என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Wednesday, 9 October 2024

பிக் பாஸ் - நாள் 3

 பிக் பாஸ் - நாள் 3



மனித குலம் நாகரீகமடைய அடைய, தனக்கென விதிகளை வகுத்துக்கொள்கிறான் மனிதன். ஆனால், இயற்கையின் விதிகளே இறுதியானவை.

நாளையே ஒரு விண்கல் மொதி இந்த பூமியில் மனித இனம் பேரழிவைச் சந்திக்குமானால் பிழைக்கப்போவது, உணவை உருவாக்கத்தெரிந்த, விவசாயம் தெரிந்த, காடுகளிலும் மேடுகளிலும் வாழப் பழகியவர்களே என்பதில் எள் அளவும் ஐயமில்லை.

அப்படியோரு பேரழிவில், ஆனந்த் அம்பானியை விடவும் அவரது வேலைக்காரர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம். (இந்தப் பின்னணியில் அவரது ஐயாயிரம் கோடி திருமணம், ஒரு ஜோக். அவ்வளவுதான்)

எதிர்கால, உலகிற்கு, எந்த மனிதன், தன் பிழைப்புக்குத் தேவையான அத்தனையையும் தானே செய்யத்தெரிந்து வைத்திருக்கிறானோ அவனே தேவைப்படுவான். Fermi paradoxற்குத் தரப்படும் விளக்கங்களில் பிரதானமானது, ஒரு கட்டத்துக்கு மேல் நவீனப்படும் முன், அந்த இனமே அழிந்துவிட நேர்வது தான், பிரபஞ்ச வெளியில் வேற்று கிரக வாசிகளை நாம் இதுகாறும் எதிர்கொள்ளாததற்குக் காரணம் என்பதுதான்.

'பிக் பாஸ் தான் என் பலம்' என்று சொல்லவே செய்கிறார் ரவீந்தர். என்ன எதிர்பார்க்கிறார்? தன்னுடைய 7 சீஸன் விமர்சன அறிவுக்காக மற்றவர்கள், தான் செய்யவேண்டிய உடல் உழைப்பு கோரும் வேலைகளைத் தனக்காக செய்வார்கள் என்றா? இப்படித்தான் சாதிகள் கட்டமைக்கப்பட்டது.

ஒரு தளத்தில், பிழைக்கத்தேவையான அத்தனையையும் ஒரு மனிதன் தன்னக்குள்ளாக சுவீகரித்துக் கொண்டிருக்க வேண்டும். அதுவே சாதிப் பாகுபாடுகளை அழிக்கும் வழி. அப்படிக் கொள்ளாதவர்களை, ஒரு சமூகம், அவரின் நலனுக்காக, சுவீகரிக்க ஊக்குவிக்க/கட்டாயப்படுத்த வேண்டும். நல்ல ஆரோக்கியமான சமூகங்களுக்கான அடையாளமாக இதனைச் சொல்லலாம்.

கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களைக் கூட 'Its a brain game' என்பார்கள். இல்லை. ஒரு கூட்டம் ஒரு விளையாட்டின் கடிவாளத்தைத் தன் கரத்திலேயே வைத்திருக்கச் சொல்லும் போலி வார்த்தைகள் தான் அவை. அந்த வார்த்தைகளில், உலகின் ஜனத்தொகையில் இரண்டாவதாக இருக்கும் நாடு வீழ்ந்தது துரதிருஷ்டமே. பிக் பாஸ் 8வது சீசனில் காணப்படும் அதே துரதிருஷ்டம்.

Boys or girls போட்டியில் இயற்கையின் விதிகளை மறந்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது.



மரபணுக்கள் சிறுகதைத் தொகுப்பு நூல் - படைப்பு சங்கமம் - 2024 காணொளி

 படைப்பு பதிப்பகம் வெளியிடும் எனது அடுத்த விஞ்ஞானப் புனைவுச் சிறுகதைத் தொகுப்பு நூலான 'மரபணுக்கள்' நூலுக்கு படைப்பு சங்கமம் - 2024 நிகழ்வில் வெளியிடப்பட்ட காணொளி.


பொருத்தமான படங்களுடன், இனிமையான இசையுடன் மிக அழகான காணொளியாக வந்துள்ளது. படைப்பு பதிப்பகத்தாருக்கு எனது நன்றிகள்.

https://www.youtube.com/watch?v=KjCPO6N5cLs

நூல் வாங்க தொடர்புக்கு:
----------------------------------------
அலைபேசி எண்: 7338897788 / 91 97908 21981
நூல் விற்பனை பொறுப்பாளர்கள்: ரூஃபஸ் வி ஆண்டனி / சலீம் கான்(சகா)

PADAIPPU KUZHUMAM,
No. 3, Ground Floor,
Ajantha Towers,
Corporation colony Street,
Kodambakkam, Chennai - 600 024
Mobile : +91 73388 97788 / 73388 47788

Monday, 7 October 2024

பிக் பாஸ் - நாள் 1

பிக் பாஸ் - நாள் 1



சாச்சனா முதல் ஆளாக, இருபத்து நான்கு மணி நேர இவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார்.

எதார்த்தமாக, மிகவும் அப்பாவித்தனமாக அவர் பகிர்ந்து கொண்ட ஒன்றை வைத்தே அவரை eliminate செய்திருக்கிறார்கள் போட்டியாளர்கள். இனி அவர் 'விழித்துக்கொள்வார்' என்று நம்பலாம். பார்க்கப்போனால் இது ஒரு சுழற்சி தான். ஏதாவது ஒரு கட்டத்தில் அப்பாவித்தனம் உதிர வேண்டும் அல்லவா? அந்த  'நல்ல' காரியத்தைத்தான் போட்டியாளர்கள் செய்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. சாச்சனா இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நம்மில் எல்லோருக்குமே இது ஏதாவது ஒரு கட்டத்தில் நடந்திருக்கும். அப்போதுதான் 'விழித்திருப்போம்'. அந்த வகையில் போட்டியாளர்களுக்கு நன்றிகளைச் சொல்வோம்.

இதில் சாதகமான விஷயம், அவரது இருபத்துயோரு வயது.

ஒரு தோல்வி நம்மை என்ன செய்கிறது என்பதில் தான் நாம் யார் என்பதையும் உலகம் தெரிந்துகொள்ளும். இந்தப் புள்ளியில் இரண்டே outcome தான். இந்தத் தோல்வியில் சாச்சனா துவண்டு காணாமல் போவதும், அதை விடவும் வலுவாக அடுத்த கட்டம் எடுத்து வைப்பதும் தான். 

இளம் வயதில் தோல்விகள் நம்மைப் பக்குவப்படுத்தும் என்பது என் வாதம் மட்டும் பார்வை. அந்தக் காரணத்தால், விரும்பியே தோல்வியைத் தழுவுங்கள் என்பேன். முதல் பாதி கடினமாக இருப்பவருக்கே இரண்டாம் பாதி நன்றாக இருக்க வாய்ப்பு அதிகமிருக்கிறது.  

பள்ளி, கல்லூரிகளில் மிகப்பெரிய அளவில் bullyingஐ சந்தித்திருக்கிறேன். என் வகுப்பில் படித்தவர்களுக்கு என் குறித்து, 'இவனெல்லாம் வேஸ்ட்' என்கிற அளவில் தான் ஒபினியன் இருந்தது என்பது எனக்கே தெரியும். என் முகத்துக்கு நேராகவே சொல்லியிருக்கிறார்கள். 'நாம வேஸ்ட் தானோ' என்று என்னையே கேட்டுக்கொண்ட நாட்களும் இருந்திருக்கின்றன. 

இன்று சாச்சனா அழுகையுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது, கல்லூரியில் கடைசித் தேர்வை எழுதிவிட்டு ஈர்மான கண்களுடன் வெளியேறிய என்னையே திரும்பிப் பார்த்தது போலிருந்தது.

நாள்பட நாள்பட தான் புரிந்தது, எல்லோருமே, பிறிதேதோ ஒருவரின் கண்களுக்கு 'வேஸ்ட்' ஆகத்தான் இருக்கிறார்கள். எல்லா தரப்புக்கும் ஒரு எதிர் தரப்பு இருக்கிறது. பறவைகள் பலவிதம். சாச்சனா இன்று தன் எதிர்தரப்பைப் பார்த்திருக்கிறார். 

ஒரு சிறுகதை எழுதுகிறோம். எல்லோருமா வாழ்த்துகிறார்கள்? குறை சொல்பவர்களும் இருப்பார்கள். அந்தக் குறைகள் என்ன என்பதை மட்டும் தான் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அந்தக் குறைகளின் மீது வேலை செய்ய வேண்டும். அந்தக் குறையின் தீவிரத்தைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும். அதன் மீது நம் உழைப்பை நல்க வேண்டும். இப்படியெல்லாம் செய்தால் வெற்றி கூடும் என்று அர்த்தமில்லை. வெற்றி நம் கையில் இல்லை, அது இயற்கையின் கையில். எப்போது எங்கு யாருக்கு வெற்றியைத் தர வேண்டும் என்பது அதன் கணக்காகிறது.

நம் வேலை உழைப்பை நல்குவது மட்டுமே என்று தான் சொல்கிறேன்.

சாச்சனா அதைச் செய்வார் என்று நம்புகிறேன்.  




Saturday, 21 September 2024

மரபணுக்கள் - விஞ்ஞானச் சிறுகதைகள் - புதிய நூல் வெளியீடு

 படைப்பு பதிப்பக வெளியீடாகவும் எனது பதினான்காவது நூலாகவும் "மரபணுக்கள்" என்ற தலைப்பிலான விஞ்ஞானப் புனைவுச் சிறுகதைத் தொகுதி நூல் வெளியாக இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் நண்பர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு வகையில், இது, தமிழ் நாடு அரசின் விருது பெற்ற விஞ்ஞானப் புனைவுச் சிறுகதை நூலான எனது 'வாவ் சிக்னல்' நூலின் தொடர்ச்சி எனலாம். அத்தொகுதியில் இடம்பெற்ற சிறுகதைகள் எழுதப்பட்ட காலகட்டத்தில் எழுதப்பட்ட சிறுகதைகள் தாம் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. ஒரே வித்தியாசம், இவைகளும் அறிவியல் புனைவுகள் தான் என்றாலும், மரபணுக்களை மையமாகக் கொண்ட பத்து சிறுகதைகளைக் கொண்ட நூல் என்பதுதான்.
எதிர்வரும் 28-09-2024 தேதியில் நடைபெற இருக்கும் படைப்பு சங்கமம் - 2024 நிகழ்வில், இந்த நூல் வெளியாக இருக்கிறது. வாய்ப்பிருக்கும் நண்பர்கள் நிகழ்வில் பங்குபெறலாம்.
விழா நாள் : 28-09-2024
இடம்: Sir Pitty Thiyagaraya Hall
68, Gopathi Narayanaswami Chetty Road, Parthasarathi Puram, T. Nagar, Chennai- 600017
(Opposite Kannadasan Statue)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 7 வரை
மதிய உணவு: அரங்கத்திலேயே வழங்கப்படும்
தேநீர் மற்றும் ஸ்னாக்ஸ்: காலை மற்றும் மாலை
எனது நூலை வெளியிடும் படைப்பு பதிப்பகத்தாருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். எனது இந்தப் புதிய நூலுக்குத் தங்கள் நல்லாதரவை நல்கும்படி வாசக, மற்றும் எழுத்தாள நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.




Sunday, 15 September 2024

LayOff - இணைய நண்பர்கள் மன்னிக்கவும்.

 LayOff - இணைய நண்பர்கள் மன்னிக்கவும்.

***********************************************



சுற்றி எங்கிலும் லேஆஃப் நடந்துகொண்டிருக்கிறது. எனது சமீபத்திய LayOff அனுபவம் விசித்திரமானதும், என் வகையானதும் கூட.


பிப்ருவரி 12ம் தேதி தமிழக அரசு விருது அறிவிப்பு குறித்து தகவல் வந்தது. பிப்ருவரி 14ம் தேதி என் தந்தை என் சார்பாக விருதைப் பெற்றுக்கொண்டதெல்லாம் இணைய நண்பர்கள் அறிந்ததே. இணைய நண்பர்கள் அறியாதது, பிப்ருவரி 16ம் தேதி layoff செய்யப்பட்டதாக தகவல் வந்தது. அலுவலக மடிக்கணிணி வேலை செய்யவில்லை. அது ஒரு வெள்ளிக்கிழமை மாலை. 


எனக்கு இப்படித்தான் நடக்கும். என் அனுபவத்தில், என் வாழ்க்கையை நான் திரும்பிப் பார்த்ததில் சில ஒற்றுமைகளை கவனித்திருக்கிறேன்.


1. அசந்தர்ப்பமான சூழல்களில் தான் நடக்க வேண்டிய விடயங்கள் நடக்கும்.

2. நல்ல விடயங்கள்/தகுதிப்பட்ட விடயங்கள் நடக்கும். ஆனால், தாமதமாக, அல்லது மிகத்தாமதமாக நடக்கும். ஆனால், நடக்கும்.


இதை என்ன சொல்வது என்று தெரியவில்லை. 2014ல் துவங்கிய உறவு அது. சுமார் ஒன்பதரை வருடங்கள் நீடித்து, சரியாக பிப்ருவரி 16ம் தேதி முடிவுக்கு வந்தது. நான் கான்ட்ராக்டர் என்பதால் முன்னறிவிப்பு, இரண்டு வார கெடு எதுவும் இல்லை. திடீரென்று layoff செய்துவிட்டார்கள். 90 பேர் வேலை பார்த்த ப்ராஜக்டில், இப்போது வெறும் 12 பேர்.


அதன் பிறகு மீண்டும் 12வது பொதுத்தேர்வுக்கு தயார் செய்ததையெல்லாம் நினைவுக்கு வரும் படி செய்துவிட்டது அதற்குப் பின்னான நேர்முகத்தேர்வுகளுக்கான தயாரிப்புகள். பிப்ருவரி இறுதிக்குள்ளாகவே ஒரு நிறுவனத்தில் ஆஃபர் வரை சென்றாகிவிட்டது. என்ன நடந்ததோ தெரியவில்லை. backed out. மீண்டும் தயாரிப்புகள்.


வேலைக்கு உலை வந்துவிட்டபிறகு என்ன எழுத? சிறுகதைகளிலோ, இலக்கியத்தின் எந்த வகைமையிலுமே வேலை செய்ய ஏற்ற மன அமைப்பு வாய்க்கவே இல்லை. அடுத்த வேலையைப் பெறும் வரை அந்த மனஅமைப்பு வாய்க்காது என்று தான் தோன்றியது. இணையம் பக்கமே வரமுடியவில்லை.  ஏன் நெடு நாட்களாக எதுவும் பகிரவில்லை என்று இணைய நண்பர்களிடமிருந்தெல்லாம் அவ்வப்போது அழைப்புகள், குறுஞ்செய்திகள் வரும். என்ன பதில் சொல்ல முடியும்? என் கவலைகளை மற்றவர்கள் மீது திணிக்க விருப்பமிருக்கவில்லை. 


தயாரிப்புகள். 16-17 மணி நேரம் தயாரிப்புகள். கண்கள் அயர்ந்து போகுமளவினதான தயாரிப்பு. இரண்டு கண்களும் எரியும். விளக்கெண்ணெய் தடவி படுத்த இரவுகள் பல. சில நேர்காணல்களிலிருந்து பதிலே இல்லை.  அதாவது ஏற்பு/மறுப்பு இரண்டுமே வராது. பல நேர்காணல்கள் கண்துடைப்பு நாடகம் என்று வெளிப்படையாகவே தெரிந்தன. இதில், அமெரிக்க வேலை வாய்ப்புச் சந்தையில் சில கள்ளப் பக்கங்களைக் கவனிக்க முடிந்தது. அது பற்றிப் பிறகு விலாவாரியாக எழுதுகிறேன். 


சற்றேறக்குறைய மேமாதம் தான் இறைவனின் அருளால் ஒரு Offer கிட்டியது.  'அப்பாடா!!' என்றிருந்தது.


பிப்ருவரி 16ல் தொலைந்த உறக்கம், சரியாக மூன்று மாதங்களுக்குப் பிறகே நிம்மதியான உறக்கம் உறங்க முடிந்தது. அதன் பிறகே மீண்டும் இணையம் வர முடிந்தது. 'ஏன் நெடு நாட்களாக எதுவும் பகிரவில்லை?' என்று கேட்ட அனைத்து நண்பர்களின் அன்புக்கும் அனேகம் கோடி நன்றிகள். அப்போது எனக்கிருந்த சூழலை எல்லோரிடமும் பகிர்ந்து எல்லோரையும் அதனுள் இழுக்க விரும்பவில்லை. அதனால், எனக்குள்ளேயே வைத்துக்கொண்டேன், யாரிடமும் அதிகம் பகிரவில்லை. பல மாத மெளனத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேன். 


இப்போதும் கிடைத்த, கிடைத்த வேலையில் செட்டில் ஆக மூன்று மாதங்கள் எடுத்துக்கொண்ட பின்னரே இதை எழுதும் மன அமைப்பு வாய்த்தது. இறைவனுக்கு நன்றிகள். இயற்கைக்கு நன்றிகள். 'விரும்பும்/எண்ணும் விடயங்கள் அனைத்தும் தாமதமாக நடக்கிறது' என்பதை மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 


இதற்கெல்லாம் என்ன பொருள் ? என்ன அர்த்தம்? இந்த இயற்கை அப்படி என்னதான் சொல்ல வருகிறது என்பதை இன்னமும் முழுமையாக விளங்கிக்கொண்ட பாடில்லை.


Monday, 9 September 2024

மகாவிஷ்ணு விவகாரம்

மகாவிஷ்ணு விவகாரம்



எதற்கெடுத்தாலும் ஆன்மீகம் சார்ந்து பதிலளித்துக் கேட்பவர்களைக் கவர்ந்து விடலாம் என்பதெல்லாம் அறிவியல் வளராத காலத்திற்கு வேண்டுமானால் பொருந்தலாம். இக்காலத்திற்குப் பொருந்தாது.  பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கும் அந்தப் பள்ளியின் இரண்டு ஆசிரியர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. 


மகாவிஷ்ணு தனக்கிருந்த புரிதலையே சொல்லியிருந்தார் என்றால் அவரது புரிதல் தவறு தான். இப்படிச் சிந்திப்பவரை எப்படிப் பேச விட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.


உதாரணம் சொல்லலாம். பள்ளி கல்லூரிகளில் 'மேலிடத்திலிருந்து' ஒரு ஆலோசனை வழங்கப்படும். விதி என்றே சொல்லலாம். பள்ளி விழாக்களில் பேசுவதற்கு சில அமைப்புகளை வலிந்து சேர்த்துக்கொள்ளும் படி நிர்பந்திப்பார்கள்.


எக்ஸ் என்றொரு அமைப்பு என்று வைத்துக்கொள்ளலாம். இந்த அமைப்பில் உள்ளவர்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. சம்பந்தா  சம்பந்தம் இல்லாமல் ஆஜர் ஆக விரும்புவார்கள். அதற்கேற்ப, பள்ளி கல்லூரிகளின் நடத்துனர்களுக்கு மறைமுகமாக நிர்பந்தம் அளிப்பார்கள். வெளி நாடுகளில் இருந்தால் நிர்பந்திப்பது சுலபம். 


சிலருக்கு 'ஆஜர் ஆவது என்பது' பாடல் பாடுவதாக இருக்கலாம். சிலருக்கு அது 'எழுத்தாளர்' என்று அழைக்கப்படுவதாக இருக்கலாம். சிலருக்கு அது 'கவிஞர்' என்று அழைக்கப்படுவதாக இருக்கலாம். சிலருக்கு 'மருத்துவர்' என்று அழைக்கப்படுவதாக இருக்கலாம். கோட் சூட் போட்டுக்கொண்டு கல்வியாளர்கள் சிந்தனாவாதிகள் பங்கேற்கும் அரங்கில் தாங்களும் பங்கேற்க வேண்டும் என்று கிளம்பிவிடுவார்கள்.


பாடகர் என்று அழைக்கப்பட நினைப்பவர் உண்மையில்  'All in all அழகுராஜா' திரைப்படத்தில் வரும் கதா நாயகி போலத்தான் கத்துவார். அவரைச் சுற்றி இருக்கும் கூட்டம் அவரை 'அடடா என்னமாய்ப் பாடுகிறார்' என்று சொல்லும். கவிஞர் என்பார்கள். எதுகை மோனை தாண்டி பயணப்பட்டிருக்கவே மாட்டார். அவரைச் சுற்றி இருக்கும் கூட்டம் அவரை 'அடடா! என்ன ஒரு கவிதை!' என்று சொல்லும் வகையினதாக இருக்கும். எழுத்தாளர் என்பார்கள். ஒரு வரி கூட இலக்கியப் பத்திரிக்கைகளில் எழுதியிருக்க மாட்டார். அவரைச் சுற்றி இருக்கும் கூட்டம் அவரை 'என்னமா எழுதுறார்!' என்று இவர்களாகக் கிளப்பி விடுவார்கள். பார்க்கப்போனால், இப்படிச் சொல்லும் கூட்டத்தைத் தங்களைச் சுற்றி வைத்திருப்பது தான் இவரது ஒரே தகுதியாக இருக்கும்.  இவர்களைச் சேர்த்துக்கொள்ளும் படிதான் 'பரிந்துரை' மேலிடத்திலிருந்து வரும்.


ஆசிரியர்கள் யாராலும் மீறவும் முடியாது. அந்த வகையில் ஆசிரியர்கள் சூழ்நிலைக் கைதிகளே. கடனே என்று அவர்களும் செவிசாய்ப்பார்கள். வேறுவழியில்லை. இருக்கும் வேலையைத் தக்க வைக்க வேண்டுமே?


இந்த 'ஆஜர்' பார்ட்டிகளும், நிகழ்ச்சிக்கு முன், சில காணொளிகளைப் பார்த்தும், சிந்தனாவாதிகள் பேச்சைக் கேட்டும், 'தயாரித்துக்கொண்டு' வந்து பேசுவார்கள். எல்லாமே எங்கிருந்தோ சுட்டதாகத்தான் இருக்கும். சொந்தக் கருத்தெல்லாம் இல்லை. இது ஒரு பெரிய அக்கப்போர். இதற்கெல்லாம் ஒரு முடிவே கிடையாது.


பள்ளி நாட்களில், இது போல் வந்து பேசுபவர்கள் பேசுவதை மிகவும் கர்ம சிரத்தையாகக் கேட்டிருக்கிறேன். இப்போது, இந்த சிஸ்டம் எப்படி எல்லாம் இயங்குகிறது என்பதைப் பார்த்துவிட்ட பிறகு, ச்சீய் என்றிருக்கிறது.  விஜய் சேதுபதி சொல்வது போல் 'இவர்களையெல்லாம் அறிவாளிகள் என்று நினைத்ததுதான் நம் தவறு'.


எதில் வேண்டுமானாலும் , போலிகளை நிரப்பிக்கொள்ளுங்கள். அறிவுசார் துறைகளை விட்டுவிடுங்கள் என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. என்னைக் கேட்டால் சில வழிமுறைகளைக் கையாளலாம். 


1. மகாவிஷ்ணுவிடம் கண்பார்வையற்ற ஆசிரியர் கேட்டது போல்,  இப்படி ஆஜர் ஆகும் கோட் சூட் போட்டவனிடமெல்லாம் திடீரென்று ஒன்றுக்கு பத்து கேள்விகள் கேட்டுத் திணற அடிக்க வேண்டும். போலிகள் மாட்டிக்கொள்ளும்.

2. இப்படி, துறைக்கு சிறிதும் தொடர்பில்லாத பக்குவப்படாத ஆட்கள் நுழைகிறார்கள் என்றால் உடன் பங்குபெறும் மற்றவர்கள் நிகழ்ச்சியைப் புறக்கணிக்கலாம். ஆனால், இது எப்போதும் சாத்தியப்படுவதில்லை. 


கேள்வி கேளுங்கள். நாலு கேள்வி கேட்டால் தான் போலிகளுக்கும் பயம் வரும். அமைதியாக இருந்து அப்படி எதைத்தான் சாதிக்கிறீர்கள்? 


Wednesday, 28 August 2024

எதுக்காக சொல்றேன்னா....

"எது, இரண்டாவதாக வந்ததோ அது முதலில் வழக்கொழிவதில் என்ன ஆச்சர்யம் இருக்க முடியும்?" என்றேன் நான் திடமாக.

 - சோஃபி சிறுகதை, ஜீரோ டிகிரி இலக்கிய விருது பெற்ற சிறுகதை


மேற்கண்ட வரியை எனது சோஃபி சிறுகதையில் வாசகர்கள் வாசித்திருக்கலாம். 2022ம் ஆண்டு நடத்தப்பட்ட ஜீரோ டிகிரி இலக்கியப் போட்டியில் தேர்வாகியிருந்தது. 


பெண்களுக்கு ஆதரவான கதை என்று ஒன்றிரண்டு பேர் குறிப்பிட்டார்கள். 'இனி ஆண்கள் தேவையில்லையா?' என்றெல்லாம் யூட்யூப் காணொளிகள் ஆங்காங்கே முளைத்தன. 


2024 ம் ஆண்டான நடப்பாண்டில் இப்போது Y க்ரோமோசோம் மெல்ல மெல்ல அழிவதாகவும், 4.5 மில்லியன் ஆண்டுகளில் முழுக்கவும் அழிந்துவிடும் என்றும் ஒரு செய்தி சமீபத்தில் இணையம் முழுவதும் பேசுபொருளாகியிருக்கிறது.


எதுக்காக இதைச் சொல்றேன்னா, .........  அதுக்காகச் சொல்றேன்.. ஹிஹிஹி  

நோய் - சிறுகதைக்கு வந்த பின்னூட்டங்கள்

 நோய் - சிறுகதைக்கு வந்த பின்னூட்டங்கள்

நோய் - சிறுகதை






Sunday, 25 August 2024

'மனக்கணக்கு' -சிறுகதை - சொல்வனம்

 இந்த வாரம் சொல்வனம் 325வது இதழில் எனது சிறுகதையான 'மனக்கணக்கு',  வெளியாகியிருக்கிறது.

சொல்வனம் இதழில் சிறுகதையை வாசிக்க, பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்.


https://solvanam.com/2024/08/25/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/





Saturday, 17 August 2024

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் மரணம் விவகாரம்

 கொல்கத்தா பயிற்சி மருத்துவர் மரணம் விவகாரம்

சில நாட்களுக்கு முன் அமெரிக்க முகநூல் சூழலில் பிரபலமான புகைப்படம் இது. ஒரு பள்ளி முன்பு ஒருவர் தொடர்ந்து பல மணி நேரங்கள் தொடர்ச்சியாக நிற்கவும் யாரோ சந்தேகப்பட்டு பள்ளி நிர்வாகத்தைத் தொலைபேசியில் அழைத்து விசாரிக்க, சம்பந்தப்பட்டவர் பள்ளிக் குழந்தைகளை யாரும் தவறாக வழி நடத்திவிடக்கூடாது என்பதை மேற்பார்வை பார்க்க தன்னார்வலராக நிற்பதாக பள்ளியில் அனுமதி பெற்று நிற்பவர் என்பது தெரிய வந்திருக்கிறது.
இந்தப் புகைப்படத்தைத் தொடர்ந்து பலர் 'இப்படி ஒருவர் முன்வருகிறார் எனில், அவருக்கு நான் ஒரு டாலராவது தருவேன்' என்று ஒருவர் சொல்ல, பின், அதைப் பலரும் சொல்லத்துவங்கினார்கள். அப்படி சொல்லிச்சொல்லித்தான் இந்தப் புகைப்படம் பிரபல்யமானது.
வேலைவாய்ப்பு குறைந்த நம் நாட்டில் இது போன்ற தீர்வுகளை மக்களுக்காக மக்களே செய்துகொள்ளலாம் என்று நான் நினைக்கிறேன். பணி ஓய்வு பெற்ற மிலிட்டரிக்காரர்களை, அலுவலகங்களிலும், பணக்கார வீடுகளிலும் காவல் வேலைக்கு வைத்துப் பார்த்திருக்கிறேன்.
கொல்கத்தா பெண் மருத்துவர் மரணச்செய்தி துயரமானது. தரம் குறைந்த மருந்துகள் விற்பனை செய்யப்படுவதைத் தட்டிக்கேட்டு குடைச்சல் தந்ததால், அவரைத் திட்டமிட்டு இப்படி துர்மரணம் விளைவித்திருக்கிறார்கள் என்று இப்போது தெரிய வந்திருக்கிறது.
குற்றவாளியான சஞ்சய் ராய் என்பவன் நான்கு முறை திருமணம் செய்து நான்கு மனைவிகளும் அவனுடைய வக்கிரங்களில் வெறுத்து ஓடியவர்கள் என்பது புதிய செய்தி.
இவனைப் போன்றவர்களிடம் என்ன 'தகுதியை' காவல்துறை 'கவனித்து' அவனுக்கு ஊதியம் அளித்து 'பணியில்' அமர்த்தியது என்பது தெரியவில்லை.
தரம் வேண்டுமானால், Benchmark தேவை என்பதெல்லாம் புரிந்துகொள்ள நாம் இன்னும் எத்தனை அப்பாவிகளை பலிகொடுக்கப் போகிறோம் என்பது தெரியவில்லை. கிட்டத்தட்ட எல்லா அமைப்புகளுமே 'தரம்' விடயத்திலும் 'Benchmark' விடயத்திலும் சோரம் போய் தான் இயங்கிக்கொண்டிருக்கிறது என்கிற பேருண்மையைக் காரணம் காட்டி காவல்துறையும், சம்பந்தப்பட்ட மருத்துவமனையும் தனக்கான சலுகையை இந்த அப்பாவிப்பெண்ணின் மரண விடயத்தில் பெற்று விடும். அதில் சந்தேகமே இல்லை.
வாழ்க, ஜனநாயகம். வாழ்க, Benchmarkகளைப் புறக்கணிக்கும் அமைப்புகள்.
எத்தனையோ நடந்துவிட்டது; எதுவும் நிற்பது போல் தெரியவில்லை; எதுவும் தீர்வை நோக்கிச் செல்வது போல் தோன்றவில்லை. மக்களே மக்களுக்காகக் களத்தில் இறங்குவது என்ற இடத்திற்கு அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளே வந்துவிட்டபோது முன்னேறிக்கொண்டிருக்கும் நாடுகளுக்கு என்ன சொல்ல?
அமெரிக்காவில் ஐடி அலுவலகங்களில் அவரவர் நாடுகளில் கலாச்சாரங்கள் குறித்து அவரவரை வைத்து ஒவ்வொரு வாரமும் பத்து நிமிடங்கள் பேசச்சொல்வது நடக்கும். அது ஒரு ஆரோக்கியமான நடைமுறை தான். நம் முறை வரும்போது, நாம் இந்தியா குறித்துப் பேசுகையில் மற்ற நாட்டினர் முகத்தை உற்றுப் பார்க்க வேண்டிய உந்துதல் தானாக வந்துவிடுகிறது. யாரேனும் சிரிக்கிறார்களா? யாரேனும் நக்கலாகப் பார்க்கிறார்களா? என்று பார்க்க வேண்டி இருக்கிறது. மிகவும் கூச்சமாகவும், அவமானமாகவும் உணரும் தருணங்களாக இவைகள் அமைந்துதான் விடுகின்றன. எத்தனை நல்ல விடயங்கள் இருந்தாலும், இது போன்ற சில நிகழ்வுகளால் அந்த எந்த நல்லதுகளையுமே பெருமையாக சொல்லிக்கொள்ள முடிவதில்லை. அலுவலகத்திலுள்ள யாரையுமே என் நாட்டிற்கு ஒருமுறை வந்து என் கலாச்சாரத்தைப் பார் என்று தைரியமாகச் சொல்லிக்கொள்ள முடியவில்லை.
உடனே "ஹஹஹ பாஸ் ... அமெரிக்காவில் நடக்காததா" என்று யாரேனும் கேட்கலாம். இங்கே சமூகத்திற்கும் தீவிரவாதிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் இடையில் தான் பிரச்சனை. மக்களுக்கும் மக்களுக்கும் இடையே அல்ல என்பதை கவனிக்க வேண்டும்.
பிரச்சனை என்னவென்றால், கெட்டது செய்ய மக்களுக்குள் மக்களே கூடும் அளவிற்கு நல்லது செய்ய மக்களுக்குள் மக்கள் கூடுவதில்லை என்பதுதான். மலிவான தரம் குறைந்த மருந்துகளை விற்பனை செய்வதைக் கேள்வி கேட்ட இந்தப் பெண் மருத்துவர் பாதுகாப்பிற்கு நாலு பேர் கூடியிருந்தால் இந்த மரணத்தை, இந்த துர் சம்பவத்தைத் தடுத்திருக்கலாம்.
யாரோ கஷ்டப்பட்டு போராடிக்கொள்ளட்டும். அது பலன் தருகையில் அப்போது மட்டும் போய் அதில் குளிர் காய்ந்து கொள்ளலாம் என்கிற மிக மலினமான எண்ணம் மிகுத்த ஒரு நாட்டில் தான் எத்தனை ஹீரோயிச திரைப்படங்கள். அடடா? நாட்டைப் பற்றி பெருமையாக நினைத்துக்கொள்ளத்தான் எத்தனை நிரூபனங்கள்?
அரசாங்கம் மக்களுக்குத் தேவையானதைச் செய்யத்தான் இருக்கிறது என்கிற வாதமெல்லாம் சரிதான். மக்கள் தொகையில் உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஒரு நாட்டில் எல்லா பிரச்சனைகளுக்கும் அரசை நாடுவதில் உள்ள நடைமுறைச்சிக்கல், கால விரயத்தைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு மக்களே நல்லது செய்ய முன்வரலாம், நமக்கான வாய்ப்புக்களை நாமே உருவாக்கிக்கொள்ளலாம். இத்தனைக்கும் மரணித்தவர் ஒரு மருத்துவர். நமக்கெல்லாம் சேவை செய்யவெனவே படித்தவர்.
கெட்டது செய்ய மக்களுக்குள் மக்களே கூடும் அளவிற்கு பலமடங்கு அதிகமாக நல்லது செய்ய மக்களுக்குள் மக்கள் கூடினால் மட்டுமே ஒரு நாடாக நாம் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கு முடியும். அது நடக்காதபோது, ஒலிம்பிக் மெடல் பட்டியல், பாக்ஸ் ஆபீஸ் தரவுகள், கிரிக்கெட் தரவுகள், சந்திராயன் தரவுகளை மட்டுமே திரும்பத்திரும்பக் காட்டி இந்தியா நிமிர்ந்து நிற்பதாக கற்பனைக் கதைகளைக் கட்டிவிடாதீர்கள். இந்தியன் என்று சொல்லிக்கொள்ளவே கேவலமாக இருக்கிறது.
May be an image of 1 person
Like
Comment
Send
Share