என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday, 10 October 2026

பள்ளி, கல்லூரியில் Bullying

 பள்ளி, கல்லூரியில் Bullying

*******************************



இது எனக்கும் நடந்திருக்கிறது. பள்ளியில் தான் இப்படி, கல்லூரியிலாவது விடிவு காலம் பிறக்கும் என்று நம்பிய எனக்கு ஏமாற்றமே கிடைத்தது. பள்ளியில் படித்தவனே கல்லூரியிலும் வந்து சேர்ந்தபோது, அந்த வன்மம் கல்லூரியிலும் பரவியது. ஆக, பள்ளி, கல்லூரி இரண்டுமே எனக்கு உவப்பாக இருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், பள்ளி கல்லூரி இரண்டிலும் எனக்கு ஒரு நட்பு கூடக் கிடைக்கவில்லை. பள்ளி கல்லூரி நாட்களை நான் நினைத்துப்பார்ப்பதே இல்லை. நினைத்துப் பார்த்துக்கொள்ளும் அளவுக்கு ஒன்றும் நடக்கவும் இல்லை.


நண்பர்களாகப் பழகுபவர்களே வன்மத்துடன் தான் பழகுவார்கள். என்னை Bully செய்யும் நிமித்தம் அவர்கள் ஒன்று கூடிக்கொள்வார்கள். முதுகின் பின்னால் சிரித்துக்கொள்வார்கள்.  தங்களுக்குள் பேசி வைத்துக்கொண்டு ஒன்றாக ஒரே விதமாய் ஒதுக்குவார்கள். எதிலும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். நாள் கிழமைகளில் நம்மை மட்டும் தவிர்ப்பார்கள். காரணம் கேட்டால், ஏதேனும் மொக்கை காரணம் வரும். நாம் இல்லாத நேரத்தில், நம்மைப் பற்றித் தப்பு தப்பாக சக மாணவ, மாணவிகளிடம் சொல்லி வைத்திருப்பார்கள். எந்தக் காரணமும் இல்லாமல், உடன் படிக்கும் பெண்கள், சொற்ப அறிமுகத்துடன் நட்பின் குழந்தைப்பருவத்தில் உள்ள பெண்கள் தாமாக எதையோ புரிந்துகொண்டு நம்மை விட்டு விலகிச்செல்கையில் இவன்கள் நம்மை பற்றி எதையோ தவறாகச் சொல்லியிருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். ஆனால், எதையும் எவரிடமும் வெளிப்படையாகக் கேட்க முடியாது. நம் உளக்குறிப்பை வெளிப்படையாகச் சொல்ல, 1998-1999 காலகட்டங்களில் இப்போது போல் சமூக வலைதளங்களும் இல்லை. ஒருவாராக நடப்பதை நாமாக அனுமானித்துக்கொண்டு, புரிந்துகொண்டு விலகிக்கொண்டால் மன அமைதி பெறலாம். 


'கெட்ட நேரத்தில்  ஒரு நல்ல நேரம்' என்பார்கள். என் விஷயத்தில், இந்த விதத்தில் எனக்கு நேரும் isolationல் productiveஆக இயங்குவது எப்படி என்று கற்றுக்கொள்ள, பயிற்சி செய்ய இந்த சூழல்களைப் பயன்படுத்திக்கொண்டேன். கல்லூரிக்குச் சென்றது நட்பு வளர்க்க அல்லவே? பாடம் படித்துக்கொள்ளத்தானே? நம்மை இவர்கள் மதிக்கவில்லை என்றால் என்ன? அதனால் கல்லூரிக்குச் சென்று வந்த நோக்கம் மாறிவிடுமா என்ன? அந்தத் தெளிவை அந்தப் பதினெட்டு வயதில் எனக்கு அருளிய கடவுளுக்கு எத்தனை கோடி நன்றிகள் சொன்னாலும் தகும். 



அந்த isolationல் தனிமையில், படிக்கவும், தேரவும் focus செய்யக் கற்றுக்கொண்டேன். ஒரு கட்டத்தில், இவன்கள் மீது வளர்ந்துவிட்ட வெறுப்பில், இவன்கள்

 முகத்தில் விழிக்க வேண்டுமே என்று கல்லூரிக்கு விடுப்பு எடுக்கத்துவங்கியதில் பாடங்கள் தவற விட நேர்ந்தது. ஆதலால்,  நானே படித்து நானே கற்றுக்கொள்ளக் கற்றுக்கொண்டேன். 


பொறியியலின் ஏழாவது, மற்றும் எட்டாவது செமஸ்டர் எனக்கு நானே கற்பித்துப் படித்துக்கொண்டது தான். எட்டு செமஸ்டரிலும் ஒரு அரியர் கூட இல்லாமல் தேறியதில் தான், எனக்கு நானே படித்துக்கொள்வதும் எனக்குச் சரியாகத்தான் வேலை செய்கிறது என்பதை நிரூபித்துக்கொள்ள வாய்ப்பானது.  இன்றளவும், அறிவியல் புனைவுகள் எழுத அபரிமிதமான தகவல்களை உள்வாங்கி ப்ராஸஸ் செய்யும் திறனை, முனைப்பை, இங்கிருந்தே நான் பெற்றேன் எனலாம். இப்போது யோசித்தால், கல்லூரி எனக்குள் சில முக்கியமான திறன்களை வளர்த்துக்கொள்ள உதவியிருக்கிறது.


1. isolationல் productiveஆக இயங்குதல்.

2. நமக்கு நாமே கற்றுக்கொள்ளுதல்.

3. அபரிமிதமான தகவல்களை உள்வாங்கி ப்ராஸஸ் செய்யக் கற்றுக்கொள்ளுதல்.



இந்த மூன்றையும் எனக்கு நேரடியாகக் கற்றுத்தராமல், மறைமுகமாகக் கற்றுக்கொள்ள நிர்பந்தப்படுத்திய அளவில் பள்ளிக்கும், கல்லூரிக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்றால் மிகையில்லை. 


'நீயா  நானா'வின் இந்த எபிசோட் முழுமையாக நான் இன்னும் பார்க்கவில்லை. இந்தப் பையன் பேசும் ரீல்ஸ் பார்த்தேன். எபிசோட் இனிதான் பார்க்க வேண்டும். பார்த்துவிட்டு விரிவாக எழுதுகிறேன்.