என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Monday, 13 January 2025

நிமிஷா ப்ரியா

நிமிஷா ப்ரியா 


இந்த உலகம் ஆண்-பெண் ஆகிய இரு பாலரால் நிறைந்தது. இதுவே ஒரு ஆண், ஏமன் சென்று ஒரு ஏமன் பெண் பிரஜை உதவியுடன் வியாபாரம் முனைந்தால், அந்த இடத்தில், அந்த ஏமன் பெண் பிரஜையால் அந்த ஆணுக்கு எந்த நெருக்கடியும் நேரப்போவதில்லை(ஆங்.. உங்களுக்குத் தெரியுமா? அதுல் சுபாஷ்ன்னு ஒருத்தர்... என்று துவங்கி யாரேனும் இடைமறிக்கலாம் ..பெரும்பான்மை இப்படி இல்லை என்று தான் சொல்கிறேன்). ஆனால், இதே சூழலை அப்படியே மாற்றிப் பார்க்கலாம். ஒரு பெண். உதவி கேட்டு வருகிறார். ஆண் மனம் அதை, அந்தப் பெண்ணை நெருக்கடிக்கு உள்ளாக்க ஒரு வாய்ப்பாகக் கருதத் துவங்குகிறது. ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை, அந்தப் பெண்ணிடம் 'யோக்கிய' வேடம் தரித்து நம்பிக்கை பெறுகிறது. ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், சுய ரூபத்தைக் காட்டுகிறது.





நிமிஷா ப்ரியாவின் இடத்தில் நிமிஷா ப்ரியா மட்டும் தான் என்று நம்மில் யாரும் நினைக்க முடியாது. 


திருமணங்கள், வியாபாரம், கல்விக்கூடங்கள், சினிமா என்று ஒரு சமூக அரங்கில் இருபாலர் கூடும் எல்லா இடங்களிலும் இந்த 'trapping' நடக்கிறது அல்லது நடத்திப் பார்க்க எல்லா ஓட்டைகளையும் தாங்கித்தான் இந்த சமூகக் கட்டமைப்பு மிக மிக கவனமாக வடிவமைக்கப்படுகிறது. ஒரு பெண்ணுக்கு, அவளாக முன்னேறி வர, அடுத்தகட்டம் நகர, சுயமாக இயங்க, இந்தச் சமூகம் என்ன வைத்திருக்கிறது? இருப்பதெல்லாமே சூழ்ச்சி வலை தான். 


ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பெண், தன் குடும்ப மேன்மைக்காக ஒரு வேலைக்குப் போகலாம் என்று பரிந்துரை வைத்தால், அதில் முதல் சிக்கல், எப்படி அலுவலகம் செல்வது என்பதுதான்? பேருந்து, ஆட்டோ ரயில் என்று எல்லாவற்றிலும் தடவல் மன்னர்கள் ராஜ்ஜியம். அதையெல்லாம் தாண்டி அலுவலகம் சென்றால், அங்கே சக ஊழியர்கள், மேனேஜர் என்று அங்கும் அதே கதை. பால்காரனின் துவங்கி, காஸ்காரன், தபால்காரன், பெட்டிக்கடைக் காரன், வாடகை வீட்டின் ஓனர், குழாய் ரிப்பேர் செய்ய வருபவன் என்று எல்லோருக்குமே ஒரே ஒரு நோக்கம் தான். 


என்னதான் தீர்வு?  நிமிஷா ப்ரியா போல் பெண்கள் தொழில் துவங்க, பெண் ஏமன் பிரஜைகள் இருத்தலாம் என்றா? அப்படியானால், என்ன சொல்கிறோம்? இருபாலார் படிக்கும் கல்லூரிகளில் ஆண்களுக்கென்று ஒரு பேருந்தும், பெண்களுக்கென்று ஒரு பேருந்தும் வைப்பதற்கும் இந்தத் தீர்வுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? Why can't people just behave?


என்ன தீர்வு வைத்திருக்கிறோம். நிமிஷா ப்ரியா முதன் முதலாக நெருக்கடிக்கு உள்ளானபோதே, பொதுவில் வந்து புகார் தந்திருக்கலாம் என்றா? அப்படிப் புகார் செய்தால், முதலில் அவர் பெயர் தான் character assassinate செய்யப்படும். இல்லையா? யாரிடம் புகார் தருவது? ஒரு ஆணிடம் தானே? அங்கேயும், அவர் manipulate செய்யப்பட்டால்? ஆக, எதையெல்லாம் 'தீர்வு' என்று முன்வைக்க எண்ணுகிறோமோ அது எல்லாமுமே இன்னொரு கோணத்தில் இன்னொரு 'trap' தான் இல்லையா?


அமெரிக்காவில், சமூகத்தில் நல்லவன் போர்வையில் மறைந்திருக்கும் pedophile களை வெளிப்படுத்த ஒரு தந்திரம் பயன்படுத்துவார்கள். ஒரு பதினான்கு வயதுப்பெண்ணை ஒரு பொது இடத்தில் நிறுத்திவிட்டு, சுற்றிலும் காமிராக்களோடு நான்கைந்து பேர் தொலைவில் மறைந்துகொள்வார்கள். pedophileகள் மெதுவாக அந்தப் பெண்ணை அண்டி பேச்சுக் கொடுத்து, விருப்பத்தை வெளிப்படுத்துவதை, அந்தப் பெண் கழுத்தில் இருக்கும்  மிகச்சிறிய காமிரா மூலம் ரிக்கார்டு செய்துவிட்டு போலீஸுக்குத் தகவல் சொல்லிவிடுவார்கள். இதை ஒரு நல்ல தந்திரமாகப் பார்க்கிறேன். 


இப்படி யோசித்துப் பார்க்கலாம். ஒரு போலீஸ் பெண்ணை வைத்தே ஏமன் நாட்டில் தொழில் துவங்க உதவி கேட்பது போல் கேட்க வைத்து, ஒப்பந்தமிட்ட பிறகு சம்பந்தபட்ட நபர் வாலாட்டினால், அப்படியே வீடியோ, ஆடியோ எவிடென்ஸோடு போலீஸில் போட்டுக்கொடுக்கலாம். அதே போல், சிறு வயதுப் பெண் பிள்ளைகள் வீட்டில் தனியாக இருப்பது போல் செட்டப் செய்துவிட்டு, அக்கம் பக்கத்தில் எவன் வாலாட்ட தைரியப்படுகிறான் என்பதை ஆடியோ, வீடியோ எவிடென்ஸோடு போட்டுக்கொடுக்கலாம்.


அமெரிக்காவில் இந்தியாவுக்கு செல்ல நேர்கையில், அப்பா அம்மாக்கள் பதின் பருவத்தில் உள்ள தங்கள் பிள்ளைகளுக்கென தாங்கள் பயணிக்கும் அதே விமானத்தில் வேறொரு மூலையில் சீட் பதிந்து தந்துவிடுவார்கள். உண்மையில் , அதே விமானத்தில் யாரோ போல் பெற்றவர்களும் பயணிப்பார்கள். இது அந்தப் பிள்ளைகளுக்கு ஒரு ப்ராக்டீஸ் தான். தனியாகப் பயணிக்கும் பதின் பருவப் பிள்ளைகள் என்று யாரேனும் நெருங்கினால் வசமாக மாட்டிக்கொள்ள வேண்டி வரும். 

தப்பு செய்ய பயப்பட வைக்கணும். தப்பு செய்ய இருக்கிற நேரம், வாய்ப்பை விட, தன்னை யாரோ கண்காணிக்கிறார்களோன்னு குற்றவாளியை பல மடங்கு நேரம் யோசிக்க விடணும், சுத்தல்ல விடணும்..அதுலயே அவனை சோர்ந்து போக வைக்கணும்.. இது வொர்க் அவுட் ஆகும்ன்னு தான் தோணுது..எல்லோரும் அவங்கவங்க capacity க்கு இதை செய்ய முடியும்ங்குறதுதான் இதுல இருக்குற கன்வீனியன்ஸ். நம்மளோட leisureல இதை பண்லாம்.. நமக்கு பெரிய செலாவணி இல்லை.. ஆனால் தப்பு செய்யணும்ன்னு நினைக்கிற கயவர்களுக்கு, இது மிகப்பெரிய பிரச்சனையாகும்..


ஆடியோ, வீடியோ எடுப்பதற்க்கான கருவிகள் கூட சல்லிசான விலையில் கிடைக்கின்றன. யோசித்துப் பார்த்தால் செய்ய முடியும் என்று தான் தோன்றுகிறது. அப்படியொன்று செய்யக் கடினமான வேலை போல் தோன்றவில்லை. என்னைக்கேட்டால், இதை ஆங்காங்கே செய்யத்துவங்கலாம். என்ன செய்தாலும் மாட்டிக்கொள்ள மாட்டோம் என்ற நிலை தான் பற்பல குற்றங்களுக்கு அஸ்திவாரமாகிறது. அதை, தூக்கிப்போட்டு உடைத்தாலே போதும்.