என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday, 13 November 2026

சிறுகதை விமர்சனங்கள் - 4

சிறுகதை விமர்சனங்கள் - 4


விடுபட்ட நரி - யுவன் சந்திரசேகர்

*************************************


சொல்வனம் இதழில் வெளியாகியிருக்கும் எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் 'விடுபட்ட நரி', சற்று நீளமான கதை. ஒரு ரயில் பயணத்தில் துஷார் குப்தாவின் என்கிற கற்பனை எழுத்தாளரின் கதைகளை வாசிக்கும் ஒருவனின் கதை. கதைக்குள் மூன்று உபகதைகள் வருகின்றன.

https://solvanam.com/2026/11/08/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%b0%e0%ae%bf/

கற்பனை எழுத்தாளர் துஷார் குப்தா, தொன்மக்கதைகளில் இடைச்செருகல்கள் செருகுவது பற்றி, அதற்குத் தரும் விளக்கங்கள் என்று குறிப்பிடப்படும் பத்திகள் இவை.

//அறிவியல் நோக்கின் வறட்சியோ, ஆன்மிகத் தரப்பின் வழிபாட்டுணர்வோ இன்றிப் பார்க்கும் பட்சத்தில், பழங்கதைகளின் இடைசந்துகளில் ஒளிந்திருக்கும் நூதனமான மானுட உணர்வுகளைக் காண முடியும்; புதிதாக வனைந்து பார்க்கவும் முடியும். பலசமயங்களில், சமகால நிகழ்வுகளின்மீது அவை வெளிச்சம் பாய்ச்சவும் கூடும். //

//வேண்டுமென்றேவோ, விவரிப்பின் சுவாரசியத்தில் கவனிக்கத் தவறியோ மூல ஆசிரியர்கள் விடுத்த இடைவெளிகளையே என்னுடைய நோக்கில் நிரப்ப முயன்றிருக்கிறேன். ஒருவகையில் அவர்கள் கட்டியெழுப்பியவற்றில்   விடுபட்டவை  என்றுகூட இவற்றைச் சொல்லலாம்…//

இடையிடையே, நடப்புலகில் கலைஞனுக்கு நேரும் நிர்பந்தங்கள் குறித்து ஆங்காங்கே குறிப்பிடவும் தவறுவதில்லை..

//இன்னொரு வகையில், கலைஞனுக்கு நிம்மதியளிக்கும் கனவுகள் அவை. ஏனெனில்,  சமகாலம் பற்றிய புனைவுகளை எழுதும் பட்ச்த்தில், அவன் ஓடஓடத் துரத்தப்படுவதற்கான சாத்தியம் எப்போதுமே ஒளிந்திருக்கிறது – எந்தக் காலகட்டத்திலும். //

கதைக்குள் வரும் முதலாவது கதை ராமாயணக்கதை. 


சபரி ராமனுக்கு மீனும் தேனும் சமைத்துப் போட்டிருக்கிறாள். 

//வேட்டுவனானாலும் நீ அரசன். நான் என்ன,  சாதாரணப் பழங்குடிப் பெண்பிள்ளைதானே! என் கையால் சாப்பிடுவார்களோ என்னவோ?//

// ‘உன்னை சகோதரன் என்றானே மகனே, என்னைத் தாய் என்று சொல்லவில்லையே!’.// இவ்விரண்டு வரிகளும் உணர்த்த வேண்டியதை உணர்த்திவிடுகின்றன.

அடுத்தது மஹாபாரதக் கதை.

//உண்மையில், வரலாற்றின் தொடர்ந்த ஓட்டத்தில், எத்தனையோ நம்பிக்கைகள் காலாவதி ஆகியிருக்கின்றன. பண்டைக்கால அரசர்களின் கொடுங்கோன்மைக்குக் கொஞ்சமும் குறைந்ததில்லை சமகால அரசிகளின் கொடுங்கோன்மை என்பது அபத்தமாக, திரும்பத்திரும்ப  நிரூபணமாகியிருக்கிறது. //  இப்படி எனக்கும் அவ்வப்போது தோன்றும். வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு பார்வைகளில் தோன்றியிருந்தாலும், சிந்தனை ஒன்று தான்.

//எத்தனை சுயநலமியாய் இருந்துவிட்டேன். இன்றைக்கு இத்தனை துணிச்சல்காரியாய் இருக்கும் நான், அன்றைக்கு ஐந்துபேருக்கு மனைவியாய் வாழ முடியாது என்று தகப்பனையோ, மாமியாரையோ எதிர்த்து நின்றேனா? பெற்றெடுத்த குழந்தைகளை மார்போடணைத்து வளர்த்தேனா? அசட்டுக் கணவர்கள் சூதாடித் தோற்றபின், மைந்தர்களைக் கூட்டிக்கொண்டு தகப்பன் வீட்டுக்குப் போயிருக்கலாமே, போனேனா? உச்சபட்சக் கேவலத்தை அனுபவித்தபிறகு, ஆத்மஹத்தி செய்துகொண்டிருக்கலாமே, செய்தேனா? கௌரவசபையில் நான் பட்ட அவமானமும், அதற்குப் பழிதீர்க்க நான் எடுத்த சபதமுமே பெரிது என்று கருதித்தானே வனம் புகுந்தேன்? வனத்துக்குள்ளும், கணவர்களுடைய பலவீனத்தின் நடமாடும் சாட்சியாக அவர்கள் முன் நடமாடிக்கொண்டே இருந்ததைத் தவிர வேறென்ன சாதித்துவிட்டேன்? // திரெளபடி தனக்குத்தானே எழுப்பிக்கொள்ளும் கேள்விகளாக இவை தோன்றினாலும், உண்மையில், வாசகர்களுக்கும் இதே கேள்விகள் நியாயமாகவே தோன்ற அனேக வாய்ப்பிருக்கிறது. அதனைச் சிறுகதையில் கொணர்ந்ததில் வாசகனுடனான ஒன்றுதல் மிக இயல்பாகவே ஏற்பட்டுவிடுகிறது இல்லையா?. 

இறுதியாக வரும் கதை, பிரம்மபுராணத்தில் வரும் கதை.

இவ்விதம் மூன்று தொன்மக்கதைகளுக்கு மாற்று விளக்கங்கள்/விமர்சனங்கள்/பார்வைகளை ஒரு கற்பனை எழுத்தாளனின் வாயிலாகப் பதிவு செய்கிறார் எழுத்தாளர்.

வாசிக்க சற்று நீளமாக கதை என்றாலும் மூன்று உப கதைகளையும் அவற்றுக்கான விளக்க பார்வைகளையும் உள்ளடக்கியிருப்பதால் நீளத்தை நியாயப்படுத்தவே செய்கிறது.

எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்கு எனது வாழ்த்துக்கள்.