வேற்று கிரகத்தில் மனிதப் பரவல் தொடர்பான ஆராய்ச்சிகள்
*******************************************************************
வேற்று கிரகத்தில் மனிதப் பரவல் தொடர்பான ஆராய்ச்சிகள் நமக்குத் தேவையா? உலகத்தில் பசியில் இருப்பவர்கள் எத்தனை கோடி பேர்? இருக்க இடம் இல்லாமல், சாலையில் உறங்குபவர்கள் எத்தனை கோடி பேர்? அவர்களுக்காவது அந்தப் பணத்தைச் செலவு செய்யலாம். அதை விடுத்து, உயிரற்ற கிரகங்களுக்குப் பரவ இத்தனை கோடிகள் செலவு செய்யத்தான் வேண்டுமா?
இப்படியெல்லாம் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றன விண்வெளி ஆராய்ச்சிகள்.
'ஆன்ட்ரோமிடாவுடன் நமது காலாக்ஸி மோதப்போகிறது' என்றால், அதுக்கு ஐந்து மில்லியன் வருடங்கள் இருக்கிறதே இப்போதென்ன அவசரம் என்று எதிர்கேள்வி வரும் தான். இந்த எதிர் கேல்வி அர்த்தமற்றது என்று நான் சொல்லவரவில்லை. நியாயமான கேள்வி தான்.
ஆனால், பயம் அதையும் விடப் பெரியது அல்லவா? அச்சம், மனிதன் வெற்றி கொள்ள இயலாத உணர்வு அல்லவா?
உண்மையில், நமது காலாக்ஸி மீது ஏற்கனவே மூன்று முறை வேறு வேறு காலாக்ஸிக்கள் மோதிவிட்டன என்றால் அதிர்ச்சியாகத்தானே இருக்கும்? உண்மையும் அதுதான். ஏற்கனவே மூன்று முறை, சிறிய காலாக்ஸிகள், நம் காலாக்ஸி மீது மோதியிருக்கின்றன. ஆக, சின்னஞ்சிறிய காலாக்ஸிக்களை மூன்று முறை விழுங்கிச் செரித்திருக்கிறது நமது காலாக்ஸி.
அந்தச் சின்னஞ்சிறிய காலாக்ஸியின் பெயர் Sagittarius Dwarf Spheroidal Galaxy. நீங்கள் படத்தில் காண்பது, அந்த மோதல் எப்படி நடந்திருக்கும் என்பது குறித்தான ஒரு ஓவியப்படமே. ஆக, பலத்தில் சிறியவைகளைக் பெரியவைகள் கபளீகரம் செய்வது வெறும் விலங்கினங்களிடம் காணப்படும் பண்பு மட்டும் அல்ல. அது, பிரபஞ்ச நியதி தான். அந்தப் பிரபஞ்ச நியதியைத்தான் உயிர்கள் அனைத்தும் பிரதிபலிக்கின்றன. துரதிருஷ்டவசமாக, பிரபஞ்ச நியதிக்கு வேறு வக்கில்லை என்று தான் சொல்ல வேண்டும்.