https://www.youtube.com/watch?v=RV3sZgEwJFQ
கேள்வி:
வடஅமெரிக்க வரவேற்பறை நேர்காணலில் முனைவர், தமிழ் ஆய்வாளர் க. திலகவதி, அவர்கள் 'மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் வட அமெரிக்காவில் தமிழ் எந்தளவிற்கு வளர்ந்திருக்கிறது?' என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் உங்களைப் பற்றி பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார். அவரது வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், "அறிவியல் எழுத்தாளர் சுஜாதா போல இங்கு ஒருத்தர் ராம்பிரசாத் என்பவர் அறிவியல் புனைவு எழுத்தாளராக இக்கால இலக்கியத்தில் முத்திரை பதித்து வருகிறார். அவருடைய எழுத்தை வாசிக்கின்ற பொழுது 'ஆகா இன்னொரு சுஜாதா நமக்குக் கிடைத்துவிட்டார்' என்று என் மனம் மகிழ்ந்தது. அவரை எனக்குத் தெரியாது. ஆனால், அவரைப் பற்றி நான் வாசித்தபோது சுஜாதா போல அமெரிக்காவில் ஒரு அறிவியல் புனைவெழுத்தாளர் உருவாகியிருக்கிறார் என்று என் மனது சந்தோசப்பட்டது." என்று குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து உங்கள் பார்வை என்ன?
பதில்:
தமிழ் இலக்கியத்தினுள் நுழைய பெரும்பான்மையோர்க்கு நுழைவாயிலாக இருப்பது வணிக எழுத்துக்கள் தாம் என்பதே நிதர்சனம். பள்ளிக்காலங்களில் அம்புலிமாமா, சிறுவர் மலர் என்று இருந்த எனது வாசிப்பு, பொறியியல் முடித்து, கணினித்துறையில் வேலை என்று விரிந்த பிறகு சுஜாதா, பாலகுமாரன் வழியாக இலக்கிய வெளிக்குள் நுழைந்தது எனலாம்.
எத்துறையிலும், அனுபவஸ்தர்களை வழித்தடங்களாகக் கொள்வது வழக்கமே. சுஜாதா ஒரு பொறியியல் வல்லுனராகப் பணியில் இருந்துகொண்டே, ஒரு குடும்பத்தலைவனுக்கான சகல கடமைகளையும் ஆற்றிக்கொண்டே தான், தான் எழுதியதை எழுதினார். சுஜாதா மீதான எனது ஏற்புக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது, பொதுவாழ்வை வெற்றிகரமாக நடத்திக்கொண்டே இலக்கியத்துறையிலும் சாதிக்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக அவர் இயங்கியதுதான் என்றால் அது மிகையில்லை.
மதிப்பிற்குரிய தமிழ் ஆய்வாளர், முனைவர் க.திலகவதி அவர்கள் ஒப்பிட்டதைப் போலவே இணைய நண்பர்கள் பலரும் என் எழுத்தை, எழுத்தாளர் சுஜாதாவினுடையதுடன் ஒப்பிட்டிருக்கிறார்கள். ஒப்பிட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். ஒரு புனைவை எழுதுவதற்கான இலக்கணங்களான முதல் பத்தியிலேயே துவங்கிவிடுவது, சிறுகதையின் வடிவத்தை வளைப்பது, எதிர்பாராத திருப்பத்தைத் தருவது போன்ற பண்புகளை வெகு துல்லியமாக எழுதியவர் சுஜாதா. புனைவுகளிலேயே அரிதாக முயலப்படும் புனைவு வகையான அறிவியல் புனைவுகளில் அவர் இதையெல்லாம் செய்து பார்த்து அசத்தினார். அதே பண்புகள் எனது ஆக்கங்களிலும் வெளிப்படுவதால், அதையெல்லாம் கூட்டாக உணர்த்த, அவர் பெயரையே வாசகர்கள் பயன்படுத்துகிறார்கள் என்றே நான் புரிந்துகொள்கிறேன். அந்த வகையில், எழுத்தாளர் சுஜாதாவின் வழியில் அடுத்ததாக நான் பார்க்கப்படுவதில் மகிழ்ச்சியே.
நான் பல காலமாக எனக்கு நெருங்கிய நண்பர்களிடம் அவ்வப்போது பகிர்வதையே முனைவர் க.திலகவதி அவர்களும் குறிப்பிட்டது ஆச்சர்யமான நிகழ்வு. 2014 முதல் நான் வசிப்பது அமெரிக்கா. அறிவியல் புனைவுகள் பெருமளவு நான் எழுதத்துவங்கியது அமெரிக்காவிலிருந்துதான்.
எழுதத் துவங்கியபோது எதை எழுதுவது என்பது குறித்தான என் அனுமானம் இப்படியாக இருந்தது. கடல், கடல் சார்ந்த இடத்தில் வசிக்க நேரும் எழுத்தாளர், அம்மக்களின் வாழ்வைக் கதைகளாக்குவார். போர்ச் சூழலில் மக்கள் பட்ட கஷ்டங்களை அருகில் இருந்து பார்த்த எழுத்தாளர் அம்மக்களின் வலிகளைக் கதைகளாக்குவார். தோல் தொழிற்சாலையில் பணி செய்பவர்களை உறவினர்களாகக் கொண்ட எழுத்தாளர், அம்மக்களின் வாழ்வைக் கதைகளாக்குவார். இதே போல் மருத்துவம், வடசென்னை வாழ்வு, விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வு என்று ஒரு எழுத்தாளர் தான் சார்ந்திருக்கும் நிலப்பரப்பின் ஆன்மாவைப் பிரதிபலிக்கும் எழுத்தை எழுதுவார். அப்படி எழுதுவது தான் சரியும் கூட.
பத்து இருபது ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்த ஒருவர், அமெரிக்காவிலிருந்து உலகின் பிற இடங்களுக்குச் செல்ல நேர்கையில் அவரிடமிருந்து போரில் மக்கள் படும் வலிகளோ, தமிழகக் கடல் கிராமங்களின் கதைகளோ, வட்டார வழக்கோ, வடசென்னைக் கதைகளோ, மதுரை வாழ் தொல் குடி ஒன்றில் உள்ள வினோதமான பழக்கவழக்கங்களோ, விவசாய மக்களின் இன்னல்களோ, பழங்குடிகளின் பிர்ச்சனைகளோ, மலைவாழ் மக்களின் துயர்களோ, தமிழக கிராமங்களின் கதைகளோ, சங்க இலக்கியம் குறித்த விசாரமோ எதிர்பார்க்கப்படப்போவதில்லை.
இன்றைக்கு தமிழ் எழுத்துச் சூழலில் அறிவியல் புனைவுகள் எழுதுபவர்களில் பலர் பள்ளி, கல்லூரிகளில் அறிவியல் கணிதம் விருப்பப்பாடமாக எடுத்துப் படித்தவராக இல்லாமலும், சாதாரண நகர வாழ்வின் பின்னணியிலிருந்து வருபவராகவும் இருக்கலாம். பள்ளிக்காலத்தில் அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களை விருப்பப் பாடமாக எடுத்து நூற்றுக்கு நூறு வாங்கி பொறியியல் படித்து, அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் அறிவியல் எழுத்தின் வாசகராகக் கூட இல்லாமல் இருப்பதும் பரவலாக நடந்து நாம் காண்கிறோம்.
சுருங்கச்சொன்னால், அறிவியலைத் தன் இயங்கு ஆதாரமாகக் கொண்ட நாட்டிலிருந்து அறிவியல் தமிழின் உச்சம் வெளிப்படுவதே சரியாக இருக்க முடியும் என்றாகிறது. ஏனெனில், அப்படி அது வெளிப்படவில்லை எனில் எங்கோ எதிலோ தவறு நடக்கிறது என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது இல்லையா? (இதற்கு அர்த்தம், அமெரிக்காவிலிருந்து வெளிப்படுவது யாவும் அறிவியல் தமிழின் உச்சம் என்பதல்ல. தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்).
அந்தப்படி, அறிவியல் தமிழ், அமெரிக்கத் தமிழர்களின் வாழ்வியல், அமெரிக்காவில் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள், அறிவியல் புனைவுகள், அதிபுனைவுகள், என்று அமெரிக்க தமிழ் இலக்கியம் விரிவடையவேண்டும் என்று நான் பலமுறை, என் நெருங்கிய நண்பர்களிடம் வலியுறுத்தியிருக்கிறேன். அதை நண்பர்கள் அறிவார்கள். இதையே முனைவர் க. திலகவதி அவர்கள் வெவ்வேறு வார்த்தைகளில் சுட்டினார் என்றே கொள்கிறேன்.
நான் பலமுறை வலியுறுத்திய ஒன்று முனைவர், ஆய்வாளரிடமிருந்தும் வெளிப்பட்டிருப்பது, அமெரிக்க தமிழ் இலக்கியத்திடமிருந்து எதிர்பார்க்கப்படுவது என்ன என்பதில் ஓர் ஒருமித்த கருத்து கல்வியாளர்களிமும் இலக்கிய ஆன்றோர்களிடமும் இருப்பதையே சுட்டுகிறது என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே.