என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Tuesday, 3 November 2026

தமிழ் இலக்கிய ஆளுமை எழுத்தாளர் இரா.முருகன் அவர்களின் மறைவுக்கு, என் இதயப்பூர்வ அஞ்சலி.🙏🙏🙏

 



2022ம் ஆண்டில் ஜீரோ டிகிரி சிறுகதைப்போட்டிக்கு அவரே நடுவர். அந்த ஆண்டில் தான் எனது அறிபுனை சிறுகதை சோஃபியாவுக்கு விருதும் கிடைத்தது. அறிவியலுக்கும், அறிவியல் பார்வைகளுக்கும், எதிரானதாகத்தான் தமிழ் சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இயங்குகிறது. ஆன்மீகம், அதன் அடிப்படையிலான ஜாதிக்கட்டுமானம், அதன் அடிப்படையிலமைந்த அரசியல், குழு மனப்பான்மைகள், சமூக செயல்பாடுகள், இவற்றை மையமாகக் கொண்ட பெருத்த எண்ணிக்கையிலான மக்கள் கூட்டம், அவற்றை முதலீடாகக் கொண்ட மீடியாக்கள் இவைகளை அஸ்திவாரமாகக் கொண்ட சமூக அமைப்பு தான் நம்முடையது. இம்மாதிரியான சமூகத்தின் பெரும்பாலான கதைக்களங்கள் இவற்றைச் சார்ந்தே அமைந்தும் விடுவது இயற்கையாகவே நிகழ்ந்துவிடுகிறது. யாரைக் குறை சொல்வது என்றே சமயத்தில் தெரிவதில்லை. 'நல்ல கதைகள் எத்தனையோ இருக்கே' என்றால், 'மக்கள் பாக்கமாட்டங்க பாஸ்' என்றே பதில் வருகிறது. இந்தச் சமூகத்தில் எப்படிப்பட்ட குறைகளைச் சுட்டும் கேள்விகளுக்கும், அங்கே இங்கே என்று சுற்று இறுதியில் அது 'மக்கள்' மீதே திரும்புகிறது.
ஆயினும், யாரேனும் மக்களால் மறக்கடிக்கப்படும் அறிவியலை நினைவில் கொண்டுவர முயற்சித்துக்கொண்டே இருக்கிறார்கள். தமிழில் அறிவியல் புனைவுகள் எழுதும் ஒவ்வொருவரையும் இந்த அரும்பணியை மேற்கொள்பவர்கள் என்று அடையாளப்படுத்தலாம். ஒவ்வொருவரின் பங்களிப்புகள் வெவ்வேறானதாக இருக்கலாம். ஆனால், அவர்களின் முயற்சி, நோக்கம் எல்லாமும் அறிவியலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதாகத்தான் இருக்கும். இருளில் கடலில் தொலைந்திருக்கையில் தூரத்தே தென்படும் கலங்கரை விளக்கம் போல.
இந்தப் பின்னணியில், சமயத்தில், எழுத்தாளர் இரா.முருகன் அவர்கள் நடுவராக இருந்திருக்காவிட்டால், 2022 ஜீரோ டிகிரி விருதுக்கு எனது அறிபுனை 'சோஃபியா' தேர்வாகியிருக்காது என்று அவ்வப்போது தோன்றும்.
எழுத்து பழகத்துவங்கிய துவக்க காலத்தில் சுஜாதா முன்மாதிரியாக இருந்திருக்கிறார். ஏனெனில், பொறியியல் வல்லுனராகப் பணியில் வெற்றிகரமாக இருந்துகொண்டே எழுத்தென்னும் குதிரை மீதும் சவாரி செய்துகாட்டினார். இது போல் ஐடியில் இருந்துகொண்டே எழுத்தையும் வெற்றிகரமாக மேற்கொள்ளும் அனைவரையும் முன்மாதிரியாகப் பார்க்கிறேன். இரா.முருகன் சாரையும் அப்படித்தான் அறிந்திருக்கிறேன். அவரது மறைவுச் செய்தி சற்று பலவீனமாக உணரவைக்கிறது. ஒரு பெரிய ஆற்றல் மிகுந்த, நாற்பதாண்டுகால அனுபவம் மிக்க கை குறைவதைப் போலத் தோற்றமளிக்கிறது. இந்த வெற்றிடத்தையெல்லாம் எதைக்கொண்டும் நிரப்புவதற்கில்லை.
அவரிடம் நான் பேசியதில்லை. அமெரிக்க வாழ்வு யாரையும் சந்திக்க அனுமதிப்பதில்லை. தொலைபேசி உரையாடல்கள் செயற்கைத்தன்மைகளுக்கு இடமளிப்பவை. எழுத்து மூலமாக வரும் நட்புகள், உறவுகளே எனக்கு நிலைத்து நின்றிருக்கின்றன. இப்போது என்னுடன் நெருக்கமாக இருப்பவர்கள் அத்தனை பேரும் ஏதோ ஒரு ஆக்கத்தின் வழி, கடிதப்போக்குவரத்தில் துவங்கி, உரையாடல்கள் வழி நிலைத்தவர்களே. எனக்கு இந்த ரூட் தான் வேலை செய்கிறது. அப்படியான ஒரு வழித்தடம், இரா.முருகன் சாருடன் அமையாததில் வருத்தமே என்று சொல்வதைக்காட்டிலும், இதோ இன்றமையும், நாளை அமைந்துவிடும், இன்னொரு மேலான நல்ல தருணத்தில் அமைந்துவிடும் என்ற ஒத்திப்போடுதலில் நிஜமாகாமல் போனவைகள் என்று சொன்னால் மிகையாகாது.
தமிழ் இலக்கிய ஆளுமை எழுத்தாளர் இரா.முருகன் அவர்களின் மறைவுக்கு, ஒரு சக அறிவியல் புனைவெழுத்தாளனாக, என் இதயப்பூர்வ அஞ்சலி. 🙏🙏🙏