என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Thursday, 5 November 2026

ராமாயணம்!!

 ராமாயணம், ஒரு கதை அல்ல. அது இப்போதிருக்கும் எந்த நாட்டுக்கும் சொந்தமான கதையும் அல்ல. ராமாயணம் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் காலத்தில் இப்போதிருக்கும் நிலப்பரப்புகள் இருக்க வாய்ப்பில்லை.


உதாரணமாக, ராவணனின் ஊர் தென் அமெரிக்கா என்றும், சுக்ரீவன் ராவணனின் இடத்தைத் தேடி அடைந்த இடமே பெருவில் உள்ள PARACUS CANDELABRA என்றும் கூட கதைகள் உண்டு. இதெல்லாம் உண்மையா என்றால், 'தெரியாது' என்று தான் சொல்ல வேண்டும். 

 

நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்படவேண்டும். உலக நாகரிகங்களில் எஞ்சியுள்ள இது போன்ற பழங்கதைகள் உலகத்திற்கே பொதுவாக்கப்பட்டு இப்போது கிடைக்கும் அகழ்வாராய்ச்சி முடிவுகளை வைத்து சரிபார்த்தல் செய்யப்படவேண்டும். இந்த ஒட்டுமொத்த செயல்பாட்டில் கண்டங்கள் கடந்த  நேர்மையும், மனித இனத்தின் சரித்திரம் தேடும் உண்மையான தேடலும் மட்டுமே இருக்க வேண்டும். இதுவெல்லாம் சாத்தியப்பட்டால் உண்மைக்குப் பக்கமாக நாம் செல்லக்கூடும்.

 

ராமாயணம் செவிவழிச்செய்தியாகக் கடத்தப்பட்ட பல கதைகளின் தொகுப்பு. இந்தத் தொகுப்பே ஒவ்வொரு நிலப்பரப்பிலும் வெவ்வேறானதாக இருக்கிறது. இந்தியாவில் ஒரு கதை என்றால், இந்தோனெஷியாவில் சற்றே மாற்றங்களுடன், ஜப்பானிலும் வேறு சில மாற்றங்களுடன்... இப்படி உலகம் முழுவதும் பல நாகரிகங்களில் ராமாயணக்கதைகள் கிடைக்கின்றன.


இது எல்லாமும் கூட்டாக என்ன சொல்கிறதென்றால், ராமாயணம் உலகத்தின் கதை. ஒட்டுமொத்த மனித இனத்தின் கதை. இந்தியாவோடோ, இந்தியாவின் எதோடுமோ இணைக்காமல் புரிந்துகொள்ளப்படவேண்டிய கதை. இந்தப் புரிதலோடு ராமாயணத்தை அணுகுமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.