அமெரிக்காவில் தமிழ் சங்கங்களும், ஃபெட்னாவும்
*****************************************************
அமெரிக்கா வந்து பதினோரு ஆண்டுகள் கடந்துவிட்டது. இதுகாறும் தமிழ் சங்கங்கள் குறித்தும், ஃபெட்னா செயல்பாடுகள் குறித்தும் ஏதும் எழுதியதில்லை. காரணம் ஒன்று தான். ஒரு புரிதல் ஏற்பட்ட பிறகு எழுதலாம் என்பதுதான் காரணம்.
இப்போது ஓரளவுக்கு புரிதல் வந்துவிட்ட காரணத்தால் இதை எழுதுகிறேன். இக்கட்டுரையில் வருவது முழுக்க முழுக்க எனது புரிதல்கள் தாம்.
அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்களின் செயல்பாடுகளில் பாராட்ட மிக முக்கியமான காரணம்: குழந்தைகளுக்குத் தமிழை அறிமுகம் செய்வது. இதைச் செய்வது தமிழ்ப் பள்ளிகள் தாம். அவற்றை நடத்துவது தமிழ் சங்க முன்னாள்/இன்னாள் உறுப்பினர்கள் தாம். இன்றைய தலைமுறையினருக்கு தமிழ் போய்ச் சேர்வது இவர்கள் மூலமாகத்தான். மட்டுமல்லாது, பிள்ளைகளிடம் தமிழ் வளர்க்க பேச்சுப்போட்டிகள், கட்டுரைப் போட்டிகள், திருக்குறள் போட்டி, இசை, நடனம், நாடகம் என்று பல போட்டிகளை நடத்தி பரிசும் தந்து ஊக்குவிக்கிறார்கள்.
அமெரிக்காவில் இந்தியாவின் அனைத்து மாநிலத்தவரும் வசிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளிடம் தாய் மொழியைச் சென்று சேர்க்கும் உன்னதப் பணியை தமிழ் சங்கங்களும், பள்ளிகளுமே செய்கின்றன. பிற மொழிகளில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பதாக நான் அவதானிக்கவில்லை. இன்றைய தலைமுறைப் பிள்ளைகளுக்கு தாய்மொழியை கொண்டு சேர்க்கும் விதத்தில் இவ்வமைப்புகளை எத்தனை பாராட்டினாலும் தகும் தான். அதில் மாற்றுக்கருத்தே இல்லை.
கலாச்சார நிகழ்வுகளும் இவர்கள் நடத்துகிறார்கள். உதாரணமாக பொங்கல், சித்திரை திரு நாள் விழாக்கள் போன்ற தமிழர் திரு நாள்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. எல்லாமும் தன்னார்வலர்கள் இணைந்து நடத்தும் நிகழ்வுகளே. ஊர் கூடித் தேர் இழுப்பதுதான். எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்ய தன்னார்வலர்கள் முன்வருவதுதான் இந்த நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக, தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் தோய்வில்லாமல் நடத்த முடிகிறது.
ஒவ்வொரு மாகாணத்திலும் இவ்வாறாக நடக்கும் போட்டிகளில் தேர்வாகுபவர்களுக்கு இறுதிப்போட்டிகளை ஃபெட்னா நிகழ்வில் நடத்துகிறார்கள். இதுகாறும் ஓகே.
அவ்வப்போது, இங்குள்ள தமிழ் அமைப்புகளில், தமிழ் இலக்கிய பணிகள் குறித்து சீரியஸாக குற்றச்சாட்டுக்கள் எழும். அதில் எனக்கு மாற்றுக்கருத்துகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக என் பார்வை பின்வருமாறு விளக்கலாம்.
இது அமெரிக்கா. இங்கே பள்ளிகளும், கலாச்சார நிகழ்வுகளும் நடத்த கட்டிடங்கள் தேவை அல்லவா? தமிழ் சொல்லிக்கொடுக்க வகுப்புகள் தேவை அல்லவா? மாணவர்கள் வந்து போக பார்க்கிங் தேவை. கலாச்சார நிகழ்வுகள் நடத்த மேடைகள் தேவை. மேடைக்கு அருகே தயாரிப்பு அரங்கு தேவை. இருக்கைகள் தேவை. பின் மாலைகளிலும் நிகழ்வு நடக்க, வெளிச்சம் தேவை. பங்குபெறுவோர், பார்வையாளர்கள், பங்குபெறுபவர்கள் உண்ண உணவு தேவை. இப்படி infrastructure தேவைப்படுகிறது. அதற்கு எங்கே போக? இங்குள்ள அமெரிக்க பள்ளிகளில் வார இறுதிகளை வாடகைக்கு எடுக்க முடியும் தான். வாடகை? வருடம் முழுக்க 52 வாரங்கள் வரும். இவ்வொரு வார இறுதிக்கான இடத்தை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். இதற்கெல்லாம் பணம்? அதை யார் தருவார்? கைக்காசு போட்டா செய்ய முடியும்?
மக்கள் தருவார்கள் தாம். பிரச்சனை அது அல்ல. வெறும் ஒற்றை இலக்க பங்குபெறுவோர்களை வைத்து என்ன நிகழ்ச்சி நடத்த முடியும்? ஒரு பள்ளி என்றால் சுமார் நூறிலிருந்து முன்னூறு மாணவர்கள் இருந்தால் தான், சராசரி கட்டணத்தில் பாடம் சொல்லித்தர முடியும். ஒரு நிகழ்ச்சி என்பது வெறும் நிகழ்ச்சி அல்ல. வர்த்தகத்திற்கான வாய்ப்பு. ஒரு நிகழ்ச்சி என்றால், ஐந்நூறிலிருந்து ஆயிரம் பேர் வந்தால் தான், வர்த்தம் நடக்கும். அப்படியானால், கூட்டம் வேண்டும். கூட்டத்தை உருவாக்குவது எப்படி?
"தமிழில் இலக்கியம் வளர்க்கலாம் வாருங்கள்" என்று கூப்பிட்டால் கூட்டம் வருவது இல்லை. கூட்டம் என்பது யார்? மக்கள் தான். மக்கள் வருகை அறவே இருப்பதில்லை.
பட்டிமன்ற ராஜா, பாரதி பாஸ்கர் வருகிறார்கள், 'கொஞ்சம் நடிங்க பாஸ்' ஆதவன் வருகிறார் என்றால் கூட்டம் அள்ளுகிறது. ஆயிரம் பேர் குவிந்து விடுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது. ஆயிரம் பேர் என்பது ஆயிரம் ப்ளேட் உணவு. மாகாணத்தின் முன்னணி உணவகங்கள் உணவு ஆர்டர் எடுக்க முன்வரும். முன்வரும் என்றால், donation. அதைத் தமிழ் சங்க பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்.
ஆக, வர்த்தமும், வர்த்தகத்திற்கான வாய்ப்பையும் தமிழ் சங்கங்களும் ஃபெட்னாவும் உறுதி செய்ய ஆவண செய்வது, புலம் பெயர்ந்து தொழில் தொடங்கியிருக்கும் தமிழர்களுக்கான வாய்ப்பு. அதற்காக வர்த்தகம் மட்டும் தான் நோக்கம் என்பதுவும் இல்லை. வர்த்தம், எல்லோரும் இணைந்து ஆரோக்கியமான பாதையில், சாதகமான பக்க விளைவுகளுடன் முன்னகர, பங்குபெறும் எல்லோருக்கும் ஒரு சகாயம் உருவாக்க ஒரு கருவி. அவ்வளவு தான். தமிழ் மக்களை ஒருங்கிணைப்பது, ஓரிடத்தில் கூட்டுவது, அதன் பலனாக தமிழ் வளர்ப்பது, அடுத்த தலைமுறைக்கு தமிழைக் கொண்டு சேர்ப்பது இவைகளே பிரதான நோக்கம் எனலாம்.
அப்படியானால், தமிழ் இலக்கிய பணிகள் குறித்து தமிழ் சங்கங்கள் மீதும் ஃபெட்னா மீதும் எழும் குற்றச்சாட்டுக்கள்?
முன்பே சொன்னது போல, "தமிழில் இலக்கியம் வளர்க்கலாம் வாருங்கள்" என்று கூப்பிட்டால் கூட்டம் வருவது இல்லை.
பிரச்சனை, தமிழ் இலக்கியத்திற்கு கூடாத கூட்டம் தான். இல்லாத கூட்டத்தை வைத்து என்ன வர்த்தகத்தை நடத்திவிட முடியும்? என்ன ஒருங்கிணைப்பு செய்துவிட முடியும்? இங்குள்ள மக்களிடையே தமிழ் இலக்கியத்திற்கு இவ்வளவு தான் மரியாதை. கூட்டம் கூடினால், தமிழ் சங்கங்கள் ஏற்றுச் செய்யக் காத்திருக்கின்றன என்பதுதான் நான் கண்டவரையில் உண்மை. ஏனெனில் மக்கள் கூடும் எல்லாவற்றிலும் வர்த்தகம் இருக்கிறது. வர்த்தகத்தை வைத்து, தமிழை இன்னும் சிறப்பாக வளர்க்க முடியும். தமிழை வைத்து இன்னும் சிறப்பாகக் கூட்டம் கூட்ட முடியும். இது ஒரு சக்கரம் போலத்தான். ஆக, பிரச்சனை, கூட்டம் தான். மக்கள் தாம். சினிமாவுக்குக் கூடும் கூட்டம், தமிழ் இலக்கியத்திற்குக் கூடுவதில்லை என்பதுதான் நிஜம்.
அதுதான் பிரச்சனையும் கூட.
