UFO Galaxy
UFO நமக்கெல்லாம் தெரியும். பறக்கும் தட்டுகள் குறித்து நாம் ஏற்கனவே படித்திருக்கிறோம். அதில் எத்தனை சதம் நிஜம், எத்தனை சதம் ஏமாற்று வேலை என்பது முதற்கொண்டு பேசசொன்னால் பேசிக்கொண்டே இருப்போம்.
ஆனால், UFO Galaxy என்று ஒன்று இருக்கிறது. தெரியுமா?
இவையெல்லாம் காலாக்ஸிக்கள் தாம். ஆனால், கண்களுக்குத் தெரியாது. கண்களுக்குத் தெரியாதென்றால், நம் கண்களுக்கு அல்ல. தொலை நோக்கிகளின் கண்களுக்கே தெரியாது. அப்படித்தான் வெகு நாட்களாக, Hubble கண்களில் படாமல் இருந்தன. நாமெல்லாம் Hubble பார்த்த் காலாக்ஸிக்களைப் பட்டியலிட்டுவிட்டு, 'குறைந்தபட்சம் நம்மைச் சுற்றி உள்ள காலாக்ஸிக்களையாவது கண்டுபிடித்துவிட்டோமே' என்று அமர்ந்தால், கற்றது கைமண் அளவுதான் என்கிற ரீதியில் தலையில் கொட்டு வைக்கிறது, ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி.
அது கண்டுபிடித்துச் சொன்ன காலாக்ஸிகள் அதற்கு முன் Hubble கண்டுபிடிக்காதது. எப்படி Hubble ஏமாந்தது? அதை எப்படி ஜேம்ஸ் வெப் கண்டுபிடித்தது?
எல்லாம் Infra red தான். ஜேம்ஸ் வெப், ஒரு Infra red தொலை நோக்கி. நீங்கள் படத்தில் பார்ப்பது அப்படி ஜேம்ஸ் வெப் பார்த்துச் சொன்ன காலாக்ஸிக்கள் தான். இவைகள் வெளிவிடும் வெளிச்சம் மிக மிக சன்னமானதுடன், Infra red ல் மட்டுமே தெரியக்கூடியது. சாதாரண காலாக்சிக்களைவிட அதிக தூசிகளைக் கொண்டது.
இந்த காலாக்ஸிக்களிலும் உயிர்கள் இருக்கலாம். அவைகள் புத்திசாலிகளாகவும் இருக்கலாம். ஆனால், இத்தனை காலமும் மனிதக் கண்களுக்குக் காட்டாமல் இருந்திருக்கிறது பிரபஞ்சம்.
இன்னும் எவ்வெவற்றை, எந்தெந்த அலைவரிசைகளுக்கென பிரபஞ்சம் மறைத்து வைத்திருக்கிறதோ தெரியவில்லை. ஐயய்யோ, இது தெரியாமல் வாயேஜரை வேறு விண்வெளியில் உலவ விட்டிருக்கிறோமே என்று புலம்பத்தேவையில்லை. வாயேஜர் நம் காலாக்ஸியின் ஈர்ப்பு விசையை விட்டு வெளியே போய்விடும் அளவுக்கு சக்தி வாய்ந்ததல்ல. ஆதலால், மூச்சிருக்கும் வரை மட்டுமல்ல, அது மூச்சை விட்டுவிட்டாலும், நம் காலாக்ஸிக்குள் தான் சுற்றிக்கொண்டிருக்கும்.