என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Tuesday, 27 November 2012

ராணி (2.12.2012) வார இதழில் என் க‌விதை

2.12.2012 தேதியிட்ட ராணி குடும்ப வாரந்திரியில் நான் எழுதிய 'எவ்வகை ரோஜா' என்ற‌ க‌விதை ப‌க்க‌ம் 18 ல் வெளியாகியிருக்கிறது. க‌விதை வெளியான ராணி வார இதழின் 18 வ‌து ப‌க்க‌த்தின் பிர‌தி இங்கே.


அந்தக் கவிதை இதோ:

அதிகாலை வேளையில்,
சோம்பலைப் போர்வைக்குள்
போர்வையாய்ப் போர்த்தி
மெல்லுறக்கந்தனை இன்னமும்
மிச்சம் வைத்திருக்கும்
ஊராருக்கிடையில்,
குளிர்பனியில் நனைந்தே
மிதந்துவரும் பூவையவள்
தரிசனம் வேண்டி நிற்கிறேன்...


புற்களுக்கு மத்தியில்
பூத்திருக்கும் பட்டு ரோஜா
அவளைப்பார்த்து வியப்புற்றது
உலகிலுள்ள ஈராயிரம் வகை
ரோஜாக்களில் இவள்
எந்த ரகம் என்றே...

Tuesday, 30 October 2012

பூக்களற்ற பூமாலை - சிறுகதை


பூக்களற்ற பூமாலை - சிறுகதை

ஹால் மேஜையில் சிதறிக் கிடந்த ஆஸ்பிரின் வில்லைகளைப் பொறுக்கியெடுத்து டிராயரில் திணித்தேன். வாசலில் கார் இருக்கவில்லை. கிருத்திகா அலுவலகம் சென்றிருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டேன். எப்போதிலிருந்து இந்தப் பழக்கம் கிருத்திகாவிற்கு என்பதைச் சரியாக அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. பெற்று வளர்த்த தாய் நான். என்னிடம் சொல்லாமலே எங்கும் கிளம்பிச் சென்றுவிடுகிறாள். அவள் அப்படிச் செல்கையில் என்னாலும் அனேகம் தரம் கேட்க முடிந்ததில்லை.

காரணம், அவளின் தலைவலி.

ஆஸ்பிரின் மாத்திரையைத் தொடர்ந்து நாடும் அளவிற்கு அவள் வந்து இரண்டு வருடங்கள் இருக்கலாம். அதற்கு முன்பெல்லாம் அப்படி இல்லை.

அவள் வயிற்றில் இருக்கையில் நான் பெண்மையின் உச்சத்தில் பூத்திருந்தது உண்மை. அவள் அத்தனைக்கு அழகு. பிறக்கையில் வெளிர் ரோஜா நிறத்தில் இருந்தாள். ஊரே கண் வைத்தது. தினம் தினம் அவளுக்கும் எனக்குமாய் சுற்றிப் போட்டு மாளவில்லை. அப்போதெல்லாம் எனக்குள்ளான பெருமித உணர்வுகளுக்கு அளவே இல்லை. அவள் மெல்ல வளர்ந்தாள். பெரும்பாலும் என் சாயலில். அவள் ருதுவாகும் வயதுவரை எனக்கு அவள் என்னைப் போலவே இருந்ததாகத்தான் பட்டது. என் இளமைக் காலங்களை அவள் மீண்டும் என் கண் முன்னே வாழ்ந்து காட்டினாள். காலை எழுந்ததும் சுப்ரபாதம், துளசி மாடம், பிறகு பாட்டு க்ளாஸ், பின் பள்ளிக்கூடம், மாலை பரதம், பல்லாங்குழி, சமயங்களில் என்னுடன் வரலட்சுமி நோன்பு, விரதம், கோயில்களில் கதாகாலட்சேபம், திருக்கல்யாணம் என நானே அவளாய்.

பல்லாங்குழி விளையாடுகையில் நீட்டிக்கொள்ளும் ஆள் காட்டி விரலாகட்டும், பரமபதப் பாம்பெனில் முகத்தை மூடிக்கொண்டே சொல்லும் ஒரு அய்யோவாகட்டும், பூஜைக்கு வெற்றிலை வைக்கையில் நனைந்த வெற்றிலை இலைகளைப் புறங்கையில் தடவித் துடைப்பதாகட்டும், புதிதாய் உடைகள் வாங்கினால் அணிந்து கொண்டு கண்ணாடி முன்நின்று வலது காலை முன்னிழுத்து அரை வட்டம் அடிப்பதாகட்டும், சமையலின்போது வலது சுண்டுவிரலால் சாம்பாரைத் தொட்டு ருசி பார்ப்பதாகட்டும்...இப்படி சின்னச் சின்னதான எல்லாவற்றிலும் அவள் என்னை நினைவூட்டினாள்.

அந்தக் காலகட்டங்களில் அவளைக் குறித்து எனக்குள் அதீத தன்னம்பிக்கை கொண்டதாகவே உணர்ந்தேன். பின்னாளில் என்னைப் போலவே வந்துவிடுவாள் என்பதில் எனக்கு எந்தவிதமான எதிர்பாராத தன்மையும் இருக்கவில்லை. எல்லாமே அறுதியிட்டு இருந்தது போல இருந்தது. என் வாழ்க்கைப் பாதையை நானே திரும்பிப் பார்க்கப் போகிறேன் என்பதில் எனக்கு ஒரு விவரிக்க முடியாத சாஸ்வதம் கிட்டியது.

அவள் தன் பதினைந்தாவது வயதில் ருதுவானாள். கிட்டத்தட்ட அப்போதுதான் அவள் என் வழித்தடங்களை விட்டு விலகியிருக்க வேண்டும். அதுவரை இல்லாத புதிதாய், தோழிகள் வீட்டில் இரவுகள் கழிக்கத் துவங்கினாள். கேட்டதற்கு தேர்வுகளைக் காரணம் காட்டினாள். என்னால் மறுக்க முடியவில்லை. சராசரியாக 80 விழுக்காடு தொடர்ந்து வாங்கினதால் நானும் விட்டுவிட்டேன். 80 விழுக்காடு என்பது ஒரு மனிதனின் அறிவை, அவன் சரியான கோணத்தில்தான் வளர்கிறான் என்பதை, அவன் நல்லவன்தான் என்பதை எவ்வாறு அறுதியிடுகிறது? நான் ஏன் அப்படி நினைத்தேன்? ஒரு கோணத்தில், 80 விழுக்காடு என்பதை ஞாபகசக்தியின் அளவுகோலாகத்தான் பார்க்கமுடிகிறது. நாள் தவறாமல் பள்ளிக்குச் சென்றிருக்கிறாள் என்று வேண்டுமானால் சொல்லலாம். கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கிறாள் என்றும் கூட சொல்லலாம். ஆனால், பொது வாழ்க்கையின் அசெளகர்யங்களை, நடைமுறைகளை, அதன் சிக்கலான பாதைகளை, சூழல்களை, எதிர்வினைகளை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறாளென்று எப்படி சொல்ல முடியும்? உண்மையில், அப்போது நான் இப்படியெல்லாம் யோசித்திருக்கவில்லை. 80 விழுக்காடு என்பது என் வாயை எப்படியோ அடைத்துவிட்டது. அல்லது அதோடு நான் என் வாயை மூடிக்கொண்டுவிட்டேன் என்று சொல்லலாம்.

பின்னிரவுகளில் அலைபேசியில் பேசிக் கொண்டிருக்கத் துவங்கினாள். இப்படி நான் என் சிறுவயதில் பேசியிருக்கவில்லை. அந்தக் காலத்தில் ஏது இம்மாதிரியான செளகர்யங்கள்? ஒரு வேளை இம்மாதியான செளகர்யங்கள் இருப்பின் நானும் என் காலத்திலேயே இப்படித்தான் இருந்திருப்பேனோ என்பதான எண்ணங்கள் தோன்றி என்னையே குழப்பியது. யாருடன் பேசுகிறாள், என்ன பேசுகிறாள் என்கிற குழப்பங்கள் தொடக்கத்தில் எனக்கு இருந்தனதான். ஆனால், எனக்கான அவளை விடவும், அவளுக்கான என்னைத்தான் அவள் எதிர்பார்க்கிறாள் என்பது புரிந்து அதையே கொடுத்தேன்.

இக்கால இளைய தலைமுறைக்கு நம்பிக்கை என்பது காற்றினாலான வார்த்தையாகப் படுகிறது. இதற்கு வேர் இல்லை, விழுது இல்லை. என் இளமைக்காலத்தில், யாரையேனும் நல்லவர் என்றோ தீயவர் என்றோ நான் வாழ்ந்த ஊர்தான் சொல்லும். அதில் அங்கீகாரம் இருந்தது. அது சொல்ல வேண்டுமே என்பதுதான் எங்கள் கவலையாக இருந்தது. என் ஒவ்வொன்றையும், அதன் எதிர்பார்ப்புகளுக்குள் திணிக்க முற்படுவது ஒரு அணுகுமுறையாக இருந்தது. அந்த அணுகுமுறையை எளிதாக்க, அதே அணுகுமுறையில் முன்னரே பழக்கப்பட்ட அம்மா இருந்தாள், பாட்டி இருந்தாள். அது ஒரு வழிகாட்டியாக இருந்தது. செல்வந்தன், குடியோன், சாதாரணன், வண்ணான், ஆசான், மருத்துவன் என எத்தரப்பினரைக் கேட்குங்காலும் ஒரே விதமாய் அறியப்படும் வகைக்கு அங்கீகாரம் கிடைத்தது. ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு விதமாய் வாழ்க்கையை அணுகுபவர்கள். இவர்கள் அனைவருக்கும் ஒரே கருத்து தோன்றும் வகைக்கு இருப்பது அசாதாரணம். இவ்வாறாக அறியப்படுதல் ஒரு பலம், தன்னம்பிக்கை. அதை முழுமையாகத் துய்த்தவள் நான். ஆனால், இக்காலத்தில் இளந்தலைமுறை தங்களைத் தாங்களே அங்கீகரித்துக் கொள்கிறார்கள். புறத்தோற்றத்தில் அதிக ஈடுபாடு காட்டுகிறார்கள். அகம் வலுவற்று துவள்கிறது. தொடர் இயக்கங்கள் நின்று நிதானிக்க கால அவகாசம் தருவதில்லை. நிதானமிழக்கச் செய்கின்றன. நிதானமிழந்த இயக்கங்களின் விளைவுகளையும், அதன் பாதிப்புகளையும் ஏற்றுக்கொள்கிறார்கள் அல்லது ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கிறார்கள். ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்கிறார்கள். அவ்வாறு ஏற்றுக்கொள்வதையே அணுகுமுறையாக்கி விடுகிறார்கள். அதையே வழிகாட்டுதலாக்கி விடுகிறார்கள். இது எளிதாக இருக்கிறது. ஆனால், பக்க விளைவுகள் அதிகமாக இருக்கிறது. இடைவெளியற்று கோர்க்கப்பட்ட‌ பூக்களை பூமாலை நழுவவிட்டு விடுதல் போல.

சில சமயங்களில் அவள் கல்லூரிக்குச் செல்ல அவளின் நண்பன் கார்த்திக்கின் பைக்கில் சென்றாள். பக்கத்துவீட்டு ஓட்டைவாய் பரிமளா கண்களில் பட்டுவிடக்கூடாதே என்று என் மனம் பதைத்த பதைப்பு எனக்குத்தான் தெரியும். அவளானால், அது பற்றிய அக்கறை துளியுமின்றி பயணிக்கிறாள். லேசாக அது பற்றி ஒரு நாள் நான் வாய் திறந்ததற்கு அவளும் , அவளின் அப்பாவுமாகச் சேர்ந்து கொண்டு ஊருக்காக அல்ல வாழ்க்கை, நமக்காக என்றார்கள். ஆனால், அவளேதான் தன் பெரியம்மா மகனுக்குப் பார்த்த பெண்ணை நிராகரித்தாள். காரணம் கேட்டதற்கு, அந்தப் பெண்ணை யாரோ ஒரு பையனுடன் பைக்கில் பார்த்தாளாம்.

என் சிறுவயதில் நான் படித்திருந்த பாடங்கள் அவள் படிக்கையில் எனக்கு நினைவிருக்கவில்லை. அதனால் அவளை ஓரளவுக்கு மேல் தொடர்ந்து செல்ல முடிவதில்லை. என்னைப் போல் பல அன்னையர்களுக்கு நினைவிருக்கவில்லை என்பது என்னையே சமாதானப்படுத்திக்கொள்ள மட்டும்தான் உதவுகிறது. நித்தமும் வெளிவரும் புதுப்புது அலைபேசிகளின் ஜாதிகள் புரிவதில்லை. கணிப்பொறிகளில் குறுக்கும் நெடுக்குமாய், முளைப்பதும் மடிவதுமான சங்கேத சித்திரங்கள் புரிவதில்லை. தொலைதூரப் பயணங்களில் சாலையோரம் பூத்திருக்கும் மைல்கற்களைப்போல , மதிப்பெண் பட்டியல்களும், பொறியியல் பட்டப்படிப்பிற்கான சான்றிதழ்களும் அவள் வளர்ச்சியைக் கொஞ்சமே கொஞ்சம்தான் உணர்த்தின‌.

சில நேரங்களில் அதீத மகிழ்ச்சி அல்லது அதீத வெறுப்பு, நாளும் கிழமையுமாய் முகத்தை தூக்கி வைத்துக்கொள்வது, அமைதியான இயல்பான பகல்களின் சந்தோஷ கணங்களில் கூட எதையோ இழந்தது போல் இருப்பது, இரவெல்லாம் மறைத்து மறைத்து அலைபேசியில் கொஞ்சலும் கத்தலும், காலையில் நேரங்கழித்து சிவந்த கண்களுடன் எழுவது, உடல்வாகிற்குத் தொடர்பில்லாத உடைகள், உணவுகள் போன்றவைகளே அவள் யாரையோ காதலிக்கிறாள் என்று என்னிடம் சொல்லாமல் சொல்லின மறைமுகமென. தாய் என்பவள் அரை மகள். மகள் என்பவள் அரை தாய். என்னிடம் ஏன் மறைக்கவேண்டும்? ஆனால் மறைக்கிறாள். நான் கேட்டதற்கு தோழன் என்றாள். அப்படியானால் அது காதல் இல்லையா? நானாகத்தான் காதல் என்று உருவகப்படுத்திக்கொண்டேனா? அது வெறும் தோழமைதானா? தோழமைக்கு ஏன் காதலுக்குண்டான உணர்வுகள் அத்தனையும்? அவ‌ளே சொல்லாத‌போது வ‌லிய‌ கேட்க‌ தாய் ‍- ம‌க‌ள் உற‌வு த‌டுத்த‌து. என் சுய‌ம‌ரியாதை த‌டுத்த‌து. நான் மீண்டும் கேட்க‌வில்லை. கார‌ண‌ம், சுய‌ம‌ரியாதை இல்லை. நான் கேட்ப‌தை அவ‌ள் விரும்ப‌வில்லை. இங்கும் அவ‌ளுக்கான‌ நான்தான். என‌க்கான‌ அவ‌ள் இல்லை.

ஆண்பிள்ளைகள் அணிவது போல நீள பாண்டும், முழுக்கையை மடித்து பெல்ட்டால் இறுக்கிய வெள்ளை சட்டையும், ஷூவுமென அவள் முதல் நாள் வேலைக்குச் சென்ற போது எனக்கு ஆண்பிள்ளை இல்லாத குறை தீர்ந்தது போலிருந்தது. ஏதோ கம்ப்யூட்டர் கம்பெனியாம். மூளைக்கு வேலையாம். அவளின் சம்பளத்தைக் கேட்டபோது எனக்கு மனநோய் பீடிக்கத் துவங்கியது. என் கணவர் வேலையை விட்டு ஓய்வு பெற்றபோது வாங்கிய சம்பளத்தைவிடவும் ஐந்து நூறு அதிகம்.

ஆனால், எனக்குத்தான் அது நாள்வரை கணவர் மேல் இருந்த ஏதோ ஒன்று சட்டென விட்டுப்போனதாகத் தோன்றியது. ஏன் அவ்வாறு உணர்ந்தேன் என்று புரியவில்லை. ஆனால் அன்று உணர்ந்ததை இன்றுவரை திரும்பப் பெற முடியவில்லை. என் கணவர் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. பார்க்கும் எல்லோருடனும் மகள் புராணம்தான். வீடு பெருமைப்பட்டது. தெரிந்தவர், தெரியாதவர் என எல்லோரும் வந்து பெண் கேட்டனர். சுற்றம் பொறாமைப்பட்டது.

அவளின் அப்பா காலை 7 மணிக்கெல்லாம் எழுந்து அருகிலிருந்த பூங்காவில் நடை பழகினார். அவரையொத்த அக்கம்பக்கத்து மனிதர்களுடன் மகளைப் பற்றிய பேச்சுக்கள் அவருக்குக் திகட்டவே இல்லை. அவள் பணிக்குச் சென்றுவிட்ட பகல்களில் எங்களுக்கிடையில் அவளின் பால்யம் தொடர்பான இனிமையான நினைவுகளில் நாங்கள் விரும்பி நனைந்தோம். அவள் சிறுவயதில் விளையாடி உடைத்த விளையாட்டு பொம்மைகள்,வெள்ளி பால் கிண்ணம், பல்லாங்குழி முதலானவை அவளைப் பற்றிய எங்கள் நினைவுகளை எங்களுக்குள் மீண்டும் மீண்டும் அசை போட்டன. பழைய ஆல்பங்கள் புரட்டுகையில் சலிக்கவே இல்லை. அவளுக்கென நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் நகரத்தின் அத்தனை கோயில்களுக்கும் படையெடுத்தோம். அதில் ஆத்ம திருப்தியும், சந்தோஷமும் கொண்டோம். அவளின் ஜாதகத்தையும் பெயரையும் எடுத்துக்கொண்டு நாங்கள் செல்லாத ஜோதிட நிலையங்கள் நகரத்திலேயே இல்லை. லக்கினத்தில் புதன், அவள் எதையும் தானே புரிவாள் என்றும், மிருகசிரீஷம் தேவகணம் பொருந்திய நட்சத்திரம் என்றும் சந்திரனிலிருந்து குரு நான்காம் இடத்து கஜகேசரி யோகம் என்றும் ஒவ்வொருவரும் அவளின் ஜாதகத்தைக் கையில் கொண்டு, சொல்லும் அத்தனை வார்த்தைகளையும் மீண்டும் மீண்டும் கேட்டு மகிழ்ந்தோம். எங்களுக்கு அவற்றைத் திரும்பத் திரும்பக் கேட்பது பிடித்தமாக இருந்தது. ஒவ்வொரு முறை கேட்கையிலும் அவள் எங்களுக்கிடையில் மீண்டும் புதிதாய்ப் பிறந்தாள், மீண்டும் வளர்ந்தாள், மீண்டும் மீண்டும் எங்களைப் பெருமைப்படுத்தினாள். இது மாதக்கணக்கெனவும், அவள் வேலை விஷயமாக வெளிநாடுகளுக்குப் பயணித்துவிட்டுத் திரும்பிய‌ மூன்று வருடங்களில் வருடக்கணக்கெனவும் தொடர்ந்தது.

அதன்பின், நிறைய மாறுதல்கள். தினமும் என்னுடன் காயத்ரி மந்திரம் உச்சரிக்கையில் பிழைகள் செய்தாள். முதலில் மூன்று வருடங்கள் பிரிந்ததால் இருக்கலாம் என்று நினைத்தோம். சமைத்தால் உப்பையோ, காரத்தையோ ந‌ழுவ விட்டாள். சர்க்கரை குறைபாடு உள்ள அவளின் அப்பாவுக்கு தேநீர் தயாரிக்கையில் சர்க்கரையிட்டே தந்தாள். திடீர் திடீரென்று காரணமே இன்றி கோபம் கொண்டாள். அவசர தருணங்களில் மந்தமாய் இருந்தாள். குளியல் அறையில் வைத்த அலைபேசியை வீடு முழுதும் தேடினாள். மோட்டார் போட்டுவிட்டு தண்ணீர் டாங்க்கில் தண்ணீர் நிரம்பி தளும்பி வழிவது கூடத்தெரியாமல், எதையோ யோசித்தபடியே படுக்கையில் கிடந்தாள். அலுவலகத்திற்கு காரில் சென்றுவிட்டு அந்த நினைவே இன்றி அலுவலக காரில் வீடு திரும்பினாள். இப்படி எத்தனையோ.

திருமணம் பற்றிப் பேச்செடுத்தால் முகம் சுளித்தாள். தொடர்ந்து பேசுகையில் எரிச்சலுறுவதும், கோபமாய்க் கையில் கிடைத்ததை விட்டெறிவதும் எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமயத்தில் ஆண்கள் பற்றிப் பேசுகையில் நம்பிக்கையற்றுப் பேசினாள். வார இறுதிகளில் பெரும்பாலும் வீட்டிலேயே இருந்தாள். என்றுமில்லாத புதிதாய் மேரி மாதாவின் உருவச்சிலைகளை பூஜை அறையில் வைத்தாள். காயத்ரி மந்திரம், ஸ்தோத்திரம் ஆனது. அவளது கைப்பையில் புதிதாய் ஒரு குட்டி பைபிள் வந்து ஒட்டிக் கொண்டது. வீட்டிலிருக்கும் நேரங்களில் ஆஸ்பிரின் உட்கொண்டு, கதவு சாத்தி தூங்கத்துவங்கினாள். அளவில்லாமல் கண்ட நேரத்திலும் உணவு உட்கொண்டு உடல் பருத்தது. சதைகள், அவளைப் பிள்ளை பெற்றவள் போல் காட்ட, பெருவாரியான அவளின் கண்கவர் ஆடைகள் எவர்சில்வர் பாத்திரங்களுக்கு மாற்றாகிப்போயின. பரதம், பாட்டு முற்றிலுமாக நின்றுபோனது. புத்தகங்கள் பழைய புத்தகக் கடைகளில் அடைக்கலம் புகுந்தன. வீடு முழுமைக்கும் ஒற்றை பைபிள் இரைந்து கிடந்தது. எங்களின் வாக்குவாதங்கள் தேய்ந்து மன்றாடல்கள் ஆயின. பின்னர் அவைகளும் தேய்ந்து அழுகுரல்கள் ஆயின. பின்னர் அவைகளும், ஆயுள் குறைந்து வெறும் மெளனங்கள் ஆயின.

அவள் அப்பா, வெளியே செல்வதைத் தவிர்த்தார். வீட்டிலேயே முடங்கினார். அவளின் பால்ய கால விளையாட்டு சாமான்கள் மொட்டை மாடியில் இருட்டு அறைக்குள் முடங்கின. சில நேரங்களில், என் முகம் பார்ப்பதைத் தவிர்த்தார். அக்கம் பக்கத்தார், சுற்றம், உறவுகள் என எல்லோரும் அவளின் 28 வயதையே நினைவூட்டினர். அதில் ஒளிந்திருந்த ஏளனத்தைக் கண்டும் காணாதது போல நடிக்கத்துவங்கினோம் நாங்கள்.

திடீரென்று ஒரு நாள் ஒரு பையனுடன் வந்தாள். பெயர் ஆல்பர்ட் என்றாள். கிருஸ்துவனாம். கூட வேலை பார்ப்பவராம். நடுத்தரக் குடும்பமாம். ஊர் வேளாங்கண்ணியாம். கல்யாணம் பண்ணி வையுங்கள் என்றாள். மறுபேச்சு பேசாமல் திருமணம் முடித்து வைத்தோம். எங்களுக்கு அப்போதிருந்த ஒரே கவலை, அவளின் 28 வயது, 30 ஆகிவிடக்கூடாது என்பதுதான். அவளுக்காக நாங்கள் பார்த்த ஓராயிரம் ஜாதகங்கள் அடுத்து வந்த போகிக்குத் தீக்கிரையாகின. மாப்பிள்ளை அலுவலக வேலையாக அமெரிக்கா போவதாய்ச் சொன்னபோது எங்களுடனே இருப்பதாய் கிருத்திகா பின் தங்கினாள். எங்கள் கூடவே இருக்க பிரியப்பட்டாள். எங்கள் மீதான அவளின் பாசம் எங்களைப் பரவசப்படுத்தியது. மாப்பிள்ளை என்ன சொல்வாரோ என்றிருக்கையில் மாப்பிள்ளை இன்முகத்துடன் தனியே அமெரிக்கா கிளம்பினார். இப்போதும் வாரம் தவறாமல் தொலைபேசியில் பேசுகிறார். புகைப்படங்கள் அனுப்புகிறார். வெப்காமில் கிருத்திகாவுடன் பேசுகிறார். சென்னையில் எங்கெங்கு நிலம் வாங்கலாம் என்று அபிப்பிராயம் கேட்கிறார்.

அவ்வப்போது இவளும் ஓரிரு மாதங்கள் அமெரிக்கா சென்று அவருடன் இருந்துவிட்டு வருகிறாள். வந்து அமெரிக்க வாழ்வைப்பற்றி கதைகதையாகப் பேசுகிறாள். எங்களையும் அவளுடனே அமெரிக்கா அழைத்துச் செல்ல‌, விசாவிற்கு விண்ணப்பித்திருக்கிறாள்.

இப்போதெல்லாம் சுற்றத்தார் பேச்சில் ஏளனம் இல்லை. எல்லோரிடமும் பெருமைப்பட்டுக்கொள்ள எங்களுக்கும் தோன்றுவதில்லை. எங்களிடமும் யாரும் பெருமைப்பட்டுக்கொள்வது இல்லை. எங்கும் இதுவேதான் நிகழ்வதாகத் தோன்றுகிறது. என் வாழ்க்கை போல அவளுடையது சர்வ நிச்சயம் இல்லை. ஆனால், அவள் வகையான வாழ்க்கையிலும் குறையென்று எதுவும் இருப்பதாகத் தோன்றியிருக்கவில்லை. இப்படித்தான் நடக்கிறது சுற்றிலும் பல திருமணங்கள் என்பதாய் நாங்களும், சுற்றமும் சகஜமாகிவிட்டோம்.

ஆனால் எனக்குத்தான் இன்னமும் சில கேள்விகளுக்குப் பதில் கிடைக்காதது போல் இருக்கிறது. அவள் கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் ஆஸ்பிரின் எடுத்துக்கொள்கிறாள். அவளுக்குத் திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. திருமணத்துடன் அமெரிக்கா சென்றவர் அங்கேயேதான் இருக்கிறார். ஆண்களைப் பற்றிய அவநம்பிக்கை பேச்சுக்களின் வாடை இன்னமும் அவள் பேச்சில் தெரிகிறது. மாப்பிள்ளையுடன் இருப்பது பற்றி அவள் அவ்வப்போது இனிப்பாய்ப் பேசினாலும் அதில் ஏதோ ஒரு போலித்தனம் தெரிகிறது எனக்கு மட்டும். ஒரு வேளை நான் தான் எதையோ எதிர்பார்த்து மனதைக் குழப்பிக்கொள்கிறேனா அல்லது உண்மையிலேயே ஒன்றும் இல்லையா? எதையும் நிச்சயமாக சொல்ல முடியவில்லை. ஏதோ ஒரு நிச்சயமில்லாத‌ குழ‌ப்ப‌ம் எல்லோரையும், எல்லாவ‌ற்றையும் விழுங்கிக் கொண்டிருக்கிற‌து.

#நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=6044)

Monday, 27 August 2012

குங்குமம் (3.9.2012) வார இதழில் என் சிறுகதை


குங்குமம் (3.9.2012) வார இதழில் என் சிறுகதை

3.9.2012 தேதியிட்ட இந்த வார குங்குமம் இதழில் நான் எழுதிய 'வாங்க காதலிக்கலாம்' என்ற தலைப்பிலான சிறுகதை பக்கம் 70ல் துவங்கி ‍- 75 ம் பக்கம் முடிய‌ வெளியாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பிரசுரமான சிறுகதையின் பிரதி இங்கே. படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை எனக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.






பிரபல ஓவியர் மாருதி, மிக அழகாக, சிறப்பாக ஓவியம் வரைந்திருக்கிறார். கதையை எழுதுகையில் நான் கற்பனை செய்திருந்த காட்சிகளை தத்ரூபமான ஒவியமாக வரைந்திருக்கும் அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.












பி.கு: எனது இச்சிறுகதையை வெளியிட்ட குங்குமம் இதழ் ஆசிரியர் குழுவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Monday, 13 August 2012

இரைஞ்சுத‌ல்


இரைஞ்சுத‌ல்

நம் செய்கைகள்
அனைத்திற்கும்
இதுதான் அர்த்த‌மென‌
நாம் எல்லோரும்
எதை எதையோ
குறிப்பிடுகிறோம்...

அவ்வ‌ர்த்த‌ங்க‌ள் பொருத்த‌மில்லை
எனும்போது
த‌ன்னிலை விள‌க்க‌மொன்றிற்கான‌
வாய்ப்பை இரைஞ்சுகிறோம்...

அவ்வாறான‌வாய்ப்பொன்றிற்கு
இரைஞ்சாத‌வ‌ர்க‌ள்
ந‌ம்மிடையே
எவ‌ரும் இல்லை...


#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5875)

Monday, 30 July 2012

தெளிவற்ற நாடகங்கள்

தெளிவற்ற நாடகங்கள்


நாடகங்கள்
எங்கு,
எவ்விதம்
துவங்குகிறதென‌
நம்மிடம்
தெளிவான குறிப்புகள்
இல்லை...

பிற நாடகங்களின்
பக்க விளைவுகளெனவும் கூட‌
புதியதாய்
ஓர் நாடகம்
உயிர்த்தெழக் கூடும்...

நாம்
நடித்துக்கொண்டிருக்கும்
நாடகம் கூட‌
அப்படி ஒன்றாக‌
இருக்கக் கூடும்...

இப்ப‌டித்
தெளிவான‌குறிப்புக‌ள்
இல்லாத‌நாட‌க‌ங்க‌ளைத்தான்
நாம்
தின‌ம் தின‌ம்
விரும்பி ந‌ட‌த்துகிறோம்...


#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5802)

Monday, 23 July 2012

பயணத்தின் சாரம்

பயணத்தின் சாரம்



ஓர் நாழிகை கூட‌
வீணாகிவிடாமல்
சீராக‌
பாதையினூடே
பயணித்தல்
இலக்கை எட்டுதலைத்
துரிதமாக்குகிறது தான்...


ஆனால்,
மைல்கற்கள் தோறும்
பயணத்தை நிறுத்தி
திரும்பிப் பார்த்தலே
பயணத்தின் சாரமாகிறது...


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5788)

தனியாத வேட்கை

தனியாத வேட்கை


எந்த ஒரு நாடகத்தையும்
நம் விருப்பப்படிதான்
நடத்துகிறோமென‌
நாம் எல்லோரும்
நினைத்துக்கொள்கிறோம்...


நாடகங்கள் அனைத்தும்
தங்கள் விருப்பப்படிதான்
நம்மை இயக்குகின்றன‌
என்பதை
நாடகம் முடியும் தறுவாயிலோ,
முடிந்த பின்னரோ தான்
உணர்ந்து கொள்கிறோம்...


ஆயினும்,
ஓர் நாடகத்தை
நம் விருப்பப்படியே
நடத்திட வேண்டுமென்கிற‌
தனியாத வேட்கை
நம் அனைவருள்ளும்
பெருந்தீயென எரிந்துகொண்டேதான்
இருக்கிறது...


- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5788)

Monday, 9 July 2012

வேண்டாத‌வைக‌ளும் வேண்டிய‌வைக‌ளும்

வேண்டாத‌வைக‌ளும் வேண்டிய‌வைக‌ளும்


நமக்கு
என்ன வேண்டுமென்பதில்
எப்போதுமே
நமக்கு
குழப்பங்கள் இருக்கிறது...


நமக்கு
வேண்டாதவைகளிலிருந்து
வேண்டியவைகளை
துல்லியமாக இனம் காண‌
நம்மால்
எப்போதுமே முடிவதில்லை...


ஆனாலும்,
நாம் எல்லோரும்
எப்போதும்
எதையேனும்
வேண்டியபடியேதான் இருக்கிறோம்...


#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5762)

ஓர் மெல்லிய இடைவெளி

ஓர் மெல்லிய இடைவெளி


கைக்கெட்டும் தொலைவிலேயே
இருந்தாலும்
நம்மில் பலர்
வெகு தொலைவில்
நின்று கொள்கிறார்கள்...


நம் பாதைகளுக்கு
அவர்கள் எட்டாது
நிற்கிறார்கள்...


அவர்களை அண்டுவதான முயற்சிகள்
நமது பயணங்களைத்
தாமதமாக்க கூடுவதாக,
ரத்து செய்யவும் கூடுவதாக‌
இருக்கிறது...


இங்கு வலுக்கிறது
தவிர்க்க இயலாமல்
ஓர் மெல்லிய இடைவெளி...


#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5762)

Monday, 2 July 2012

அதுவாகவே ஆகி விடுதல்

அதுவாகவே ஆகி விடுதல்


நாம்
அடைய விரும்பும் எல்லையின்
வெவ்வேறு பரிமாண‌ங்களை
அவதானித்துக் கொண்டே
இருக்கிறோம்...


அப்பரிமாணங்களுக்கு
நம்மை நாமே
தொடர்ந்து
பழக்கப்படுத்திக் கொள்கிறோம்...


நாம்
எதைத் தொடர்ந்து
பழக்கப்படுத்துகிறோமோ
பிற்பாடு
அதுவாகவே ஆகி விடுகிறோம்...

#நன்றி,
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5725)