கேள்வி: உங்கள் "வாவ் சிக்னல்" நூலுக்கு ஏன் இணையத்தில் விமர்சனமே இல்லை.
பதில்:
இந்தக் கேள்வியை பலரிடமிருந்து எதிர்கொண்டிருக்கிறேன். எல்லோருக்குமாக, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பதில் சொல்கிறேன்.
1. பள்ளிப் பிராயத்தில் அமையும் நண்பர்களுடனான நட்பு தான் பலமாக இருக்கும் என்பார்கள். பள்ளி, கல்லூரிகளில் மிதமிஞ்சிய Bullying ஐ எதிர்கொண்டிருக்கிறேன். பல காரணங்கள் இருந்திருக்கின்றன.
1.அ.பள்ளிப்பிராயத்தில் உடலளவில் பலவீனமாக இருந்தது ஒரு காரணமானது.
ஆ.படிக்கும் மாணவனாக இருந்தது மற்றொரு காரணம். (இது எப்படி காரணமாகும் என்று நீங்கள் கேட்கலாம். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் படிக்காமல், நீங்கள் மட்டும் படித்தால், இது காரணமாகும் தான்)
இ. கல்லூரிக் காலங்களில் என் உடன் படித்த பெரும்பான்மையோர் மெட்ரிக்-சிபிஎஸ்சி பள்ளிகளிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து வந்த என்னைப் போன்றவர்கள் இளப்பமாகத் தெரிந்ததில் ஆச்சர்யமொன்றும் இல்லை.
ஈ. பல எழுத்தாளர்களுக்கு பள்ளி கல்லூரியிடங்களில் கிடைக்கும் நண்பர்களோடு, உறவுச்சொந்தங்களில் கூட வாசகர்கள் அமைவார்கள். எனக்கு அந்த அதிர்ஷ்டமும் இல்லை. ஆக, எனக்கு, பள்ளி, கல்லூரி, உறவுச்சொந்தம் என்று எந்த இடத்திலும் எவரும் இல்லை. சுருங்கச்சொன்னால், வரண்ட பாலையில் சுடு மணலுக்கு நடுவே தன்முனைப்போடு ஒரு சின்ன செடி முளைத்து மேலெழும்பி வரும். அதுதான் நான்.
2. பணி இடங்களில் நட்பு என்று பார்த்தால், 2008 துவங்கி தற்போது வரையிலான 16 வருடங்களில் சுமார் 13 வருடங்கள் இங்கிலாந்து, ஹாங்காங், அமெரிக்கா ஆகிய அயல் நாடுகளில் கழித்திருக்கிறேன். என் நண்பர்களாக பெரும்பாலும் குஜராத்திகளும், பீகாரிக்களும், படேல்களுமாகத்தான் இருந்திருக்கிறார்கள். அவர்கள் என்னை இந்திக்கு இழுத்தது தான் அதிகம். அதையெல்லாம் மீறி நான் தமிழில் இயங்குவதே தமிழ்த் தீவிரம் எனலாம். ஐடி நிறுவனங்களில், தமிழ் இலக்கியம் மீது ஆர்வம் கொண்டவர்களை என் வாழ்க்கைப் பாதையில் நான் கடக்கவில்லை என்பது மற்றொரு துரதிருஷ்டம்.
3. 13 ஆண்டுகள் வெளி நாடுகளில் வசிக்க நேர்வதால், தமிழ் நூல்கள் வாசிப்பு என்பது சொற்பம் தான். காரணம், வேறென்ன, 12000 மைல் தூரம் தான். தவிரவும், வாசிக்க நேரத்தையும் தர மறுக்கிறது ஐ.டி. பணிகளும், மொழிபெயர்ப்புப் பணிகளும். மற்ற தமிழ் எழுத்தாளர்கள் எழுதும் எழுத்துக்களை சிலாகிக்கத் தோன்றும். ஆனால் எதையும் நான் உளப்பூர்வமாக உணராமல், அதில் ஒரு ஒருமைத்தன்மையை உணராமல், பெயருக்கு சொல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இதுகாறும் அப்படிச் சிலாகிக்க, எனக்குத் தமிழ்த் திரைப்படங்களே வாய்த்திருக்கின்றன. அதில் எவ்வித தயக்கமும் இன்றி எனக்குப் பிடித்த திரைப்படங்களை சிலாகிக்கத் தவறியதில்லை நான்.
4. எல்லாவற்றிற்கும் மேல், நான் எழுதுவது அறிவியல் புனைவுகள். இந்த இலக்கிய வகைமைக்கு வாசகர்கள் பெரிதாக இருக்க மாட்டார்கள். இருக்கும் சிலரும், சிறுகதையாக இணையத்தில் வெளியாகிவிடும்போதே படித்துவிட்டு உள்பெட்டியில் பின்னூட்டம் சொல்லிவிடுவார்கள். அதனை நான் ஸ்க்ரீன்ஷாட்டாக எடுத்துப் போடுவது வழக்கம். பல சமயங்களில் அதனையே விமர்சனமாக ஏற்றும் இருக்கிறேன்.
எத்தனையோ முறை இது குறித்து யோசித்தும், நண்பர்களிடத்தே விவாதித்தும் பார்த்ததில் கிடைத்தது இதுதான். இன்றைக்கு எழுத்துலகில், ஓரளவு நல்ல நட்பு வட்டத்தை அடைய பரிச்சயம், அவர்களுடனான நேர்முக அறிமுகம், பொதுவான கருத்துக்கள், பொதுவான நண்பர்கள், பொதுவான கருத்தியல், 'ongoing trendல் இவரும் இருக்கிறார்' என்று உணர்தல் ஆகியன தேவைப்படுகிறது. இவை இல்லாமல் ஒரு நெருக்கம் வாய்ப்பதில்லை. அயல்நாட்டு வாசம் இவை எதையுமே சாத்தியப்படுத்துவதில்லை. இதற்கு நான் மற்ற வாசகர்களையோ, எழுத்தாளர்களையோ குறை சொல்வதற்கில்லை. அன்மையோ, நேர்முக அறிமுகமோ, பொது நட்புகளோ இல்லாததால், பெரும்பாலும் அவர்களுக்கும் என் குறித்து எவ்வித ஐடியாவும் ஏற்படாமல் தான் இருக்கும். அவர்கள் தங்கள் வழமைகளில் என்னைத் தவற விடத்தான் வாய்ப்பதிகம். அந்த நிதர்சனத்தை நான் உணர்ந்தே இருக்கிறேன். அதனாலும் கூட என் விஷயத்தில் அவர்கள் எட்ட நிற்பதையே விரும்பலாம்.
இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும். நேருக்கு நேர் முகம் பார்த்து அமையும் அறிமுகம் எனக்கு work out ஆனதே இல்லை. ஆக்கம் தொடர்பான மின்னஞ்சல் அறிமுகங்கள், நன்றாக work out ஆகியிருக்கின்றன. ஆதலால், 12000 தொலைவில் அமர்ந்திருப்பது எந்த வகையிலும் ஒரு நட்பை உருவாக்கிக்கொள்ள எனக்கு இடையூறாக இருந்ததில்லை. ஆனால், எதிர்தரப்பும் அப்படி நினைக்க வேண்டுமே? 'என்னடா! இவனை முகம் பார்த்து சந்திக்கவே இல்லையே.. சந்திக்க நேர்ந்தால் பார்த்துக்கொள்ளலாம்' என்று அவர்கள் நினைக்கலாம். இல்லையா?
இந்த இடத்தில், "அதெப்படி பாஸ், அயல் நாட்டில் இருந்துகொண்டு எழுதும் எழுத்தாளர்களே இல்லையா?" என்று யாரேனும் கேள்வி எழுப்பலாம். இங்கே தான் நான் எழுதுவது அறிவியல் புனைவுகள் என்பது பொருட்டாகிறது. சமூக நாவலோ, சிறார் கதைகளோ, அரசியல் கதைகளம் கொண்ட எழுத்தோ, காதல், விளையாட்டு, சினிமா, நிலப்பரப்பு அல்லது விவசாயம் சார்ந்த நூல்களில் வாசகன்-எழுத்தாளன், எழுத்தாளன்-எழுத்தாளன் இணைப்பு எளிதில் சாத்தியப்பட்டு நான் பார்த்திருக்கிறேன். அறிவியல் எழுத்து அப்படி அல்ல. இல்லையா? தவிரவும், ஆன்மீகத்தில் எப்படி ஈடுபாடு இல்லையோ அதே போல அரசியல் குறித்த விவாதங்களிலும்.
என்னாலும் பிறர் ஆக்கங்களைத் தொடர்ந்து சென்று ஒரு உரையாடலைத் துவங்க முடிந்ததில்லை. மோசமான அனுபவங்களைக் காரணமாகச் சொல்லலாம்.
ஒருவரை 2020ல், அவரின் எண் வாங்கி, இங்கிருந்து அழைத்துப் பேசினேன். பேச்சுவாக்கில் ஆங்கிலத்தில் எழுதுவதைத் தெரிந்து கொண்ட அவர், தனது ஆக்கமொன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச்சொன்னார். இயல்பிலேயே அடுத்தவர் ஆக்கங்களை மொழிபெயர்ப்பதில்லை. காரணம், அவர்கள் எதிர்பார்க்கும் தரம் என்ன என்று நமக்கு எப்படித் தெரியும்? நம் மொழிபெயர்ப்பு அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால்? ஆதலால், தவிர்த்தேன். அதன் பிறகு அவர் பேசவே இல்லை. இது, உரையாடலைத் துண்டிக்க ஒரு காரணமா என்று எத்தனை யோசித்தும் விளங்கவில்லை. பிறகு வேறொருவருடன் ஒரு உரையாடல் சாத்தியப்பட்டது. தொடர்ந்து, அவர் கடன் கேட்க, கடன் அன்பை முறிக்கும் என்று நான் மறுக்க, அதுவும் துண்டிக்கப்பட்டது. கூட்டிக்கழித்து யோசித்துப் பார்த்தால், தங்களுக்கு உள்ளூரிலேயே நட்புகள் அதிகம் இருப்பதால், நட்பு நாடி வருபவனைக் கண்டமேனிக்குப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்களோ என்று எனக்கும் தோன்றாமல் இல்லைதான். நட்புக்கான என்னவேண்டுமானாலும் செய்யலாம். நட்பென்ற போர்வையில், காரியம் சாதிக்க நினைப்பவர்களைவிட்டு விலகுவதுதானே சரியாக இருக்க முடியும்? ஒவ்வொருமுறை இப்படி மோசமான அனுபவங்கள் நேரும்போதும், மீண்டும் புதிய நட்புகளுக்காக முயற்சி எடுப்பதில் தானாகவே ஒரு தயக்கம் வந்துவிடுகிறது.
இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன்.
பள்ளி, கல்லூரிகளில் மோசமான Bullying களால் அலைகழிந்திருக்கிறேன். பல நேரம், தனிமையை, படிப்பாலும், ஜிம்மாலும் விரட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன். மட்டுமல்லாமல், என்னை யாரேனும் ஏளனமாகப் பேசினாலோ, பரிகாசம் செய்தாலோ, தனிமையை நாடுவது மட்டும் தான் பல சமயங்களில் பழக நிர்பந்திக்கப்பட்டிருக்கிறேன். எதிர்த்துப் பேசவோ, வாதிடவோ சிறுவயதிலிருந்தே பழகவில்லை. இன்றைக்கு இருக்கும் தலைமுறைகள் இணையத்தில் பேசிக்கொள்வதை, பரிமாறிக்கொள்வதைப் பார்த்தால், எனக்கு அவ்வகையான சம்பாஷனைகள் மேற்கொள்வதில் பயிற்சியின்மை இருக்கிறதோ என்று எனக்கே சந்தேகமாக இருக்கிறது. இது போன்ற விடயங்களிலெல்லாம், நான் 2000 kid போல் இயங்க வேண்டும் என்பது புரிகிறது. ஆனால், நான் 1980ல் பிறந்தவன்.
ஆதலால், எனக்கு ஒருவருடன் பழக, நெருக்கமாக உணர சற்று அல்ல ரொம்பவே நேரமெடுக்கும். ஆக்கங்கள் வழி, அவற்றின் அடிப்படையிலான விவாதங்கள் வழி, மெல்ல மெல்ல இறுகிய நட்புகளே இப்போதும் ஆத்மார்த்தமான நட்புகளாக இருக்கிறார்கள். தொடர்கிறார்கள். மற்றவர்களுக்கு, நான் outdated ஆகவோ, wierd ஆகவோ, அல்லது cringe ஆகவோ தெரிய வாய்ப்பிருக்கிறது என்பதால் அது போன்ற சூழல்களை நானே தவிர்த்துவிடுவது வழக்கம். மற்றவர்களின் பார்வையில், இது, நானாக விலகிச்செல்வதாகப் பார்வைக்குத் தெரியலாம். 'அவரே விலகிச் செல்கையில், நாம் ஏன் பொருட்படுத்தவேண்டும்?' என்று அவர்களும் நினைக்கத்தான் வாய்ப்பிருக்கிறது. இந்த எல்லா புரிதல் பிரச்சனைகளையும் தீர்க்க 12000 மைல் இடைவெளி, உதவுவதில்லை. மாறாக மென்மேலும் சிக்கலாக்குகிறது.
இந்தக் கேள்விக்கு விரிவாக பதிலளித்துவிட்டேன் என்று நினைக்கிறேன். இது போன்ற் காரணிகளால், நான் என் எதிர்பார்ப்புகளை மிகவும் குறைவாகவே வைத்திருக்கிறேன்.
கடந்த கால, கசப்பான bullying, ghosting,gaslighting அனுபவங்களால் என் மன அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடிய செயல்பாடுகளைக் கண்டறிந்து, அந்தப் பக்கமே செல்வதில்லை. இதுவும் கூட, நட்பு வட்டத்தை தன் பங்கிற்குக் காலியாக்குகிறது தான். என்ன செய்வது? என் அனுபவம், கடந்த காலம் அப்படி. என்றேனும் ஒரு நாள் எல்லாமும் மாறும், வாழ்க்கை நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு வந்து நிற்கும் என்ற நம்பிக்கையில் மட்டுமே வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
இத்தனையையும் மீறி, நான் இதுகாறும் 14 நூல்கள் எழுதியிருக்கிறேன், அதில் ஒன்று, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த சிறுகதை நூல் விருது பெற்றிருக்கிறது என்றால், அதற்கு "இறைவனின் அருள்" மட்டுமே ஒரே ஒரு காரணம் என்று தானே எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது?.