கேள்வி:
உங்கள் நூல்களுக்கு விமர்சனங்கள் அதிகம் இல்லையே?
பதில்:
"நவீன சிறைச்சாலைத் தத்துவம்" சிறுகதையை எடுத்துக்கொள்ளுங்கள்.
நாயகன் சிறையிலிருந்து தப்பிக்க நினைக்கிறான். சிறைக்கைதிகள் மூலம் ஒரு அதிர்வெண் கிடைக்கிறது. அதன் வழி ஒரு கிரகத்தில் இறங்குகிறான். அக்கிரகத்தில் காலம் வேறுவிதமாய் வேலை செய்கிறது. கிரகத்தில் ஒருவர் வெளி உலகுடன் தொடர்பு கொள்ளக் கருவிகள் வைத்திருக்கிறார். கிரகமோ ஒரு கருந்துளையைச் சுற்றி வருகிறது.
இச்சிறுகதையை வாசித்துவிட்டு ஒருவர், 'அதெப்படி கருந்துளையிலிருந்து தொடர்பு கொள்ள முடியும்? Nothing escapes from its immense gravity. இல்லையா?" என்றார்.
இது ஒரு பிரச்சனை. தமிழில், அறிவியல் கட்டுரைகள் எழுதுபவர்களால் கருந்துளைக்கருகில் Nothing escapes from its immense gravity என்கிற அளவில் தான் அறிவியல் விளக்கப்பட்டிருக்கிறது.
இது போன்ற விளக்கங்களுடன் எனது சிறுகதைக்குள் நுழைபவர்கள், 'இவர் சொல்வதெல்லாம் நிஜமாகவே சாத்தியமா?' என்கிற கேள்வியோடு கடந்து போய்விடுவதில் ஆச்சர்யம் என்ன? இந்த எண்ணத்துடன் அவர்களால் விமர்சனம் எழுத இயலாது. மேற்கொண்டு தெரிந்துகொண்டு எழுதலாம் என்று ஒத்திப்போடுவார்கள். அது, நாளாகி, நாட்கள் மாதங்களாகி, ஏனைய முன்னுரிமைகளால் இறுதியில் அது காணாமலே போய்விடும்.
மட்டுமல்லாமல், கருந்துளைகளைச் சுற்றும் கிரகங்கள் குறித்த கதைகள் தமிழில் எத்தனை வெளியாகியிருக்கின்றன? யார் யார் அவற்றை எழுதினார்கள்? அது எப்படியெல்லாம் விமர்சிக்கப்பட்டிருக்கிறது? இது போன்ற தகவல்களைச் சேகரித்துப் பார்த்தாலும், காரணம் விளங்கும்.
எனது சிறுகதைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டால், அந்தத் தளங்களில் வந்து என்னால் விளக்க முடியும். உதாரணமாக, புத்தக வாசிப்புக் குழுக்களில் எனது நூல்கள் எத்தனை முறை விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதைக் கவனித்துப் பார்த்தால், இது நடக்க எத்தனை வாய்ப்புக்கள் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள இயலும்.
இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டி இருக்கிறது. "அறிவியல் வளர்ப்பது" என்பது ஒரு தனி நபர் முயற்சி அல்ல. அது, ஊர் கூடி இழுக்க வேண்டிய தேர். தனி நபராக என்னால் என்ன இயலுமோ அதைத்தான் என்னால் செய்ய முடியும்.
தமிழில் அறிவியல் கட்டுரைகள் நானே எழுதலாமென்றால், புனைவுகள் எழுதவே நேரமில்லாமல் செயற்கை நுண்ணறிவுடன் போராடிக்கொண்டிருக்கிறேன். குறைந்தபட்சம், எனது புனைவுகளை விளக்கியேனும் ஏதேனும் நிகழ்ச்சிகள் செய்யலாம் தான். பார்க்கலாம். வாய்ப்பமைகிறதா பார்க்கிறேன்.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், தமிழில், அறிவியல் கட்டுரைகளால் மக்களுக்குச் சென்று சேர்ந்திருக்கும் அளவினதான அறிவியல் ஞானம், எனது சிறுகதைகளைப் புரிந்துகொள்ளப் போதுமானதாக இல்லை. எனக்கும் அதிகம் நேரமில்லை. நான் ஒற்றை ஆள் என்னத்தைப் பெரிதாகச் செய்துவிட முடியும்? எத்தனையைச் செய்து விட முடியும்? இந்தப் பிரச்சனைக்கு இப்போதைக்கு விடிவே இல்லை. அதனால் தான் என்ன நடக்கிறதோ அது நடந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் எனக்கு, 'இறைவன் விட்ட வழி' என்று இருப்பதைக் காட்டிலும் வேறு வாய்ப்பிருக்கிறதா என்ன?

