என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Sunday, 15 September 2024

LayOff - இணைய நண்பர்கள் மன்னிக்கவும்.

 LayOff - இணைய நண்பர்கள் மன்னிக்கவும்.

***********************************************



சுற்றி எங்கிலும் லேஆஃப் நடந்துகொண்டிருக்கிறது. எனது சமீபத்திய LayOff அனுபவம் விசித்திரமானதும், என் வகையானதும் கூட.


பிப்ருவரி 12ம் தேதி தமிழக அரசு விருது அறிவிப்பு குறித்து தகவல் வந்தது. பிப்ருவரி 14ம் தேதி என் தந்தை என் சார்பாக விருதைப் பெற்றுக்கொண்டதெல்லாம் இணைய நண்பர்கள் அறிந்ததே. இணைய நண்பர்கள் அறியாதது, பிப்ருவரி 16ம் தேதி layoff செய்யப்பட்டதாக தகவல் வந்தது. அலுவலக மடிக்கணிணி வேலை செய்யவில்லை. அது ஒரு வெள்ளிக்கிழமை மாலை. 


எனக்கு இப்படித்தான் நடக்கும். என் அனுபவத்தில், என் வாழ்க்கையை நான் திரும்பிப் பார்த்ததில் சில ஒற்றுமைகளை கவனித்திருக்கிறேன்.


1. அசந்தர்ப்பமான சூழல்களில் தான் நடக்க வேண்டிய விடயங்கள் நடக்கும்.

2. நல்ல விடயங்கள்/தகுதிப்பட்ட விடயங்கள் நடக்கும். ஆனால், தாமதமாக, அல்லது மிகத்தாமதமாக நடக்கும். ஆனால், நடக்கும்.


இதை என்ன சொல்வது என்று தெரியவில்லை. 2014ல் துவங்கிய உறவு அது. சுமார் ஒன்பதரை வருடங்கள் நீடித்து, சரியாக பிப்ருவரி 16ம் தேதி முடிவுக்கு வந்தது. நான் கான்ட்ராக்டர் என்பதால் முன்னறிவிப்பு, இரண்டு வார கெடு எதுவும் இல்லை. திடீரென்று layoff செய்துவிட்டார்கள். 90 பேர் வேலை பார்த்த ப்ராஜக்டில், இப்போது வெறும் 12 பேர்.


அதன் பிறகு மீண்டும் 12வது பொதுத்தேர்வுக்கு தயார் செய்ததையெல்லாம் நினைவுக்கு வரும் படி செய்துவிட்டது அதற்குப் பின்னான நேர்முகத்தேர்வுகளுக்கான தயாரிப்புகள். பிப்ருவரி இறுதிக்குள்ளாகவே ஒரு நிறுவனத்தில் ஆஃபர் வரை சென்றாகிவிட்டது. என்ன நடந்ததோ தெரியவில்லை. backed out. மீண்டும் தயாரிப்புகள்.


வேலைக்கு உலை வந்துவிட்டபிறகு என்ன எழுத? சிறுகதைகளிலோ, இலக்கியத்தின் எந்த வகைமையிலுமே வேலை செய்ய ஏற்ற மன அமைப்பு வாய்க்கவே இல்லை. அடுத்த வேலையைப் பெறும் வரை அந்த மனஅமைப்பு வாய்க்காது என்று தான் தோன்றியது. இணையம் பக்கமே வரமுடியவில்லை.  ஏன் நெடு நாட்களாக எதுவும் பகிரவில்லை என்று இணைய நண்பர்களிடமிருந்தெல்லாம் அவ்வப்போது அழைப்புகள், குறுஞ்செய்திகள் வரும். என்ன பதில் சொல்ல முடியும்? என் கவலைகளை மற்றவர்கள் மீது திணிக்க விருப்பமிருக்கவில்லை. 


தயாரிப்புகள். 16-17 மணி நேரம் தயாரிப்புகள். கண்கள் அயர்ந்து போகுமளவினதான தயாரிப்பு. இரண்டு கண்களும் எரியும். விளக்கெண்ணெய் தடவி படுத்த இரவுகள் பல. சில நேர்காணல்களிலிருந்து பதிலே இல்லை.  அதாவது ஏற்பு/மறுப்பு இரண்டுமே வராது. பல நேர்காணல்கள் கண்துடைப்பு நாடகம் என்று வெளிப்படையாகவே தெரிந்தன. இதில், அமெரிக்க வேலை வாய்ப்புச் சந்தையில் சில கள்ளப் பக்கங்களைக் கவனிக்க முடிந்தது. அது பற்றிப் பிறகு விலாவாரியாக எழுதுகிறேன். 


சற்றேறக்குறைய மேமாதம் தான் இறைவனின் அருளால் ஒரு Offer கிட்டியது.  'அப்பாடா!!' என்றிருந்தது.


பிப்ருவரி 16ல் தொலைந்த உறக்கம், சரியாக மூன்று மாதங்களுக்குப் பிறகே நிம்மதியான உறக்கம் உறங்க முடிந்தது. அதன் பிறகே மீண்டும் இணையம் வர முடிந்தது. 'ஏன் நெடு நாட்களாக எதுவும் பகிரவில்லை?' என்று கேட்ட அனைத்து நண்பர்களின் அன்புக்கும் அனேகம் கோடி நன்றிகள். அப்போது எனக்கிருந்த சூழலை எல்லோரிடமும் பகிர்ந்து எல்லோரையும் அதனுள் இழுக்க விரும்பவில்லை. அதனால், எனக்குள்ளேயே வைத்துக்கொண்டேன், யாரிடமும் அதிகம் பகிரவில்லை. பல மாத மெளனத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேன். 


இப்போதும் கிடைத்த, கிடைத்த வேலையில் செட்டில் ஆக மூன்று மாதங்கள் எடுத்துக்கொண்ட பின்னரே இதை எழுதும் மன அமைப்பு வாய்த்தது. இறைவனுக்கு நன்றிகள். இயற்கைக்கு நன்றிகள். 'விரும்பும்/எண்ணும் விடயங்கள் அனைத்தும் தாமதமாக நடக்கிறது' என்பதை மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 


இதற்கெல்லாம் என்ன பொருள் ? என்ன அர்த்தம்? இந்த இயற்கை அப்படி என்னதான் சொல்ல வருகிறது என்பதை இன்னமும் முழுமையாக விளங்கிக்கொண்ட பாடில்லை.