என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Wednesday, 18 November 2026

தமிழின் சிறப்பு? அல்லது கடவுள் செயல்?

தமிழின் சிறப்பு? அல்லது கடவுள் செயல்?

******************************************************

ஜூன் 16, 2022. தேதியைக் குறித்துக்கொள்ளுங்கள்.


தென்னிந்தியாவில் வாசகசாலையின் ஐம்பதாவது இதழில் எனது 'பிரதியெடுக்காதே' சிறுகதை வெளியாகிறது.

https://vasagasalai.com/pirathiyedukathe-ram-prasath-sirukathai/


அந்த ஆண்டு முடியும் தருவாயில் உலகின் முதல் தர பிட்காயின் அமைப்பான Ethereum Foundation தனது summer of protocols முன்னெடுப்பின் வழி protocolized என்ற இதழைத் துவக்குகிறது. நோக்கம் protocol fiction எனப்படும் ஒரு புதிய வகை புனைவு வளர்த்தெடுப்பது. 

இப்படி ஒரு அமைப்பு உருவாவதோ, அதை உலகின் முதல் தர பிட்காயின் அமைப்பு முன்னெடுப்பதோ எனக்குத் தெரியாது.

நான் 'பிரதியெடுக்காதே' சிறுகதையின் தனிச்சிறப்பை உணர்ந்து அதைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒவ்வொரு பத்திரிக்கையாக அனுப்பத்துவங்குகிறேன். ஆங்கில இதழ்களில், எழுத்தாளருக்குத் தரப்படும் சன்மானத்தை வைத்து, அடுக்குகள் உள்ளன. அதை விளக்க ஒரு படம் இணைத்திருக்கிறேன், பார்க்கவும். அதில் Flat Fee ஆக ஆக்கம் ஒன்றுக்கு 15 டாலர்கள் வழங்கும் ஒரு இதழ் இச்சிறுகதையைத் தேர்ந்தெடுத்திருந்தது. 

இனி சொல்ல இருப்பது தான் கடவுள் செயல்.

அப்போது free இதழ்களில் பதிப்பித்து பதிப்பித்து தன்னிறைவடைந்துவிட்டு paid sales பக்கம் கவனம் செலுத்தத்துவங்கியிருந்தேன்  நான். அப்போதைக்கு அந்த 15 டாலரே, என் நோக்கத்திற்கு வெற்றி தான். ஆயினும், மனம் ஏற்கவில்லை. 'பிரதியெடுக்காதே' சிறுகதையை மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்த்துவிட்டு, 'இது இதற்கு மேலும் செல்லும்' என்று தோன்றிக்கொண்டே இருந்தது. ஆதலால் அந்த இதழுக்கு அச்சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தரவில்லை. 

ஒவ்வொரு இதழும், ஒவ்வொரு ஆக்கத்தையும் பல மாதங்கள் பரிசீலிக்க எடுத்துக்கொள்ளும். நான் சளைக்காமல் அனுப்பினேன். இறுதியில் Protocolized க்கு அனுப்பியபோது அவர்கள் தேர்வு செய்துகொண்டார்கள். சன்மானம் வார்த்தைக்கு 49 சென்ட். இது நடந்தது அக்டோபர் 2025ல். 

https://protocolized.summerofprotocols.com/p/mismatch

அதாவது சுமார் மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கிறது. அது அல்ல விஷயம்.

உலகளவில், protocol fiction என்னும் ஒரு புத்தம் புது புனைவு வகைமை உருக்கொண்டு, தனக்கென ஒரு பணக்கார அமைப்பின் தூண்டுதல் வழி, ஒரு இதழாக உருவெடுத்துவரும் முன்னே அவ்வகைமையில் ஒரு சிறுகதை நம் தமிழில் வெளியாகிவிட்டிருந்தது. 

இதுதான் விஷயம்.

இதையெல்லாம் இப்போது நினைத்தாலும், இதை தமிழின் சிறப்பு என்பதா, இறைவன் செயல் என்பதா என்று சொல்லத்தெரியவில்லை. ஆக்கத்துக்கு 15 டாலர் சன்மானத்தொகை தந்தபோதே நான் ஏற்றிருந்தால், protocolized என்ற ஒன்று இருந்ததே தெரியாமல் போயிருக்கும். 

எந்த ஒரு அசல் சிந்தனையும் தாய்மொழியில் தான் நிகழும் என்பார்கள். ஆதலால், உலகளவில், protocol fiction என்னும் ஒரு புத்தம் புது புனைவு வகைமை தமிழில் தோன்றியது தமிழின் சிற்பபென்பதா? 15 டாலருக்கு விலை போயிருந்தால் காணாமல் போயிருக்கும். protocolized வரை இழுத்து வரப்பட்டதை, இறைவன் செயல் என்பதா?

உலகத்துக்கே பரிச்சயமாகியிராத ஒரு புனைவு வகைமை முதன் முதலில் தமிழில் வெளியாகிறது. அந்த நிகழ்வை ஆதாரப்பூர்வமாக உலகுக்குத் தெரியச்செய்ய இப்பிரபஞ்சம் என்னை மூன்று வருடங்கள் அலைகழித்து தனக்கு வேண்டியதை நடத்திக்கொண்டுவிட்டது என்பதா? 

எப்படியாகினும், தமிழ் அறிவியல் புனைவிலக்கிய வெளியில் மட்டுமல்லாமல், "பிரதியெடுக்காதே" எனது உலகளாவிய அறிபுனை இலக்கிய பங்களிப்பாக நிச்சயம் இருக்கும். 

இச்சிறுகதை 2024ல் வெளியான, "மரபணுக்கள்" தொகுப்பில் உள்ளது.







Tuesday, 17 November 2026

சிலிக்கான் அசரீரி - ஜீரோ டிகிரி பதிப்பக வெளியீடு

சிலிக்கான் அசரீரி - ஜீரோ டிகிரி பதிப்பக வெளியீடு


எனது அறிவியல் புனைவுச் சிறுகதைத் தொகுதி நூல்கள் வரிசையில் அடுத்ததாக 'சிலிக்கான் அசரீரி'. மொத்தம் பத்து சிறுகதைகள் இந்த நூலில் இடம் பெறுகின்றன.

மனித அறிவுக்குச் சமமான பெரும் சக்தி. மனித அறிவினாலேயே கட்டமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு, எந்த ஒன்றின் எல்லையையும் முழுமையாக அறுதியிட வேண்டுமானால், அதன் பலவீனங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

நாளைய உலகம் அதன் பலங்களின் வழி மட்டுமன்றி, அதன் பலவீனங்களின் வழியும் கட்டமையும் சாத்தியங்கள் அனேகம். செயற்கை நுண்ணறிவின் சிலிக்கான் பலவீனங்கள், அதன் விளைவாக உருவாக இருக்கும் சாத்தியங்கள் வழி விஸ்தரிக்கப்பட இருக்கும் நிஜங்கள், சிலிக்கான் கண்கள் வழி மனித இனம் பெற இருக்கும் பார்வைகள் குறித்து அசரீரியாகச் சொல்லிச் செல்வதே 'சிலிக்கான் அசரீரி'


இது நடப்பாண்டில் வெளியாகும் எனது இரண்டாவது நூல் ஆகும். இதுகாறும் அறிவியல் புனைவில் சுமார் ஆறு நூல்கள், மொத்தம் 62 சிறுகதைகள். அவற்றில் பத்து கணித சிறுகதைகள். நூல்கள் பெயர்கள்: 


வாவ் சிக்னல்

மரபணுக்கள்

தீசஸின் கப்பல்

கம்ப்யூட்டா

ப்ருனோவின் அம்பு

சிலிக்கான் அசரீரி


வாசகர்களிடம் நான் பரிந்துரைப்பதெல்லாம் ஆறு நூல்களையும் ஒருங்கே வாங்கி வாசித்துப் பாருங்கள் என்பதைத்தான்.

2022ல் 'சோஃபியா' சிறுகதைக்காக ஜீரோ டிகிரி விருது பெற்றிருந்தேன். தொடர்ந்து, அவர்கள் வாயிலாக நூல் வெளியிட இப்போதுதான் வாய்த்திருக்கிறது. எனது இந்த நூலை வெளியிடும் ஜீரோ டிகிரி பதிப்பகத்தாருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

நூலைப் பெறச் சொடுக்க வேண்டிய சுட்டி முதல் கமெண்டில்.

Monday, 16 November 2026

சிறுகதை விமர்சனங்கள் - 5

சிறுகதை விமர்சனங்கள் - 5



நகலன் - சிறுகதை


தமிழ் இலக்கிய உலகில் அருகி இருப்பது அறிவியல் புனைவிலக்கியம். அதை முயலும் ஒவ்வொருவருமே, சாதி மத இன வேறுபாடுகளால் இருள்டைந்து இருக்கும் தமிழ் சமூகத்தில் வெளிச்சம் பாய்ச்ச வந்த தேவதைகளே.

https://thaaii.com/2024/11/15/nagalan-short-story/

ஆதி, குவாண்டம் இயற்பியல் ஆய்வாளன். அவனுக்கு ஒரு காதலி. தனக்கென நேரம் ஒதுக்காமல் சதா ஆராய்ச்சியிலேயே இருப்பதற்காகக் கடிந்துகொள்ளும் காதலி.

உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் விஞ்ஞானிகள் கூடியிருக்கும் ஒரு நிகழ்வில் ஆதி தனது எந்திரத்தை உயிர்ப்பித்து, வெற்றிகரமாக இயக்கியும் காட்டுகிறான். அது ஆதி போலவே இன்னொரு பிரதியை உருவாக்குகிறது. 

இறுதியில் ஆதி தனது காதலியை சந்தித்தானா, அவனது காதலி அவன் மீது வைத்த குற்றச்சாட்டுக்கள் என்னானது என்பது தான் மீதிக்கதை. 

//“என்னுடைய நினைவுகளை எனக்குச் சேராமல் பார்த்துக் கொள்ளுமானால் அது எப்படி நானாக முடியும்?// இந்த வரிகளில் சிறுகதை தனது முடிவை நோக்கி எவ்விதம் பயணிக்கிறது, வேலை செய்கிறது என்பதைக் குறிப்பிட்டு விடுகிறார் ஆசிரியர்.

சுமித்ரா ஒரு அறிவியல் மற்றும் கணினி ஆசிரியரும் கூட. //“உலகின் பொருட்கள் அனைத்தும் துகள்களால் ஆனது தெரிந்ததுதான். ஆனால், ஒளி அலையாகவும் துகளாகவும் இருக்கிறது. துகளாக இருப்பது அலையாக்க மாறுகிறது. அலையாக இருப்பது துகளாக மாறுகிறது.// 

அறிவியல் ஆசிரியர் என்பதால், சிறுகதையின் அறிவியல் பகுதிகளைத் தெளிவாகக் குறிப்பிடுவது ஆசிரியருக்கு கைவந்திருக்கிறது.

அறிவியல் ஆசிரியர் எழுத்தாளராகவும் இருப்பது மாணவர்களுக்கு கிடைக்கும் வரம் தான். இல்லையா?


Friday, 13 November 2026

சிறுகதை விமர்சனங்கள் - 4

சிறுகதை விமர்சனங்கள் - 4


விடுபட்ட நரி - யுவன் சந்திரசேகர்

*************************************


சொல்வனம் இதழில் வெளியாகியிருக்கும் எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் 'விடுபட்ட நரி', சற்று நீளமான கதை. ஒரு ரயில் பயணத்தில் துஷார் குப்தாவின் என்கிற கற்பனை எழுத்தாளரின் கதைகளை வாசிக்கும் ஒருவனின் கதை. கதைக்குள் மூன்று உபகதைகள் வருகின்றன.

https://solvanam.com/2026/11/08/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%b0%e0%ae%bf/

கற்பனை எழுத்தாளர் துஷார் குப்தா, தொன்மக்கதைகளில் இடைச்செருகல்கள் செருகுவது பற்றி, அதற்குத் தரும் விளக்கங்கள் என்று குறிப்பிடப்படும் பத்திகள் இவை.

//அறிவியல் நோக்கின் வறட்சியோ, ஆன்மிகத் தரப்பின் வழிபாட்டுணர்வோ இன்றிப் பார்க்கும் பட்சத்தில், பழங்கதைகளின் இடைசந்துகளில் ஒளிந்திருக்கும் நூதனமான மானுட உணர்வுகளைக் காண முடியும்; புதிதாக வனைந்து பார்க்கவும் முடியும். பலசமயங்களில், சமகால நிகழ்வுகளின்மீது அவை வெளிச்சம் பாய்ச்சவும் கூடும். //

//வேண்டுமென்றேவோ, விவரிப்பின் சுவாரசியத்தில் கவனிக்கத் தவறியோ மூல ஆசிரியர்கள் விடுத்த இடைவெளிகளையே என்னுடைய நோக்கில் நிரப்ப முயன்றிருக்கிறேன். ஒருவகையில் அவர்கள் கட்டியெழுப்பியவற்றில்   விடுபட்டவை  என்றுகூட இவற்றைச் சொல்லலாம்…//

இடையிடையே, நடப்புலகில் கலைஞனுக்கு நேரும் நிர்பந்தங்கள் குறித்து ஆங்காங்கே குறிப்பிடவும் தவறுவதில்லை..

//இன்னொரு வகையில், கலைஞனுக்கு நிம்மதியளிக்கும் கனவுகள் அவை. ஏனெனில்,  சமகாலம் பற்றிய புனைவுகளை எழுதும் பட்ச்த்தில், அவன் ஓடஓடத் துரத்தப்படுவதற்கான சாத்தியம் எப்போதுமே ஒளிந்திருக்கிறது – எந்தக் காலகட்டத்திலும். //

கதைக்குள் வரும் முதலாவது கதை ராமாயணக்கதை. 


சபரி ராமனுக்கு மீனும் தேனும் சமைத்துப் போட்டிருக்கிறாள். 

//வேட்டுவனானாலும் நீ அரசன். நான் என்ன,  சாதாரணப் பழங்குடிப் பெண்பிள்ளைதானே! என் கையால் சாப்பிடுவார்களோ என்னவோ?//

// ‘உன்னை சகோதரன் என்றானே மகனே, என்னைத் தாய் என்று சொல்லவில்லையே!’.// இவ்விரண்டு வரிகளும் உணர்த்த வேண்டியதை உணர்த்திவிடுகின்றன.

அடுத்தது மஹாபாரதக் கதை.

//உண்மையில், வரலாற்றின் தொடர்ந்த ஓட்டத்தில், எத்தனையோ நம்பிக்கைகள் காலாவதி ஆகியிருக்கின்றன. பண்டைக்கால அரசர்களின் கொடுங்கோன்மைக்குக் கொஞ்சமும் குறைந்ததில்லை சமகால அரசிகளின் கொடுங்கோன்மை என்பது அபத்தமாக, திரும்பத்திரும்ப  நிரூபணமாகியிருக்கிறது. //  இப்படி எனக்கும் அவ்வப்போது தோன்றும். வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு பார்வைகளில் தோன்றியிருந்தாலும், சிந்தனை ஒன்று தான்.

//எத்தனை சுயநலமியாய் இருந்துவிட்டேன். இன்றைக்கு இத்தனை துணிச்சல்காரியாய் இருக்கும் நான், அன்றைக்கு ஐந்துபேருக்கு மனைவியாய் வாழ முடியாது என்று தகப்பனையோ, மாமியாரையோ எதிர்த்து நின்றேனா? பெற்றெடுத்த குழந்தைகளை மார்போடணைத்து வளர்த்தேனா? அசட்டுக் கணவர்கள் சூதாடித் தோற்றபின், மைந்தர்களைக் கூட்டிக்கொண்டு தகப்பன் வீட்டுக்குப் போயிருக்கலாமே, போனேனா? உச்சபட்சக் கேவலத்தை அனுபவித்தபிறகு, ஆத்மஹத்தி செய்துகொண்டிருக்கலாமே, செய்தேனா? கௌரவசபையில் நான் பட்ட அவமானமும், அதற்குப் பழிதீர்க்க நான் எடுத்த சபதமுமே பெரிது என்று கருதித்தானே வனம் புகுந்தேன்? வனத்துக்குள்ளும், கணவர்களுடைய பலவீனத்தின் நடமாடும் சாட்சியாக அவர்கள் முன் நடமாடிக்கொண்டே இருந்ததைத் தவிர வேறென்ன சாதித்துவிட்டேன்? // திரெளபடி தனக்குத்தானே எழுப்பிக்கொள்ளும் கேள்விகளாக இவை தோன்றினாலும், உண்மையில், வாசகர்களுக்கும் இதே கேள்விகள் நியாயமாகவே தோன்ற அனேக வாய்ப்பிருக்கிறது. அதனைச் சிறுகதையில் கொணர்ந்ததில் வாசகனுடனான ஒன்றுதல் மிக இயல்பாகவே ஏற்பட்டுவிடுகிறது இல்லையா?. 

இறுதியாக வரும் கதை, பிரம்மபுராணத்தில் வரும் கதை.

இவ்விதம் மூன்று தொன்மக்கதைகளுக்கு மாற்று விளக்கங்கள்/விமர்சனங்கள்/பார்வைகளை ஒரு கற்பனை எழுத்தாளனின் வாயிலாகப் பதிவு செய்கிறார் எழுத்தாளர்.

வாசிக்க சற்று நீளமாக கதை என்றாலும் மூன்று உப கதைகளையும் அவற்றுக்கான விளக்க பார்வைகளையும் உள்ளடக்கியிருப்பதால் நீளத்தை நியாயப்படுத்தவே செய்கிறது.

எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்கு எனது வாழ்த்துக்கள்.


Thursday, 12 November 2026

சிறுகதை விமர்சனங்கள் - 3

சிறுகதை விமர்சனங்கள் - 3

*********************************



முனைவர் ப.சரவணனின் 'தடங்கல்(ள்)' மற்றும் 'வான்பார்த்தல்' இரண்டுமே படித்த பிறகும் நெஞ்சில் நிற்கும் கதைகள். 

முதலில், 'வான்பார்த்தல்' சிறுகதை

https://solvanam.com/2021/01/10/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/

// அஞ்சனா தன்னுடைய அறிவையும் அழகையும் வலிமையையும் மறைத்து வைத்திருந்தாள். இந்த விஷயம் எனக்கு அவளுடன் பழக பழகத்தான் சிறுக சிறுகத் தெரிய வந்தது. ‘பெரும்பான்மையான பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்’ என்பது,// சரிதான் இல்லையா? அவர்கள் விரும்புவது இணக்கமான ஒரு நட்புறவைத்தான். அதற்கு, அறிவு தேவையற்றது என்றால், அந்தந்த கணங்களுக்கு அவற்றை அவர்கள் புறக்கணித்துவிடுகிறார்கள். துரதிருஷ்டவசமாக, இந்தச் சலுகை, இந்த வசதி ஆண்களுக்குக் கிடைப்பதே இல்லை. 

ஆண்கள் எப்போது தன்னை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்தில் உழல்பவர்கள். அப்படி இருந்து இருந்தே, அவர்களின் நரம்பு மண்டலம் அதற்குப் பழக்கப்பட்டு பழக்கப்பட்டு, அபஸ்வரமாகத் தேவையற்ற தருணங்களில் கூட தன்னிச்சையாக வெளிப்பட்டுவிடும். 

ஆண்களின் பெரும்பாலான 'சொதப்பல்' கள் இப்படி தன்னிச்சை நரம்பு மண்டலங்களால் நேர்பவை என்றால் மிகையில்லை. பெண்களுக்கு அப்படி இல்லை.  ஆசிரியரின் இது போன்ற நுண்ணிய அவதானங்கள் சிறுகதை முழுவதும் ஆங்காங்கே வெளிப்பட்டுக்கொண்டே இருப்பது சிறுகதையை சிறப்பாக்குகிறது.

சிறுகதையின் இறுதிவரை, அந்தப் பெண் ஏன் அழுகிறாள் என்கிற கேள்விக்கான பதில் சஸ்பென்ஸாகவே  நீள்வதில் சிறுகதை வெற்றியடைகிறது.


அடுத்ததாக 'தடங்கல்(ள்)' சிறுகதை.

https://solvanam.com/2021/06/12/%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b3%e0%af%8d/


திருமணத்திற்குச் சீதனமாக வந்த கட்டில், அறைக்குள் நுழைய வழியில்லாததால் மாமியாரிடம் தேங்கிவிடுகிறது. இறுதியில் அது மருமகளிடம் வந்ததா, என்னானது என்பதுதான் கதை. மரக்கட்டிலால் பிள்ளை பேறு கிடைத்தமையால், ஸ்டீல் கட்டிலால் தான் பிள்ளை பேறு கிட்டவில்லை என்று மாப்பிள்ளையின் அக்காள் கணவர் குறைபட்டுக்கொள்வதாகக் காட்டும் இடத்தில் எத்தகைய குடும்ப அமைப்பு அது என்பது குறித்துத் தெளிவாக உணர்த்திவிடுகிறார் ஆசிரியர். 

அந்த மரக்கட்டில், ஸ்டீல் கட்டில் வித்தியாசம் கதையின் இறுதி வரை தொடர்கிறது. நேர்த்தியாக இழைத்து இழைத்து செய்யப்பட்ட மரக்கட்டிலாதலால், அதை நாயகியின் அறைக்குள்  நுழைப்பதில் சிக்கல்கள் எழுகிறது. மாமியார் அதையே காரணமாகக் காட்டி அதனைத் தன் பயன்பாட்டிற்கென இறுத்திக்கொள்கிறார். இது இப்படியே பத்து ஆண்டுகள் தொடர்கிறது. மகளின் திருமணத்திற்கென சீதனமாக, பெண்ணின் தகப்பனார் செய்து கொடுத்த கட்டில், பத்தாண்டுகளாக பெண்ணுக்கே பயன்படாமல் பெண்ணின் மாமியாருக்கு பயன்படுகிறது. 

//அந்தக் கட்டிலின் மீது பஞ்சவர்ணம் பயன்படுத்தும் பனையோலை விசிறி, தலைவலித்தைலம், ஆயுர்வேத மருந்துகள், பேன்சீப்பு, வார இதழ்கள், கந்தசஷ்டிக் கவசம் புத்தகம் போன்றவை இருக்கும். அந்தக் கட்டிலின் கீழே தலைக்குத் தேய்க்கும் எண்ணெய், கால்வலித் தைலம், சிற்றுண்டிகள் நிறைக்கப்பட்ட சிறிய தூக்குவாளிகள், ஆவிபிடிக்கப் பயன்படுத்தும் பாத்திரம், கருவேற்பிள்ளைப்பொடி நிறைக்கப்பட்ட டப்பா போன்றன இருக்கும்.//

ஒரு நாள், மாமியாரான பஞ்சவர்ணம் மரணத்தைத் தழுவுகிறார். அதன் பிறகாவது கட்டில், அது யாருக்காக உருவாக்கப்பட்டதோ அவரிடம் போய்ச் சேர்ந்ததா என்பதை சிறுகதையின் இறுதிவரை நீட்டிப்பதில் ஆசிரியர் வென்றுவிடுகிறார். 

படித்து முடித்துவிட்ட பிறகும் நெஞ்சிலேயே சற்று நேரம் நிலைத்திருந்தது சிறுகதையின் காட்சிகள். 

சிறுகதை ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்.


Wednesday, 11 November 2026

மயிர் சிற்றிதழ் - முந்நூறு தமிழ்ச்சிறுகதைகள் - கோலங்கள் சிறுகதை

 'எழுத்துலகத் தேனீ' முனைவர் ப.சரவணன் அவர்கள் "மயிர்" சிற்றிதழில் வாசிப்புக்கும் விமர்சனத்துக்கு எடுத்துக்கொண்டிருக்கும் முந்நூறு  தமிழ்ச்சிறுகதைகள் பட்டியலில் உயிர்மை தளத்தில் வெளியான எனது 'கோலங்கள்' சிறுகதையும் இடம் பெறுகிறது. தமிழின் முந்நூறு தமிழ்ச் சிறுகதைகளுள் ஒன்றாக எனது சிறுகதையைத் தெரிவு செய்து எடுத்துக் கொண்டமைக்கு முதற்கண் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை அவருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சிறுகதையை மிகவும் ஆழமாக வாசித்து உள்வாங்கி விமர்சித்திருக்கிறார். சிறுகதையின் அத்தனை அகவயமான சிந்தனைகளையும், அவற்றின் குறியீட்டுத்தன்மைகளையும், அவை சுட்டும் சமூக சிக்கல்களையும் தவறாமல் உள்வாங்கியிருக்கிறார் என்பதை அவரது விமர்சனம் காட்டுகிறது. அவரது விமர்சனம் தேர்ந்த இலக்கிய வாசகனின் விமர்சனமாக அமைந்திருக்கிறது. 


"மயிர்" தளத்தில் அவரது விமர்சனப் பார்வையை வாசிக்க பின் வரும் சுட்டியை சொடுக்கவும். 



முந்நூறு தமிழ்ச் சிறுகதைகள் – 195.வழமைகளின் சிறை  (ராம்பிரசாத் எழுதிய ‘ கோலங்கள்’ சிறுகதையை முன்வைத்து…)

தனிமனித மனத்தின் அசைவுகளையும் மரபுவழிப்பட்ட சமூகக் கட்டமைப்புகளையும் நுட்பமாக ஆராயும் எழுத்தாளர்களில் ராம்பிரசாத் குறிப்பிடத்தக்கவர். அவர் எழுதிய ‘கோலங்கள்’ என்ற சிறுகதை,  குடும்பத்தின் வதிவிடப் பின்னணியில் இயங்கும் வழமைகள், தலைமுறைகளின் சிந்தனை மோதல்கள், மற்றும் கணிக்கப்பட்ட வாழ்க்கையின் சலிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட அசல் வாழ்வியல் ஆவணமாகும். 

தலைமுறை சொத்துக்களின் பாதுகாப்பில் சோம்பேறித்தனமான இளைய தலைமுறையின் பார்வைக்கும் சம்பிரதாயங்களை ஒருபோதும் மாற்ற விரும்பாத மூத்த தலைமுறையின் (ஜோதி அத்தை) உலகத்திற்கும் இடையிலான மோதலை இக்கதை பேசுகிறது.

கதையின் கதையாசிரியர் எந்தவிதமான பொருளாதாரச் சுமையோ அல்லது உழைப்புச் சுமையோ இல்லாத வசதியான குடும்பத்தின் நான்காம் தலைமுறை வாரிசு. “அப்பன் தாத்தன் சொத்துக்கள் ஏக்கர் கணக்கில் வானக்கூரையின் கீழ்ப் படர்ந்து கிடக்கின்றன” என்று பெருமிதத்துடன் தொடங்கும் அவனது வாழ்க்கை, எந்தவொரு இலக்கும் இல்லாமல் காலத்தை நகர்த்தும் தனிமனிதனின் இருப்பியல் நெருக்கடியைக் காட்டுகிறது. ராத்திரி பன்னிரண்டு மணி வரை விழித்திருந்துவிட்டு காலை எட்டு மணிக்கு மேல் எழும் அவனது வாழ்க்கை முறை, அவனது சமூகச் சூழலிலிருந்து அவனைத் தனிமைப்படுத்துகிறது.

அவன் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் முடங்கிக்கிடப்பதற்குக் கூறும் காரணங்கள் அவனது அகச் சோம்பேறித்தனத்தின் வெளிப்பாடாகும். ஆனால், அவன் தன் வீட்டின் ஜன்னல் வழியாகப் பார்க்கும் உலகத்தை மிகக் கூர்ந்து கவனிக்கிறான். பக்கத்து வீட்டு ஜோதி அத்தையின் கோலங்களை அவன் ஒரு கலையாகப் பார்ப்பதைவிட, அது சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட வழமைச் சடங்கு என்று விமர்சனப் பார்வையோடு அணுகுகிறான். அவனது இந்தச் சுயம் மற்றும் தனிமை, அவனுக்குச் சமூகத்தின் மீதான விசித்திரமான பார்வையைக் கொடுக்கிறது.

ஜோதி அத்தை தெருவில் பிரியமானவளாகவும் நேர்த்தியானவளாகவும் அறியப்படுவதற்கு அவளது கோலங்களே காரணம். கதையாசிரியர் கூறுவது போல், கோலம் என்பது வெறும் அழகுணர்ச்சி மட்டுமன்று; அது பாதுகாவல் அரண்.

“ஜோதி அத்தையின் வீட்டுக்கோலம் ஒருவகையில் பாதுகாவல் அரண். அழகாக இருக்குமென்பதால் எல்லோர் பார்வையும் அதன் மீதே படிவதால் சாலையோரம் இருக்கும் ரோஜாச்செடிகள் தப்பிவிடும். யாரும் அதன் பூக்களை கிள்ள மாட்டார்கள்.”

சமூகத்தின் வன்முறையிலிருந்தும் அத்துமீறல்களிலிருந்தும் வீட்டைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் குறியீட்டுச் சடங்குதான் கோலம். ஜோதி அத்தை ஒவ்வொரு நாளும் எந்தெந்தக் கிழமைகளில் என்னென்ன கோலங்களைப் போட வேண்டும் என்பதைத் துல்லியமாக வரையறுத்து வைத்துள்ளாள். புள்ளி வைப்பதில் தொடங்கி, கோடுகளை இணைப்பது வரை அவளிடம் இயந்திரத்தனமான ஒழுங்கு உள்ளது. இந்த ஒழுங்கு அவளுக்கு மனநிறைவைத் தந்தாலும், கதையாசிரியனின் பார்வையில் அது சலிப்பூட்டும் வழமையாகும்.

கதையின் மைய விவாதம் கோலங்களைப் பற்றிய உரையாடலில்தான் நுழைகிறது. திங்கள் கிழமைகளில் பதினாறு புள்ளி கோலம் போடும் ஜோதி அத்தையிடம் கதையாசிரியர் வைக்கும் வாதம் வாழ்வியலின் ஆழமான தத்துவத்தைக் கொண்டுள்ளது. ஒரேகோலத்தை வாரம்தோறும் திரும்ப திரும்பப் போடுவதில் என்ன சவால் இருக்கிறது? எந்தப் புள்ளியுடன் எந்தப் புள்ளியை இணைக்க வேண்டும் என்ற முன்தீர்மானம் வந்துவிட்டால், அங்கு வாழ்வின் எதிர்பாராத தன்மை செத்துவிடுகிறது என்பது அவனது வாதம்.

ஆனால், ஜோதி அத்தையோ பழக்கத்தையும் மரபையும் மீறத் தயாராக இல்லை. அவளுக்குப் பார்வையாளர்களின் அங்கீகாரமும் சமூகத்தின் பொதுவான அழகியல் விதிமுறைகளுமே முக்கியம்.

“ஊருன்னா நீ ஒருத்தன் மட்டும் தானா? எத்தனை பேரு? எல்லாருக்கும் பொதுவா புடிச்சிருக்கணும்ல? நேர் கோடுதான் சரி இந்த இடத்துக்கு” என்று அவள் கூறுவது, தனிமனிதனின் ரசனையைவிடச் சமூகத்தின் பொதுப்புத்தி எப்படிக் கோலங்களையும் வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது என்பதைக் காட்டுகிறது. 

ஜோதி அத்தை தன் வாழ்நாளின் ஒவ்வொரு செயலையும் ஒரு வாய்ப்பாடு போல வடிவமைத்துக் கொண்டுள்ளாள். ஞாயிற்றுக்கிழமை வேலைப்பளுவைத் தவிர்க்க திங்கள் கிழமை பதினாறு புள்ளி கோலம் போடும் அவள், அந்த நடைமுறையை ஒருபோதும் கேள்விக்குள்ளாக்குவதில்லை.

ஜோதி அத்தையின் மகளான மீனா, பொறியியல் படித்து மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்பவள். அவளது வாழ்க்கை முறை ஜோதி அத்தையின் பாரம்பரிய உலகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. மீனா தன் காதலைத் தன் சுய விருப்பத்தின் அடிப்படையில் தீர்மானிக்கிறாள்; ஆனால் ஜோதி அத்தையோ சாதி, அரசு உத்தியோகம் அல்லது பாரம்பரியமான கட்டமைப்பிற்குள் மாப்பிள்ளை தேடுகிறாள்.

இங்குத் தலைமுறைகளுக்கு இடையிலான மோதல் வெளிப்படுகிறது. ஜோதி அத்தை மின்கட்டணம் செலுத்த வெயிலில் வரிசையில் நிற்பவள்; ஆனால் அவளது வீட்டிலோ வைஃபை மற்றும் மடிக்கணினிகள் உள்ளன. நவீன தொழில்நுட்பம் வீட்டுக்குள் நுழைந்துவிட்டாலும், அக அளவில் மரபுச் சிந்தனைகளும் பழைய கட்டமைப்புகளும் மாறவில்லை என்பதை இது காட்டுகிறது. மீனா தனது வாழ்வின் கோலத்தைத் தன் இஷ்டப்படி வளைத்துக்கொள்ள முயல்கிறாள்; ஜோதி அத்தையோ தன் மூதாதையர் வரைந்த நேர்கோடுகளையே தன் வாழ்வின் விதியாக நம்புகிறாள்.

சிறுகதையின் இறுதியில் கதையாசிரியர் ஜோதி அத்தையுடன் நடத்திய உரையாடலைத் தொகுத்துப் பார்க்கும்போது, மனிதர்களின் வாழ்க்கை என்பதும் புள்ளிகளையும் கோடுகளையும் போன்றதுதான் என்பதை உணர்கிறான்.

“புள்ளிகளும், அவைகளை இணைக்கும் கோடுகளும் என் மனக்கண் முன் ஒரு சிலந்தி வலையைப்போல் பின்னிக்கிடந்தன. அதன் மீது சிலந்திக்கு பதிலாய் ஒரு பட்டாம்பூச்சி அலைபாய்ந்துகொண்டிருந்தது.”

‘சிலந்தி வலை’ என்பது சமூகத்தால் மனிதர்களின் மீது திணிக்கப்படும் இறுக்கமான விதிகளும் வழமைகளும் ஆகும்; பட்டாம்பூச்சி என்பது அந்தச் சட்டகங்களை மீறிப் பறக்கத் துடிக்கும் தனிமனிதனின் சுதந்திரமான ஆன்மா. ஜோதி அத்தையைப் போன்றவர்கள் அந்தச் சிலந்தி வலையையே பாதுகாப்பாக நம்பி வாழ்கிறார்கள்; ஆனால் கதையாசிரியனைப் போன்றோரும் மீனாவைப் போன்றோரும் அந்த வலையைத் தாண்டிப் பறக்க விரும்புகிறார்கள்.

எழுத்தாளர் ராம்பிரசாத்தின் ‘கோலங்கள்’ சிறுகதை, நம் அன்றாட வாழ்வில் நாம் பின்பற்றும் சம்பிரதாயங்களும் வழமைகளும் எப்படி நம்மை ஒரு வட்டத்திற்குள் முடக்குகின்றன என்பதைக் கூர்மையாகவும் அழகியலோடும் விவரிக்கும் படைப்பாகும்.

– – –





3rd Honorable Mention - L. Ron Hubbard Writers of the Future Contest, 2026

I will be receiving another "Honorable Mention" from the L. Ron Hubbard Writers of the Future Contest in 2026.

Guess what!! 

This will be my 3rd HM overall and my 2nd from the L. Ron Hubbard Writers of the Future Contest.

This is for "Unknown Variable," which is one of the component stories from "Computa" - a mathematical fiction short story collection. "Unknown Variable" is a fictional work based on the Infinite Monkey Theorem.



 

சிறுகதை விமர்சனங்கள் - 2

சிறுகதை விமர்சனங்கள் - 2


அடுத்த கதை அறிபுனை எழுத்தாளர் தன்ராஜ் மணி எழுதியிருக்கும் 'கேளிர்'..

நாயகன் இரு நூறு ஆண்டுகளுக்குப்பிறகு தன் ரத்த உறவு தலைமுறைகளைக் காண வருகிறான்.. வந்தவன் தன் உறவுகளைக் கண்டானா, அவனது விருப்பம் நிறைவேறியதா என்பதுதான் கதை.. 

சிறுகதையின் பல இடங்கள் ரசிக்கும் படியாக இருந்தன.. //பூமியில் வசித்ததைவிட வேறு கோளங்களிலும் பெருங்கற்களிலும் நான் மாறி மாறி வசித்த நாட்கள் அதிகம்// என்று சொல்வதாக இருக்கட்டும்.. ஆக்ஸிஜன் உட்கொள்ளலில் உள்ள அளவு வித்தியாசங்களில் உடல் பழகத்திணறுவதை காட்சிப்படுத்தியிருந்தது நுணுக்கத்தைக் காட்டுவதாக அமைகிறது.. கதைக் கருவான, புதியவர்களுக்கென பழைய தலைமுறைகள் இடம் விட்டு பூமியை விட்டு வெளியேற வேண்டும் என்கிற நிர்பந்தம் உருவாகும் ஒரு எதிர்காலத்தில் கதையை நிகழ்த்திக்காட்டியிருக்கிறார் ஆசிரியர்.. அதனை நன்றாகவே செய்திருக்கிறார்... கூடுமானவறை தமிழ் வார்த்தைகள் பயன்படுத்த மெனக்கெட்டிருப்பது தெரிகிறது.. எடுத்துக்கொண்ட கோணத்தில், கையாண்ட தளத்தில் சிறுகதை மிக நன்றாகவே வந்திருக்கிறது...

எதை எதிர்பார்த்து,  தலைமுறைகள் தொடர்ச்சிக்கு மனித மனம் விழைகிறதோ அதுவே நடக்காதென்றால்... உண்மையிலேயே சிந்தனையைத்தூண்டும் ஒரு நல்ல கேள்வியை எழுப்பும் ஒரு நல்ல சிறுகதை..


https://www.aroo.space/2022/10/09/kelir/


அடுத்தது அறிபுனை எழுத்தாளர் நகுல்வசனின் 'கடவுளும் கேண்டியும்' சிறுகதை

அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில், ‘பிராட்வே’ மற்றும் ‘எஸ்பிளனேடு’ சந்திப்பில் ஊபர் (Uber) வண்டிக்காகக் காத்திருக்கும் முப்பது வயது இளைஞனான கந்தசாமி எங்கு வேண்டுமானாலும் தோன்றும் “கடவுள்”ஐ சந்திக்கிறான். இருவரும் தேனீர் அருந்த அமர்கிறார்கள். அப்போது கேண்டி விஆர் தொழில் நுட்பம் குறித்து விளக்குகிறான்.

அந்த வீஆர் தொழில் நுட்பம் குறித்து விளக்கத்தின் ஒரு பகுதியாக, கடவுளையே ஒரு சிமுலேஷன் எடுத்துக்கொள்ளச்சொல்லி பரிந்துரைக்கிறான் கேண்டி. அதில் என்னாகிறது, கடவுள் என்னானார் என்பதுதான் கதை. சற்று பெரிய கதைதான். தனிப்பட்ட முறையில் நான் ஆர்வப்பட்ட இடம், குறங்கு தேற்றம் குறித்து வந்த பத்தி தான்.

CREATION vs CREATOR  என்பது உலகமெங்கிலும் விவாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் ஒரு இருமை. ரிட்லி ஸ்காட்டின் ப்ரோமேதியஸ் எனக்கு மிகவும் விருப்பமான, இந்த CREATION vs CREATOR இருமையைக் கையாளும் ஒரு பிரபல்யமான கதை..  இந்தக்கதையும் அதைப் பற்றியதாகத்தான் அமைவது சிறப்பு... எடுத்துக்கொண்ட கோணத்தில், கையாண்ட தளத்தில் சிறுகதை மிக நன்றாகவே வந்திருக்கிறது...


https://www.aroo.space/2019/04/05/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/


சிறுகதை விமர்சனங்கள் - 1

 சிறுகதை விமர்சனங்கள் - 1

****************************************


ரா.கிரிதரன் எழுதிய 'உயிர்த்தாம்பு' சிறுகதை சற்று நீளமான சிறுகதை. விரிவான டீடெயிலிங் ஒரு முக்கிய காரணம். ஃபார்மா நிறுவனங்கள் எப்படி இயங்குகின்றன, அவைகளின் நெருக்கடிகள் என்னென்ன, ஒரு தொழில் நுட்பத்தை சுவீகரிப்பதில் அவர்களுக்கு இருக்கும் அவசரங்கள், சிக்கல்கள் ஆகியவைகளுக்கு என்ன காரணங்கள் என்பதையெல்லாம் சிறுகதையில் கதாபாத்திரங்களின் வசனங்கள் வழியாக, கதையின் போக்கு வழியாக விரிவாக விளக்குவதை சாதகமான அம்சமாகப் பார்க்கிறேன்.

https://solvanam.com/2024/06/09/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/

சுருக்கமாகச் சொல்வதானால், இயற்கையின் நியதிகளையும் அதன் வரம்புகளையும் மீற முயல்வது ஆபத்தானது என்ற தத்துவார்த்த எச்சரிக்கை, இயற்கையுடன் இயைந்து வாழ வேண்டிய அவசியத்தை உணர்த்தும் சிந்தனை ஆகியவைகளே சிறுகதை.

தொடர்ந்து அவரது ஆக்கங்கள் தேடி வாசிக்க முயன்றபோது கிட்டியது 'ஏஐ கனவில் வந்த கவிஞர்'. கவிஞனும் செயற்கை நுண்ணறிவும் சந்திக்கும் புள்ளி. 'துகள் முதல் பெரும் வெடிப்பில் பிறக்கும் கருஞ்சக்தி வரை நடப்பவற்றை பார்ப்பவர்கள் என யாரும் இல்லை.. இப்படி யாருமே முழுமையாகப் பார்க்க முடியாத ஒரு நிகழ்வுகளின் கோலம் உருவானாலும் ஆகாவிட்டாலும் எஞ்சப்போவது என்ன?' இந்தத் தத்துவ வரிகள் ஈர்க்கும்படியாக இருந்தது.

https://solvanam.com/2025/02/09/%e0%ae%8f%e0%ae%90-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d/


அடுத்ததாக வாசித்த விவேக் சுப்பிரமணியனின் 'பில்லியன் நிழல்கள்' யதார்த்தம் என்பது என்ன? நிழல் என்பது என்ன? எப்போது பிம்பம் நிஜமாகிறது? நாம் நிஜத்தில் இருக்கிறோமா? பிம்பத்தில் இருக்கிறோமா? என்கிற கேள்வியை எழுப்பி பதில் தேட வைக்கிறது கதை.

வாசகனுக்குப் பரிச்சயமில்லையென்றால், ஷ்ரோடிங்கரின் பூனை, டபுள் ஸ்லிட் பரிசோதனைகளைத் தேடி வாசிக்க வைக்கும்.

https://solvanam.com/2026/05/24/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

நிச்சயமாக இச்சிறுகதைகள் வாசிப்பவர்களை விஞ்ஞானத்தைத் தேடி வாசிக்க வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. சிறுகதைகளின் நோக்கங்களுள் ஒன்றும் அதுதான் இல்லையா?

https://en.wikipedia.org/wiki/Double-slit_experiment

Monday, 9 November 2026

டாக்சிக் - சிறுகதை

 வாசகசாலை இதழ் 128ல் எனது சிறுகதை. எனது சிறுகதையைத் தேர்வு செய்து வெளியிட்ட வாசகசாலை ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகள்🙏🙏🙏


https://vasagasalai.com/128-story-toxic/




Thursday, 5 November 2026

ராமாயணம்!!

 ராமாயணம், ஒரு கதை அல்ல. அது இப்போதிருக்கும் எந்த நாட்டுக்கும் சொந்தமான கதையும் அல்ல. ராமாயணம் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் காலத்தில் இப்போதிருக்கும் நிலப்பரப்புகள் இருக்க வாய்ப்பில்லை.


உதாரணமாக, ராவணனின் ஊர் தென் அமெரிக்கா என்றும், சுக்ரீவன் ராவணனின் இடத்தைத் தேடி அடைந்த இடமே பெருவில் உள்ள PARACUS CANDELABRA என்றும் கூட கதைகள் உண்டு. இதெல்லாம் உண்மையா என்றால், 'தெரியாது' என்று தான் சொல்ல வேண்டும். 

 

நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்படவேண்டும். உலக நாகரிகங்களில் எஞ்சியுள்ள இது போன்ற பழங்கதைகள் உலகத்திற்கே பொதுவாக்கப்பட்டு இப்போது கிடைக்கும் அகழ்வாராய்ச்சி முடிவுகளை வைத்து சரிபார்த்தல் செய்யப்படவேண்டும். இந்த ஒட்டுமொத்த செயல்பாட்டில் கண்டங்கள் கடந்த  நேர்மையும், மனித இனத்தின் சரித்திரம் தேடும் உண்மையான தேடலும் மட்டுமே இருக்க வேண்டும். இதுவெல்லாம் சாத்தியப்பட்டால் உண்மைக்குப் பக்கமாக நாம் செல்லக்கூடும்.

 

ராமாயணம் செவிவழிச்செய்தியாகக் கடத்தப்பட்ட பல கதைகளின் தொகுப்பு. இந்தத் தொகுப்பே ஒவ்வொரு நிலப்பரப்பிலும் வெவ்வேறானதாக இருக்கிறது. இந்தியாவில் ஒரு கதை என்றால், இந்தோனெஷியாவில் சற்றே மாற்றங்களுடன், ஜப்பானிலும் வேறு சில மாற்றங்களுடன்... இப்படி உலகம் முழுவதும் பல நாகரிகங்களில் ராமாயணக்கதைகள் கிடைக்கின்றன.


இது எல்லாமும் கூட்டாக என்ன சொல்கிறதென்றால், ராமாயணம் உலகத்தின் கதை. ஒட்டுமொத்த மனித இனத்தின் கதை. இந்தியாவோடோ, இந்தியாவின் எதோடுமோ இணைக்காமல் புரிந்துகொள்ளப்படவேண்டிய கதை. இந்தப் புரிதலோடு ராமாயணத்தை அணுகுமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். 





Tuesday, 3 November 2026

தமிழ் இலக்கிய ஆளுமை எழுத்தாளர் இரா.முருகன் அவர்களின் மறைவுக்கு, என் இதயப்பூர்வ அஞ்சலி.🙏🙏🙏

 



2022ம் ஆண்டில் ஜீரோ டிகிரி சிறுகதைப்போட்டிக்கு அவரே நடுவர். அந்த ஆண்டில் தான் எனது அறிபுனை சிறுகதை சோஃபியாவுக்கு விருதும் கிடைத்தது. அறிவியலுக்கும், அறிவியல் பார்வைகளுக்கும், எதிரானதாகத்தான் தமிழ் சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இயங்குகிறது. ஆன்மீகம், அதன் அடிப்படையிலான ஜாதிக்கட்டுமானம், அதன் அடிப்படையிலமைந்த அரசியல், குழு மனப்பான்மைகள், சமூக செயல்பாடுகள், இவற்றை மையமாகக் கொண்ட பெருத்த எண்ணிக்கையிலான மக்கள் கூட்டம், அவற்றை முதலீடாகக் கொண்ட மீடியாக்கள் இவைகளை அஸ்திவாரமாகக் கொண்ட சமூக அமைப்பு தான் நம்முடையது. இம்மாதிரியான சமூகத்தின் பெரும்பாலான கதைக்களங்கள் இவற்றைச் சார்ந்தே அமைந்தும் விடுவது இயற்கையாகவே நிகழ்ந்துவிடுகிறது. யாரைக் குறை சொல்வது என்றே சமயத்தில் தெரிவதில்லை. 'நல்ல கதைகள் எத்தனையோ இருக்கே' என்றால், 'மக்கள் பாக்கமாட்டங்க பாஸ்' என்றே பதில் வருகிறது. இந்தச் சமூகத்தில் எப்படிப்பட்ட குறைகளைச் சுட்டும் கேள்விகளுக்கும், அங்கே இங்கே என்று சுற்று இறுதியில் அது 'மக்கள்' மீதே திரும்புகிறது.
ஆயினும், யாரேனும் மக்களால் மறக்கடிக்கப்படும் அறிவியலை நினைவில் கொண்டுவர முயற்சித்துக்கொண்டே இருக்கிறார்கள். தமிழில் அறிவியல் புனைவுகள் எழுதும் ஒவ்வொருவரையும் இந்த அரும்பணியை மேற்கொள்பவர்கள் என்று அடையாளப்படுத்தலாம். ஒவ்வொருவரின் பங்களிப்புகள் வெவ்வேறானதாக இருக்கலாம். ஆனால், அவர்களின் முயற்சி, நோக்கம் எல்லாமும் அறிவியலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதாகத்தான் இருக்கும். இருளில் கடலில் தொலைந்திருக்கையில் தூரத்தே தென்படும் கலங்கரை விளக்கம் போல.
இந்தப் பின்னணியில், சமயத்தில், எழுத்தாளர் இரா.முருகன் அவர்கள் நடுவராக இருந்திருக்காவிட்டால், 2022 ஜீரோ டிகிரி விருதுக்கு எனது அறிபுனை 'சோஃபியா' தேர்வாகியிருக்காது என்று அவ்வப்போது தோன்றும்.
எழுத்து பழகத்துவங்கிய துவக்க காலத்தில் சுஜாதா முன்மாதிரியாக இருந்திருக்கிறார். ஏனெனில், பொறியியல் வல்லுனராகப் பணியில் வெற்றிகரமாக இருந்துகொண்டே எழுத்தென்னும் குதிரை மீதும் சவாரி செய்துகாட்டினார். இது போல் ஐடியில் இருந்துகொண்டே எழுத்தையும் வெற்றிகரமாக மேற்கொள்ளும் அனைவரையும் முன்மாதிரியாகப் பார்க்கிறேன். இரா.முருகன் சாரையும் அப்படித்தான் அறிந்திருக்கிறேன். அவரது மறைவுச் செய்தி சற்று பலவீனமாக உணரவைக்கிறது. ஒரு பெரிய ஆற்றல் மிகுந்த, நாற்பதாண்டுகால அனுபவம் மிக்க கை குறைவதைப் போலத் தோற்றமளிக்கிறது. இந்த வெற்றிடத்தையெல்லாம் எதைக்கொண்டும் நிரப்புவதற்கில்லை.
அவரிடம் நான் பேசியதில்லை. அமெரிக்க வாழ்வு யாரையும் சந்திக்க அனுமதிப்பதில்லை. தொலைபேசி உரையாடல்கள் செயற்கைத்தன்மைகளுக்கு இடமளிப்பவை. எழுத்து மூலமாக வரும் நட்புகள், உறவுகளே எனக்கு நிலைத்து நின்றிருக்கின்றன. இப்போது என்னுடன் நெருக்கமாக இருப்பவர்கள் அத்தனை பேரும் ஏதோ ஒரு ஆக்கத்தின் வழி, கடிதப்போக்குவரத்தில் துவங்கி, உரையாடல்கள் வழி நிலைத்தவர்களே. எனக்கு இந்த ரூட் தான் வேலை செய்கிறது. அப்படியான ஒரு வழித்தடம், இரா.முருகன் சாருடன் அமையாததில் வருத்தமே என்று சொல்வதைக்காட்டிலும், இதோ இன்றமையும், நாளை அமைந்துவிடும், இன்னொரு மேலான நல்ல தருணத்தில் அமைந்துவிடும் என்ற ஒத்திப்போடுதலில் நிஜமாகாமல் போனவைகள் என்று சொன்னால் மிகையாகாது.
தமிழ் இலக்கிய ஆளுமை எழுத்தாளர் இரா.முருகன் அவர்களின் மறைவுக்கு, ஒரு சக அறிவியல் புனைவெழுத்தாளனாக, என் இதயப்பூர்வ அஞ்சலி. 🙏🙏🙏

Sunday, 25 October 2026

கடவுளைத் தேடி - அறிபுனை குறும்படம்

 கடவுளைத் தேடி - அறிபுனை குறும்படம்

**************************************************


திரை என்பது வெகு ஜன ஊடகம். மக்களை பெருமளவில் சென்றடைய திரை வடிவம் தான் ஒரே வழி. சில நூறு பேர்களிலிருந்து ஒரு ஆயிரம் பேர் வரை தான் சென்று சேர இயலும். இந்த எல்லையைத் தாண்டி ஒரு மனிதனின் கற்பனை செல்ல வேண்டுமானால், அதற்குத் திரை வடிவமே ஒரே வழி. ஆனால், அதில் தான் எத்தனை பிரச்சனைகள்?

ஒரு சில சுயநலவாதிகளால், நல்ல திறமைகள் திரை உலகை, அதன் வழி மக்களைச் சென்றடையும் பாதை அடைக்கப்பட்டுவிடுகிறது. விளைவை, மெளன சாட்சிகளாய் பார்ப்பது அன்றி நமக்கு வேறு திக்கில்லை என்ற நிலை இருந்துவந்தது.

முன்னெல்லாம் ஒரு குறும்படம் உருவாக்கவே குறைந்தபட்சம் ஐம்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் செலவாகும் என்றிருந்தது. எனது கதைகளில் ஒன்றைக் குறும்படமாக எடுக்கலாம் என்று காலை முன்வைத்துவிட்டு, நிதர்சனம் புரிந்து வைத்த காலை திரும்ப எடுத்துக்கொண்டுவிட்டேன். அதெல்லாம் அமெரிக்கா வரும் முன்னான கதை.

காமிராவுக்கு ஒருவர், நடிக்க ஒருவர், லைட் பிடிக்க மற்றொருவர் என்று ஒரு திரைவடிவம் பலரைச் சார்ந்ததாக இருந்தது. அந்த 'பலர்' இல்லாமல் ஒரு திரை வடிவம் சாத்தியமில்லை. அந்தப் பாதையில், அந்தப் பயணத்தில் தான் படைப்பாளர்கள் தங்கள் அசலான படைப்பை முன்வைக்க வாய்ப்பின்றி, அல்லது வாய்ப்பு மறுக்கப்பட்டு, சமாதானங்களுக்கு உள்ளாகி, எடுக்க நினைத்தது ஒன்று எடுத்தது வேறொன்று என்றாகிப்போகிறார்கள். அறுநூறு கோடி ரூபாய்களால் கூட ஒரே ஒரு நல்ல ஃப்ரேமை உருவாக்க முடியாமல் போகிறது.

இதோ தொழில் நுட்பம் வந்துவிட்டது. நூறு கோடி செலவு செய்யப்பட்டும் மொக்கையாக இருக்கும் ஒரு அறிவியல் புனைவுப் படம், பார்க்கும்போதெல்லாம், 'கதையைத் தாண்டி சினிமாவாக்க என்னென்ன தேவை? நாம் ஏன் செய்யக்கூடாது?' என்று பல முறை யோசிக்க வைத்திருக்கிறது. உதவி இயக்குனர்கள், காமிராமேன், லைட்மேன், கொண்ட யூனிட், உபகரணங்கள், அது இது என்று ஏகப்பட்டது இருக்கிறதே என்ற எண்ணம் மலைக்க வைத்து ஒதுங்கிப் போக வைத்திருக்கிறது.

இன்றைக்கு இருக்கும் தொழில் நுட்பம், அதையெல்லாம் virtualஆக நமக்குக் கொடுத்துவிடுகிறது. ஆக, தொழில் நுட்பம் இருக்கையில், நமக்கு ஒரு சினிமாவை உருவாக்கத்தேவையான உதவி இயக்குனர்கள், காமிராமேன், லைட்மேன், கொண்ட யூனிட், உபகரணங்கள், என்று எல்லாமும் நமக்கும் கிடைத்துவிடுகிறது. virtualஆக.

என்னதான் தொழில் நுட்பம் உதவினாலும், வீடியோவின் முதன்மை இயக்குனர் நாம் தான்.

யூட்யூப் திறந்தால், பல்வேறு நாட்டவர்களின் அத்தனை அறிவியல் புனைவுக் குறும்படங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் இந்தியக் குறும்படங்களைத் தேடினால், பெரும்பாலும் mythology சார்ந்த படங்களாகவே இருக்கின்றன. அல்லது, பேய் படங்கள். அல்லது ஒரேயடியாக மாயாஜாலமாகப் போய்விடுகின்றன. அதுவும் இல்லாவிட்டால், இருக்கவே இருக்கிறது, காலப்பயணம். இப்படி ஒரு குறுகிய டெம்ப்ளேட்டுக்குள் அடங்கினவைகளாகவே இருக்கின்றன.

டெம்ப்ளேட்டுக்குள் அடங்காத, மிதாலஜி பக்கம் போகாத, மாயாஜாலம் என்று ஜல்லி அடிக்காத, அடித்துத்துவைத்த காலப்பயணக்கதையாக இராத இந்திய அறிவியல் புனைவுக்கதைகள் திரைவடிவில் இல்லை. அவ்வெற்றிடத்தை நீக்குவது இப்பத்தியுடன் துவங்கும் எனது சானலின் நோக்கம் எனலாம். 'வர்ஷா ஸ்டூடியோஸ்' அதற்கெனவே உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால் மிகையில்லை.

இதோ எனது தமிழ் நாடு அரசு விருது பெற்ற அறிவியல் புனைவுத் தொகுப்பில் உள்ள ஒரு கதையான 'கடவுளைத் தேடி' சிறுகதையை திரைவடிவில் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தின் உதவியுடன் நானே உருவாக்கி இருக்கிறேன்.

சிறுகதை இங்கே:
ஆங்கிலத்தில்:
https://www.metastellar.com/fiction/searching-for-god/

தமிழில்:
https://solvanam.com/2020/09/27/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf/

மொத்தம் 36 மணி நேரங்கள். ஒன்றைரை நாட்கள். வீடியோ தயார். இது எனது முதல் முயற்சி. ஆதலால், ஆங்காங்கே ஏதேனும் குறைகள் இருந்தால் பொறுத்தருளவும். இது முதல் வீடியோ என்பதால் பல படிப்பினைகள். அடுத்தடுத்த வீடியோக்கள் இன்னமும் எளிமையாக, விரைவாக குறைந்த செலவில் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை இந்த வீடியோ தந்திருக்கிறது.

என்னிடம் நூறு கோடியெல்லாம் இல்லை. ஆனால், நல்ல அறிவியல் புனைவுக் கதைகள் இருக்கின்றன. அவைகளைக் குறைந்த செலவில் திரை வடிவில் தர முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.

எனது இந்த வீடியோவிற்கு இணைய நண்பர்கள் ஆதரவளிக்குமாறு இணைய நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் வீடியோ என்பதால் மானிடைசேஷன் இல்லை. மக்களுக்கு இந்திய அறிவியல் புனைக்கதைகள் சென்று சேர வேண்டும், அறிவியல் பார்வைகளைப் பரப்புவதன் மூலம் மூடவழக்கங்களிலிருந்தும், அரசியல் திணிக்கும் நச்சான மத உணர்வுகளிலிருந்து மக்களை விடுவித்து, உலகளாவிய அறிவியல் அடிப்படையிலான வாழ்க்கை முறைக்கு மக்களைச் செலுத்துவதற்குமான நோக்கங்களுக்கான மட்டுமே இந்த வீடியோக்களை உருவாக்குகிறேன். மக்களிடம் நான் வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். வீடியோவை அவரவர், அவரவர் நட்புவட்டத்தில் பகிரவும். ஒரு தமிழனாக உலகத்தரமான அறிவியல் புனைக்கதைகளை இச்சானல் மூலமாக உருவாக்கி மக்களுக்குப் பகிர்வதே நோக்கம். ஆதரவளிக்குமாறு இணைய நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

youtubeல் வீடியோவைக் காண மற்றும் பகிர, பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்

Here is a youtube channel for Indian science fiction short films.
Please subscribe and share 🙏🙏🙏

• #AIFilmmaking
• #AImovie
• #AIFilmmaking
• #scifi
• #sciencefiction
• #ArtificialIntelligence
#FutureTech
#CREATORvsCREATION
#HumanoidRobot
#HumanoidRobotics
#IndianSciFi or #IndianCinema
#kollywoodscifi
• #tamilaishortfilm
• #TamilSciFi
• #aifilmmakingtamil
• #tamilcinemaai

Wednesday, 14 October 2026

உங்கள் நூல்களுக்கு விமர்சனங்கள் அதிகம் இல்லையே?

கேள்வி: 

உங்கள் நூல்களுக்கு விமர்சனங்கள் அதிகம் இல்லையே?


பதில்: 

"நவீன சிறைச்சாலைத் தத்துவம்" சிறுகதையை எடுத்துக்கொள்ளுங்கள். 

https://solvanam.com/2024/11/10/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/

நாயகன் சிறையிலிருந்து தப்பிக்க நினைக்கிறான். சிறைக்கைதிகள் மூலம் ஒரு அதிர்வெண் கிடைக்கிறது. அதன் வழி ஒரு கிரகத்தில் இறங்குகிறான். அக்கிரகத்தில் காலம் வேறுவிதமாய் வேலை செய்கிறது. கிரகத்தில் ஒருவர் வெளி உலகுடன் தொடர்பு கொள்ளக் கருவிகள் வைத்திருக்கிறார். கிரகமோ ஒரு கருந்துளையைச் சுற்றி வருகிறது.

இச்சிறுகதையை வாசித்துவிட்டு ஒருவர், 'அதெப்படி கருந்துளையிலிருந்து தொடர்பு கொள்ள முடியும்? Nothing escapes from its immense gravity. இல்லையா?" என்றார்.

இது ஒரு பிரச்சனை. தமிழில், அறிவியல் கட்டுரைகள் எழுதுபவர்களால் கருந்துளைக்கருகில் Nothing escapes from its immense gravity என்கிற அளவில் தான் அறிவியல் விளக்கப்பட்டிருக்கிறது. 

இது போன்ற விளக்கங்களுடன் எனது சிறுகதைக்குள் நுழைபவர்கள், 'இவர் சொல்வதெல்லாம் நிஜமாகவே சாத்தியமா?' என்கிற கேள்வியோடு கடந்து போய்விடுவதில் ஆச்சர்யம் என்ன? இந்த எண்ணத்துடன் அவர்களால் விமர்சனம் எழுத இயலாது. மேற்கொண்டு தெரிந்துகொண்டு எழுதலாம் என்று ஒத்திப்போடுவார்கள். அது, நாளாகி, நாட்கள் மாதங்களாகி, ஏனைய முன்னுரிமைகளால் இறுதியில் அது காணாமலே போய்விடும்.

மட்டுமல்லாமல், கருந்துளைகளைச் சுற்றும் கிரகங்கள் குறித்த கதைகள் தமிழில் எத்தனை வெளியாகியிருக்கின்றன? யார் யார் அவற்றை எழுதினார்கள்? அது எப்படியெல்லாம் விமர்சிக்கப்பட்டிருக்கிறது? இது போன்ற தகவல்களைச் சேகரித்துப் பார்த்தாலும், காரணம் விளங்கும்.

எனது சிறுகதைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டால், அந்தத் தளங்களில் வந்து என்னால் விளக்க முடியும். உதாரணமாக, புத்தக வாசிப்புக் குழுக்களில் எனது நூல்கள் எத்தனை முறை விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதைக் கவனித்துப் பார்த்தால், இது நடக்க எத்தனை வாய்ப்புக்கள் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள இயலும். 

இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டி இருக்கிறது. "அறிவியல் வளர்ப்பது" என்பது ஒரு தனி நபர் முயற்சி அல்ல. அது, ஊர் கூடி இழுக்க வேண்டிய தேர். தனி நபராக என்னால் என்ன இயலுமோ அதைத்தான் என்னால் செய்ய முடியும். 

தமிழில் அறிவியல் கட்டுரைகள் நானே எழுதலாமென்றால், புனைவுகள் எழுதவே நேரமில்லாமல் செயற்கை நுண்ணறிவுடன் போராடிக்கொண்டிருக்கிறேன். குறைந்தபட்சம், எனது புனைவுகளை விளக்கியேனும் ஏதேனும் நிகழ்ச்சிகள் செய்யலாம் தான். பார்க்கலாம். வாய்ப்பமைகிறதா பார்க்கிறேன்.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், தமிழில், அறிவியல் கட்டுரைகளால் மக்களுக்குச் சென்று சேர்ந்திருக்கும் அளவினதான அறிவியல் ஞானம், எனது சிறுகதைகளைப்  புரிந்துகொள்ளப் போதுமானதாக இல்லை. எனக்கும் அதிகம் நேரமில்லை. நான் ஒற்றை ஆள் என்னத்தைப் பெரிதாகச் செய்துவிட முடியும்? எத்தனையைச் செய்து விட முடியும்? இந்தப் பிரச்சனைக்கு இப்போதைக்கு விடிவே இல்லை. அதனால் தான் என்ன நடக்கிறதோ அது நடந்து கொண்டிருக்கிறது.  இந்தச் சூழலில் எனக்கு, 'இறைவன் விட்ட வழி' என்று இருப்பதைக் காட்டிலும் வேறு வாய்ப்பிருக்கிறதா என்ன? 



Sunday, 11 October 2026

கம்ப்யூட்டா - ராம் பிரசாத் - சிறுகதை தொகுப்பு - பக்கங்கள் 116

 Boje Bhojan

#RM 258
ஆண்டு விழா _ 2025 : சிறுகதை தொகுப்பு
கம்ப்யூட்டா - ராம் பிரசாத் - சிறுகதை தொகுப்பு - பக்கங்கள் 116
புத்தகம் பற்றி :
மொத்தம் 9 தலைப்புகளும் 116 பக்கங்களும் கொண்ட இந்த புத்தகம் ஒரு கணிதம் சார்ந்த சிறுகதைகளின் தொகுப்பு. அது என்ன கணித அறிவியல் கதை பொதுவாக அறிவியல் சிறுகதை என்பது சுஜாதா முதல் இன்று பல எழுத்தாளர்கள் எழுதி கொண்டு இருக்கும் ஒன்று ஆனால் இது அதில் இருந்து வேறு பட்டு நிற்க காரணம் கணித சூத்திரங்கள் (formula) கொண்டு ஒரு கதை படைக்க பட்டு இருக்கிறது என்பதே .பொதுவாக maths is the universal language என்று ஒரு கூற்று உண்டு அப்படி பட்ட சிக்கலான கணிதத்தை வைத்து கதை சொல்லி இருக்கிறார் ஆசிரியர் அதற்கே அவருக்கு பாராட்டுக்கள் சொல்ல வேண்டும்.மேலும் தமிழில் கணிதத்தை மையமாக கொண்டு கதைகள் எழுத படுவது இது தான் முதல் தடவை என்று நினைக்கிறேன். சரி புத்தகம் பற்றி பார்ப்போம் முதல் கதை மடக்கை என்னும் கதை மடக்கை இதன் அர்த்தம் ஆங்கிலத்தில் logaritham ஆகும் logarthim பயன்படுத்தி ஒரு கதை எழுத முடியும் என்று சொன்னால் உண்மையில் நம்ப முடிகிறதா நம்பித்தான் ஆக வேண்டும் அப்படி ஒரு கதையை எழுதி இருக்கிறார் ஆசிரியர். அடுத்த தலைப்பு கண்காட்சி இந்த கதையில் விலை மதிப்பு இல்ல ஒரு வைரம் கண்காட்சியில் இருந்து திருட பட்டது திருடியது இவர் தான் என்று கண்டுபிடித்த பிறகும் திருடன் இவர் கிடையாது வேறு ஒரு ஆள் என கதை செல்கிறது கடைசியாக கதையில் ஒரு திருப்பம் வரும் போது நமக்கே ஆச்சரியமாக இருக்கும். இது போல் கைஸர் தடுப்பூசி ,நிகழ்தகவு , கூடை மனிதன் , முதல்வன் போன்ற கதைகளும் கணிதத்தை அடிப்படை கொண்டு எழுத பட்ட கதை கடைசி கதை பரிசியமற்ற மாறிலி என்று கதை அதில் ஒரு சூத்திரம் infinte monkey theorem உண்மையில் அந்த சூத்திரம் என்றால் என்ன அதற்கு கதைக்கும் என்ன சம்பந்தம் என்பதை படிக்கும் போது மிகவும் அருமையாக இருக்கும். மேலும் புத்தகத்தை பொறுத்த வரை கணித சமன்பாடுகள் கொண்டு உருவான கதைகள் அதனால் ஒன்றுக்கு இரண்டு முறை படிக்கும் போது தான் புரிந்து கொள்ள முடியும் ஆனால் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்