நூல் விமர்சனம் : "மரபணுக்கள் "
நூலின் பெயர் : "மரபணுக்கள்"
ஆசிரியர் : ராம் பிரசாத்
பதிப்பகம் : படைப்பு
பக்கங்கள் :135
விலை :190 ரூபாய்
இந்த நூலின் ஆசிரியர், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் விருது
பெற்ற எழுத்தாளர் ராம்பிரசாத். ஒரு கணினியாளர், கதையாளரானால் என்னவாகும்?, இப்படித்தான்
அறிவின் குழந்தைகளும், அறிவியல் குழந்தைகளும், கதை வழியே,கற்பனை வழியே ஓடித் திரிவார்கள்.
எதிர்காலத்தின் உலகின் போக்கும், உணர்வின் போக்கும் எப்படியிருக்கும் என்பதை..அச்சுறுத்தலாக
இல்லாமல்,நம்மை அதற்கு ஏற்ப மனதளவில் தயார் செய்யும் நோக்கில் படைத்திருக்கும் படைப்பை...
நம் படைப்பு குழுமம் வெளியிட்டிருப்பது இன்னும் சிறப்பு...
விஞ்ஞானம், அறிவியல், மரபணு, இப்படி இலக்கியத்தோடு, அறிவியல் கலந்த
கதைகளும், கட்டுரைகளும்,புனைவுகளும் தமிழில் மிக, மிகக் குறைவு. அதற்கு தமிழின் மரபணு
குறைபாடாகக் கூட இருக்கலாம்..."மரபணுக்கள் ".. 10 விஞ்ஞான சிறுகதைகள் கொண்ட
தொகுப்பு.
"பிரதி எடுக்காதே"
முதல் சிறுகதை.
ஆறு ஆண்டுகளாக காதலிக்கும் மிலி,மற்றும் கரீம் எனும் இரண்டு கதாபாத்திரங்களிடயே
இடையே நிகழும் உணர்வு போராட்டமே இந்த கதை..
இன்றே வாழ்ந்து விட வேண்டும் என்பவன் கரீம்..
"நாளையும் வாழ்வு இருக்கிறது " என்பவள் "மிலி"..
"மிலி" யின் எண்ணத்தை, ஏக்கத்தை, எதிர்பார்ப்பை, புரிந்து
கொள்ளாத முடியாத கரீம், மிலியை திருப்திபடுத்த தன்னைப்போலவே பல பிரதிகள் எடுக்கும்
எந்திரத்தை கொண்டு, தன்னையே பல பிரதிகள் எடுக்கத் தொடங்க, உடனே மறுக்கும் மிலி, தான்
இதனை முன்னரே முயற்சித்து பார்த்து விட்டதாகவும், அது இன்னும் ஆபத்தானது என்றும், தானே
அப்படியான பிரதிகளில் ஒருத்தி தான் எனும் இடம், கதையில் திருப்பம்...
"ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றிற்கு , உடல்
மொழியில் உருவம் தந்தான்..
"பிரதிகள்" மரபணுக்களை மாற்றுவதில்லை.."
இப்படி கதையின் சில இடங்களில் கவித்துவமும் கலந்தோடி இருப்பதை ரசிக்கலாம்..நிறைவாக
"மனமுவந்து முயன்றால் மட்டுமே,ஒருவருக்கு மற்றவரின் உணர்வுகள் புரியும்..மாற்று
பிரபஞ்சத்தால், மாற்றுப் பிரதியால் அல்ல, என்று முடிகிறது முதல் கதை...
"சேஷம்"
அடுத்ததாக ஒரு வித்தியாச கதை இது,மனிதர்கள் தற்காலிகமாக பச்சை குத்துவதற்கு
பதிலாக, ஒரு கரு வயிற்றில் உருவாகும் போதே, அந்த கருவுக்குள் ஒரு பச்சோந்தியின் நிறம்
மாறுதலுக்கான மரபணுவையோ, அல்லது ஒரு மயில் தோகையின் மரபணுவையோ கருவுக்குள் செலுத்திக்
கொள்வது. செலுத்திய மரபணுக்கள் உடலில் உறக்க நிலையிலேயே இருக்கும், குறிப்பிட்ட உடற்பயிற்சிகள்
மூலம் அவற்றை உசுப்பவோ, மீண்டும் உறங்க வைக்கவோ முடியும் எனும் அதீத வித்தியாச களத்தில்
இந்த கதை நீள்கிறது..
தன் காதலன், "ஸ்டுவர்ட்" க்கு சார்ப்பத்தின் மரபணு இருப்பதால்,
அரசாங்கம் அவரை தனிமைப்படுத்த,அவருக்காக அவரின் காதலி, நீதிமன்றத்தில், வாதடுவதாக விரிகிறது
கதை..ஆனாலும் ஏற்காத, நீதிமன்றம் அவரை சிறையில் அடைக்க, காதலன் "ஸ்டுவர்ட்
" பாம்பின் மரபணு இருப்பதால், முழு சர்ப்பமாக உருவம் கொண்டு,இவளை கானகத்திற்கு
கடத்தி வர,என விரியும் கதையில் "அடாவிசம்", பாம்புக்கு இதயத்தில் இதயத்தின்
மூன்று அறைகள் இருக்கும் - இப்படியான அரிய தகவல்களுடன் நீளும் இந்த கதையின் கடைசியில்,
ஸ்டுவர்ட் என்னவாக மாறுகிறான் எனும் அதீத ஆச்சர்யத்தோடு முடிகிறது கதை..
"ஊரும் மனிதன்"
முதலை போல உருவம் கொண்ட மகன்,அவனை சரி செய்ய முயலும் தந்தை, கடவுள்
போல, ஞானி போல, மருத்துவன் போல வித்தியாசமான உடல் அமைப்பில் காட்டில் வாழும் ஒரு அமானுஷ்யன்,
இப்படி மூவருக்குள் நடக்கும் உரையாடலோடு தொடரும் இந்த கதையில், நிறைய இடங்களில்
"ஜென்" தத்துவங்களையும், பரிணாம வளர்ச்சியின் ஒவ்வொரு மைல்கல்லிலும்
எதனையோ இழந்து தான், எதையோ பெற்றிருப்போம் " என "டார்வினிசமும்" கலந்து
கதை சொல்கிறார் எழுத்தாளர்.பருந்து, எலி, சிட்டுக்குருவி,
புழு, பூரான், முதலை இவைகளை வைத்து ஒரு முழு பத்தி எழுதியிருக்கும் இடம், ஓரிரு முறை
படித்தால் மட்டுமே புரியும் வகையில் சொல்லப்பட்டிருக்கும் ஆழமான தகவல்.
"உங்கள் வாழ்வை இனிமேலாவது வாழுங்கள் " என முடியும் வரிகள்..எனக்கானதாக,
நமக்கானதாகப்பட்டது...
"சரோஜா தேவி புத்தகம் "
ஒரு விடுதி, அதன் உரிமையாளர் விஸ்வநாதன்,பதின்ம வயதிலிருக்கும் அவரின்
பேரனுக்கு, 'மல்லிகா' எனும் வயதில் மூத்த ஒரு
பெண்ணை முதன் முறை பார்த்ததும் ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டதை பார்த்து,ஒரு மனநல
மருத்துவரை அழைத்து வருகிறார் தாத்தா.சம்பந்த பட்டவர்களின் மரபணுக்களை ஆராயத் தொடங்கும்
மருத்துவர், முடிவு குறித்தும், பேரனின் மரபணு குறித்தும், அந்த வயதில் மூத்த பெண்
குறித்தும் அதிர்ச்சி தரும் விஷயங்களை, விஸ்வநாதனோடு பகிர்வதாக நீளும் இந்த கதையில்,
"மான்" ஒரு குறியீடாக கதையெங்கும் துள்ளி ஓடுகிறது.மேலும் "GENE
METHYLATION", "UNI PARENTAL DISOMY" எனும் அதீத மருத்துவ வார்த்தைகள் குறித்த புரிதலும்,
புதிரும் வாசிப்பவர்களுக்கு புது அனுபவத்தை தரும்.கடைசியில், தலைமுறைகளுக்கிடையே,ஒருவரின்
குணங்கள், செயல்பாடுகள் மரபணுக்கூறுகள் வழியே அடுத்த சில தலைமுறையிலும், "எட்டிபார்த்தல்",
"உயிர்த்தெழுதல்" நிகழும் என்கிறது இந்த கதை.
"பச்சிலை "
காட்டில் ட்ரெக்கிங் செல்லும் போது, காணாமல் போன தன் கணவன் ஜோஸை ,தன் நண்பர் ஞானனுடன்
(இந்த பெயரே சூப்பர் )சேர்ந்து மீண்டும் காட்டுக்குள் தேடுகிறாள் வானதி.ஒரு வித்தியாசமான
மரத்தில், ஜோசின் சட்டை தெரிய, "மரங்களும், இலைகளும் எப்படி மனிதர்களுக்கு மூலிகையாக, மருந்தாக
இருக்கிறார்களோ, இங்கிருக்கும் சில குறிப்பிட்ட மரங்களுக்கு, மனிதர்கள், மருந்தாக மாறுகிறார்கள்"
எனும் வித்தியாசமான கோணத்தில் பயணிக்கிறது இந்த கதை.
இலையின் பிரபஞ்ச வெளி, வயிற்றிற்குள் வளரும் செடி,தாவரங்களும்,மரங்களும்
தான் கல், தோன்றி, மண் தோன்றும் முன் பூமியில் தோன்றியது எனில், மனிதனும், விலங்குகளும்,
அவைகளின் முன், சிறுபான்மையினம்... இப்படி நிறைய நிறைய சொல்லிப்போகிறது "பச்சிலை"..
"எப்போதும் பெண் "
சூரியனின் "வெஞ்சினம்"(நான் ரசித்த வார்த்தை) காரணமாக
பூமியில் மொத்தமே 3000 உயிர்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. அதிலும் பெரும்பான்மை பெண்கள்
மட்டுமே.அதில் அஞ்சலி, அவளின் அம்மா மருத்துவர் அபி,அவரின் தோழி மரியம், இவர்களின்
மூவரை கொண்ட இந்த கதை, பெண்ணியம் பேசுகிறது.. இல்லையல்லை, பெண்ணின் மென்மை குணத்திற்கான
மரபணுவை மரணிக்க வைக்க முயல்கிறது. ஆண்களுக்கு "பலாத்காரம் செய்தல்", ஆசிட்
வீசுவது, கொலை செய்தல், இவைகளை செய்யத் தூண்டும் மரபணுக்களை நீக்க முயல்கிறது..
"காதல்" என்பது ஆணைப் பொறுத்த வரையில் கலவிக்கான ஏற்பாடு
" என்ற வரியைப் படித்ததும்,ஒரு ஆணாக "சுருக்"கென சுட்டது. ஆனால் யோசித்துப்
பார்த்தால் அது உண்மையும் கூட. மேலும் இதை எழுதியதும் ஒரு ஆண் என்றதும், உண்மையை உடனே
மனம் ஏற்றுக்கொண்டது..
"பாவனை நிரல்"
(Simulation) மூலம் இவர்கள் சோதனை செய்து நிறை, குறைகளை கலைந்து, 1500 ஆண்,
1500 பெண் என உருவாக்கும் இணைகளோடு, இவர்களின் உரையாடலும் நிறைய, நிறைய பேசிப்போகும்
விஷயங்களை விஞ்ஞான பார்வையோடு ரசிக்கலாம்..
"தழுவு கருவி"
விண்மீன் மண்டலத்தின் பாதுகாவல் சிறைச்சாலை,
அங்கிருந்து தப்பித்த ஒரு கைதி,
"கால்பாட்" எனும் விண்மீன் ரோந்துக் குழு, இப்படி
"ஸ்டார் வார்ஸ்" படத்திற்கு சற்றும் குறைவில்லாத கதை இது..
நாயகன் சிறை சென்ற காரணம்,வாசிப்பவர்களுக்கு,நிகழ்கால அரசியலில்,
எதை, எதையோ நியாபகம் படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.கதை நாயகனின் சாயல், பழக்க வழக்கங்கள்
எல்லாமே, அவரின் பாட்டியை உணர்த்தும்படியிருக்க,அவர் பாட்டி குறித்த தகவல்களை திரட்ட,பாட்டி
சேகரித்து வைத்த இரண்டு அறிவியல் புனைவிதழில் உள்ள அறிவியல் கட்டுரைகள், அது தரும்
அதிர்ச்சி தகவல்கள்,அதைத் தொடரும் நிகழ்வுகளும், நினைவுகளும் ஒரு அருமையான திரில்லர் வெப்சீரியஸ் போன்ற உணர்வைத்
தரும் கதை..
"கண்ணாடிச் சுவர்"
பெண்ணும், பெண்ணும் திருமணம் செய்தால், ஏன் இந்த உலகம் ஏற்றுக்கொள்வதில்லை
எனும் கேள்வியோடு தொடங்கும் கதை, க்ளாரா, நான்சி எனும் இரு பெண்கள், அவர்களுக்குள்
திருமணம்,பரிணாம வளர்ச்சி குறித்த அவர்களின் அறிவியல் சோதனை, கண்ணாடி கூண்டு, அதற்குள்
உருவான தன்னைத் தானே பிரசவிக்கும் சோதனை உயிர்,பின்
அதற்குள் ஆண், பெண் உயிர்களின் நடுவே உண்டாக்கப்பட்ட கண்ணாடிச்சுவர் என நம் எண்ணக்கூட்டுக்குள்
அடங்காத கற்பனையில் விரியும் இந்த சிறுகதை...
பெண் ஏன் அடிமையானால்? எனும் கேள்விக்கு விடைதேடி.. முடிகிறது....
"மாற்றுத்தீர்வு "
சாகா வரத்திற்கான மருந்து தேடும் முயற்சியில் இருக்கும்,உதிரா, எழில்.
இவ்விரு பெண்களிடையேயான உணர்வுகள், ஊராய்வுகள், எனத் தொடங்கும் கதை,பைரவர் கோவில்,
கோவிலிலுள்ள சிற்பங்களில் இருக்கும், குழந்தை பிறப்பு சிற்பங்கள், முன்னோர்களின்
"மரபணு திருத்தங்கள் " குறித்த அறிவு என வித்தியாசமாக பயணிக்க வைக்கிறது...
இருவரும் சேர்ந்து 173 ஆண்டுகளாக உயிர் வாழும் காட்டுவாசிப்பெண்ணை
தேடி காட்டுக்குள் போக, அவளோ..இவர்கள் கோவிலுக்கு போனதும், காட்டுக்குள் வந்ததும் தற்செயல்
இல்லை எனக்கூறி, தொடர்ச்சியாக கூறும் செய்திகள், உதிரா, எழிலுக்கு மட்டுமல்ல வாசிப்பவர்களுக்கும்
ஆச்சர்யமும்,அதிர்ச்சியாய் இருக்கலாம்.
"சோஃபி"
மத்திம வயதுடைய ஒரு ஆராய்ச்சியாளர்,ஒரு தனித்தீவு, அதில் அவரின்
இந்திரியம் கொண்டு, சுரைக்காய் கூட்டிலும்,குதிரையின் கருப்பையிலும் வைத்து வளர்க்கும்
ஒரு உயிர். அதன் பெயர் "ஹோமோ அகந்துரஸ் " எனும் அறிவியல் பெயரும்,"சோஃபி"
என்ற அழைக்கும் பெயரும் கொண்டு,கனவிலோ, கற்பனையிலோ சாதாரண மனிதனுக்கு வராத, கற்பனையோடு
பயணிக்கிறது கதை..
இப்படி உருவான "சோஃபி".உணவாக சூரியனின் ஒளியை உட்கொள்வதும்,
இரவில் நட்சத்திரங்களை பிரதிபலிப்பதுமாக,இருக்கிறாள்."சோஃபி" குறித்த தகவல்கள்,அவளுக்கான
ஆபத்துகள்,வருத்தங்கள், எதிர்கால வாய்ப்புகள் என் பலவற்றை எழுதி, ஒரு பாட்டிலுக்குள்
அடைத்து,கடலுக்குள் எறிவதாய் கதை முடிகிறது..
"மரபணுக்கள்" வழக்கமான பாதையில் பயணிக்காத ஒரு மாற்று
முயற்சி. ஆங்கிலத்தில் இப்படியான எழுத்துகளும் , திரைப்படங்களும் நிறைய உண்டு.தமிழில்
இதுவே எனக்கு தெரிந்து முதன் முறை. வித்தியாசமான முயற்சி என்று ஒற்றை வார்த்தையில்
கடந்து விட முடியாத சிறுகதை தொகுப்பு
கற்பனை எல்லோருக்கும் வரும்,ஆனால் தோழர் - ராம் பிரசாத் அவர்களின் கற்பனை அதீதத்தின்
அதீதம்.இந்த அதீதத்தை வைத்து ஒரு ஐந்து ஹாலிவுட் படங்கலும், அதன் சீக்குவெல்களும் எடுக்கலாம்.
சில இடங்களின் ஆச்சர்யமும், சில இடங்களில் அதிர்ச்சியும், இப்படி
மாறிப்போனால் எப்படி இருக்கும் என பல இடங்களில் பயமும், பதட்டமும்,கூட உண்டானது. பாம்பாக
மாறும் சேஷம் கதை,என் தூக்கத்தை திருடிப்போனது...
இப்படி "மரபணுக்கள்" நூலை வாசித்து வெளியில் வந்தும்,
வராமலும், என் மனமும், மரபணுவும் நிறைய கேள்விகளை சுமந்து,நிறையவே மாற்றம் கொண்டிருப்பதை
உணர்கிறேன்.....
மாச்சீனி(Glucose ), பாவனை
நிரல் (simulation ), பகிரி (watsapp ), இப்படி நூல் நெடுக, நல்ல பல தமிழ்ச்சொற்களை
பயன்படுத்தியிருப்பதற்காக, படைப்பாளருக்கு என் தனிப்பட்ட வாழ்த்துகள்...
நிறைவாக, எழுத்தாளரின் மரபணுக்களில் இன்னும் இது போல நிறைய மாற்று
சிந்தனைகள் ஏற்படட்டும்..அவைகளை எங்களுக்கு வரிகளாக்கி தரட்டும்.
எழுத்தாளர் "ராம் பிரசாத்" - அவர்களை
"wow"- சொல்லி வாழ்த்துகிறேன்...
வாசிப்பின்
மகிழ்வில்
- வினோத்
பரமானந்தன்
கூடலூர்
(தேனி )
"திறனாய்வாளரின் விபரம்"
பெயர் : செ.வினோத் பரமானந்தன்
ஊர் : கூடலூர் (தேனி மாவட்டம்)
பணி : இந்திய ராணுவத்தில் JCO. (Junior Commissioned Officer )
முகநூலில் "யாழ் துருவன்" எனும் பெயரில் கவிதைகள், கட்டுரைகள்
எழுதி வருகிறேன்...
தொடர்புக்கு : 7092664871( Whatsapp)
9042268278