என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday 16 September 2022

2022ன் ஸீரோ டிகிரி விருது பெற்ற தொகுப்பு குறித்து எழுத்தாளர் இரா.முருகன்

 



ஊரும் மனிதன் - சிறுகதை - வாசகசாலை

வாசகசாலை 56வது இதழில் எனது சிறுகதை 'ஊரும் மனிதன்' வெளியாகியிருக்கிறது. எனது சிறுகதையைத் தேர்வு செய்த வாசகசாலை ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். 

//..இரண்டு முற்றிலும் வெவ்வேறான, அதனதனிடத்தில் முழுமையடைந்த உடல்களை உருவாக்க இந்த இயற்கைக்கு ஒரு மிகச்சிறிய வேறுபாடு மட்டுமே தேவைப்படுகிறது. காலம், அந்த வேறுபாட்டைத் தன் இயல்புக்கேற்றவாறு,  விஸ்திகரிக்கின்றன. அந்த ஒரு சன்னமான வேறுபாடு காலத்தின் போக்கில் ஒரு முழுமையான உயிராக பின்னாளில் உருப்பெருகிறது. ஆனால் இந்த இயக்கத்தில் ஒன்றை கவனிக்கிறீர்களா? பருந்துகளுக்கு உணவாவது சிட்டுக்குருவிகளுக்கு உணவாவதில்லை. இது சொல்வது என்ன? எலிகளும், பருந்துகளும் இருக்கும் உலகில் புழுக்கள் இருந்தால் சிட்டுக்குருவிகளும் நிச்சயமாக இருக்கும் என்பது தான் அல்லவா? எலிகளும், பருந்துகளும், சிட்டுக்குருவிகளும் இருப்பதே புழுக்கள் இருப்பதற்கான நிரூபணம் என்றாகிறது அல்லவா?...//

சிறுகதையை வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும்படி வாசக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். 

https://www.vasagasalai.com/oorum-manithan-sirukathai-ramprasath/





Monday 12 September 2022

முக நூல் அழைப்புகளும், பாதுகாப்பின்மையும்

 முக நூல் அழைப்புகளும், பாதுகாப்பின்மையும்

*************************************************************

இது குறித்து எழுதவேண்டுமா என்று நினைத்திருந்தேன். இதோடு அழைப்புகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கங்களை எட்டிவிட்டதால் இது குறித்து ஒரு விளக்கம் தர வேண்டிய உந்துதல் வந்துவிட்டது. அவமதிப்பு செய்துவிட்டதாக யாரும் நினைத்துக்கொள்ளக் கூடாதல்லவா?

இரண்டு நாட்களுக்கு முன் வந்த அழைப்பு இது. யார் என்றே தெரியவில்லை. அவருடைய முகப்பக்கம் போனால், வெறும் forward கள். முக நூல் ஐடி பெண் பெயரில் இருக்கிறது என்பதற்காக அழைத்தவரது பாலினம் பெண் என்று எடுத்துக்கொள்ள முடியாதல்லவா? அப்படியே எடுத்துக்கொண்டாலும் அறிமுகம் இல்லாமல் நேரடி அழைப்பு சரியாக இருக்காதல்லவா?




அழைத்த அத்தனை ஐடிக்களும் பெண் பெயர்களில் தான் இருக்கிறது. சொல்லி வைத்தாற்போல் ஒரே விதமாக இருக்கிறது அவர்களது முகப்பக்கம்: இன்னாரென்று அடையாளப்படுத்த முடியாத வகைக்கு. என் வாசகர்களில் யாரும் இவ்விதமான சம்பாஷனைகளுக்கு பழகாதவர்கள் என்பது என் அவதானம். ஆயினும் அழைப்பவர் விஷமத்தனமாக அழைக்கிறார் என்றும் கணிக்க முடியவில்லை. ஏனெனில், ஒரு முறை அழைத்தவர், உள்பெட்டியில், தொடர்ந்து அறிவியல் சார்ந்த கேள்விகளையே கேட்டுக்கொண்டிருந்தார். சில நேரங்கள் கேட்கக் கடினமான கேள்விகளை வாய்ஸ் ரெக்கார்டு செய்து அனுப்புவார். அதில் அசலாக பெண் குரல் கேட்டிருப்பதால், அழைப்பவர் எல்லோரும் fake id என்றும் எடுத்துக்கொள்ள முடியவில்லை.

ஆனால் அப்படித் தொடர்ந்து கேட்டவர் எக்காரணத்தினாலோ, எவ்வித அடையாளமும் காட்டாமலே இருந்தார். ஆனால் கேள்விகள் தொடர்ந்தபடியே இருந்தன. ஒருகட்டத்தில் எனக்கே insecurity ஏற்பட்டு விட்டது. யாரென்றே தெரியவில்லை. நான் சொல்லும் தகவல்களை அந்தப் பக்கம் இருந்துகொண்டு யார் எவ்விதம் பயன்படுத்திக்கொள்வார் என்பது தெரியாது. ஒவ்வொரு முறை பதில் சொல்கையிலும் அந்தப் பக்கம் அமர்ந்து யாரோ ஒருவர் notes எடுத்துக்கொள்வது போலவும் தோன்றும். எதற்கு வம்பு என்று ஒரு கட்டத்துக்கு மேல் பதிலே சொல்வதை நிறுத்திவிட்டேன்.

இன்னொருவரும் பெண் தான் என்பது அவருடைய வாய்ஸ் மெஸேஜில் தெரிந்தது. தொடர்ந்து கவிதைகள் குறித்துக் கேள்விகள். ஆனால் தான் யாரென்று அடையாளப்படுத்திக்கொள்ளவே இல்லை. ஒருகட்டத்தில் எனக்கே insecurity ஏற்பட்டு அதையும் கைவிட்டுவிட்டேன். இப்போது அந்த முகப்பக்கமே இல்லை. இதை வைத்து நான் என்ன புரிந்துகொள்வது?

இப்படி அனாமதேயமாக கேள்விகள் கேட்க விரும்புகிறார்கள் என்பது புரிந்து குபூல் ஐடி உருவாக்க வேண்டி வந்தது.

என்னிடம் உள்பெட்டியில் அனேகம் பேர் அனேகம் விஷயங்களைப் பகிர்கிறார்கள். அவர்களில் பலர் பெண்களே. சிலர் தொடர்ந்து பற்பல நூலக்ள் குறித்து எழுதுகிறீர்கள். சிலர், ஓடிடி திரைப்படங்களின் லிங்க் அனுப்பி கருத்துக் கேட்கிறீர்கள். சிலர் வேலை வாய்ப்பு குறித்த தகவல்கள் கேட்கிறீர்கள். சிலர் தங்கள் பிரச்சனைகளைப் பகிர்ந்து தீர்வு அல்லது ஒபினியன் கேட்கிறீர்கள். வேலை வாய்ப்பு தேடி, மேற்படிப்பு படிப்பது குறித்து, வாழ்வில் அடுத்தக் கட்டம் நகர்தல் குறித்து இப்படி பற்பல கருத்துப்பகிர்வுகள் என் உள்பெட்டியில் நடக்கிறது. அவர்களெல்லாம் இப்படி எல்லாவற்றையும் மூடி மறைத்துக் கேட்பதில்லை. சொந்த வாழ்க்கையில் எழும் பிரச்சனைகள் குறித்துக் கூட சிலர் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். (அவர்களின் தகவல்களை நானும் கர்ம சிரத்தையாக ரகசியமாகவே between the two of us என்கிற ரீதியில் அணுகுகிறேன்). இவர்களுக்கெல்லாம் இல்லாத insecurity உங்களுக்கு இருப்பதாக நீங்கள் நினைப்பது உங்கள் தனிப்பட்ட உரிமையாக இருக்கலாம்.

Insecurity பொதுவானது. அது எனக்கும் இருக்கிறது. முக நூலில், சமூக நலன் என்ற அனுமானத்தில் எதை எதையோ எழுதுகிறோம். எல்லாமும், வாசகர்களுக்குச் சர்க்கரையாக இனிக்குமென்று நம்புவதற்கில்லை என்பதை நான் அறிந்தே வைத்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால், நாம் என்ன எழுதினாலும், அதை பாதகமாக நினைப்பவர்கள் தான் எண்ணிக்கையில் அதிகம் இருப்பார்கள் என்கிற நிதர்சனமும் அறிந்தே வைத்திருக்கிறேன். அதனாலேயே முக நூலில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கையாள வேண்டி இருக்கிறது. பல சமயங்களில் ஏதெனும் எழுதத் தோன்றினாலும், இதையெல்லாம் யோசித்து எழுதாமல் விடுவது தான் அதிகம். எழுதும் பதிவுகள் எல்லாம், இப்படி எழுதாமல் விடுவதிலிருந்து தப்பிப் பிழைத்தவைகளே.

ஆதலால், உங்களைப் போலத்தான் நானும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நேரடி அழைப்பை நீங்கள் தவிர்ப்பீர்கள் என்றால், நானும் எவ்விதத்திலும் குறைந்தவன் அல்ல. நீங்கள் தவிர்க்க நினைக்கும் ஒன்றைத் தவிர்க்க எனக்கும் உரிமை இருக்கிறது. அது யாராக இருந்தாலும் சரி, அறிமுகம் இல்லையெனில் நேரடி அழைப்பு உதவாது. அறிமுகம் செய்துகொள்ளுங்கள். முதலில் உள்பெட்டியில் எது குறித்துப் பேச வேண்டும் என்பதைத் தெரிவியுங்கள். ஏற்புடையதாக இருப்பின் பேசலாம்.

ஏதெனும் தவறாகச் சொல்லியிருந்தால் மன்னிக்கவும். புரிதலுக்கு நன்றிகள்.

Thursday 8 September 2022

புராதன ஏலியன்கள், 220284 - நாவல் நூல்கள் குறித்த தகவல்

 'புராதன ஏலியன்கள்' நூல் வெளியீடு குறித்த பதிவில் ஒன்றைக் குறிப்பிட மறந்துவிட்டேன்..

தொகுப்பில், வேறு எங்கும் வெளியாகாத சிறுகதையான 'ராதனும், ஆவணனும்' சிறுகதையும், கதம்பம் சிறுகதைப் போட்டியில் பரிசுக்குரிய சிறுகதையாகத் தேர்வு செய்யப்பட்ட 'எப்போதும் பெண்' சிறுகதையும் இடம்பெற்றிருக்கின்றன.
நூல் சென்னையில், பின் வரும் முகவரியில் கிடைக்கும்.
New Book Lands
52-c, Basement, North Usman Road,
TANISHQ, T.Nagar, Chennai - 600017
அமெரிக்காவில், எதிர்வரும் October 8ல் அட்லாண்டா தமிழ் நூலகம் நடத்தும் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.
முகவரி:

Hightower Trail Middle School
3905, Post Oak Tritt Rd,
Marietta, GA, 30062
சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒரு சிறுகதையை வெள்ளோட்டமாக இங்கே தருகிறேன்.

Friday 2 September 2022

புராதன ஏலியன்கள் - சிறுகதைத் தொகுப்பு

புராதன ஏலியன்கள் - சிறுகதைத் தொகுப்பு


இன்றைய தேதியில், அறிவியல் புனைவுகள் எழுதுவதில் உள்ள சிக்கல் என்னவென்றால், வாசிக்க வாசகர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கமாட்டார்கள் என்பதுதான். சுஜாதா காலத்தில் அறிவியலில் பெரிய வளர்ச்சி இருக்கவில்லை. அறிவியல் உலகமே குழந்தைமையில் இருந்த கால கட்டம் அது. ஆதலால் அப்போது எழுதப்பட்ட அறிபுனைகளை எல்லோராலும் எளிதாக வாசித்துப் புரிந்துகொள்ள முடிந்தது. 

இன்று புழக்கத்தில் இருக்கும் நவீன அறிவியல் அப்படி அல்ல. அது பெரும்பான்மைக்கு புரிந்துகொள்ள மிகவும் சிக்கலானது, சுவீகரிக்க மிகவும் கடினமான கோட்பாடுகளைக் கொண்டது. இந்தப் பின்னணியிலேயே என் ஒவ்வொரு சிறுகதைக்கும் தொடர்ந்து பின்னூட்டமிடும், கருத்துக்கள் பகிரும் வாசகர்களை நான் அணுகுகிறேன், புரிந்துகொள்கிறேன். இவர்களை சராசரி தகவல்களை வைத்தோ, சராசரி சிந்தனைகளை வைத்தோ அல்லது தர்க்கங்களை வைத்தோ பூர்த்தி செய்துவிட முடியாது; சராசரி வாசிப்பிற்கும் மேலதிகமான அம்சங்களை இவர்கள் கோருபவர்களாக இருக்கிறார்கள். வழமையைத் தாண்டிச் செல்பவர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.  





இவர்கள் இருக்கும் தைரியத்திலேயே 2020 முதல் இப்போது வரை எழுதிய சிறுகதைகளை என்னால் எழுத முடிந்தது எனலாம். இந்தச் சிறுகதைகள் வழியிலான அறிவுத்தேடல்களுக்கும், வாத விவாதங்களுக்கும் இவர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விழைகிறேன். 

வாசகசாலை, சொல்வனம், பதாகை, கனலி போன்ற இதழ்களில் வெளியான என் சிறுகதைகளின் இரண்டாவது தொகுப்பே 'புராதன ஏலியன்கள்'. அறிவியல் புனைவுகள் என்னும் பரந்து விரிந்த வகைமையின் விளிம்புகளை விஸ்தரிப்பதில் இத்தொகுப்பிற்கும் பங்கிருக்கும் என்று நம்புகிறேன்.


நூல் சென்னையில், பின் வரும் முகவரியில் கிடைக்கும்.

New Book Lands

52-c, Basement, North Usman Road,

TANISHQ, T.Nagar, Chennai - 600017


அமெரிக்காவில், எதிர்வரும் October 8ல் அட்லாண்டா தமிழ் நூலகம் நடத்தும் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.

முகவரி: 

Hightower Trail Middle School
3905, Post Oak Tritt Rd,
Marietta, GA, 30062

220284 - நாவல்

 220284- நாவல்

********************


2017ல் வெளியான கணித நாவல் 'உங்கள் எண் என்ன?'. வெளியான போதே 'வேற பெயர் வச்சிருக்கலாம்' என்ற கருத்து எழுந்தது. மனித உறவுகள் நிலையற்ற 'விருப்பங்களால்' உருவாவது என்ற எண்ணம் கொண்டவர்கள்

நாவலை வாசித்துவிட்டு அதில் வரும் எண்களை 'விருப்பங்கள்' என்றே எடுத்துக்கொண்டு குழம்பினார்கள். விருப்பங்களை எண்களாக்குவது சரியாக வருமா என்கிற கேள்வியிலேயே அவர்களுக்கு நாவலில் பிடிமானம் கிடைக்காமல் துவக்கத்திலேயே கைவிட்டு விட்டார்கள். இத்தனைக்கும் 'அர்த்தங்கள்' என்ற வார்த்தையையே நான் எண்கள் குறித்துக் குறிப்பிடுகையில் பயன்படுத்தியிருந்தேன்.






நாவலை ஓரளவிற்கு அதன் அசல் நோக்கங்களுடன் அணுகியவர்கள் அதில் வரும் எண்களை அர்த்தங்கள் என்று எடுத்துக்கொண்டவர்களே. நாவலை உள்வாங்காதது வாசகர் பிழை என்று நான் சொல்ல வரவில்லை. நான் சொல்ல விழைவது என்னவென்றால், மனித உறவுகள் எவ்விதம் உருவாகிறது, வளர்கிறது, தேய்கிறது என்பது குறித்த நம் பார்வைகள் குறித்துத்தான். 'பாஸ்..மனுஷ மனம் குரங்கு மாதிரி பாஸ்.. அதையெல்லாம் track பண்ண நினைச்சா.......' என்றுவிட்டு நமட்டுச் சிரிப்பு சிரித்தவர்களே அனேகம். நாவலை எழுதுகையில் இதை நான் எதிர்பார்க்கவில்லை தான். மனித உறவுகளை நாம் அணுகும் விதம் வேறு, மற்றவர்கள் அணுகும் விதம் வேறு என்கிற நிதர்சனம் உறைத்த தருணங்கள் அவைகள்.

இக்குழப்பங்களை விளக்க, நாவலுக்கு இன்னொரு வெர்ஷன் தேவைப்பட்டது. பெயரை மாற்ற இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்கிறேன்.

'220284' என்று புதிய வெர்ஷனுக்கு பெயர் வைத்திருக்கிறேன்.

இந்த நாவல் நூலின் முக்கியத்துவம் பற்றி இதுகாறும் சொன்னதைக் காட்டிலும் புதிதாக ஏதேனும் சொல்வதானால் பின்வருமாறு சொல்லலாம்...

இன்றிருக்கும் காலகட்டம் boundary conditions ல் சேறும் என்பது என் அவதானம். பெண்ணடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு பெண்கள் பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பிலும், சமூக அரங்கிலும் மேலெழும்பி வேகமாக வருகிறார்கள். இது சாதகம். எல்லா சாதகங்களுக்கும் ஒரு பாதகமான அம்சம் இருக்கிறது. அது என்னவென்றால், இந்த மேலெழும்புதலில் நடுவு நிலை தவறிவிடுகிறது. ஆண் பெண் சமத்துவத்தை எங்கே நிறுவுவது என்கிற குழப்பம் மிகுக்கிறது. Male standards குறித்து யாரேனும் பேசினால், அதைப் பிற்போக்குத்தனமாக, ஆணாதிக்கத்தனமாகத் பார்க்கும் பார்வை வலுக்கிறது.

பெண்ணடிமைத்தனம் மலிந்து இருந்தபோது எவ்விதம் பெண்கள் பாதிக்கப்பட்டார்களோ, அதற்கு நிகராக, இப்போது ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள். இரு பாலரில் யாரோ ஒருவர் எக்காலமும் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பது நோக்கம் இல்லை. நோக்கம் என்னவென்றால், இருபாலரிடையிலும் சமத்துவம் ஓங்க வேண்டும். அப்படியானால், நடுவு நிலை என்ன என்பதைத் தெளிவாக வரையறுக்க வேண்டும். அந்தக் கோடு தெளிவாக வரையப்பட வேண்டும். இந்த அடிப்படையில் rejection களை இருபாலருமே ஆரோக்கியமான வழிகளில் கையாளப் பழக வேண்டும். (இதனால் பாதிக்கப்படுவதும் பெண்களாகத்தான் இருக்கிறார்கள் என்கிற நுண்ணிய பார்வை இன்னும் பரவலாக சென்றடையவில்லை).

இவற்றைச் சாத்தியப்படுத்தும் ஒரு கருவியாக இந்த நாவல் நூல் விளங்கும் என்று சொல்லலாம்.

இந்த நூலை நூலாக அங்கீகரிக்கவும் கூட சிலர் தயங்குவதன் பிரதான காரணமாக, மிக அதிகமாக விவாகரத்துக்களை நூல் முழுவதும் பரிந்துரைப்பதாக அவர்கள் கருதுவதை நான் அறிந்தே இருக்கிறேன் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ( மேற் சொன்ன அணுகுமுறை வேறுபாடுகளை இதர காரணங்களாகச் சொல்லலாம்).

ஒரு நவீன எழுத்து, ஒரு சமூகப் பிரச்சனை மீதான வெகுவான மாற்றுப் பார்வை கொண்ட ஓர் எழுத்து என்பது வெகுஜனத்தின் ஏற்பை பெறுவதில் முதலில் தோல்வி அடையவே சாத்தியம் அதிகம் என்கிற அடிப்படையில், இவ்விமர்சனங்களைக் கடக்கவே விரும்புகிறேன். இந்த நாவல் நூல் விவரிக்கும் பார்வை, ஆண்-பெண் உறவுகள் மீது நமக்கு இன்றியமையாத அளவில் இருக்க வேண்டிய பார்வை என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை. அதை முன்மொழிந்து என் கடமையை நான் ஆற்றியாகிவிட்டது என்பது என் வாதம். சுவீகரித்துக் கொள்வதா இல்லையா என்பதை நான் வாசகர்களிடமே விட விரும்புகிறேன். என்னளவில் இந்த நூல் என்னுடைய Best என்று எப்போதும் என்னால் ஆணித்தரமாகச் சொல்ல முடியும்.

ஒரு linear கதையில், மனித உறவு நிலைகளின் சிக்கல்களை எண்கள் வழி non-linear ஆகப் பேசியிருப்பதற்கு காரணங்களும், நிர்பந்தங்களும் உள்ளன. தக்க வைக்க வேண்டிய சமூகக் கட்டுப்பாடுகளையும், மதிப்பீடுகளையும் குறிப்புணர்த்தும் அதே வேளையில், நடுவு நிலையைத் தெளிவாக வரையறுக்கும் ஒரு ஆக்கம் non-linear ஆக இருக்கவே அதிகபட்ச சாத்தியம் இருக்கிறது என்பது என் வாதம்.

அமெரிக்காவில் இருப்பதால் நூல் வெளியீட்டு விழா நடத்த பிராப்தம் இல்லை.

நூல் சென்னையில், பின் வரும் முகவரியில் கிடைக்கும்.
New Book Lands
52-c, Basement, North Usman Road,
TANISHQ, T.Nagar, Chennai - 600017


அமெரிக்காவில், எதிர்வரும் October 8ல் அட்லாண்டா தமிழ் நூலகம் நடத்தும் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.
முகவரி:

Hightower Trail Middle School
3905, Post Oak Tritt Rd,
Marietta, GA, 30062