என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Sunday, 12 January 2025

பிக் பாஸில் நேற்று ஒரு நல்ல பஞ்சாயத்து.

 பிக் பாஸில் நேற்று ஒரு நல்ல பஞ்சாயத்து.


பார்வையாளர்களிலிருந்து ஒருவர், PR டீமை வைத்து வெல்வது சரியா என்று கேட்டார். PR டீம் மட்டும் போதாது என்றார் விஜய் சேதுபதி. இந்த இடத்தில் சற்று குழப்பம் வருகிறது. உண்மையில் PR டீம் வைத்து சில நேரங்களில் potential போட்டியாளர்களைப் போட்டியிலிருந்து வெளியேற்றுவது கடந்த காலங்களில் நடந்திருக்கிறது. அதைத்தான் குறிப்பிட்டு, பார்வையாளர்களிலிருந்து எழுந்தவர் கேட்டிருக்கிறார். 


கிரிக்கெட்டை எடுத்துக்கொள்வோம். சச்சினை துவக்கத்திலேயே PR டீம் வைத்து தூக்கிவிட்டால் என்னாகியிருக்கும்? சச்சின் , மீண்டும் மீண்டும் முயன்று தனக்கான இடத்தைப் பிடித்திருப்பாரா? வெளிப்படுத்த வாய்ப்பே வழங்கப்படாமல் போனால்? அந்த இடைப்பட்ட இடைவெளியில், அவர் தோல்வியைத் தாங்க முடியாமல், மது, புகை என்று தன்னைத்தானே அழித்துக்கொண்டால்? ஆம். இந்தப் புள்ளியில் அவர் அதற்கெல்லாம் இடமளிக்காமல் இருக்க வேண்டும். அப்படியானால், அதற்கெல்லாம் இடமளிக்காதவர்கள் நம்மிடையே இல்லையா? இருக்கிறார்களே? அவர்கள் ஏன் மேலே வர முடியவில்லை? 





இதற்கு பல விளக்கங்களைத் தரமுடியும்.


1. விதி என்று விளக்கலாம். முதலிடம் ஒருவருக்குத்தான் என்னும் போது, அந்த இடம் யாருக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ, அவர் விதியால் தேர்வுச் செய்யப்படுகிறார், மற்றவர்களை இந்த பிரபஞ்ச இயக்கம் கலைத்துப் போட்டுவிடுகிறது என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. இல்லையா?


2. சூழ்ச்சி என்று விளக்கலாம். இதற்கு ஒரு குழு தேவைப்படுகிறது. ஆனால், அக்குழுவுக்கும் consistency ஒரு பிரச்சனையாக இருக்கும். என்னதான் குழுவாகக் கூடினாலும், காலத்தின் வழி, குழுவின் சக்தியும் சிதிலமடையும். அப்படி சிதிலமடைகையில், சச்சின் தொடர்ந்து தளராமல், செயலாற்றினால், வெற்றி நிச்சயம். இல்லையா? சிலருக்குத் தாமதமாகக் கிடைக்கும் வெற்றியை இப்படி புரிந்துகொள்ள முடியும். இதில் ஒரு விதிவிலக்கு உண்டு. தனி நபர் திறமைகளை இவ்விதம் ஒரு குழு கட்டுப்படுத்த முடியாது. உதாரணமாக, கிரிக்கெட் என்ற விளையாட்டிற்கு பல்லாயிரம் பேரின்  சேர்க்கை தேவை. பாடல் பாடுவது என்பது தனி நபர் திறனாகிவிடுகிறது. அதற்கு ஒரு மைக், ஒரு யூட்யூப் சானல் போதும் என்றாகிவிடுகிறது. இல்லையா?


3. துரதிருஷ்டம் என்று விளக்கலாம். வெற்றிக்கான காரணங்கள் தொடர்ந்து அமையாமல், கலைந்து போய்விடுவது. ஆனால், இதற்கும் குழு, பல காரணங்களுள் ஒன்றாகிறது. குழிவின் நோக்கமே, தங்களது கூட்டியக்கத்தை, 'விதியாக' தோன்ற வைப்பதுதானே?



ஆக, எனக்கும் விஜய் சேதுபதியின் விளக்கத்தில் திருப்தி இல்லை. ஒருக்கால், கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திற்குள் அவரது வார்த்தைகள் வழி, அர்த்தங்கள் அப்படி வெளிப்பட்டிருக்கலாம் அல்லது அவரது பதிலை, மைக் மூலம் வேறு யாரேனும் கன்ட்ரோல் செய்திருக்கலாம். 


ஒட்டுமொத்தமாகச் சொல்ல வேண்டுமானால், ஆம். இது எல்லா இடங்களிலும் நடக்கிறது, எல்லா துறைகளிலும் நடக்கிறது. இன்றைக்கு ட்ரெண்ட் புத்தகக் கண்காட்சி. அதை வைத்தே விளக்க வேண்டுமானால், இப்படிச் சொல்லலாம். நீங்கள் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றீர்களானால் அங்கே லட்சோபலட்சம் புத்தகங்கள் கிடைக்கின்றன. அவற்றில் சரிக்குச் சமமான புத்தகங்கள், எழுதவே தெரியாதவர்களின் புத்தகங்கள் என்றால் உங்களுக்கு அதிர்ச்சியாகத்தானே இருக்கும். ஆனால், அது உண்மை தான். எழுத்துலகில் இயங்கும் பலருக்கு இது தெரியும். எல்லோருக்கும் தெரிந்து தான் இது நடக்கிறது.


இந்த நிலையில், புதிதாகத் திறமையாக எழுத வருபவருக்கு இருக்கும் சிக்கல், இப்படிப் போலிகள் உருவாக்கும் சந்தையில் தாக்குப்பிடிக்க, நிலைத்து நிற்க  நேரமெடுப்பது தான். போலிகளின் தந்திரங்கள் அனேகம். எனக்குத் தெரிந்ததை இங்கே பகிர்கிறேன்.


1. ஏற்கனவே பிரபலமாக இருக்கும் எழுத்தாளரின் அறிமுகத்தோடு வந்தால் வேலை சுலபம் என்று வருபவர்கள் இருக்கிறார்கள். அதற்கு, அவர் சம்பந்தப்பட்ட எழுத்தாளரின் வாசகர் வட்டத்தில் பங்கேற்க வேண்டும். 'விசுவாசத்தைக்' காட்ட வேண்டும். இதில் mutual benefit இருப்பதாக நினைப்பவர்கள் இருக்கிறார்கள். (பி.கு.: இப்படி வரும் எல்லோரும் இந்த ரகம் என்று நான் சொல்லவில்லை.)


2. ஏற்கனவே பிரபலமாக இருக்கும் எழுத்தாளரின் ஆக்கத்தை மொழிபெயர்ப்பது. (பி.கு.: மொழிபெயர்ப்பு முயற்சிகள் எல்லாமும் இப்படி என்று சொல்லவில்லை.)


3. ஒரு குழுவாக இயங்குவது. குழுவில் உள்ள பெரும்பாலானோர் பதிப்புத்துறையில் இருப்பார்கள். இவர்கள் குறித்து இவர்களே உயர்வாகப் பேசிக்கொள்வார்கள். இதுவும் ஒரு லாபி தான். தமிழில், இப்படிப் பல குழுக்கள் இயங்குகிறது. இதில் பங்குபெற வேண்டுமானால், (அந்தந்த நாடுகளில்) உள் நாட்டில் இருக்க வேண்டும். குழுவுக்கு ஏதேனும் ஒரு வகையில் பயனளிக்கக்கூடிய இடத்தில் இருக்க வேண்டும். மிகமுக்கியமாக, தங்கள் கூட்டு நோக்கத்திற்கு பயனளிக்காத புதியவர்களை ஒதுக்குவதிலும், அவர்கள் மேல் கவனம் விழாமல் தடுப்பதில் முனைப்பாய் இணைந்து இயங்க வேண்டும்.


4. ஒரு வாசகக் குழுவின் ஆசீர்வாதம் இயல்பாகவே அமையப்பெறுவது. இவர்களும் தங்கள் கூட்டு நோக்கத்திற்கு பயனளிக்காத புதியவர்களை ஒதுக்குவதிலும், அவர்கள் மேல் கவனம் விழாமல் தடுப்பதில் முனைப்பாய் இயங்குவார்கள்.


5. சமூகத்தின் அதிகாரப் பின்னணியிலிருந்து வருவது.


6. இன்னொரு தந்திரம் இருக்கிறது. அதைச் சொன்னால், பிரச்சனையாகிவிடும் என்பதால் தவிர்க்கிறேன்.


7. ஒரு குழுவாக இயங்குவது. எழுதத் தெரியாதவர்களேல்லாம் ஒன்று கூடி இவர்களுக்கு இவர்களே முடிசூடிக்கொள்வார்கள். இவ்விடங்களில் அயல் நாட்டுப் பணம் நன்றாக வேலை செய்யும்.இவர்களும் தங்கள் கூட்டு நோக்கத்திற்கு பயனளிக்காத புதியவர்களை ஒதுக்குவதிலும், அவர்கள் மேல் கவனம் விழாமல் தடுப்பதில் முனைப்பாய் இயங்குவார்கள்.


சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், மேற்சொன்ன எதிலுமே இல்லாதவர்களின் நிலை பல மடங்கு கஷ்டம் தான். சவால்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகம். ஆனாலும் வேறு வழியில்லை. எதிர்த்துப் போராடித்தான் ஆகவேண்டும்.  


காலத்தின் போக்கில், கவனச்சிதறல் இன்றி, தொடர்ந்து தன் உழைப்பை நல்கும் ஒரு உண்மையான திறமைசாலியை, இந்த எதாலும் எதுவும் செய்ய முடியாது என்பதுதான் உண்மை. ஒருக்கால், விஜய் சேதுபது, இதைத்தான் குறிப்பிட்டிருந்தால், சந்தோஷம் தான்.