என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday 31 July 2020

பொறி - சிறுகதை - பதாகை ஆகஸ்ட் 2020



பதாகை ஆகஸ்ட் 2020 இதழில் வெளியாகியிருக்கும் எனது அறிபுனை சிறுகதையிலிருந்து....
//“உண்மையில் நீ குறிக்கும் அந்த அசலான வாழ்வும் கூட ஒரு வகைக் காலப்பொறிதான் என்பதை உணர உனக்கு இன்னும் என்னவெல்லாம் தேவைப்படும்? என்ன இருந்தால் நீ அதைப் புரிந்துகொள்வாய்? பிறந்து, வளர்ந்து, அடுத்தவனுக்கு ஏதோவோர் வகையில் பயன்பட்டு, அதன் மூலம் பொருள் ஈட்டி, பிள்ளை குட்டி பெற்று, அவர்கள் வளர துணை நிற்பதிலேயே இளமையை வீணாக்கி, முதுமை அடைந்து, இறந்து, மீண்டும் பிறந்து, வளர்ந்து………. பிறப்பை, இந்த பிரதேசத்துள் நுழைவதாயும், இறப்பை காலப்பொறியின் இறுதிக்கட்டமென்றும் எடுத்துக்கொண்டால் மானுட வாழ்வும் இந்தப் பிரதேச வாழ்வும் ஒன்று தான். மானுட வாழ்விலும் நீ இதையே தான் நிகழ்த்துகிறாய். அறுபது வருட வாழ்வை, வெவ்வேறு செயல்பாடுகளால் இட்டு நிரப்பிக்கொள்கிறாய். சிரமேற்கொண்டு உனக்கு நெருக்கமான அர்த்தங்களைக் கொண்டு நிரப்பிக்கொள்ள முயல்கிறாய். ...//
எனது சிறுகதையைத் தேர்வு செய்து வெளியிட்ட பதாகை ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்...
சிறுகதையை பதாகை இதழில் வாசிக்கப் பின்வரும் சுட்டியை சொடுக்கவும்:

Thursday 30 July 2020

(என்னமோ சொல்லணும்னு தோணுச்சு) - 2

நாம் எதை வேண்டுமானாலும் வாசிக்கலாம். வாசித்ததை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். நம்முன் வைக்கப்பட்டதை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பது தான் நம்மை, நம் பாதையை, நம் வளர்ச்சியை, நம் சமூக இடத்தை தீர்மானிக்கப்போகிறது. அதீதமாக வாசித்துவிட்டு இருக்கும் இடத்திலிருந்து நான்கைந்து படிகள் கீழே செல்பவர்களும் இருக்கிறார்கள், இருக்கும் இடத்திலேயே இருப்பவர்களும் இருக்கிறார்கள், இருந்த இடத்திலிருந்து நான்கைந்து படிகள் மேலே செல்பவர்களும் இருக்கிறார்கள்.

(என்னமோ சொல்லணும்னு தோணுச்சு)

Sunday 26 July 2020

உங்கள் எண் என்ன - கேள்வி பதில்கள்

இப்போதுவரை கிட்டியிருக்கும் கேள்விகளும் அவைகளுக்கான பதில்களும் கீழே:
******************************************************


கேள்வி:
மனிதர்களின் மனம் நாளுக்கு நாள் மாறக்கூடியது.  மாறக்கூடியவைகளை எண்களாக்குவது சரியாக வருமா?

பதில்:
மாறக்கூடியவைகள் மட்டுமே நம் கண்ணுக்குத் தெரிவது, நாம் இன்னும் முதிர்வடையாததையே காட்டுகிறது. மாறாதவைகளும் இருக்கின்றன. நீங்கள் ஒரு introvert ஆக இருந்தால், இறுதி வரை introvert ஆகத்தான் இருப்பீர்கள். நீங்கள் ஒரு conservative ஆக இருந்தால் இறுதி வரை conservative ஆகத்தான் இருப்பீர்கள். நீங்கள் organized person ஆக இருந்தால் இறுதி வரை organized ஆகத்தான் இருப்பீர்கள். இந்தப் பண்புகள் வாழ்வின் இறுதி வரை மாறாதது. நாவல், இவைகளைத்தான் எண்களாக்க வேண்டும் என்கிறது. ஆகையால் தான், நாவலெங்கும் 'விருப்பங்கள்','தேர்வுகள்' என்ற வார்த்தைகளை அது பயன்படுத்துவதில்லை. மாறாக, அர்த்தங்கள் என்றே குறிக்கிறது. ஆங்கிலத்தில், essence என்பார்கள்.

**********************************************************


கேள்வி: 
பிற  நாவல்களில் வருவது போல் உறவுச்சிக்கல்களால் கதாபாத்திரங்கள் துய்க்கும் அவஸ்தை, வேதனை, துக்கங்கள், துன்பங்கள் குறித்த விரிவான விவரணைகள் ஏதும் உங்கள் நாவலில் இல்லையே?

பதில்:
விரும்பி யாரும் உறவுச் சிக்கலில் உழன்று வீழ்வதில்லை. எல்லாமே தெரியாமல் நடப்பதுதான். நீங்கள் சொல்லும் நாவல் உலகம், இப்படியாக வீழ்ந்த ஒருவனை, அவன் எப்படியெல்லாம் வீழ்ந்தான், எப்படியெல்லாம் அல்லலுற்றான் என்பதையெல்லாம் வெகு சிலவற்றில் மட்டும் நியாயமான பார்வையுடனும், பலவற்றில் அதீத கற்பனையுடனும் பல்வேறு கலை அம்சங்களை உள்ளடக்கி விவரிக்க முயல்கிறது. இக் கலைஆக்கங்களை எழுத ஆண்டு முழுவதும் 'வித்தியாசமான, இதுவரை கேட்டிராத' ஒரு கதைக்காக, அதாவது 'அல்லலுற்ற ஒருவனுக்காக' தேடி அலைந்து, அப்படி ஒருவன் சிக்கினால், அவன் 'கதையை' எப்படியேனும் தெரிந்துகொண்டு. பின் தனக்கிருக்கும் புரிதலை வைத்து அந்தக் கிசுகிசுவை கதையாக விஸ்தரிக்கவேண்டும். அவனது வீழ்ச்சியை, படைப்பானபிறகு, எல்லோரும் வாசித்து 'உச்சு கொட்டுகிறார்கள்'. இது, நம் போலவே இருந்த, விதியின் வசத்தால் வீழ நேர்ந்துவிட்ட ஒருவனை நாமே அவமரியாதை செய்வது என்று தோன்றுகிறது.

என் கேள்வி என்னவென்றால், ஒரு உறவுச்சிக்கலை புரிந்துகொள்ள, தி.ஜாவின் ஒரு "மோக முள்" போதாதா? வருடத்திற்கு பதினைந்து நாவல் தேவையா என்பதுதான்.

சாலையில் கடந்து செல்லும் பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் கூடத் தரவிடாமல் நம்மை கடந்து போக வைக்கும் விசை என்னவென்று  நினைக்கிறீர்கள்? அந்த ஒரு ரூபாயால் எந்தப் பிச்சைக்காரனின் வீழ்ச்சியையும் சரி செய்துவிடமுடியாது என்கிற கையாலாகாத தனம் தான். நமக்கு அவனை மேன்மையுறச்செய்திட எல்லா மனமும் இருக்கிறது. ஆனால், நம் யாரிடமும் எல்லா பிச்சியக்காரர்களையும் இல்லாமலாக்கும் பணவசதி இல்லை. நம்மால் தர முடிந்த அந்த ஒரு ரூபாய் அவனுக்கு எதற்காகவும் ஆகப் போவதில்லை. இந்த நிதர்சனம் தான் நம்மைக் கடந்து போக வைக்கிறது.

ஒரு வாழ்ந்து கெட்டவனிடம் நீங்கள் ஒரு ரூபாய் தந்தால் , அவனது பதில்,

"உன்னிடம் நான் பிச்சை கேட்டேனா? ஏதோ என் போறாத காலம். இப்படி நேர்ந்துவிட்டது. என்னால் என் கைகளை ஊன்றியே எழுந்து நிற்க முடியும். முடிந்தால், நான் எங்கே வீழ்ந்தேனோ அங்கே இன்னொருவன் வீழாதவாறு ஏதாவது செய். உன் உதவியை, முயற்சியை அதற்கு செலவிடு. மாறாக என் போன்ற ஒருவன் வாழ்வில் வழுக்கி விழும்வரை பொறுமையாக மெளனம் காத்து, அமைதியாக இருந்துவிட்டு, விழுந்தவுடன் ஒரு ரூபாயை தூக்கிக்கொண்டு வந்து, என்னைப் பிச்சைக்காரனாக்குவதன் மூலம் 'நான் வாழ்வில் மேன்மை நிலையில் இருக்கிறேன்' என்று நீயாக எண்ணிக்கொள்ள வகை செய்துகொள்ளாதே. அது போல் ஒரு கேவலம் வேறு இல்லை' என்பதாகத்தான் இருக்கும்.

என் நாவல் இந்த இடத்தைத்தான் தொட வேண்டும் என்று 2016ல் நான் எண்ணியதன் விளைவுதான் நீங்கள் குறிப்பிடும் 'விவரணைகள் ஏதும் இல்லாத தன்மை' ஆகும். "உங்கள் எண் என்ன?" நாவலின் நோக்கங்களும் ஒன்று, ஒருவன் எப்படி வீழ்ந்தான் என்று விவரிப்பதல்ல. அதன் நோக்கம், 'இனி ஒருவன் வீழாமல் இருக்க என்ன தேவை?" என்பதுதான்.


**********************************************************


கேள்வி: மனிதத் தேவைகளை, விருப்பங்களை எண்களில் சுருக்கி விட முடியுமா?

பதில்: இது தவறான அணுகுமுறை. அப்படியானால், சரியான அணுகுமுறை என்ன?

நீங்கள் ஒரு பெரிய வணிக வளாகம் செல்கிறீர்கள். அங்கே flour plan இல்லை. உங்களிடம் அரைமணி நேரம் தான் இருக்கிறது. Calvin Klein கடையில் ஒரு ஆடை வாங்க வேண்டும். எப்படி வாங்குவீர்கள்? அதற்கு முதற் கண் தேவை flour plan என்றாகிறது. அது இருந்தால் தான் கொடுக்கப்பட்ட அரை மணி நேரத்தில், வாங்க வேண்டியதை வாங்கிக்கொள்ள முடியும் என்றாகிறது அல்லவா?

அது போலத்தான் இந்த நாவலும். மனித உறவுகளில் ஒரு flour plan ஐ  நிறுவுவது தான் இந்த நூல்.

பூமியின் எந்தக் கலாச்சாரத்திலாவது, பதின்ம வயதை எட்டும் ஒரு ஆண்பிள்ளைக்கோ, பெண் பிள்ளைக்கோ

'இந்தாப்பா... மனித உறவுகளுக்கான அட்டவணை இதுதான். இதைப் படித்துக்கொள். மனித உறவுகளில் என்னென்ன பிரச்சனைகள் வர சாத்தியங்கள் இருக்கிறது? அது என்ன விதமான பிரச்சனைகளாக இருக்கலாம்? உனக்கு என்ன விதமான பிரச்சனை வருவதற்கு அதிகபட்ச சாத்தியங்கள் இருக்கிறது? அதை எப்படி வரும்முன்னே தற்காத்துக் கொள்வது? இதெல்லாம் இதுல கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு தடவை படிச்சிக்கோ'

என்று ஒரு புத்தகத்தை எடுத்து நீட்டுகிற அணுகுமுறை இருக்கிறதா?

இதுதான் கேள்வி. இந்தக் கேள்விக்கான பதில் தான் இந்த 'உங்கள் எண் என்ன?' என்ற இந்த நூல்.

நாவல், ஒரு பதின்ம வயதுப்பிள்ளையிடன் தரப்படவேண்டிய ஒரு குறிப்பேட்டுக்கென உருவாக்கப்பட்ட நாவல். கையேட்டின் நோக்கம், தெளிவடையச்செய்வது. உறவுகளின் சிக்கல்களை, அதனுள் சிக்கும்முன்னே படமாகக் காட்சிப்படுத்துவது.

******************************************************


கேள்வி: ஒரே விதமான எண்ணுள்ளவர்கள் தான் துணையாகச் சேர வேண்டும். இதைத்தானே இந்த நாவலில் சொல்ல வருகிறீர்கள்?

பதில்: இல்லை. முன்பே குறிப்பிட்டது போல், நாவலின் நோக்கங்களுள் ஒன்று, மனித உறவுகளை மேலாண்மை செய்ய, ஒழுங்குபடுத்த ஒரு கணித மாடலை உருவாக்குவது. தோழர் Kamaraj M Radhakrishnan தனது விமர்சனத்தில் பின்வரும் வரிகளால் குறிப்பிட்டது இதைத்தான்.

//இந்த நாவலின் அடிப்படை கணிதவியல் என்பது என்னுள்ளேகூட பலவருடங்களாக வடிவில்லா ரூபத்தில் அலைந்துகொண்டிருந்தது என்பேன். நண்பர்களின் குடும்ப/காதல் சிக்கல்களை ஏதோ ஒரு வகையில் வகைமைப்படுத்த திணறிக்கொண்டிருந்தேன்.//

நாவல், விவரிப்பது ஒரு floor plan ஐ தான். கிட்டத்தட்ட ஒரு blue print போல.
ஒரு பாரிய வணிக வளாகத்திற்குச் செல்கிறீர்கள். ரெஸ்ட்ரூம் எங்கிருக்கிறது, உணவகம் எங்கியிருக்கிறது, எங்கே மின்தூக்கி இருக்கிறது என்பதையெல்லாம் விவரிக்கும் ஒரு floor plan, அந்த வணிக வளாகத்தில் உங்கள் அனுபவத்தை சீராக்க உதவுகிறதல்லவா? அதைத்தான் நோக்கமாகக் கொள்கிறது இந்த நாவலில் விளக்கப்பட்டுள்ள கணித மாதிரி (Math Model). இப்படி இப்படித்தான் ஆணும் பெண்ணும் சேர வேண்டும் என்று சொல்லவில்லை. இப்படி இப்படி சேர்ந்தால் அதற்கு என்ன அர்த்தம் என்று அர்த்தங்களை முன் வைக்கிறது.

ஒரு blue print ஐ வைத்து எந்தப் பாடத்தைத் தவிர்த்தால் இழப்புகள் குறைவாக இருக்கும், எந்தப் பாடத்தை கட்டாயமாகத் தவிர்க்கக்கூடாது என்று ஒரு திட்டத்திற்கு நம்மால் வர முடிகிறதல்லவா? அது போல் ஒன்றைத்தான் இந்த  நாவல் நூல் விளக்குகிறது. யாரைத் தேர்வு செய்ய வேண்டும், யாரைத் தேர்வு செய்வது அனர்ந்தமாகிவிடலாம், தேர்வு செய்துவிட்டபிறகு ஓர் உறவை செப்பனிட என்ன செய்ய வேண்டும் என்று மனித உறவுகளை மேலாண்மை செய்ய வகை செய்யும் ஒரு Math Model ஐ இந்த நாவல் முன்வைக்கிறது எனலாம்.

******************************************************

கேள்வி: கணிசமானவர்கள், நாவலைப் பாதி படித்ததுடன் ஆர்வம் குன்றி வாசிப்பதைப் பாதியிலேயே கைவிட வாய்ப்பிருக்கிறது.

பதில்: இதற்கும் தோழர்  Kamaraj M Radhakrishnan தனது விமர்சனத்தில் பதிந்த ஒன்றையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

//உண்மையில் இந்தநாவல் ஒரு 25-30 வருடங்களுக்கு முன் வெளிவந்து பரவலாக வாசிக்கப்பட்டிருக்கவேண்டும். அபூர்வமாகத்தான் இதுபோன்ற நாவல் வெளிவரும். வாசகர்களின் உளவியலை பொதுவாக அசைத்துப்பார்க்கும் வகைமையில் இந்த நாவல் ஒரு புயலை ஏற்படுத்தியுள்ளது எனலாம். இதனை வாசித்து உள்ளுணர்ந்துகொள்வதற்கே ஓர் பக்குவமும் முதிர்ச்சியும் தேவைப்படும்.//

தோழர் Kamaraj M Radhakrishnan ந் இந்த விமர்சன வரிகளில் வார்த்தைக்கு வார்த்தை உடன்படுகிறேன்.
வெகு ஜனத்தின் பொதுவான உளவியலை அசைத்துப் பார்க்கும் எதுவும் அத்தனை எளிதில் ஆர்வத்தைத் தூண்டுவதில்லைதான். இந்த  நாவல் முன்வைப்பது ஒரு paradigm shift ஐ தான். வெகுஜன உளவியலோடு இந்த நாவலை அணுகினால், நீங்கள் சொல்வது நடக்க மிக அதிக வாய்ப்பிருக்கிறது.

வெகுஜன உளவியலை ஒதுக்கி வைத்துவிட்டு நாவல் முன்வைக்கும் அணுகுமுறைக்கான உளவியலைப் புரிந்துகொள்ள முயற்சிக்கின் இந்த விபத்து நேராது என்று நினைக்கிறேன்.

தோழர் Kamaraj M Radhakrishnan அவர்களின் விமர்சனம்:

https://ramprasathkavithaigal.blogspot.com/2020/07/kamaraj-m-radhakrishnan.html


******************************************************

கேள்வி: ஜோஸ்யத்தையும், எண் கணிதத்தையும் எதோ ஒரு வகையில் இந்த நாவல் நியாயப்படுத்துகிறதா? நாம் கண்டு பிடித்ததுதானே நம்பர்கள் எல்லாமும். திரும்பவும் இது ஒரு கணித அடிப்படையிலான ஜோதிட அல்லது யூக அடிப்படை விளையாட்டு தானே!


பதில்:
ஜோதிடத்தை இந்த நாவலின் கணிதவியலோடு ஒப்பிடுவது சரியான ஒப்பீடாக இருக்க முடியாது.
ஏனெனில் ஜோதிடம் பிறந்த நேரத்தை வைத்து எல்லாவற்றையும் judge செய்துவிடுகிறது. மேலும் அது, தத்துவார்த்த ரீதியில் அமைவதான judgement என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
"உங்கள் எண் என்ன?" நாவலின் கணிதவியல், கிட்டத்தட்ட பள்ளி , கல்லூரிகளில் வழக்கிலிருக்கும் மதிப்பெண்களை ஒத்தது. 8வது வரை ஃபெயிலான ஒருவர், திடீரென்று வெறித்தனமாக படித்து பத்தாவது வகுப்பில் 95 விழுக்காடு எடுத்தால், அவருடைய தகுதி உயர்ந்துவிடுகிறது. நாவலில் உள்ள எண்களும் அப்படித்தான். உங்கள் தகுதிகளை உயர்த்திக்கொள்ள, எண்களும் உயரும். தாழ்த்திக்கொள்ள எண்களும் தாழும்.

மனித உறவுகளுக்கு ஒரு Inference Engine போல் செயல்படுவதே இந்த நாவலில் உள்ள கணிதவியலின் நோக்கம்.

உதாரணமாக, வானிலை கணிப்புகளை மேற்கொள்ளும் வானியல் ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து பெறப்படம் தகவல்களை வைத்து அன்றைக்கு மழை வருமா வராதா என்று பொதுஜனத்தால் கணிக்க இயலாது. வானியல் தகவல்கள் பின்வருமாறு இருக்கும்

"main": {
    "pressure": 1016,
    "humidity": 93
  },
  "wind": {
    "speed": 0.47,
    "deg": 107.538
  },
  "clouds": {
    "all": 2
  },
  "dt": 1560350192,
  "sys": {
    "type": 3,
    "id": 2019346,
    "message": 0.0065,
    "country": "JP",
    "sunrise": 1560281377,
    "sunset": 1560333478
  },

இந்தத் தகவலை வைத்து ஒரு குறிப்பிட்ட நாளில் மழை வந்ததா, வெய்யில் அடித்ததா என்பதைச் சொல்ல, இது போன்ற தகவல்களைக் கையாள்வதில் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவரின் உதவி தேவை. அவர் எதை வைத்து, இந்தத் தகவல்களை உள்வாங்கி ஜீரணித்து, மழை வந்ததா இல்லையா என்று சொல்வாறோ, அது தான் Inference Engine எனப்படுவது.

மனித உறவுகளில் அப்படியான ஒரு Inference Engine ஆக, இந்த கணித நாவலில் வரும் கணிதவியலைப் பார்க்கலாம்.



உங்கள் எண் என்ன? - விமர்சனம் - Kamaraj M Radhakrishnan

எனது "உங்கள் எண் என்ன?" கணித நாவலுக்கு நண்பர் Kamaraj M Radhakrishnan அட்டகாசமான விமர்சனம் ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார்.

//இந்த நாவலின் அடிப்படை கணிதவியல் என்பது என்னுள்ளேகூட பலவருடங்களாக வடிவில்லா ரூபத்தில் அலைந்துகொண்டிருந்தது என்பேன். நண்பர்களின் குடும்ப/காதல் சிக்கல்களை ஏதோ ஒரு வகையில் வகைமைப்படுத்த திணறிக்கொண்டிருந்தேன்.//

சமீபத்தில் நாவலை வாசித்த எவரும் பதிவு செய்திடாத கோணம் இது. ஊன்றி வாசித்திருக்கிறார். மனித உறவுகளுக்கு எண்களால் ஆன சட்டக வடிவம் தர முடியுமா? இதுதான் இந்த நாவல் எடுத்துக்கொண்ட சவால். அதைக் கச்சிதமாக வாசகனின் கோணத்தில் பதிவு செய்திருக்கிறார். நண்பர் Kamaraj M Radhakrishnan க்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்..

உங்கள் பரிந்துரையை முழுவதுமாக ஏற்கிறேன் தோழர். நாவல் 'கணித நாவல் தான்' என்று அங்கீகரித்த Alex Kasman அவருடைய பட்டியலிலும் புதிய பெயரைச் சேர்க்க வேண்டும். அதற்கு புதிய பெயரில் நூலாக்க வேண்டும். இந்த நூலை இரண்டாம் பதிப்பாகப் பதிக்க எந்தப் பதிப்பகமாவது முன்வந்தால் செய்யலாமென்று இருக்கிறேன். பரிந்துரைக்கு எனது நன்றிகள்..


இனி விமர்சனம்:


இப்போது வாசித்து முடித்த நாவல் திரு. ராம்பிரசாத் அவர்களின் "உங்கள் எண் என்ன?'.

அட்டகாசமான நாவல். சமீபத்திய வாசிப்புகளில் பிரமிப்பை ஏற்படுத்தியது. முகப்பு அட்டையில் உள்ளதுபடி தமிழின் முதல் மேதமெடிகல் ஃபிக்ஷன் தான்.

உண்மையில் இந்தநாவல் ஒரு 25-30 வருடங்களுக்குமுன் வெளிவந்து பரவலாக வாசிக்கப்பட்டிருக்கவேண்டும். அபூர்வமாகத்தான் இதுபோன்ற நாவல் வெளிவரும். வாசகர்களின் உளவியலை பொதுவாக அசைத்துப்பார்க்கும் வகைமையில் இந்த நாவல் ஒரு புயலை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

இதனை வாசித்து உள்ளுணர்ந்துகொள்வதற்கே ஓர் பக்குவமும் முதிர்ச்சியும் தேவைப்படும்.

தம்பதியர்களுக்கிடையேயான புரிதல் , ஏக்கம், காதல், ஈகோ, காமம் , ஆசை, ஈர்ப்பு, எண்ணங்கள், பொறாமை, பழிவாங்கல் , சிந்தனைகள் போன்ற மனித உணர்வுகளுக்கும் கணிதத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா ?

ஆம். உள்ளது என்று ஆணித்தரமாக ராம் என்ற கதாபாத்திரத்தின் மூலம் நிறுவுகிறது இந் நாவல்.

ஆண்களையும் பெண்களையும் 1லிருந்து 9வரையில் தகுதி அடிப்படையில் எண்களாக வகைப்படுத்தப்படுகிறார்கள். தகுதி என்பது இங்கே எளிய குறுகிய வாழ்க்கை முறையிலிருந்து சர்வதேச அறிவுஜீவி வரை கொள்ளலாம் , இரு பாலருக்கும். இந்த வகையான மனித வகைப்பாட்டியல் நாம் உறவுகளை பேணுவதற்கு அத்தியாவசியமான ஒன்று. அதோடுமட்டுமல்ல நமக்கு பொருத்தமான இணையை தேர்வு செய்வதற்கும்.

சிக்கலற்ற பரஸ்பர புரிதல் நிறைந்த வாழ்க்கை என்பது 1×1, 2×2, ....இப்படி 9 ×9 வரையான இணையர்களை கொள்ளலாம்.

மாறாக, 4 என்ற எண்ணுடைய ஆணோ பெண்ணோ 8 என்ற பெண்ணோ ஆணுடனே இயல்பான வாழ்க்கையை நடத்திச்செல்வதென்பது சவால்களும் சிக்கல்கள்களும் நிறைந்ததாகவே இருக்கும்.

செல்வம் - சரளா மற்றும் மாதவன்- வனஜா தம்பதிகளை வைத்து இயங்கும் நாவல் , ராம் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஒரு மாபெரும் உளவியல் பரிணாமத்தை எண்களை வைத்து கட்டமைத்து பகுக்கிறது. நாவல் என்ற கச்சித வடிவத்தை அடைய மேற்கண்ட ஐந்து கதாபாத்திரங்களே போதுமானது.

நாவல் சம்பவங்களை தர்க்கங்கள் நிறைந்த கணைகளை கொண்டு வீழ்த்தி மறு உருவம் தருகிறது. இது அபாரம்.

நாவல் என்ற சட்டகத்தில் அதன் உச்சத்தை அடைந்துள்ளது. வாசகனின் மன விரிவிற்கு உத்தரவாதமளிக்கும் நாவல் இது.

நாவல் முடிந்தபின் சில நுண்ணுணர்வுடைய வாசகர்களுக்கு ஒரு பிடி கிடைக்கும். சாதாரண மனித உணர்வுகளை மறுவிசாரணைக்கு உட்படுத்தலாம். மொத்தத்தில் இது ஒரு
ஆயத்த அளவீட்டுக்கருவி.

இந்த நாவலின் அடிப்படை கணிதவியல் என்பது என்னுள்ளேகூட பலவருடங்களாக வடிவில்லா ரூபத்தில் அலைந்துகொண்டிருந்தது என்பேன். நண்பர்களின் குடும்ப/காதல் சிக்கல்களை ஏதோ ஒரு வகையில் வகைமைப்படுத்த திணறிக்கொண்டிருந்தேன்.

உங்கள் எண் என்ன என்ற ராம்பிரசாத் அவர்களின் நாவல் சிக்கல்களை ஒரு கணித கோட்பாடுகளுடன் அடுக்கடுக்காக தீர்வுகளை தர்க்கரீதியில் சமன்பாடுகளை கொண்டு இறுதியில் LHS = RHS என நிறுவுகிறது.

எனது நண்பர்கள் அனைவருக்கும் தயக்கமே இல்லாமல் உடனடியாக பரிந்துரை செய்யும் நாவல் "உங்கள் எண் என்ன?"

நாவல் இளைய தலைமுறையினரை சென்று உலுக்கவேண்டும் என்பது எனது பெருவிருப்பம்.

°°°
எழுத்தாளர் ராம்பிரசாத் அவர்களுக்கு எனது அன்பும் வாழ்த்துக்களும்.

தனிப்பட்ட முறையிலான எனது எதிர்தரப்பு என்னவெனில், நாவலுக்கான பெயர்.

"உங்கள் எண் என்ன? " என்ற பெயர் நாவல் தன்மைக்கு ஓர் அன்னியத்தை ஏற்படுத்தியிருப்பதாக உணர்கிறேன். ஒரு ஜோதிட எண் வகைமை என பலர் எண்ண நேரிடும். வேறு நல்ல பெயரை தேர்ந்தெடுப்பதில் உங்களைத்தவிர யாருக்கும் தகுதி இல்லை. நிச்சயம் பரிசீலியுங்கள்.

👍💐💐💐💐

Friday 24 July 2020

(என்னமோ சொல்லணும்னு தோணுச்சு) - 1

21-ஜூலை-2020 ஆகிய இன்றைய தேதிக்கு தமிழ் சமூகத்தில் ஊடகங்களில் தீயாகிக்கொண்டிருக்கும் சில விஷயங்களைப் பார்த்துவிட்டு சொல்ல வேண்டும் என்று எனக்கு தோன்றியவைகளை பின்வருமாறு ஒழுங்குபடுத்தலாம்.

"கிழக்கு என்று ஒன்று இருந்தால், மேற்கு என்ற ஒன்றும் இருக்கவே செய்யும். வெறும் கிழக்கை மட்டும் வைத்து பூமி சுழலாது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் கிழக்கையும், மேற்கையும் எப்படி சமமாக ஏற்றுக்கொள்வது என்பதைத்தான். கிழக்கும் மட்டும் தான் இருக்க வேண்டும் என்றோ, மேற்கு மட்டும் தான் இருக்க வேண்டும் என்றோ நிர்பந்திப்பவர்கள் அரைவேக்காடுகளே. அரைவேக்காடுகளால் மட்டும் தான் அப்படியெல்லாம் எண்ணிக்கொண்டிருக்க  இயலும்.

ஆதலால், யாரும் யாருக்கும் எவ்விதமான அட்வைஸும் செய்யத்தேவையில்லை. பூமியின் ஜனத்தொகை 100 சதம் எனில் அதில் 90 சதம் எந்தப் புத்தகத்தையும் வாசிக்காதவர்களே. இவர்களால் தான் இந்த உலகத்தின் அச்சாணியும் சுழல்கிறது என்பதை நம்மில் யாரும் மறுக்க இயலாது.

ஒரு கட்டுக்கோப்பான பாதுகாவல் மிக்க இடம் தான் நாம் எல்லோரும் ஏங்குவது. ஆனால், அப்படியான ஒன்றில் இருக்க வாய்ப்பு கிடைத்துவிடுவதாலேயே, அது எல்லோருக்கும் சாத்தியம் என்று வாதம் செய்வது போலொரு அறிவிலித்தனம் வேறு இருக்க முடியாது.

அந்தப் பாதுகாவல் மிக்க இடத்தை அடைவதிலும் கூட உங்கள் சுய முயற்சிகளின் பங்கு வெறும் 50 சதமாகத்தான் இருக்க முடியும். எஞ்சியது, இந்த பிரபஞ்சத்தினுடையது. 'பிரபஞ்ச அமைப்பின் ஆசீர்வாதம்'. இதைத்தான் கடவுள் என்கிறோம். ஆதலால், நீங்கள் உங்களை அப்படியொரு பாதுகாவல் மிக்க இடத்தில் இருத்திக்கொள்ள வாய்ப்பளித்தமைக்கு இந்த பிரபஞ்சத்துக்கு வேண்டுமானால் நன்றி சொல்லிக்கொள்ளலாம். ஆனால், அதைத் தக்க வைக்கவும் கூட  நாளொருமேனியும் அதே பிரபஞ்சத்திடம் கைகட்டி யாசகம் வேண்டி நிற்கவும் வேண்டும் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

அந்த 'பிரபஞ்ச அமைப்பின் ஆசீர்வாதம்' 50 சதம் தங்களுக்கு சாதகமாக வாய்க்காதவர்களும் இந்த பூமியில் பிறக்கவே செய்கிறார்கள். விதி என்று ஒற்றை வார்த்தையில் அவர்களைக் கடந்து போவது போல் ஒரு கயவாளித்தனம் வேறு இருக்க முடியாது. அவர்களுக்கு, 'பிரபஞ்ச அமைப்பின் ஆசீர்வாதம்' சாதகமாக வாய்த்தவர்கள் உதவ வேண்டும். அப்படி உதவ மனமில்லையென்றாலும் உபத்திரவம் செய்யாமலாவது இருக்கலாம் என்பது என் பரிந்துரை.

'அடுத்தவர்களுக்கு அட்வைஸ் செய்வது' என்பது, அந்த 50 சதவிகித பிரபஞ்ச ஆசீர்வாதத்தை தங்களுக்கு சாதகமாக வாய்க்கப்பெற்றவர்கள், தாங்கள் ஏதோ கடினமாக உழைத்ததன் பலனாகவே அடைந்ததாய் எண்ணிக்கொண்டிருப்பதன் குறியீடு தான். அது ஒரு விதமான, உளவியல் பிரச்சனை. யாரேனும் நல்ல மனோதத்துவ நிபுணர்களை அவர்கள் அணுகி, மருத்துவம் பெற்றுக்கொள்வது அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கு நல்லது. "

 - எழுத்தாளர் ராம்பிரசாத்

Thursday 23 July 2020

தீராக்காதல்

பலநூறு புத்தகங்களை வாசித்த தேர்ந்த இலக்கியவாதி இல்லை. சமூக சீர்திருத்தவாதியும் இல்லை.. மற்றவர் கருத்தை ஆராய்ந்து, அழகியல் குறை கண்டு எதிர்க்குரல் பதிவுசெய்யும் விமர்சகரும் இல்லை. இந்த எழுத்து இப்படித்தான் இருக்க வேண்டுமென்று நிர்பந்திக்கிற இலக்கிய பாதுகாவலனும் இல்லை.
எழுத்தின் மீது திராக்காதல். பலவிதமாக எழுதிப்பார்க்க வேண்டும். எழுத்தின் வகைமைகள் அனைத்தையும் முயன்று பார்க்க வேண்டும். ஊடாக, எழுதப்படுவது புத்திசாலித்தனமான எழுத்தாக வேண்டும். எழுத்துச்சாகசங்கள் தேடலில் புதிதாகக் கிடைக்கும் புதையல்களை வாசகனுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். எழுதுவது யாருக்கேனும், எதற்கேனும் பயன்பட வேண்டும். அவ்வளவே நோக்கம்.
- எழுத்தாளர் ராம்பிரசாத்


Sunday 19 July 2020

ழகரம் - திரைப்படம்

ழகரம் - திரைப்படம்


பத்து லட்சத்தில் திரைப்படம் சாத்தியமா?
சாத்தியம் என்று நிரூபித்துக்காட்டியிருக்கிறார் கிருஷ். இந்தப்படத்தின் மூலமாக இயக்குனர் அவதாரமுமெடுத்திருக்கிறார் கிருஷ். பெரிய நட்சத்திரப்பட்டாளம் இல்லாமல் மிக மிக எளிமையாக எடுத்திருக்கிறார்கள்.

சினிமாவையே கனவாகக் கொண்டிருக்கும் ஏகப்பட்ட உதவி இயக்குனர்களுக்கு இந்தப் படம் ஒரு மாபெரும் நம்பிக்கையைத் தரவல்லது. இது போன்ற திரைப்படங்கள் இனி வரும் காலங்களில் அதிக அளவில் வெளியாக வேண்டும் என்று விரும்புகிறேன். Crowd funding முறையில் செய்ததாகச் சொல்லியிருக்கிறார் கிருஷ். இது ஒரு நல்ல மார்க்கம். சம்பளம் வாங்காமல் நடித்துக்கொடுத்த நடிகர் நந்தாவுக்கு எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.



'ப்ராஜக்ட் ஃ' நாவல் எழுதிய கவா கம்ஸ் மீது வெளிச்சத்தைப் படரச்செய்திருக்கிறது 'ழகரம்' திரைப்படம். வரவேற்க்கப்பட வேண்டிய ஒன்று. (இப்படியெல்லாம் நடக்காவிட்டால் சிலரது தனிப்பட்ட சுயநலக் கீழ்மைகளின் வடிகாலாகவே தொடர்ந்துவிடும் விதி தமிழ் அறிவுசார் உலகத்திற்கும், திரை இயக்கத்திற்கும்  நீடித்துவிடும் அபாயம் இருக்கிறது.)

'ப்ராஜக்ட் ஃ' ஐ கதாசிரியர் அறிவியல் புனைவு என்றே வகைப்படுத்தியிருக்கிறார். நூலுக்கு கிழக்குப்பதிப்பகம் எழுதியதாகச் சொல்லப்படும் முன்னுரையிலும் 'அறிவியல் புனைவு' என்றே அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இது அறிவியல் புனைவில் சேராது. இயக்குனர் கிருஷ் யூடியூபில் சொல்லும் ஒரு சலனப்படத்தில், தெளிவாக 'treasure hunt' என்றே வகைப்படுத்துகிறார். அப்படி வகைப்படுத்துவதும் தான் சிறப்பும் கூட.

'Treasure Hunt' என்ற வகைமையிலேயே இந்த நூலுக்கும், இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கும் தகுதிப்படும் வெளிச்சம் கிட்டிவிடும். அறிவியல் புனைவு என்றெல்லாம் வகைப்படுத்துவது  நூல் குறித்தும்,  நூலை எழுதிய கதாசிரியர் மீதும் படியத்துவங்கியிருக்கும் வெளிச்சத்தில் கரைபடிய வழி செய்வதாகிவிடலாம். ஆதலால், இணைய நண்பர்களை இப்படிச் செய்வதை தவிர்க்கும்படி உளமாறக் கேட்டுக்கொள்கிறேன்.

மற்றபடி, குமரிக்கண்டம், ராஜராஜ சோழன் குறித்த சரித்திர தகவல்களின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்களுக்கு இந்தப் படம் மிகவும் பிடிக்கலாம்.

ஒரு நல்ல மாற்றத்திற்காய், அவரவர் தரப்பிலிருந்து எதிர்பார்ப்பில்லாத உழைப்பை நல்கியிருக்கும் கிருஷ், நந்தா மற்றும் திரைப்படம் உருவாகக் காரணமாகிய அனைவருக்கும் தங்கள் ஆதரவை நல்கும்படி நண்பர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.


பி.கு: இந்தத் திரைப்படத்துடனோ, நூலுடனோ தொடர்புடைய யாரையும் எனக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூடத் தெரியாது.

Wednesday 15 July 2020

பேய் - சொல்வனம் சிறுகதை

//பூமிக்கிரகத்தில் விலங்குகளும், தாவரங்களும் இரண்டு வெவ்வேறு ராஜாங்கங்களாக உதித்தவை. இவ்விரண்டுக்குமான பிரபஞ்சரீதியிலான இருத்தலிய காரணங்கள் வெவ்வேறானவை. உயிர்கள் இந்தப் பிரபஞ்சத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிக மிக அரிதாகவே தோன்றுகின்றன. இந்தப் பின்னணியில்,  நான் சில கேள்விகளை எழுப்ப விரும்புகிறேன்.  ஒரு கண்ணாடித்தொட்டியில் சில மீன்களுடன் சில தாவரங்கள் இருப்பதே கண்ணாடித்தொட்டிகளுக்கான அர்த்தங்களுக்கு உருவம் தருகிறது. தொட்டி முழுவதும் மீன்கள் எனில், அந்த மீன்கள் தான் தாவரங்களுமெனில் தொட்டி என்னவாகிறது?  தொட்டியின் பிரபஞ்சரீதியிலான இருத்தலிய காரணிகள் என்னாகின்றன? 
கடலில் இலைகளெல்லாம் ஒன்று கூடி மீன்களின் உருவம் கொண்டு நீந்துகின்றன. ஆனால், நிலத்தில் இவைகள் மனித திசுக்களை, நரம்புகளை, எலும்புகளை தாவரங்களாக்கிவிடுகின்றன. முன்பு இலைகள், மரங்களின் கிளைகளோடு பிணைக்கப்பட்டு இருந்தன. இப்போது எல்லா இலைகளும் ஒன்றுகூடி ஒரு பாரிய திமிங்கிலமாக இந்த ஆழ்கடலில் நீந்திக்கொண்டிருக்கின்றன. கூர்ந்து அவதானிக்கின் இவ்விரண்டிலுமே ஒர் ஒழுங்கு இருக்கிறது. 
ஆனால் இந்த ஒழுங்கு, அந்த விண்கல்லின் வருகைக்குப் பின் சற்றே மாற்றம் கண்டிருக்கிறது. இந்த ஒழுங்கு மாற்றத்தின் நோக்கம் என்ன? ஒழுங்கு என்பதே ஒரு மாறிலி நிலைப்பாடு தான் என்பதா?  நடக்கும் எல்லாவற்றையும் என்னளவில் சீர்தூக்கி யோசிக்குங்கால் எனக்கு இதுவே படுகிறது. ஒழுங்கே ஒரு மாறிலி நிலைப்பாடாக இருக்கிறது. ஒழுங்கற்றதே ஒழுங்காக இருப்பதுவும் கூட அப்படி ஒரு மாறிலி நிலைப்பாடு தானோ?.   //
சொல்வனம் 226வது இதழில் வெளியான 'பேய்' என்ற தலைப்பிலான எனது சிறுகதையிலிருந்து....
சிறுகதையை சொல்வனம் தளத்தில் வாசிக்கப் பின் வரும் சுட்டியைச் சொடுக்கவும்.


Saturday 4 July 2020

புதிய உலகம் - சிறுகதை - வாசகசாலை

வாசகசாலை ஜூலை 4 2020 இதழில் 'புதிய உலகம்' என்ற தலைப்பிலான எனது சிறுகதை வெளியாகியிருக்கிறது.

எனது சிறுகதையைத் தேர்வு செய்து வெளியிட்ட வாசகசாலை ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சிறுகதையை வாசித்துவிட்டு, கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுமாறு நண்பர்கள், மற்றும் வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

வாசகசாலையில் எனது சிறுகதையை வாசிக்க பின்வரும் சுட்டியை சொடுக்கவும்:

http://www.vasagasalai.com/pudhiya-ulagam-tamil-short-story/



Thursday 2 July 2020

Ghost: Literary Yard Magazine

Literary Yard has published one of my Horror Sci-Fi Fiction. I thank the editorial board of Literary yard for chosing mine.

Would be glad to learn how readers perceive this.

https://literaryyard.com/2020/07/02/ghost-2/

Wednesday 1 July 2020

நாடோடி சிறுகதை - பதாகை



பதாகை இதழில் ' நாடோடி' என்ற தலைப்பிலான எனது அறிபுனை சிறுகதை வெளியாகியிருக்கிறது. எனது சிறுகதையை தேர்வு செய்து வெளியிட்ட பதாகை இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

சிறுகதையை வாசித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.