எல்லாம் வல்ல இறைவனின் அருளால் 🙏🙏🙏
By God‘s Grace 🙏🙏🙏
பலநூறு புத்தகங்களை வாசித்த தேர்ந்த இலக்கியவாதி இல்லை. சமூக சீர்திருத்தவாதியும் இல்லை.. மற்றவர் கருத்தை ஆராய்ந்து, அழகியல் குறை கண்டு எதிர்க்குரல் பதிவுசெய்யும் விமர்சகரும் இல்லை. எழுத்தின் மீது தீராக்காதல். எழுத வேண்டும். புத்திசாலித்தனமாக எழுத வேண்டும். எழுதுவது யாருக்கேனும், எதற்கேனும் பயன்பட வேண்டும். இவ்வளவே நோக்கம். - ராம்பிரசாத் SFWA Member
லைக், கமென்ட், & ஷேர்
**************************
இரண்டு நாட்கள் முன்பு என்னுடைய முகநூல் பதிவுகளுக்கான விருப்பக்குறி/பார்வை விழுக்காட்டைப் பகிர்ந்திருந்தேன். நண்பர்கள் பலர் மூலமாக இங்கே 'விருப்பக்குறிகள் கலாச்சாரம்' பயிற்றுவிக்கப்பட்டேன். அது புதிதல்ல. ஏற்கனவே நானும் அறிந்தது தான். பதிவு மூலம் புதிதாகக் கிடைத்தனவற்றை இங்கே பகிர்கிறேன்.
ஒரு கருத்துக்கு எதிர்வினைகள் என்பது, உலகம் முழுவதிலும், இரண்டு விதமாக நடப்பதாகக் கொள்ளலாம்.
1. 'உன் பதிவுக்கு நான் விருப்பக்குறி இடுகிறேன். என் பதிவுக்கு நீ இடு' என்கிற எளிமையான ஒப்பந்தம். இது தான் பொதுவெளியில் பெரிதும் பின்பற்றப்படுகிறது என்பதை நானும் அறிவேன்.
2. கரோனா வைரஸ் பரவியபோது தடுப்பூசி எடுத்துக்கொள்வது பற்றிய பரிந்துரைப் பதிவோ, எந்த ஸ்டாக்கில் பணத்தை முதலீடு செய்யலாம் என்பது குறித்த பரிந்துரைப் பதிவோ மேற்சொன்ன விதத்தில் வேலை செய்யாது. அதற்கு மக்களின் தார்மீக ஆதரவு இருக்கும். ஏனெனில், அவைகளில் மக்கள் தாங்களாகவே முன்வந்து புழங்குகிறார்கள். அது அவர்களுக்கான பொதுவான புழங்குதளமாக இருக்கும். அது சார்ந்த கேள்விகள், ஐயங்கள், விவாதங்கள் ஆகியனவற்றை மேற்கொள்ள இயல்பாகவே அவர்கள் ஒருவருக்கொருவர் லைக், கமென்ட், ஷேர் செய்துகொள்வார்கள். இங்கே, 'உன் பதிவுக்கு நான், என் பதிவுக்கு நீ' என்கிற ஒப்பந்தம் தேவை இல்லை.
2020ல் அறிவியல் புனைவுகள் எழுதத்துவங்கினேன். என் எழுத்தை கண்டெடுத்து, ஊக்குவித்து, வளர்த்தெடுத்தது இதே தமிழ்ச் சமூகம் தான். இவர்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். எழுத்து மூலமாகவே அதைத் தீர்க்க முனைவதில் தான் மரபணுக்கள், தீசஸின் கப்பல், கம்ப்யூட்டா என்று அது விரிவடைகிறது. இவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.
நண்பர்களுடன் பேசியபோது, 'சிறுகதைகள் மக்களின் ரசனைக்கு இருந்தால் நல்லாதரவு பெருகும்' என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டது. அது சரிதான். எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார், சுஜாதா ஆகியோர் அவ்விதமே இயங்கி வாசகர் பரப்பை அடைந்தனர். இதை எழுத்தாளர் சுஜாதா நேர்காணல்களில் ஒப்புக்கொண்டிருக்கிறார். அதே ரூட்டை நாமும் எடுக்கலாம் தான். பிரச்சனை இங்கே தான் துவங்குகிறது எனலாம்.
அவ்விதம் எழுதப்படும் சிறுகதை ஒன்றை அமெரிக்க ஆங்கில அறிவியல் புனைவிதழுக்கு அனுப்பினால், மறுதலிக்கப்படுகிறது. இப்படியாக எழுதப்படும் ஆக்கங்களை, அமெரிக்க ஆங்கில அறிவியல் புனைவிதழ்களுக்குத் தக்கவாறு நீட்டியும், குறைத்தும் தொடர்ந்து செப்பனிட செப்பனிட, அதில் இறுதியாக வரும் வர்ஷனில், தமிழ்மக்களின் ரசனைக்கென சேர்க்கப்பட்டவைகள் எல்லாம் நீக்கப்பட்டிருக்கக் காண்கிறேன். இதில் இருக்கும் consistency நிச்சயமாக இரண்டு கலாச்சாரங்கள் குறித்தும், இலக்கிய வடிவத்தின் இலக்கணக் கூறுகளை இரு கலாச்சாரங்கள் எவ்விதம் கையாள்கின்றன என்பது குறித்தும் ஆழமாக யோசிக்க வைக்கின்றன.
Survival of the Fittest என்பார்கள்.
இப்போது வார்த்தை ஒன்றுக்கு அறுபது சென்ட் ஊதியம் பெரும் அளவிற்கு வளர்ந்திருக்கிறேன். உலகெங்கிலுமுள்ள அறிவியல் புனைவு எழுத்தாளர்களுக்கான அமைப்பில் உறுப்பினராகியிருக்கிறேன். இதன் மூலம் நெபுலா போன்ற அமெரிக்க விருதுகளைத் தெரிவு செய்யும் இடத்திற்கு நகர்ந்திருக்கிறேன். இது, என்னால் ஏற்கக்கூடிய சவால்களுக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது என்பதே இத்தளம் மீது, இப்பாதை மீது பயணம் மேற்கொள்வதில் பேரார்வம் கொள்ள வைக்கிறது.
அறிவியல் புனைவிலக்கியத்தைப் பொறுத்தவரையில், அமெரிக்க மற்றும் சீன அறிவியல் புனைவிலக்கியம் mainstream என்கிற ரீதியில் உலகிற்கே முன்மாதிரியாகச் செயல்படுகின்றன. மாறாக, இந்திய மற்றும் தமிழ் அறிவியல் புனைவிலக்கியத்திற்கென ஒரு தனிப் பாதையும், பார்வையும் ஞானமரபின் வழி வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது.
செண்டினல் தீவு மக்கள் குறித்து இங்கே நினைவூட்டுவது பொறுத்தமாக இருக்குமென்று நம்புகிறேன். செண்டினல் தீவில் உள்ள மக்கள் வெளி உலகுடன் தொடர்பில் இல்லாதவர்கள். தங்களுக்குள்ளே இயங்கிக்கொள்பவர்கள். இன்னமும் வில்லும், கூர் கற்களுடனும் வாழ்வை எதிர்கொள்கிறவர்கள். வெளி உலகை அவர்கள் ஏற்காமல் இருக்கலாம். அது, அவர்களுக்குத் தேவைப்படாமலும் இருக்கலாம். ஆனால், நான் செண்டினல் தீவுக்குள் தேங்கிவிட விரும்பவில்லை. வெளி உலகம் செல்ல விழைகிறேன். வெளி உலகுடனும் போட்டி போட விரும்புகிறேன். அதிலுள்ள சவால்கள், சிக்கல்கள் என் இயல்புடன் பொறுந்துகின்றன.
புதுச்சிக்கல் என்னவென்றால், நான் முழு நேர எழுத்தாளன் இல்லை என்பதுதான். என் பிரதான தொழில், கணினிக்களுக்கு அறிவை வழங்குவது. எழுத்து உபரி நேரங்களில் மட்டுமே. இதுதரும் முதல் சவால் நேரமின்மை. இந்த நேரமின்மையில், தமிழுக்கென ஒரு வர்ஷன், ஆங்கிலத்திற்கென இன்னொரு வர்ஷன் வைத்து இயங்குவது குழப்பங்களுக்கும், தவறுகளுக்கும் வழி வகுக்கும். ஒரே வர்ஷன் தான் என்றால், நான் செண்டினல் தீவை விட்டு வெளியே வந்து வெளி உலகிற்கான வர்ஷனையே உருவாக்க விரும்புகிறேன். ஏனெனில், செண்டினல் கடைசி வரை செண்டினலாக இருக்க வாய்ப்பில்லை. என்றேனும் வெளி உலகிற்கு வந்துதான் ஆக வேண்டும் என்கிற தர்க்கப் பார்வை தான்.
நான், அந்த வெளிஉலகிற்கு மற்ற செண்டினல்வாசிகளைக் காட்டிலும் சற்று முன்பேயே வந்துவிடுகிறேன் என்பது மட்டும் தான் ஒரே வித்தியாசம். இந்த முறையில், தமிழுக்கு, சர்வதேச தரத்திலான சிறுகதைகள் கிடைக்கும் என்பது ஒரு குறிப்பிடத்தகுந்த சாத்தியம்.
ஆக, எப்படி யோசித்தாலும் வெளி உலகுடன் இணைந்து இயைந்து செல்வதே என் சூழலுக்குப்பொறுந்தும் என்றே கணிக்கிறேன். நான் எக்காரணங்களால், இவ்வழியைத் தெரிவு செய்கிறேனோ அதே காரணங்களுக்காக, அதே வழியை மற்றவர்களும் தெரிவு செய்வதே அவர்களுக்கும் தொலை நோக்குப் பார்வையில் பலனளிக்கும் என்றே நம்புகிறேன். ஒரு கருத்தை, ஒரு தளத்தை பகிர்ந்துகொள்ளும் எவருக்கும் அத்தளம் குறித்த, அதன் செயல்பாடுகள், அதன் பயன்பாடுகள், சாதக பாதகங்கள், கேள்விகள், ஐயங்கள், விவாதங்கள் ஆகியனவற்றை மேற்கொள்ள இயல்பாகவே அவர்கள் ஒருவருக்கொருவர் லைக், கமென்ட், ஷேர் செய்துகொள்வார்கள். இல்லையா? அந்தப் பின்னணியில் தான், என் பதிவுகளுக்குக் காணப்படாத வாசகர் ஆதரவு, என் கருத்தை, தளத்தை 'எவரும் பகிரவில்லையோ' என்ற அவதானிப்பையே தருகிறது. நான் மட்டும் தனியனாய், ஒரு தளத்தில் பயணிக்கிறேனோ என்ற எண்ணத்தையே விதைக்கிறது.
இதைத்தான் இரண்டு நாளுக்கு முன்னான பதிவிலும் பகிர்ந்தேன். ஆக, கேள்வி,
"நான் ஏன் ஒரு தளத்தில் தனியனாய் பயணிக்கிறேன்?" என்பதுதான்.
"நான் பயணிக்கும் தளத்தில் நான் காணும் நற்பயன்கள், நற்பயன்களாகப் பிறருக்கு ஏன் இல்லை?" என்பதுதான்.
நான் மக்களின் நல்லாதரவை வேண்டுகிறேன் தான். ஆனால், மக்கள் என் தளத்தைத் தங்கள் தளமாகவும் ஏற்கும்வரை, என் பாதையைத் தங்கள் பாதையாக கொள்ளும் வரை அது மெல்ல மெல்லத்தான் சாத்தியப்படும் என்பதையும் புரிந்துவைத்திருக்கிறேன்.
அறிவிப்பு!!
சர்வதேச அளவில் அறிவியல் புனைவிதழ்கள் குறித்து நமக்கெல்லாம் ஒரு பொதுவான பரிச்சயம் இருக்கிறது. Analog, Asimov, Clarkesworld போன்றவை அவற்றுள் சில.
இவை எதனால் பிரபல்யமான இதழ்களாக இருக்கின்றன? வார்த்தை ஒன்றுக்கு எட்டு சென்ட் வீதம் எழுத்தாளர்களுக்கு வெகுமதி வழங்குவதால். அதென்ன கணக்கு வார்த்தைக்கு எட்டு சென்ட்? இதை நிர்ணயிப்பது யார்? அதென்ன சொல்லி வைத்தாற்போல் Analog, Asimov, Apex போன்று எல்லா இதழ்களிலும் ஒரே வெகுமதி: ஒரு வார்த்தைக்கு ஒரு சென்ட்?
இதற்குக் காரணம், ஒரு அமைப்பு. அதன் பெயர் Science Fiction and Fantasy Writer's Association. சுருக்கமாக, SFWA. மேற்சொன்ன இதழ்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துவது இந்த SFWA தான். இந்த இயக்கம் தான் சர்வதேச தரத்திலான அறிவியல் புனைவுகளுக்கான இலக்கிய தரம் நிர்ணயித்தல், இலக்கிய இதழ்களை ஒருங்கிணைத்தல், அறிவியல் புனைவெழுத்தாளர்களுக்கான வருவாயை/ஆக்கத்திற்கான சன்மானத்தை நிர்ணயித்தல், அது எழுத்தாளரைச் சென்றடைகிறதா என ஊர்ஜிதம் செய்தல், என்பன போன்ற பல கட்டுப்பாடுகளை விதித்து முறையாக நிர்வகிக்கிறது.
வார்த்தைக்கு எட்டு சென்ட் என்பது இந்த அமைப்பு நிர்ணயிக்கும் விலை/சன்மானம் தான். இத்தகு இதழ்களை Professional Market என்றும், இதில் விலைபோகும் எழுத்துக்களை Professional Sales என்றும், இத்தரத்திலான ஆக்கத்தை எழுதிய எழுத்தாளரை, Professional Writer அல்லது Pro-Writer என்றும் விளிப்பது சர்வதேச அறிவியல் புனைவிலக்கிய வெளியில் நடைமுறை தான். அதே போல, இந்த அமைப்பில், இந்த விலையில் ஆக்கத்தை விற்பனை செய்வது, இந்த அமைப்பில் உள்ள எல்லா இதழ்களின் தரத்தை எட்டியதாகவே கருதப்படுகிறது.
சமீபத்தில் எனது 'Mismatch' சிறுகதையை இந்த முறையில் Protocolized இதழுக்கு விற்ற வகையில், இந்தத் தரத்தை எட்டியிருக்கிறேன் என்பதை இணைய நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
இத்தருணத்தில் ஈதனைத்தும், எல்லாம் வல்ல இறைவனின் அருளன்றி வேறல்ல என்பது திண்ணம். இறைவனுக்கும், இந்த இயற்கைக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
ஆதலால், இனி வரும் காலங்களில் என்னை 'Professional Writer' அல்லது 'Pro-Writer' என்று விளிப்பது பொறுத்தமாக இருக்குமென்பதை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட, தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களின் பிரதிநிதியாக, சர்வதேச அறிவியல் புனைவிலக்கிய அமைப்பின் உறுப்பினராக உருவாகியிருப்பது, உலகம் முழுவதும் பரவி விரிந்திருக்கும் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விடயம் மட்டுமன்றி, சர்வதேச அரங்கில் நிகழ்காலத் தமிழ்ச்சமூகத்தின் அறிவியல் தேடலுக்கான அடையாளமாகக் கொள்ளலாம் என்பது என் பரிந்துரை.
பொதுவிலேயே எனது வாசிப்பு குறைவு தான். இதில் யார் கண் பட்டதோ தெரியவில்லை. இந்த இயக்கத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் அமெரிக்காவில் வழங்கப்படும் 'Nebula Awards' போன்ற பல விருதுகளுக்கு வாக்களித்து விருதாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கடமை உள்ளவர்கள் என்பதால், சக வாக்காளர்களுடன் விவாதங்களில் ஈடுபட ஏதுவாக இருக்கவேண்டி, சர்வதேச அறிவியல் புனைவிலக்கியம், அதன் சரித்திரம், பூகோலம் எல்லாவற்றையும் அவசரஅவசரமாக தேர்வுக்குப் படிப்பது போல் படித்துக்கொண்டிருக்கிறேன்.
இது, சில காலத்திற்கு தமிழில் எழுதுவதை சற்று சிக்கலாக்கும் என்றே கருதுகிறேன். ஆயினும், தொடர்ந்து சிறுகதைகள் கொணர முயல்கிறேன். நண்பர்கள் பொறுத்தருள்க. எழுத்து முழு நேரப் பணி இல்லை என்பதால், எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் மேலாண்மை செய்வதில் விழி பிதுங்குகிறது. எனினும் முயற்சிக்கிறேன். நன்றி.
****PROFESSIONAL SALES****
--------------------------------------------------
For a few months now, I have had to keep a secret. Naturally, I was itching to tell it to the whole world. Well, the time is here now.
My science fiction story was accepted in Protocolized a few months ago. I am beyond excited to say that the story is out now. Here's the link. Go read!
https://protocolized.summerofprotocols.com/p/mismatch
Another important part with this is, this is a 'professional sale' (well above pro-rates).
இணைய நண்பர்களுக்கு,
நான் வாசித்த எழுத்துக்கள் - 3
சுஜாதா, பாலகுமாரன் என்று வாசிப்பு வழி எழுத்துக்கள் நுழைந்திருந்த காலம் அது. கீற்றுவில் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தேன். Speculative Fiction வகையறாக்கள் தான். அப்போது உயிர்மை பதிப்பகம் உயிரோசை என்றொரு இணைய வார இதழ் துவங்கினார்கள். அதில் எழுதத்துவங்கியிருந்தேன்.
சீனியர்களுக்கு மரியாதை தர வேண்டும் என்பது கல்லூரி முதலாம் ஆண்டில் கற்ற பாலபாடம்.
தமிழ் எழுத்துலகின் மும்மூர்த்திகளான சாரு, ஜெமோ, எஸ்.ரா மூவரையும் ஒரே நேரத்தில் வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அப்போது பணி நிமித்தம் லண்டனில் இருந்தேன். அதிகாலை ஐந்தரை மணிக்கே அலுவலகம் வந்துவிடுவேன். அப்போது அலுவலகமே வெறிச்சோடிக்கிடக்கும். மடிக்கணினியைத் திறந்ததுமே சாரு, ஜெயமோகன், எஸ்.ரா பக்கங்களை ஏதோ அலுவலகத்துக்கு வந்தால் அடையாள அட்டையைத் தேய்ப்பது போல், தினசரி இந்த மூவரின் இணைய பக்கங்களை வாசித்துவிட்டுத்தான் அந்த நாளே துவங்கும்.
துரதிருஷ்டம் என்னவென்றால், அப்போது உடன் பணியில் இருந்தவர்களில் யாருக்குமே வாசிப்புப் பழக்கம் இருக்கவில்லை. அதனால், வாசிப்பது, எனக்குள் அசை போடுவது, இணையத்தில் மற்றவர்கள் விமர்சனங்களைப் படிப்பது, எழுதுவது என்று இருந்த காலகட்டம்.
சாருவின் நான் லீனியர் எழுத்து, எழுத்தையே வேறு விதமாகப் பார்க்க அணுக வைத்தது. அவருடைய ஜீரோ டிகிரி நூலை வாங்கி வாசிக்க வைத்திருந்தேன். அம்மா இரண்டு பக்கங்கள் புரட்டிப் பார்த்துவிட்டு, கடுமையாகத் திட்டினார். பின், ஒளித்து மறைத்துத்தான் படித்து முடிக்க வேண்டி இருந்தது. ஜெமோ பக்கங்களில் நிறைய இலக்கிய சிறுகதைகள், இலக்கிய சர்ச்சைகள், விமர்சனங்கள் பகிரப்படும். எஸ்.ராவின் எனது இந்தியா போன்ற நூல்களைத் தேடி வாங்கி வாசித்தேன். கே.கே.நகரில் இருந்த மறைந்த எழுத்தாளர் ஞானி அவர்களின் கேணி இலக்கிய சந்திப்பு நிகழ்வில் எஸ்.ராவை ஒரே ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அப்போது அவர் தன் எழுத்துக்கென 'தேசாந்திரி' பதிப்பகம் துவங்கியிருந்தார். அதற்குள் பணி நிமித்தமாக அமெரிக்கா வரவேண்டியதாகிவிட்டது.
அமெரிக்கா வந்த பிறகு இணையம் மட்டுமே வழியாகிப்போனது. ஆதலால், கண்ணில் படுவது எல்லாவற்றையும் வாசிக்கத்துவங்கினேன். கிட்டத்தட்ட, தமிழ்ச்சூழலில் நடப்பில் எழுதும் எல்லா எழுத்தாளர்களையும், குறைந்தபட்சம் அவர்களின் ஒரே ஒரு ஆக்கத்தையாவது இணையமென்னும் மாபெரும் கடலில் இருந்து பொறுக்கியெடுத்து நான் ஒரே ஒரு முறையேனும் வாசித்திருப்பேன் என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். ஆனால், என்னால் எதைச் சொல்ல முடியாதென்றால், இத்தனை எழுத்தாளர்கள் குறித்து, நான் வாசிக்க நேர்ந்த அவர்களின் அந்த ஒரு ஆக்கத்தை வைத்து என்னால் எந்த தீர்மானத்துக்கு வர முடியாது என்பது தான். ஏனெனில், இங்கே அமெரிக்காவில் வேலையை தக்க வைக்கும் பிரயத்தனத்திலேயே பெரும்பான்மை நேரங்கள் கழிந்துவிடுகிறது. வாசிக்கக் கிடைக்கும் நேரத்தில் பெருமளவு எழுத்திற்கும், மொழிபெயர்ப்புக்கும் போய் விடுகிறது. இந்தப் பின்னணியில், வாசிக்க நேரமே இருப்பதில்லை.
கூட்டிக் கழித்துக் கணக்குப் போட்டுப் பார்த்தால் எனக்குக் கிடைப்பது இதுதான். இதுவரையில் எழுதியவர்கள் எல்லோரையும் வாசித்த பிறகு தான் எழுத வர வேண்டும் என்றால், அதற்கு ஆயுள் போதாது. வாசிப்பே இல்லாமல் இருத்தலும் சரியில்லை. ஆக, வாசிப்பது பாதி, எழுத்து மீதி என்பதுதான் சரியான விகிதாச்சாரம். தமிழ் இலக்கிய உலகம் என்பது ஒரு பரந்துபட்ட களம். அதில் தேர்ச்சி என்றொரு நிலையே கிடையாது. நாம் எல்லோரும் மாணவர்களே. எல்லாம் வல்ல இறைவன் மட்டுமே எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்ற ஒரே ஒருவர். எஞ்சிய எல்லோரும் 'முயற்சிப்பவர்கள்' மட்டுமே. ஆகையால், காலத்தின் போக்கினூடே எழுத்தோடு கிடைக்கிற நேரத்தில், தேவைக்கு ஏற்ப வாசித்தல் தான் எனக்குச் சரியாக வருகிறது. அதை தான் நானும் செயல்படுத்துகிறேன்.
சொல்வனம் 351வது இதழில் வெளியான எனது 'அடுத்த பரிணாமம்' சிறுகதை.
எனது சிறுகதையைத் தெரிவு செய்து வெளியிடும் சொல்வனம் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
'கம்யூட்டா'வில் மொத்தம் பத்து சிறுகதைகள். அவற்றில் மூன்று ஏற்கனவே அமெரிக்க அறிபுனை இதழாசிரியர்களுக்குப் பகிரப்பட்டு, நல்ல விமர்சனங்கள் பெற்றுவிட்டது.
உதாரணமாக,
'கூடை மனிதன்' சிறுகதைக்கு L.Ron Hubbardல் (2024 லேயே) Honorable Mention கிடைத்தது.
'மடக்கை' சிறுகதைக்கு TCL இதழிலும்,
'பரிச்சயமற்ற மாறிலி' சிறுகதைக்கு Orion's Belt இதழிலும் நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. (அவற்றை, வாசகர்கள் கவனத்துக்கென, கம்ப்யூட்டா நூலின் கடைசிப் பக்கங்களில் இணைத்திருக்கிறேன்).
சிறுகதைகளை நாம் என்னவாக வேண்டுமானாலும் அடையாளப்படுத்தலாம். அதனை, துறை சார்ந்த நபர்களும், இலக்கிய பரிச்சயம் கொண்டவர்களும் வழிமொழிய வேண்டுமே? அதற்குத்தான்.
இனி வரும் காலங்களில், எஞ்சிய சிறுகதைகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க திட்டம் உள்ளது. பணிகளை மெதுவாகத்தான் மேற்கொள்ள முடியும். ஏனெனில், எழுத்து பகுதி நேரம் தான் அல்லவா?.
இந்தச் சிறுகதைகளை எழுதி நாளாகிறது. எழுதிய காலகட்டத்தில், இணையத்தில் சிறுகதைகளைப் பகிர்வதால் சில ஏமாற்றங்களைச் சந்தித்திருந்ததால், வெகுவாக மனமுடைந்து போயிருந்தேன். அந்த சமயத்தில் எழுதப்பட்ட காரணத்தால் இச்சிறுகதைகளுக்கு என் மடிக்கணிணியை விட்டு வெளியே வர வாய்ப்பமையவில்லை. தவிரவும், 2024 இறுதிக்குள் இத்தொகுப்போ, மொழிபெயர்ப்புப் பணிகளோ நிறைவாகவில்லை என்பதுவும் ஒரு காரணம். இடைப்பட்ட 2025ன் முற்பகுதியை, மொழிபெயர்ப்புகளை ஆங்கில ஊடகங்களுக்கு அனுப்பி அங்கிருந்து என்ன பதில் வருகிறது என்று பார்க்க பயன்படுத்திக்கொண்டேன். ஊடகங்களிலிடமிருந்து நேர்மறையான விமர்சனங்கள் வரத்துவங்கியிருப்பதில் மகிழ்ச்சியே.
இத்தொகுப்பை வெளிக்கொணர உதவும் படைப்பு பதிப்பகத்தாருக்கு எனது நன்றிகள்.
'Computa' has ten stories - three of them have already gotten good reviews from various American science fiction magazines.
For example,
'Koodai Manithan(The Bucket Man)' received an Honorable Mention in L.Ron Hubbard last year,
'Madakkai(The Rhythm Log Residency)' from TCL magazine and
'Parichayamatra Maarili(Unknown Variable)' from Orion's Belt Magazine. I have attached them at the trailing end of the book.
You may ask why? Anybody can claim anything; all that matters is what the subject matter experts say about the work. I plan to translate the remaining stories one by one and get them all acknowledged by SMEs, but it will be a slow process, as writing isn't my full-time job.
This book should have been released to readers last year. I was somewhat disheartened by the plagiarism targeting freely shared original works online—no wonder these works were shelved and didn't reach readers for over a year. Neither the collection nor the translations were ready by the end of 2024, which was another reason. I literally tried to utilize the first half of 2025 to share the translated works with sci-fi magazines and see what they have to say about them. I am glad I have been receiving positive feedback.
Hearty thanks to Padaippu for bringing out this book.
Social media influencers குறித்த "வா தமிழா வா" நிகழ்ச்சி வரவேற்கத்தக்கது.
தங்களிடம் ஏதோவொரு திறமை இருக்கிறது என்று நம்புபவர்களுக்கு, அதனை சோதித்துப் பார்க்க நிச்சயம் ஒரு தளம் தேவை. இன்றைக்கு சமூக ஊடகங்கள் வளர்ந்திருக்கிறது. நான் கல்லூரி படிக்கையிலெல்லாம் இந்த ஊடகங்களெல்லாம் இல்லையே என்ற வருத்தம் எனக்கு எப்போதும் இருக்கிறது. நான் கல்லூரி முடித்த 2002ம் ஆண்டில் 1100 நோக்கியா தான் சந்தைக்கு வந்திருந்தது. இரண்டே ஆண்டுகளில் வீட்டுக் கடன், கார் கடன் என்கிற சுழற்சியில் சிக்கியிருந்தேன். எழுத்து மட்டுமே கிடைத்த சொற்ப பகுதி நேரத்தில் முயன்று பார்க்கக்கூடிய ஒன்றாக அமைந்தது. கல்லூரியில் வெட்டி நேரங்கள் நிறைய கிடைக்கும். இப்போதெல்லாம் அந்த நேரத்தைப் பயன்படுத்தி குறும்படங்கள் என்று இறங்கிவிடுகிறார்கள். மைக்செட் ஷ்ரிராம், ப்ரதீப் ரங்கநாதன் போன்றோர் கல்லூரி காலங்களிலேயே வாய்ப்பைப் பயன்படுத்தி அரை இயக்குனர் ஆகிவிடுகிறார்கள். அந்த வாய்ப்பெல்லாம் எனக்கு இருக்கவில்லை என்ற வருத்தம் தான்.
சமூக ஊடகங்கள் மக்களிடையே காட்சி ஊடகங்களைப் பழக்கப்படுத்திவிட்டன. மக்களும் அதற்கு எளிதாகப் பழகிவிட்டார்கள். ஆறு திரும்பும் திசையெல்லாம் சரியானதாக இருக்க வேண்டியதில்லை. ஆனால், ஆற்றின் திசையில் தான் மனித நாகரீகங்கள் தழைக்க ஏதுவாகிறது இல்லையா? நாகரீகங்கள் தழைத்தபிறகு, திசை தவறானது என்றறிந்து என்ன பிரயோஜனம்?
சமூக ஊடகங்களில் திறமை பழகுதலும், அத்திறமை கனிந்து மக்களின் பயன்பாட்டுக்கு ஏதுவாகுதலும் இணையும் புள்ளியில் நல்ல திறமைகள் சமூகத்திற்கு வாய்க்கின்றன. எந்தப் புள்ளியிலும் இணையாத போது, அது சுதி சேராத இசை போல் அப்படி அப்படியே கலைந்துவிடுகிறது. அடையாளச்சிக்கலுக்குள் சிக்கிவிடுகிறது. எதைத் தேடி வந்தார்களோ அதை விட்டுவிட்டு, ஆள் சேர்ப்பில் இறங்கிவிடுகிறார்கள்.
அமெரிக்காவின் ஒன்லி ஃபான்ஸுக்கு நிகராக, பெண்கள் இன்ஸ்டாகிராமில் நிர்வாணம் காட்டுகிறார்கள். ஒன்லி ஃபான்ஸிலாவது சம்பாதிக்க வழி இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் அது எல்லோருக்கும் சாத்தியமில்லை. பெயரைக் கெடுத்துக்கொள்கிறார்கள். அது தலையெழுத்தையே தீர்மானித்துவிடுகிறது.
மற்றபடி சமூக ஊடகத்தை திறமையை வெளிப்படுத்த நாடுபவர்களில் சொற்பமானவர்களே, தங்கள் இலக்கைக்கண்டடைகிறார்கள். எஞ்சியவர்கள் கிடைத்ததை இலக்காக்கிக்கொள்கிறார்கள். கிடைத்ததை இலக்காக்கிக்கொள்பவர்களின் எண்ணிக்கையே அதிகம்.
திறமை என்று தாங்கள் நினைக்கும் ஒன்று உண்மையிலேயே இருப்பின், இலக்கை கண்டடைவீர்கள். இலக்கை அடைய முடியவில்லை என்றால் இதற்கு அர்த்தம் நீங்கள் திறமை அற்றவர் என்பதல்ல. உங்களுக்கு வேறொரு திறமை இருக்கலாம் என்பதுதான் அர்த்தம். அது என்ன என்ற தேடலில் இறங்குவது ஒரு நல்ல அணுகுமுறை என்று எனக்குத் தோன்றும். இதன் மூலம் நாம் தேங்கி நிற்கவேண்டியதில்லை.
இணையத்தில் இப்படி 'தேங்கி' நிற்பவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். உண்மையில், 'தேங்கி'க்கிடந்தாலும் ஆபாசமே கூட பார்வையாளர்கள் இன்றித்தான் கிடக்கிறது. ( என்னுடைய இன்ஸ்டா பக்கத்துக்கு இருநூறு ஆயிரம் ஃபாலோயர்கள் என்று பீத்த வேண்டியதில்லை. ஏனெனில், அந்த இருநூறு ஆயிரம் ஃபாலோயர்கள் எல்லா ஆபாச இன்ஸ்டா பக்கத்திற்கும் இருப்பதைப் பார்த்தால், ஒரே இன்ஸ்டா பயனர் எல்லாவற்றிலும் ஃபாலோயராக இருப்பதன்று வேறு மார்க்கமில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.) ஆக, ஆபாசமாகவே இருந்தாலும் எத்தனையைத்தான் பார்ப்பது? ஆபாசத்துக்கான கவர்ச்சியையே வீழ்த்தியதில் இந்தத் 'தேக்க'த்திற்கு நிறைய பங்கிருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.
சமூக ஊடகத்தில் திறமையைக் காட்ட முனைவோர்க்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம்:
1. தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
2. சவால்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.
3. திறமையை வெளிக்காட்டுகையில், நம்மைச் சுற்றி ஒரு கூட்டம் கூடும் தான். ஆனால், கூட்டத்தை தக்கவைக்கவென இறங்காதீர்கள். கூடுபவனே தொடர்ந்து கூடினால், அவனும் வளரவில்லை. நாமும் வளரவில்லை என்று பொருள். தினம் தினம் புதுப் புதுக் கூட்டம் கூடினாலும் அது சரியல்ல. ஆக, கூட்டத்தைத் தக்க வைக்கவென பிரயனத்தபட இறங்காதீர்கள். திறமை கூட்டத்தை உருவாக்க வேண்டுமே ஒழிய கூட்டம் திறமையை அல்ல.
4. நம் இலக்குகளை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். கூட்டம் அல்ல. அதைப் புரிந்துகொள்ளுங்கள்.
5. கூட்டமே கூடாமல் இருப்பது ஒரு வகையில் நல்லது. புதிய புதிய முயற்சிகளில் நாம் இறங்க முடியும். அனானிமஸ் ஆக இருப்பது பல வழிகளில் நல்லது.
Semi-Pro & Pro Sales