என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday, 25 April 2026

அறிவுசார் சமூகமும், அதன் மீதான வெறுப்பும்

அறிவுசார் சமூகமும், அதன் மீதான வெறுப்பும்

*************************************************


"எலிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவதா?" என்றொரு புகழ்பெற்ற வாசகம் உண்டு. உண்மை வேறு. 


தமிழர்கள் நாம்  நம்மை அறிவார்ந்த சமூகம் என்று சொல்லிக்கொள்கிறோம். நியாயமாகப் பார்த்தால், சிந்தனையாளர்கள் போற்றப்பட்டிருக்க வேண்டும். எழுத்தாளர்கள் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். 


ஆனால், நிஜத்தில், படித்தவர்கள் மீது வெறுப்பைக் கக்கும் சமூகம் தான் நம்முடையது. 


உதாரணம் சொல்லலாம். நீங்கள் எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதி நூல்கள் வெளியிடுகிறீர்கள். ஒரு எழுத்தாளராக அடையாளப்படுகிறீர்கள். ஏதோவொரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே எழுத்தாளராக செயல்படுகிறீர்கள். 



நியாயமாகப் பார்த்தால், என்ன  நடந்திருக்க வேண்டும்? 'இவர் நம் தாய் மொழிக்கென, அதன் மேன்மைக்கென தன்னாலானதைச் செய்கிறார். இவரை ஊக்குவிப்போம். அவர் தன் வேலையைச் செவ்வனே செய்ய உதவி செய்வோம், அவருக்கு எளிமையாக்கித் தருவோம்' என்று மற்றவர்கள் எண்ணினால் அதை 'அறிவார்ந்த சமூகத்தை ஊக்குவிக்கும் சமூகம்' என்று சொல்லலாம்.


நிஜம் அப்படி இருக்காது. பக்கத்து வீட்டிலிருந்து பந்து வந்து விழும். உங்கள் அலுவல் மற்றும் எழுத்துக்கிடையில் அல்லாடும் நீங்கள், பந்தை எடுத்துப் போடுவீர்கள். அது மறுபடி வரும். எடுத்துப் போடுவீர்கள். மறுபடி வரும். எடுத்துப் போட போட மறுபடி மறுபடி வந்துகொண்டே இருக்கும். கேட்டால் "என்ன பாஸ் பண்றது, விளையாடுகிறான்கள்.. பிள்ளைகள் அல்லவா?" என்று பதில் வரும். அதே பந்து உங்கள் வீட்டு கொள்ளைக்கு வராத வண்ணம், net அடிப்பதோ, அல்லது பிள்ளைகளை விளையாட்டுத்திடலில் சென்று முறையாக விளையாடச் சொல்வது அங்கு நடக்காது. அதன் பின்னால் ஒரு திட்டமிடல் இருக்கும். அந்த net போட்டுவிட்டால், பிரச்சனை தீர்ந்துவிடுமே. பிறகு எப்படி உங்களைக் குறை சொல்வது? அதற்காகவேனும் அதைச் செய்ய மாட்டார்கள்.


சதா பந்து எடுத்துப் போட்டுக்கொண்டிருந்தால் உங்கள் வேலை எப்படி ஒழுங்காக  நடக்கும். உங்கள் வேலை பலு காரணமாக நீங்கள் வேலையில் ஆழ்ந்திருக்கையில், கொள்ளைப் பக்கம் போகவே நாளாகும். பந்து எடுத்துப் போட முடியாமல் போனால், "எழுத்தாளருங்குறாரு.. இப்படில்லாம் பண்றாரு.. " என்று ஒரு ஒபினியனை உலவ விட்டு விடுவார்கள். அவர்கள் எதிர்பார்ப்பு என்னவென்றால் "இப்படி பெயர் கெட்டுப்போகும். எதற்கு வம்பு?" என்று நினைத்து நீங்கள் பந்து எடுத்துப் போட்டுவிடவேண்டும். 


இது, அண்டை அயலாருடன் சமாதானமாய்ப் போதல் என்பதல்ல. "அறிவுசார் சமூகத்தின் மீதான வெறுப்பு" காரணமாக, உங்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவது. நெருக்கடிக்கு உள்ளாக்குவது எப்படி ஊக்குவிப்பு ஆகும்?. அதிலிருக்கும் name tampering கிற்கான வாய்ப்பு, அதை நோக்கி நகர்தல், இதுவெல்லாம் ஊக்குவிப்பு அல்ல. இது ஒரு திட்டமிட்ட செயல்பாடு தான். சுருங்கச் சொன்னால், உலகில் தான் மட்டும் தான் புத்திசாலி என்ற எண்ணம்.


இது ஒரு உதாரணம் தான்.  


ஏரியாவில் எழுத்தாளர் என்று யாராவது இருந்தால், ரகசியமாக கவனித்துக்கொண்டே இருப்பார்கள். மாவட்டத்தில் ஏதேனும் சமூக, கலாச்சார விழா என்றால் புறக்கணிக்கப்படும் எழுத்தாளர் குறித்தெல்லாம் கேள்வியே எழுப்ப மாட்டார்கள். அப்போதெல்லாம், இருக்கும் இடம் தெரியாமல் இருப்பார்கள். எழுத்தாளருக்கு ஏதேனும் தேவை ஏற்படும்போதெல்லாம் கூட பிக்சரிலேயே வரமாட்டார்கள். தெருக்குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால் அப்போதுதான் எழுத்தாளர் இருப்பது நினைவில் வந்துவிடும். உடனே உணர்ச்சி வசப்படும் அளவுக்கு நெருங்கிப் பேசி, கார்போரேஷனில் பிராது கொடுக்கும் அளவிற்கு தூண்டிவிடுவார்கள். எழுத்தாளர் ஒத்துழைக்கவில்லை என்றால் "என்ன எழுத்தாளரோ?" என்று பொதுவில் பேசுவார்கள். இது ஒரு விதமான சுரண்டல் மூளைதான். Parasitic scavenging attitude. 


இப்படி நிறைய சூழல்களைச் சொல்லலாம்.


எப்போது இவர்கள் இந்த இடத்திற்கு வந்துவிட்டார்களோ, எப்போது தாய்மொழி மீதான உங்கள் உழைப்பு அவர்களுக்கு புரியவில்லை, அவர்களுக்கு வேறெதுவுமே புரியப்போவதில்லை. "அண்டை அயலாருடன் சமாதானமாய்ப் போதல்" என்பதெல்லாம் அவர்கள் வசதிக்கு உங்களைப் பயன்படுத்திக்கொள்வது தான்.  இதுவெல்லாம்  micro shitty politics. 


யோசித்துப் பார்த்தால், சில்லரையாக இருக்கும். ஆனால், இது போன்ற சில்லரைத்தனங்கள் சிலருக்கு நன்றாக வரும்.  ஆனால், பொறியியலோ மருத்துவமோ படித்திருப்பார்கள். கார்கள் வைத்திருப்பார்கள். அந்த விலையுயர்ந்த பங்களாவுக்குப் பின்னால், அந்த பகட்டின் பின்னால்,  சில்லரையை எண்ணிக்கொண்டிருக்கும் மூளையின் சமிஞைகள் இவை.


"I saw it coming from miles away" என்று சொல்வார்கள் இல்லையா? அது போல, இது போன்ற நிகழ்வுகளை வைத்து ஆளின் தரத்தை எட்ட இருந்தே கண்டுகொண்டு விடலாம். இது போன்ற  நபர்களுக்குத் தனியாக வாழவே தெரியாது. உடன் சேர்பவர்களையும் கெடுத்து, தானும் கெடும் விதி அவர்களுக்கு இருக்கும். இது போன்ற உறவுகள் எல்லாம் மேலோட்டமாக நன்றாக இருப்பது போல் பாவலா தான் செய்யும். உள்ளுக்குள்ளே மிகவும் விஷத்தன்மை வாய்ந்ததாகத்தான் இருக்கும். இப்படியெல்லாம் நான்கு பேரை நண்பர்கள் என்று வைத்துக்கொள்வதை விட தனியாகவே இருந்துவிடலாம். 


துன்பத்தில் உழல்பவர்கள், "எனக்கு மட்டும் ஏன் விடியவே மாட்டேன் என்கிறது?" என்று புலம்புபவர்கள், இது போன்ற ஆட்களைத் தவிர்க்க முடியாமல் சுற்றத்தில் இருக்கக் கொண்டவர்கள் தான். எப்படி? சொந்த வீடு வாங்கியிருப்பார்கள். பக்கத்து வீட்டில் இப்படி ஒரு விஷம் இருந்து தொலைக்கும். இதற்காக வீட்டையா விற்க முடியும்? என்று அங்கேயே இருக்க வேண்டி வரும்.  என் பரிந்துரை தொலை நோக்கு நன்மைகளைக் கருதி, வீட்டை விற்றுவிடுவது தான். வாடகை வீடுகளில் இந்தப் பிரச்சனை எழுந்தால், வீட்டை காலி செய்துவிட்டுச் சென்றுவிடலாம். 


"எலிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவதா?" என்று எண்ணி எண்ணி தான் தொடர்ந்து விஷத்தன்மை கொண்ட மனிதர்களுடன் புழங்கிக்கொண்டிருப்பார்கள், அந்த நட்பு தான் நம்மை பாதாளத்திலேயே வைக்கிறது என்பதை அறியாமலேயே. சில நேரங்களில், சில எலிகளுக்கென வீட்டைக் கொளுத்துவது தான் நன்மையில் முடியும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பதும் புத்திசாலித்தனம் தான்.