற்படுத்தி அதன்மூலம் மனித இனத்தின் சுற்றுசூழலில் நல்லதொரு சமநிலையைப் பாதுகாப்பது. இந்நோக்கம் மிகவும் பாராட்டத்தக்கது. மேலும், நாளும் உறவுச்சிக்கல்கள் வளர்ந்து வரும் இன்றைய நவீன உலகிற்கு மிகவும் பொருந்தக்கூடிய தேவையான ஒன்று. மனித உறவுகளை எண்களின் வடிவத்தில் விளக்கி அதன் வழி சமூகச் சிக்கல்களுக்குத் தீர்வாக ஒரு கணித மாதிரியை முன்மொழிவது இந்நாவலின் சிறப்பம்சம்.
இது சாத்தியமா? வாழ்க்கை என்பதே நிச்சயமற்றது. நமது முடிவுகளின் விளைவுகளைக் கட்டுப்படுத்தும் சக்தி நம்மிடம் உள்ளதா. உதாரணமாக வாழ்க்கைத்துணை தேர்ந்தெடுத்தல்!! நம் வாழ்க்கையின் மிக முக்கிய முடிவு. ஒரு திருமணத்தின் விளைவுகளை நம்மால் முன்கூட்டியே கணிக்க முடியுமா? இந்நாவல் எண்களின் மூலம் திருப்திகரமான, தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளும் ஒரு பதிலையே தருகின்றது. இத்தகைய சவாலை வாசகர்கள் தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்ளும் ஒரு அற்புதமான கதையின் வழி நடத்திக்காட்டியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.
கதை சிறந்த முறையில் சொல்லப்பட்டுள்ளது. வாசகர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை அளிக்கும் என்பதில் யாதொரு ஐயம் இல்லை. இரு இளம் ஜோடிகளின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டுள்ளது இந்நூலில் சொல்லப்படும் கதை. இன்றைய காலத்தில் நாம் கடந்து வரும் சாதாரணக் கதையாகத் தான் தொடங்குகிறது. ஆனால் , இரு ஜோடிகளில் ஒரு ஆண் தனக்கு நேரும் துரோகத்திற்குத் தீர்வை தேடும் நிலையில் கதையின் தளம் வேறு கோணத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. நாவலின் இடையில் வரும் ஒரு கதாப்பாத்திரம் எண்களையும் சமன்பாடுகளையும் வாழ்க்கையின் அர்த்தங்களோடு பொருத்திக்காட்டுகிறது. கொலம்பஸ் என்று பெயர்சூட்டப்பட்ட இக்கதாபாத்திரம் கூறும் கருத்துக்கள் நமக்குத் திருப்திகரமாக நம்பும்படியானவையாகவே இருக்கின்றன.
இந்நாவல் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று. இதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் வெகுஜன மக்களைச் சென்று அடையும் ஒரு ஆக்கமாக வடிவம் பெற்றால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
நாவல் கிடைக்குமிடம்:
No-52-C,Basement, North Usman Road,
Near Panagal Park Flyover North End,
Thiyagaraya Nagar, Chennai,
Tamil Nadu 600017
Phone: 044 2815 6006
பி.கு : இந்நாவலை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து தந்துள்ளது மேலும் சிறப்பானது. ஆங்கில நாவல் கிண்டில் வடிவில் அமேசான் வலைத்தளத்தில் கீழ்கண்ட இணைப்பில் கிடைக்கின்றது.
https://www.amazon.com/When-wanderer-meets-pilgrim-Mathematical-ebook/dp/B0771XWLGS/ref=asap_bc?ie=UTF8
-அருணா சுப்ரமணியன்