மயிலாடுதுறை நான் பிறந்த ஊர். அப்பாவுக்கு அரசு பி.டபிள்யூ.டீ யில் உத்தியோகம் என்பதால் 3-4 வயது இருக்கையிலேயே சென்னைக்குக் குடிபெயர்ந்துவிட்டோம். ஆயினும், வருடா வருடம் விடுமுறைக்கு, திருவிழாக்களுக்கு என்று மயிலாடுதுறை வருவது வழக்கமாக இருந்தது. 2005 வரை ரயில் மற்றும் பேருந்துப் பயணங்கள். 2005 முதல், வைத்தீஸ்வரன் கோயிலில் நிறுத்தி சாமி கும்பிட்டுவிட்டு மயிலாடுதுறை செல்வது வழக்கமாகிப்போனது. மயிலாடுதுறையை அடுத்த பேரளம் ஊரில் சில வருடங்கள் தாத்தா குடிபெயர்ந்திருந்தார். பேரளம் ஊர் துவங்குவதே ஒரு சிறிய கோயிலில் தான். அந்தக் கோயிலுக்கு அருகாமையில் தான் வீடு. ஆக கோயில் தான் எங்கள் விளையாட்டுத்தளமே.
அப்போதெல்லாம் மாலையானால் சித்தி, மற்றும் மாமா பிள்ளைகளுடன் நடந்தே பேரளம் ரயில் நிலையம் செல்வோம். அங்கே அப்போதெல்லாம் காலை, மாலை இரண்டே ரயில்கள் தான் வரும். ரயில் நிலையத் தண்டவாளத்தில் எங்களை விளையாட விட்டுவிட்டு பெரியவர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். எங்கள் வீட்டில் அரசு அலுவலர்கள் ஏராளம். ஒரு சித்தி, அப்போது திருத்துறைப்பூண்டியில் சப்-கலெக்டராக இருந்தார். மாமா மின்சார வாரியத்தில் பொறியாளராக குற்றாலத்தில் பணியில் இருந்தார். பெரியப்பாவும் மின்சார வாரியத்தில் பொறியாளரே.
பொறியியல் ஏ.வி.சி ல் தான் படிப்பதாக இருந்தது. கடைசி நிமிடத்தில் தான் ஜெரூசலேம் பொறியியல் கல்லூரி என்றானது. இன்னும் எத்தனையோ சொல்லலாம். இப்போது நினைத்தாலும் பசுமையான நினைவுகள்.
எதிர்வரும் 28ம் திகதி அன்று மயிலாடுதுறையில் வாகை இலக்கியக் கூடலின் நூல் அறிமுகக்கூட்ட நிகழ்வில் எனது தமிழக அரசின் சிறந்த சிறுகதை நூல் விருது பெற்ற 'வாவ் சிக்னல்' நூலும் இடம்பெறுகிறது.
நான் பிறந்த ஊரில், எனது நூல் அறிமுகம் நடைபெறுவது இதுவே முதல் முறை. அதைச் சாத்தியப்படுத்தும் வாகை இலக்கிய கூடல் அமைப்புக்கும், ஒருங்கிணைக்கும் தோழர் முருக தீட்சண்யா அவர்களுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
வாய்ப்புள்ள நண்பர்கள் கலந்துகொள்ளவும்.