என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Thursday, 10 October 2024

பிக் பாஸ் - நாள் 4

 பிக் பாஸ் - நாள் 4


"இவர் அச்சுறுத்தலாக இருப்பார்..என்னுடைய கேமுக்கு இடைஞ்சலா இருப்பார்.. அதனால இவரை நான் நாமினேட் பண்றேன்.."

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மிகவும் பிரபல்யமான வாசகம் இதுவாகத்தான் இருக்கும்.

வாழ்க்கையின் அடி நாதமே இதுதான். 

நம்மை எல்லோரும் எளிதில் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால், அதன் பொருள், நாம் யாருக்கும் அச்சுறுத்தலாக இல்லை என்பதுதான். பெண்களில் அழகும், ஆண்களில் அறிவும், திறமையும் மற்றவர்களிடமிருந்து வெறுப்பைச் சம்பாதித்துத் தரும்.

ஒருவர் தனித்து இருக்கிறார் என்றால், அவர் introvert ஆக இருக்கிறார் என்பது முழுக்காரணமல்ல. அவர் மற்றவர்களால் இயல்பாக ஏற்றுக்கொள்ள முடியாத இடத்தில் இருந்தாலும் இந்தத் தனிமைப்படுத்தப்படுதல் நடக்கும். திட்டமிட்டு அவரை தனிமைப்படுத்துவார்கள். குறை கண்டுபிடிக்க முயல்வார்கள். ஒன்றுமில்லாததை ஊதிப் பெரியதாக்குவார்கள். பார்த்தும் பாராதது போல் கடந்து போவார்கள். கவனித்தும் கவனியாதது போல் நடிப்பார்கள். 

'உலகம் உன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்கிற வாசகமெல்லாம் இங்கே அர்த்தமற்றது. இன்னும் சொல்லப்போனால், இது திட்டமிட்ட சதியை உள்ளடக்கிய ஒரு வாசகம். சம்பந்தப்பட்டவர் சூதனமாக நடந்துகொள்ள வேண்டும். 

இதை நிஜ வாழ்வில் நம்மைச் சுற்றி நாம் வெகு இயல்பாக அவதானிக்கலாம். இன்னும் சொல்லப்போனால் if you know, you know மாதிரியானது தான் இது. தனித்துவமான திறனோ, வசீகரமோ இல்லாதவர்களுக்கு இவைகளெல்லாம் பெரும்பாலும் நடப்பதில்லை. ஆக இப்படி ஒரு உலகம் இருக்கிறது என்பதே அவர்கள் அறியாமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களால் சமூக இயக்கங்களைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் ஏன் பிரகாசிக்கவில்லை என்பதற்கு, இதுவும் ஒரு காரணம்.

நடிகர்/நடிகைகளை திரையில் காணும் வரை ஏற்றுக்கொள்ளும் சமூகம், வாடகைக்கு வீடு கேட்டு வந்தால் ஏற்கமாட்டார்கள். ஒரு பள்ளிக்கூடத்தை எடுத்துக்கொள்ளுங்கள். கடைசி பெஞ்சில் அமர்ந்திருப்பவர்களுக்கு இயல்பாகவே முதல் பெஞ்ச் மாணாக்கர்களைப் பிடிக்காது. இதெல்லாம் ஒரு உதாரணம் தான். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். 

இது எல்லாவற்றையும் மீறி, அழகாகவோ, தனித்திறமைகளுடனோ தொடர்ந்து நீடிப்பவர்கள், தொடர்ந்து இயங்குபவர்கள், மென்மேலும் வெற்றியை சுகிப்பவர்கள் உண்மையிலேயே GOAT தான்.  மற்றவர்கள், அவர்களை வெறுத்து தனிப்படுத்த எண்ணுவதற்கு பதில், அவர்களிடமிருந்து எப்படிக் கற்றுக்கொள்ளலாம் என்று யோசிப்பது ஒரு நல்ல மார்க்கம் என்பது என் வாதம்.

ஏனெனில், எத்தனை தான் தனிப்படுத்தினாலும், இப்படியானவர்கள் மீண்டும் எழுந்து நின்றுவிடுவார்கள். எப்படியும் அவர்கள் எழுந்து நிற்கத்தான் போகிறார்கள் என்றால், அவர்களைப் பகைத்துக்கொள்வானேன், மொக்கை வாங்குவானேன். 


அதற்கு பதில், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம் அல்லது அவர்களை இணைத்துக்கொண்டு எப்படி இயங்குவது என்று யோசிக்கலாம்.