என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Sunday, 23 March 2025

உலகார்ந்த பிரஜைகள்

 எங்கள் வீட்டு புல்வெளியில் குருவி ஒன்று முட்டையிட்டிருக்கிறது. நான்கு முட்டைகள். அடைகாக்கிறது. நாங்கள் பின் கதவு திறந்து Lawnல் அடியெடுத்து வைத்தாலே கத்தத்துவங்கிவிடுகிறது. 


தாய் குருவி ஒன்றும், மற்றொரு குருவியும் மாற்றி மாற்றி முட்டைகளை அடைகாக்கின்றன. உணவுக்கென ஒரு குருவி பறந்து சென்றால், மற்றொன்று காவல் காக்கும். உணவுக்கு அலைபாய்வதை கவனித்துவிட்டு walmartலிருந்து குருவிகளுக்காக உணவு வாங்கி, ஒரு கிண்ணத்தில் வைத்தோம். இன்னொரு கிண்ணத்தில் நீர். இப்போது குருவிகள் அந்த உணவை உட்கொள்கின்றன.  நீர் அருந்துகின்றன. முன் போல அடிக்கடி முட்டைகளை விட்டு நீங்கி வேறெங்கும் செல்வதில்லை. 

உலகையே, ஒட்டுமொத்த கிரகத்தையே தன் வீடாகக் கொண்டுவிட்ட ஒரு உலகார்ந்த பிரஜை என் வீட்டு Lawnல். அதை நினைத்தாலே பதற்றமாகிவிடுகிறது எனக்கு.

அவைகள் தன் வீடாக நினைத்துக்கொண்டிருக்கும் இந்த கிரகத்தை, பல நாடுகளாக நாம் பிரித்திருப்பதோ, ஒரு மூலையில் பிறந்த ஒருவர், இன்னொரு மூலைக்குச் செல்லவே பொருளாதாரத்தில் ஒரு இடத்தை அடைய வேண்டுமெங்கிற நிர்பந்தம் நமக்கு இருப்பதோ, எவரோ கண்டுபிடித்த இந்த நடைமுறையை எந்தக் கேள்வியும் கேட்காமல் அப்படியே  going with the flow என்கிற ஸ்திதியில் ஏற்றுக்கொண்டு இயங்கும் மனிதக் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருப்பதோ அந்தக் குருவிக்குத் தெரிந்துவிட்டால் என்னை அது மதிக்குமா? பைத்தியக்காரன் என்று நினைத்துவிட்டால்? கோழை என்பதைக் கண்டுபிடித்துவிட்டால்? என்ற கேள்விகள் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. 

அதனால் தானோ என்னவோ நான் என் வீட்டு Lawnக்கே செல்வதில்லை. அந்தக் குருவி தன் முட்டைகளை அடைகாக்கும் வரை, இளங்குறுவிகள் முட்டையைத் துரந்து பறக்கக் கற்கும் வரை, அவைகள் குடும்பமாக எங்கள் Lawnஐ விட்டு நீங்கும் வரை, Lawnக்கே செல்வதில்லை என்று இருக்கிறோம். அவ்வப்போது அவைகள் முட்டையை அடைகாப்பதை, Lawn முழுவதும் உணவுக்காக அலைந்து கிடைக்கும் பூச்சிகளை, நாங்கள் வைத்த தானியங்களை உண்பதை வேடிக்கை பார்ப்பது ஒரு நல்ல பொழுது போக்காகிவிட்டது. 

இந்த நாடு, கடவுச்சீட்டுகள், விசா, வேலை, சம்பளம், வரவு அட்டைகள், இதையெல்லாம் யார் கேட்டார்? எப்போதிருந்து இப்படி நமக்கு நாமே சிறை வைத்துக்கொண்டோம்? எப்போது இதிலிருந்தெல்லாம் விடுதலை? எந்தக் கேள்விக்குமே பதில் இல்லை.

அக்குருவிகளைப் பொறுத்தவரை இந்தக் கிரகத்தில் எந்த பிரிவினையும் இல்லை. எந்த நாடும் இல்லை. எல்லாமும் ஒரே நிலம், ஒற்றை கிரகம். நாமெல்லாம், நம் உருவத்தையும் மீறி விதம் விதமாகக் கூடு கட்டி வாழும் சக ஜீவன்கள். வானத்தில் திரிய வேண்டியது. உணவு கிடைத்தால், பசியாறலாம். இல்லையானால், பட்டினி. உணவுச்சங்கிலிக்கு இரையாவது என்றோ ஒரு நாள் கூத்து. அவ்வளவுதான். யோசித்தால், அப்படியே நாமும் இருந்துவிட்டிருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும் என்று தான் தோன்றுகிறது. 






Saturday, 22 March 2025

விமர்சனப்போட்டி முடிவுகள்

 நண்பர்களுக்கு வணக்கம்.


படைப்பு பதிப்பகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட
மரபணுக்கள் - தீசஸின் கப்பல் நூல் விமர்சனப் போட்டி
முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி.

வந்த விமர்சனங்களில் சிறப்பான விமர்சனங்களாக மூன்று விமர்சனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மூன்றுமே சமமான மதிப்புள்ள விமர்சனங்களே. கீழே தரப்பட்டுள்ளதில், எந்த வரிசையும் இல்லை. விமர்சனங்கள் எனக்கு வந்த வரிசையிலேயே தேர்வுசெய்யப்பட்டவர்களைத் தந்திருக்கிறேன் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.🙏🙏🙏

தேர்வு செய்யப்பட்ட விமர்சனங்கள்:

யாழ் துருவன் - மரபணுக்கள்
https://ramprasathkavithaigal.blogspot.com/2025/03/blog-post_22.html


கோகிலவாணி - தீசஸின் கப்பல்
https://ramprasathkavithaigal.blogspot.com/2025/03/blog-post_9.html


சாந்தி - மரபணுக்கள்
https://ramprasathkavithaigal.blogspot.com/2025/03/blog-post_9.html

மரபணுக்கள் - விமர்சனம் - சாந்தி

 எழுத்தாளர் ராம் பிரசாத்துக்கு வணக்கம் ......

 

உங்களது படைப்புகள் அனைத்தும் நான் வாசித்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் உங்களின் எழுத்துக்களின் ஆழம் உங்கள் படைப்புகளில் இருப்பதை என்னால் உணர புரிகிறது.

 

நான் முழுமையாக மரபணுக்கள் என்ற நூலை படிக்க நேர்ந்தது .அறிவியல் சார்ந்த எழுத்துக்களை ஒரு சிலரே மையமாக வைத்து சாதிக்க முடிகிறது .அதில் அந்த வெற்றிப் பயணத்தில் உங்கள் எழுத்துக்கள் மேலும் பல பரிமாணங்கள் பெறும் என்பது புரிகிறது.

 

எதிர்காலம் குறித்த உங்கள் கனவு பார்வை மேலும் பல பரிமாணங்களை இந்த விஞ்ஞான உலகில் ஏற்படுத்த கூடும் .எதிர்கால உலகம் எப்படி இருக்கும் என்பது மரபணுக்கள் வழியாக தெரிகிறது விஞ்ஞானத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் மனித குலத்திற்கு மாபெரும் சவாலாக வும்.... பிரமிப்பாகவும் உற்று நோக்கும் விதமாக வியக்க வைக்கும் அளவில் உங்கள் எடுத்தாற்றல் உள்ளது .படைப்பு;, படிப்பு ,பசி உள்ளவர்களுக்கு தீணியாக அமைகிறது உங்களது ஒவ்வொரு படைப்பிலும் பெற்றோர்கள் நினைவு கூறும் விதம் ,கடந்த கால நினைவுகளை பகிரும் வி தம், பிரம்மிக்க வைக்கிறது.

 

பிரதியெடுக்காதே:-

 உங்களது எழுத்தில் "நானே எப்போதும் மன்னிப்பு கேட் கிறேன்" ......எனும்போது உங்களது உயர்ந்த நோக்கம் புரிகிற து. "இது மிகவும் பழைய தீர்வு உன் தீர்வுகள் கூட என்னை ஈர்க்க முடியாமல் திணறுகிறது ". ..... "ஒரே ஒரு நீ மற்றும் நான் நம்மிடையே இந்த திருப்தி அளிக்காத உறவுகள்" இந்த வார்த்தை ஜாலம் நடைமுறை வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டி உண்மையை உணர்த்துகிறது.

 

ஆண்-பெண் ஈர்ப்புக்குப் பின்னால், மரபணுக்கள்! அறிவியல் புனைவு தளத்தில் வேறெங்கும் கேள்விப்படாத கருத்தாக்கம்.

 

சேஷம்:-

மூன்று அறைகள் கொண்ட இதயம், மனிதர்களுக்கா! படித்ததுமே ஆச்சர்யம்! பொதுவாக மனிதன், குரங்கினங்களின் வழித்தோன்றல் என்றே படித்துவிட்டு, முதன் முறையாக, சர்ப்பங்களில் வழித்தோன்றல் என்று படிப்பது அதிர்ச்சியளித்தது. அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கும் இடத்தை ரசித்தேன்.

 

ஊரும் மனிதன்:-

 

பருந்து, எலி, சிட்டுக்குருவி, புழு, பூரான், முதலை ஆகியன குறித்து பொதுவில் எல்லோரும் அறிந்திருப்பார்கள். ஆனால், இவற்றை வைத்து எழுதப்பட்டிருக்கும் ஒரு முழுப் பாரா?! படித்ததும் அட!என்று தோன்றியது. எல்லோருக்கும் தெரிந்த ஒன்றிலிருந்து இதுகாறும் எவரும் சொல்லாததைச் சொல்வது தொடர்ந்து உங்கள் எழுத்துக்களில் வெளிப்படுகின்றது.

 

சரோஜா தேவி புத்தகம்:-

 

கொஞ்சம் பிசகினாலும் சொதப்பிவிடக்கூடிய கதை. ஆனால், கதையின் அறிவியல், கதையை வேறொரு தளத்திற்கு நகர்த்திவிடுகிறது. இது போல் இதற்கு முன் கேட்டதே இல்லை.

 

பச்சிலை:-

 

கீரை, காய்கறிகளை உணவாக உண்கிறோம். ரசம், துவையல், சட்னி என்று. பச்சிலைகளுக்கு மனிதன் மருந்தானால்? கற்பனை வளம் அருமை. கதை படிக்க படிக்க படிப்பவருக்கேற்ப வேறு எதை எதையோ உணர்த்துகிறது. மிகவும் ஆழமான அர்த்தங்கள்.

 

எப்போதும் பெண்:-

 

'பெண் ஏன் அடிமையானால்?' என்று துவங்கி, மரபணுக்களில் மாற்றங்கள் செய்வது போன்ற கதை. இந்தக் கதையிலும் முடிவை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்தக் கதையும் யோசிக்கத் தூண்டுவதாக இருந்தது.

 

தழுவு கருவி:-

 

ஒரு மனுஷி தன் பேரனின் உடலில் மறுஜென்மம் எடுக்கிறாள். மரபணுக்கள் வழியாக... இது தமிழுக்கு புதுசு.சினிமாவில் பேய், ஆன்மா என்றெல்லாம் வரும். அது, அமானுஷ்யம். ஆனால், இது மரபணுக்கள். நிச்சயமாக மிக வினோதமான பார்வைதான்.  ஹாலிவுட் சினிமா கதை போலிருந்தது.

 

கண்ணாடிச்சுவர்:-

 

முதலில் தோன்றிய உயிர், பெண். ஆனால், இப்போது ஆண் இல்லாமல் குழந்தைப்பேறு இல்லை என்னும் நிலை. நாமெல்லாம் அறிந்ததுதான். அறியாதது, சிறுகதையில் வருகிறது. ஓரினச்சேர்க்கை திருமணங்கள் குறித்து எப்படியெல்லாமோ கேட்டிருக்கிறேன். கண்ணாடிச்சுவர் மிகவும் வித்தியாசமான கோணம்.

 

 

மாற்றுத்தீர்வு:-

 

விலங்கினங்களில் பாலுணர்வு, பகடி செய்யப்படும் ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது. அதற்கு இப்படியோரு அர்த்தம் தர முடியும் என்பதே ஆச்சர்யம் தான். 'ஒருவேளை இருக்குமோ' என்று தோன்றச் செய்கிறது அறிவியல் விளக்கம். மரபணுக்கள் ரீதியில் சாகாவரம், அருமை.

 

சோஃபி:-

 

ஒரு பரிசோதனையின் விளைவாக உருவாகிறது ஒரு உயிர். அது என்னவெல்லாம் செய்கிறது? போரிலிருந்து திரும்பும் வீரர்களால் நேரும் பக்கவிளைவுகள் வைத்து கதையை நகர்த்திய விதம் அருமை.

 

இப்படியெல்லாம் எப்படி ஒருவருக்கு யோசிக்கத் தோன்றியது? இப்படி யோசிக்க என்ன மனோநிலை இருக்க வேணும்? வியப்பாக இருக்கிறது. அறிவியல் கதைப் புத்தகங்களில் வினோதமான புத்தகங்களிலேயே மிகவும் வினோதமான தொகுப்பு "மரபணுக்கள்". பல கதைகள்  சுஜாதாவை நினைவூட்டின.  உங்கள் பல கதைகளில், வாதங்கள், தமிழ் இலக்கிய உலகிற்குப் புதியது. தேவையும் கூட. பல இடங்களில் புருவம் உயர்த்திவிட்டேன்.

 

மேலும் பல அறிவியல் சார்ந்த எழுத்துக்களை உங்கள் மூலமாக இந்த விஞ்ஞான உலகில் சமூகம் எதிர் நோக்கி காத்திருக்கிறது.மேலும் மேலும் உங்கள் எழுத்துக்கள் பல பரிமாணங்களை பெற வாழ்த்துக்கள்..

தீசஸின் கப்பல் - விமர்சனம் - கோகிலவாணி

 

















நூல் விமர்சனம் : "மரபணுக்கள் " - யாழ் துருவன்

நூல் விமர்சனம் :    "மரபணுக்கள் "

 

நூலின் பெயர் : "மரபணுக்கள்"

ஆசிரியர் : ராம் பிரசாத்

பதிப்பகம் : படைப்பு

பக்கங்கள் :135

விலை :190 ரூபாய்

இந்த நூலின் ஆசிரியர், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் விருது பெற்ற எழுத்தாளர் ராம்பிரசாத். ஒரு கணினியாளர், கதையாளரானால் என்னவாகும்?, இப்படித்தான் அறிவின் குழந்தைகளும், அறிவியல் குழந்தைகளும், கதை வழியே,கற்பனை வழியே ஓடித் திரிவார்கள். எதிர்காலத்தின் உலகின் போக்கும், உணர்வின் போக்கும் எப்படியிருக்கும் என்பதை..அச்சுறுத்தலாக இல்லாமல்,நம்மை அதற்கு ஏற்ப மனதளவில் தயார் செய்யும் நோக்கில் படைத்திருக்கும் படைப்பை... நம் படைப்பு குழுமம் வெளியிட்டிருப்பது இன்னும் சிறப்பு...

விஞ்ஞானம், அறிவியல், மரபணு, இப்படி இலக்கியத்தோடு, அறிவியல் கலந்த கதைகளும், கட்டுரைகளும்,புனைவுகளும் தமிழில் மிக, மிகக் குறைவு. அதற்கு தமிழின் மரபணு குறைபாடாகக் கூட இருக்கலாம்..."மரபணுக்கள் ".. 10 விஞ்ஞான சிறுகதைகள் கொண்ட தொகுப்பு.

"பிரதி எடுக்காதே"

முதல் சிறுகதை.

ஆறு ஆண்டுகளாக காதலிக்கும் மிலி,மற்றும் கரீம் எனும் இரண்டு கதாபாத்திரங்களிடயே இடையே நிகழும் உணர்வு போராட்டமே இந்த கதை..

இன்றே வாழ்ந்து விட வேண்டும் என்பவன் கரீம்..

"நாளையும் வாழ்வு இருக்கிறது " என்பவள் "மிலி"..

"மிலி" யின் எண்ணத்தை, ஏக்கத்தை, எதிர்பார்ப்பை, புரிந்து கொள்ளாத முடியாத கரீம், மிலியை திருப்திபடுத்த தன்னைப்போலவே பல பிரதிகள் எடுக்கும் எந்திரத்தை கொண்டு, தன்னையே பல பிரதிகள் எடுக்கத் தொடங்க, உடனே மறுக்கும் மிலி, தான் இதனை முன்னரே முயற்சித்து பார்த்து விட்டதாகவும், அது இன்னும் ஆபத்தானது என்றும், தானே அப்படியான பிரதிகளில் ஒருத்தி தான் எனும் இடம், கதையில் திருப்பம்...

"ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றிற்கு , உடல்

மொழியில் உருவம் தந்தான்..

"பிரதிகள்" மரபணுக்களை மாற்றுவதில்லை.."

இப்படி கதையின் சில இடங்களில் கவித்துவமும் கலந்தோடி இருப்பதை ரசிக்கலாம்..நிறைவாக "மனமுவந்து முயன்றால் மட்டுமே,ஒருவருக்கு மற்றவரின் உணர்வுகள் புரியும்..மாற்று பிரபஞ்சத்தால், மாற்றுப் பிரதியால் அல்ல, என்று முடிகிறது முதல் கதை...

"சேஷம்"

அடுத்ததாக ஒரு வித்தியாச கதை இது,மனிதர்கள் தற்காலிகமாக பச்சை குத்துவதற்கு பதிலாக, ஒரு கரு வயிற்றில் உருவாகும் போதே, அந்த கருவுக்குள் ஒரு பச்சோந்தியின் நிறம் மாறுதலுக்கான மரபணுவையோ, அல்லது ஒரு மயில் தோகையின் மரபணுவையோ கருவுக்குள் செலுத்திக் கொள்வது. செலுத்திய மரபணுக்கள் உடலில் உறக்க நிலையிலேயே இருக்கும், குறிப்பிட்ட உடற்பயிற்சிகள் மூலம் அவற்றை உசுப்பவோ, மீண்டும் உறங்க வைக்கவோ முடியும் எனும் அதீத வித்தியாச களத்தில் இந்த கதை நீள்கிறது..

தன் காதலன், "ஸ்டுவர்ட்" க்கு சார்ப்பத்தின் மரபணு இருப்பதால், அரசாங்கம் அவரை தனிமைப்படுத்த,அவருக்காக அவரின் காதலி, நீதிமன்றத்தில், வாதடுவதாக விரிகிறது கதை..ஆனாலும் ஏற்காத, நீதிமன்றம் அவரை சிறையில் அடைக்க, காதலன் "ஸ்டுவர்ட் " பாம்பின் மரபணு இருப்பதால், முழு சர்ப்பமாக உருவம் கொண்டு,இவளை கானகத்திற்கு கடத்தி வர,என விரியும் கதையில் "அடாவிசம்", பாம்புக்கு இதயத்தில் இதயத்தின் மூன்று அறைகள் இருக்கும் - இப்படியான அரிய தகவல்களுடன் நீளும் இந்த கதையின் கடைசியில், ஸ்டுவர்ட் என்னவாக மாறுகிறான் எனும் அதீத ஆச்சர்யத்தோடு முடிகிறது கதை..

 

 

 

"ஊரும் மனிதன்"

முதலை போல உருவம் கொண்ட மகன்,அவனை சரி செய்ய முயலும் தந்தை, கடவுள் போல, ஞானி போல, மருத்துவன் போல வித்தியாசமான உடல் அமைப்பில் காட்டில் வாழும் ஒரு அமானுஷ்யன், இப்படி மூவருக்குள் நடக்கும் உரையாடலோடு தொடரும் இந்த கதையில், நிறைய இடங்களில் "ஜென்" தத்துவங்களையும், பரிணாம வளர்ச்சியின் ஒவ்வொரு மைல்கல்லிலும் எதனையோ இழந்து தான், எதையோ பெற்றிருப்போம் " என "டார்வினிசமும்" கலந்து கதை சொல்கிறார்  எழுத்தாளர்.பருந்து, எலி, சிட்டுக்குருவி, புழு, பூரான், முதலை இவைகளை வைத்து ஒரு முழு பத்தி எழுதியிருக்கும் இடம், ஓரிரு முறை படித்தால் மட்டுமே புரியும் வகையில் சொல்லப்பட்டிருக்கும் ஆழமான தகவல்.

"உங்கள் வாழ்வை இனிமேலாவது வாழுங்கள் " என முடியும் வரிகள்..எனக்கானதாக, நமக்கானதாகப்பட்டது...

"சரோஜா தேவி புத்தகம் "

ஒரு விடுதி, அதன் உரிமையாளர் விஸ்வநாதன்,பதின்ம வயதிலிருக்கும் அவரின் பேரனுக்கு, 'மல்லிகா' எனும் வயதில் மூத்த ஒரு  பெண்ணை முதன் முறை பார்த்ததும் ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டதை பார்த்து,ஒரு மனநல மருத்துவரை அழைத்து வருகிறார் தாத்தா.சம்பந்த பட்டவர்களின் மரபணுக்களை ஆராயத் தொடங்கும் மருத்துவர், முடிவு குறித்தும், பேரனின் மரபணு குறித்தும், அந்த வயதில் மூத்த பெண் குறித்தும் அதிர்ச்சி தரும் விஷயங்களை, விஸ்வநாதனோடு பகிர்வதாக நீளும் இந்த கதையில், "மான்" ஒரு குறியீடாக கதையெங்கும் துள்ளி ஓடுகிறது.மேலும் "GENE METHYLATION", "UNI PARENTAL DISOMY"  எனும் அதீத மருத்துவ வார்த்தைகள் குறித்த புரிதலும், புதிரும் வாசிப்பவர்களுக்கு புது அனுபவத்தை தரும்.கடைசியில், தலைமுறைகளுக்கிடையே,ஒருவரின் குணங்கள், செயல்பாடுகள் மரபணுக்கூறுகள் வழியே அடுத்த சில தலைமுறையிலும், "எட்டிபார்த்தல்", "உயிர்த்தெழுதல்" நிகழும் என்கிறது இந்த கதை.

 

 

 

 "பச்சிலை "

காட்டில் ட்ரெக்கிங் செல்லும் போது, காணாமல் போன தன் கணவன் ஜோஸை ,தன் நண்பர் ஞானனுடன் (இந்த பெயரே சூப்பர் )சேர்ந்து மீண்டும் காட்டுக்குள் தேடுகிறாள் வானதி.ஒரு வித்தியாசமான மரத்தில், ஜோசின் சட்டை தெரிய, "மரங்களும், இலைகளும் எப்படி மனிதர்களுக்கு மூலிகையாக, மருந்தாக இருக்கிறார்களோ, இங்கிருக்கும் சில குறிப்பிட்ட மரங்களுக்கு, மனிதர்கள், மருந்தாக மாறுகிறார்கள்" எனும் வித்தியாசமான கோணத்தில் பயணிக்கிறது இந்த கதை.

இலையின் பிரபஞ்ச வெளி, வயிற்றிற்குள் வளரும் செடி,தாவரங்களும்,மரங்களும் தான் கல், தோன்றி, மண் தோன்றும் முன் பூமியில் தோன்றியது எனில், மனிதனும், விலங்குகளும், அவைகளின் முன், சிறுபான்மையினம்... இப்படி நிறைய நிறைய சொல்லிப்போகிறது "பச்சிலை"..

"எப்போதும் பெண் "

சூரியனின் "வெஞ்சினம்"(நான் ரசித்த வார்த்தை) காரணமாக பூமியில் மொத்தமே 3000 உயிர்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. அதிலும் பெரும்பான்மை பெண்கள் மட்டுமே.அதில் அஞ்சலி, அவளின் அம்மா மருத்துவர் அபி,அவரின் தோழி மரியம், இவர்களின் மூவரை கொண்ட இந்த கதை, பெண்ணியம் பேசுகிறது.. இல்லையல்லை, பெண்ணின் மென்மை குணத்திற்கான மரபணுவை மரணிக்க வைக்க முயல்கிறது. ஆண்களுக்கு "பலாத்காரம் செய்தல்", ஆசிட் வீசுவது, கொலை செய்தல், இவைகளை செய்யத் தூண்டும் மரபணுக்களை நீக்க முயல்கிறது..

"காதல்" என்பது ஆணைப் பொறுத்த வரையில் கலவிக்கான ஏற்பாடு " என்ற வரியைப் படித்ததும்,ஒரு ஆணாக "சுருக்"கென சுட்டது. ஆனால் யோசித்துப் பார்த்தால் அது உண்மையும் கூட. மேலும் இதை எழுதியதும் ஒரு ஆண் என்றதும், உண்மையை உடனே மனம் ஏற்றுக்கொண்டது..

"பாவனை நிரல்"   (Simulation) மூலம் இவர்கள் சோதனை செய்து நிறை, குறைகளை கலைந்து, 1500 ஆண், 1500 பெண் என உருவாக்கும் இணைகளோடு, இவர்களின் உரையாடலும் நிறைய, நிறைய பேசிப்போகும் விஷயங்களை விஞ்ஞான பார்வையோடு ரசிக்கலாம்..

 

"தழுவு கருவி"

விண்மீன் மண்டலத்தின் பாதுகாவல் சிறைச்சாலை,

அங்கிருந்து தப்பித்த ஒரு கைதி,

"கால்பாட்" எனும் விண்மீன் ரோந்துக் குழு, இப்படி "ஸ்டார் வார்ஸ்" படத்திற்கு சற்றும் குறைவில்லாத கதை இது..

நாயகன் சிறை சென்ற காரணம்,வாசிப்பவர்களுக்கு,நிகழ்கால அரசியலில், எதை, எதையோ நியாபகம் படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.கதை நாயகனின் சாயல், பழக்க வழக்கங்கள் எல்லாமே, அவரின் பாட்டியை உணர்த்தும்படியிருக்க,அவர் பாட்டி குறித்த தகவல்களை திரட்ட,பாட்டி சேகரித்து வைத்த இரண்டு அறிவியல் புனைவிதழில் உள்ள அறிவியல் கட்டுரைகள், அது தரும் அதிர்ச்சி தகவல்கள்,அதைத் தொடரும் நிகழ்வுகளும், நினைவுகளும்  ஒரு அருமையான திரில்லர் வெப்சீரியஸ் போன்ற உணர்வைத் தரும் கதை..

"கண்ணாடிச் சுவர்"

பெண்ணும், பெண்ணும் திருமணம் செய்தால், ஏன் இந்த உலகம் ஏற்றுக்கொள்வதில்லை எனும் கேள்வியோடு தொடங்கும் கதை, க்ளாரா, நான்சி எனும் இரு பெண்கள், அவர்களுக்குள் திருமணம்,பரிணாம வளர்ச்சி குறித்த அவர்களின் அறிவியல் சோதனை, கண்ணாடி கூண்டு, அதற்குள் உருவான  தன்னைத் தானே பிரசவிக்கும் சோதனை உயிர்,பின் அதற்குள் ஆண், பெண் உயிர்களின் நடுவே உண்டாக்கப்பட்ட கண்ணாடிச்சுவர் என நம் எண்ணக்கூட்டுக்குள் அடங்காத கற்பனையில் விரியும் இந்த சிறுகதை...

பெண் ஏன் அடிமையானால்? எனும் கேள்விக்கு விடைதேடி.. முடிகிறது....

"மாற்றுத்தீர்வு "

சாகா வரத்திற்கான மருந்து தேடும் முயற்சியில் இருக்கும்,உதிரா, எழில். இவ்விரு பெண்களிடையேயான உணர்வுகள், ஊராய்வுகள், எனத் தொடங்கும் கதை,பைரவர் கோவில், கோவிலிலுள்ள சிற்பங்களில் இருக்கும், குழந்தை பிறப்பு சிற்பங்கள், முன்னோர்களின் "மரபணு திருத்தங்கள் " குறித்த அறிவு என வித்தியாசமாக பயணிக்க வைக்கிறது...

 

இருவரும் சேர்ந்து 173 ஆண்டுகளாக உயிர் வாழும் காட்டுவாசிப்பெண்ணை தேடி காட்டுக்குள் போக, அவளோ..இவர்கள் கோவிலுக்கு போனதும், காட்டுக்குள் வந்ததும் தற்செயல் இல்லை எனக்கூறி, தொடர்ச்சியாக கூறும் செய்திகள், உதிரா, எழிலுக்கு மட்டுமல்ல வாசிப்பவர்களுக்கும் ஆச்சர்யமும்,அதிர்ச்சியாய் இருக்கலாம்.

"சோஃபி"

மத்திம வயதுடைய ஒரு ஆராய்ச்சியாளர்,ஒரு தனித்தீவு, அதில் அவரின் இந்திரியம் கொண்டு, சுரைக்காய் கூட்டிலும்,குதிரையின் கருப்பையிலும் வைத்து வளர்க்கும் ஒரு உயிர். அதன் பெயர் "ஹோமோ அகந்துரஸ் " எனும் அறிவியல் பெயரும்,"சோஃபி" என்ற அழைக்கும் பெயரும் கொண்டு,கனவிலோ, கற்பனையிலோ சாதாரண மனிதனுக்கு வராத, கற்பனையோடு பயணிக்கிறது கதை..

இப்படி உருவான "சோஃபி".உணவாக சூரியனின் ஒளியை உட்கொள்வதும், இரவில் நட்சத்திரங்களை பிரதிபலிப்பதுமாக,இருக்கிறாள்."சோஃபி" குறித்த தகவல்கள்,அவளுக்கான ஆபத்துகள்,வருத்தங்கள், எதிர்கால வாய்ப்புகள் என் பலவற்றை எழுதி, ஒரு பாட்டிலுக்குள் அடைத்து,கடலுக்குள் எறிவதாய் கதை முடிகிறது..

 

"மரபணுக்கள்" வழக்கமான பாதையில் பயணிக்காத ஒரு மாற்று முயற்சி. ஆங்கிலத்தில் இப்படியான எழுத்துகளும் , திரைப்படங்களும் நிறைய உண்டு.தமிழில் இதுவே எனக்கு தெரிந்து முதன் முறை. வித்தியாசமான முயற்சி என்று ஒற்றை வார்த்தையில் கடந்து விட முடியாத சிறுகதை தொகுப்பு

கற்பனை எல்லோருக்கும் வரும்,ஆனால் தோழர் - ராம் பிரசாத் அவர்களின் கற்பனை அதீதத்தின் அதீதம்.இந்த அதீதத்தை வைத்து ஒரு ஐந்து ஹாலிவுட் படங்கலும், அதன் சீக்குவெல்களும் எடுக்கலாம்.

சில இடங்களின் ஆச்சர்யமும், சில இடங்களில் அதிர்ச்சியும், இப்படி மாறிப்போனால் எப்படி இருக்கும் என பல இடங்களில் பயமும், பதட்டமும்,கூட உண்டானது. பாம்பாக மாறும் சேஷம் கதை,என் தூக்கத்தை  திருடிப்போனது...

இப்படி "மரபணுக்கள்" நூலை வாசித்து வெளியில் வந்தும், வராமலும், என் மனமும், மரபணுவும் நிறைய கேள்விகளை சுமந்து,நிறையவே மாற்றம் கொண்டிருப்பதை உணர்கிறேன்.....

மாச்சீனி(Glucose ),  பாவனை நிரல் (simulation ), பகிரி (watsapp ), இப்படி நூல் நெடுக, நல்ல பல தமிழ்ச்சொற்களை பயன்படுத்தியிருப்பதற்காக, படைப்பாளருக்கு என் தனிப்பட்ட வாழ்த்துகள்...

நிறைவாக, எழுத்தாளரின் மரபணுக்களில் இன்னும் இது போல நிறைய மாற்று சிந்தனைகள் ஏற்படட்டும்..அவைகளை எங்களுக்கு வரிகளாக்கி தரட்டும்.

எழுத்தாளர் "ராம் பிரசாத்" - அவர்களை

"wow"- சொல்லி வாழ்த்துகிறேன்...

 

                   வாசிப்பின் மகிழ்வில்

                  - வினோத் பரமானந்தன்

                    கூடலூர் (தேனி )

 

"திறனாய்வாளரின் விபரம்"

பெயர் : செ.வினோத் பரமானந்தன்

ஊர் : கூடலூர் (தேனி மாவட்டம்)

பணி : இந்திய ராணுவத்தில் JCO. (Junior Commissioned Officer )

முகநூலில் "யாழ் துருவன்" எனும் பெயரில் கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறேன்...

தொடர்புக்கு : 7092664871( Whatsapp)

                             9042268278

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Saturday, 15 March 2025

புதிய பயணம்....

புதிய பயணம்....

https://youtu.be/Tgs8y47KjYY

இணைய நண்பர்கள் ஆதரவு தாரீர். என்னிடம் கேட்கக் கேள்விகள் இருப்பின் உள்பெட்டிக்கு அனுப்பவும் அல்லது ramprasath.ram@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

NGL: ramscifiwriter 

Monday, 10 March 2025

ஜாம்பி மரபணுக்கள்

ஜாம்பி மரபணுக்கள்

கொஞ்ச நாள் முன்பு தானே ஜாம்பி கிரகங்கள் பார்த்தோம். ஆனால், ஜாம்பி மரபணுக்களும் இருக்கின்றன. அதென்ன ஜாம்பி மரபணுக்கள்?

மனிதன் இறந்த பிறகு, உடலிலுள்ள எல்லா செல்களும் தனது இயக்கத்தை நிறுத்திவிடுகின்றன அல்லவா? அதுதான் இல்லையாம். சில செல்கள் மீண்டும் இயங்கத்துவங்குகின்றன. மரணித்த பூத உடலில் உயிரே இல்லாவிட்டாலும், இந்தச் சில செல்கள் தொடர்ந்து இயங்குகின்றனவாம்.

கிட்னி மாற்று அறுவை சிகிச்சைகளில் ஒன்றைச் சொல்வார்கள். சம்பந்தப்பட்ட மனித உடல் மரணத்தை தழுவிய சில மணி நேரங்களுக்குள் உறுப்பை அவ்வுடலிலிருந்து எடுத்து விட வேண்டும். இன்னும் சொல்லப்போனால், சாலச் சிறப்பு என்பது, அந்த மனித உடல் உயிருடன் இருக்கையிலேயே உறுப்பை எடுத்து விடுவது. ஏனெனில், மனித உடல் மரணித்த பிறகு எடுக்கப்படும் உறுப்புகளில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு கேன்சர் வர வாய்ப்பிருக்கிறது.

ஒரு பூத உடல் மரணத்தைத் தழுவுகையில் அது உடலிலுள்ள எல்லா செல்களுக்கும் எப்படித் தெரிகிறது என்பது மருத்துவ உலகமே வியக்கும் ஒன்று. இப்படி மரணித்த பிறகு, உயிர்த்திருக்கும் மரபணுக்களை ஜாம்பி மரபணுக்கள் என்கிறார்கள். இது பெரும்பான்மையாக உறுப்பு மாற்று சிகிச்சைகள், ஒரு சில குற்ற வழக்குகளில் எந்த நொடியில் துல்லியமான மரணம் நிகழ்ந்தது என்பன போன்றவற்றைக் கண்டுபிடிக்க இந்த ஜாம்பி மரபணுக்கள் பயன்படுவதாகச் சொல்கிறார்கள். 

மரணித்த பிறகும் உயிர்த்தெழும் மரபணுக்களா! என்று அதிர்ச்சியாகத்தானே இருக்கிறது? நம் உடளே ஒரு மாபெறும் மாயாஜாலம் தான். தினம் தினம் இப்படி ஒரு மாயாஜாலத்துடன் தான் சுற்றிக்கொண்டிருக்கிறோம்.




Tuesday, 4 March 2025

JUNK DNA

 JUNK DNA



ஆமாம். மரபணுக்கள் குறித்து நமக்குத் தெரியவருவதையெல்லாம் வைத்துப் பார்த்தால் இதைத்தான் சொல்ல வேண்டி இருக்கிறது.

நமது மரபணுக்களுள் பெரும்பான்மை, அதாவது 98% மரபணுக்களை junk DNA என்கிறார்கள். அதெப்படி 98 சதத்துக்கு தேவையற்றவைகள் இருக்கும் என்று தானே கேள்வி எழுகிறது? உயிர் என்பது துவக்கத்தில் ஒற்றை செல்லிலிருந்து துவங்கி, படிப்படியாக ஒரு கணித வாய்ப்பாடு போல், ஒவ்வொரு கட்டமாக, மிகவும் கவனத்துடன் செதுக்கப்பட்ட சிலை போல் செய்யப்பட்டது தான் இன்றிருக்கும் உயிர்கள் எல்லாமும். இந்த ஒட்டு மொத்த பயண தூரத்தில் எப்படி எப்படியெல்லாமோ நாம் உருமாறி, சில இயல்புகளைப் பற்றிக்கொண்டும், சில இயல்புகளைத் துறந்தும் மாறி மாறி வந்திருக்கிறோம். ஒவ்வொரு முறை இயல்புகளைத் துறந்தபோதும், அதற்காக மரபணுக்கள் பயணற்றதாய் ஆகியிருக்கின்றன. அவைகள் நம் மரபணுக்களை விட்டு அகலாமல் நாம் ஒரு காலத்தில் என்னவாக இருந்தோம் என்பதற்கான மெளன சாட்சியாக நம் மரபணுக்களிலேயே இருக்கின்றன.

இதன் பொருள் தன்னைத்தானே மிகப் பெருமையாக நினைத்துக்கொள்ளும் எல்லோருக்கும், தங்கள் பழக்க வழக்கங்களே உசத்தி என்று எண்ணிக்கொள்ளும் எல்லோருக்கும் பதில் அவர்களது மரபணுக்களிலேயே இருக்கிறது என்பதுதான். 98 சதம் வெட்டி தான் நாம் எல்லோருமே?

இங்கே அரண்மனையில் வாழ்பவனுக்கும், சேரியில் வாழ்பவனுக்கும் மரபணு ரீதியில் எந்த வித்தியாசமும் இல்லை.

மரபணுக்களில் 100 சதத்தையும் பயன்படுத்தும் உயிர்கள் நம்மிடையே இருக்கின்றன. தன்னிடம் இருக்கும் மரபணுவின் மிக மிக குறைவான இரண்டே இரண்டு சதத்தைப் பயன்படுத்தும் நாம் உசத்தியா? அல்லது தன் மரபணுவின் 100 சதத்தையும் பயன்படுத்தத்தெரிந்த உயிர் உசத்தியா?

நீங்கள் படத்தில் காண்பது, அப்படி, தன் மரபணுவின் உச்சபட்ச சதவிகிதத்தைப் பயன்படுத்தும் உயிர்: ஒரு தாவரம். பெயர் Bladderwort.

இந்தத் தாவரத்தின் மரபணுவில் தான் junk DNAவின் சதவிகிதம் மிக மிகக் குறைவாம். நம்மில் யாரேனும் இதற்கு முன் இதைப் பார்த்திருக்கிறோமா? இல்லை தானே.

நமக்கெல்லாம் எத்தனை கொழுப்பு பார்த்தீர்களா? வெறும் இரண்டே சதவிகிதத்தைத்தான் பயன்படுத்துகிறோம். அதாவது கடைசி ராங்க் வாங்கி ஃபெயில் ஆவதைப் போல. ஃபெயிலானவர்களையெல்லாம் ஒரு வகுப்பறையில் போட்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது பூமியில் மனித இனம்.

அது சரி. பிலிஸ்தீன் சமூகம் என்று சும்மாவா சொல்கிறார்கள்? பூமி முழுக்கவே மனித இனம் என்பது பிலிஸ்தீன் சமூகம் தான் போல.





Saturday, 1 March 2025

ஆவி மரபணுக்கள் (Ghost DNA)

ஆவி மரபணுக்கள் (Ghost DNA)




ஆமாங்க. Ghost DNA என்று ஒன்று இருக்கிறது. மேற்கு ஆப்ரிக்காவில் ஒரு பழங்குடியினரின் மரபணுவில் ஒரு பகுதி, மனித இனத்துக்கு இதுகாறும் தெரிந்த எந்த இனத்தின் மரபணுச் சாயலும் இல்லாமல் இருக்கிறதாம். அதனாலேயே அந்தப் பகுதியை Ghost DNA என்கிறார்கள்.

பண்டைக்காலத்தில் வாழ்ந்த அத்தனை குரங்கினங்களின் மரபணுக்களும் அட்டவணைப் படுத்தப்பட்டிருக்கின்றன. எப்படி? எல்லாம் படிமங்கள் அதாவது Fossilகள் வழியாகத்தான். அந்தப்படி மனித மரபணுக்களில் , நியாண்டர்தல், டெனிசோவன் என்று அக்காலத்தில் வாழ்ந்த பல மனித இனங்களுடன் ஹோமோ சாப்பியன்களான நாம் இணைந்து இனப்பெருக்கம் செய்திருக்கிறோம். ஆதலால், நாம் இனப்பெருக்கம் செய்த அத்தனை இனங்களின் மரபணுக்களும் நம் மரபணுக்களில் உள்ளன. ஆனால், படிமங்கள் வழி கூட இந்தக் குறிப்பிட்ட மரபணுத்தொகுதி எந்த இனத்திலிருந்து வந்தது என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை என்கிறார்கள்.

இப்போதைக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, படிமங்கள் தொலைந்த ஏதோ ஒரு இனமாக இருக்கலாம் என்கிறார்கள். அதாவது படிமங்கள் படிமங்களாகவே இருக்க ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பமும், அழுத்தமும் தேவைப்படுகிறது. அந்த அளவி மிஞ்சினால், படிமங்கள் கூட கரைந்து விடலாம். அப்படி கரைந்து போன ஒரு இனத்தின் மரபணுவாக அது இருக்கலாம் என்பது ஊகம். இந்த வாய்ப்பும் இல்லையென்றால்,

வேற்று கிரக உயிரினங்களுடன் இனப்பெருக்கம் என்று தான் போய் நிற்கும். அதை விடுங்கள். எப்போதிருந்து ஜாதி பார்க்காமல் திருமணங்கள் செய்வதில்லை என்று கிளம்பினார்கள் என்று தெரியவில்லை. டெனிசோவன்களுடனும், நியாண்டர்தல்களுடனும் நாம் இனப்பெருக்கம் செய்யத்துவங்கியது சுமார் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் என்கிறார்கள். இப்படி கலப்பு இனப்பெருக்கம் வாயிலாகத்தான் மனித இனம் இன்றிருக்கும் இடத்திற்கு வந்திருக்கிறது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், இந்தக் கலப்பு இனப்பெருக்கத்திற்குத்தான் ஐம்பதாயிரம் ஆண்டுகள் தொடர்ச்சி கிடைத்திருக்கிறது. சில ஆயிரங்களில் இருந்த எண்ணிக்கை இன்று 800 கோடியாகியிருக்கிறது. Survival Advantage க்கு இதை விடவும் ஒரு யுக்தி வேண்டுமா என்ன?