என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday, 22 March 2025

மரபணுக்கள் - விமர்சனம் - சாந்தி

 எழுத்தாளர் ராம் பிரசாத்துக்கு வணக்கம் ......

 

உங்களது படைப்புகள் அனைத்தும் நான் வாசித்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் உங்களின் எழுத்துக்களின் ஆழம் உங்கள் படைப்புகளில் இருப்பதை என்னால் உணர புரிகிறது.

 

நான் முழுமையாக மரபணுக்கள் என்ற நூலை படிக்க நேர்ந்தது .அறிவியல் சார்ந்த எழுத்துக்களை ஒரு சிலரே மையமாக வைத்து சாதிக்க முடிகிறது .அதில் அந்த வெற்றிப் பயணத்தில் உங்கள் எழுத்துக்கள் மேலும் பல பரிமாணங்கள் பெறும் என்பது புரிகிறது.

 

எதிர்காலம் குறித்த உங்கள் கனவு பார்வை மேலும் பல பரிமாணங்களை இந்த விஞ்ஞான உலகில் ஏற்படுத்த கூடும் .எதிர்கால உலகம் எப்படி இருக்கும் என்பது மரபணுக்கள் வழியாக தெரிகிறது விஞ்ஞானத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் மனித குலத்திற்கு மாபெரும் சவாலாக வும்.... பிரமிப்பாகவும் உற்று நோக்கும் விதமாக வியக்க வைக்கும் அளவில் உங்கள் எடுத்தாற்றல் உள்ளது .படைப்பு;, படிப்பு ,பசி உள்ளவர்களுக்கு தீணியாக அமைகிறது உங்களது ஒவ்வொரு படைப்பிலும் பெற்றோர்கள் நினைவு கூறும் விதம் ,கடந்த கால நினைவுகளை பகிரும் வி தம், பிரம்மிக்க வைக்கிறது.

 

பிரதியெடுக்காதே:-

 உங்களது எழுத்தில் "நானே எப்போதும் மன்னிப்பு கேட் கிறேன்" ......எனும்போது உங்களது உயர்ந்த நோக்கம் புரிகிற து. "இது மிகவும் பழைய தீர்வு உன் தீர்வுகள் கூட என்னை ஈர்க்க முடியாமல் திணறுகிறது ". ..... "ஒரே ஒரு நீ மற்றும் நான் நம்மிடையே இந்த திருப்தி அளிக்காத உறவுகள்" இந்த வார்த்தை ஜாலம் நடைமுறை வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டி உண்மையை உணர்த்துகிறது.

 

ஆண்-பெண் ஈர்ப்புக்குப் பின்னால், மரபணுக்கள்! அறிவியல் புனைவு தளத்தில் வேறெங்கும் கேள்விப்படாத கருத்தாக்கம்.

 

சேஷம்:-

மூன்று அறைகள் கொண்ட இதயம், மனிதர்களுக்கா! படித்ததுமே ஆச்சர்யம்! பொதுவாக மனிதன், குரங்கினங்களின் வழித்தோன்றல் என்றே படித்துவிட்டு, முதன் முறையாக, சர்ப்பங்களில் வழித்தோன்றல் என்று படிப்பது அதிர்ச்சியளித்தது. அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கும் இடத்தை ரசித்தேன்.

 

ஊரும் மனிதன்:-

 

பருந்து, எலி, சிட்டுக்குருவி, புழு, பூரான், முதலை ஆகியன குறித்து பொதுவில் எல்லோரும் அறிந்திருப்பார்கள். ஆனால், இவற்றை வைத்து எழுதப்பட்டிருக்கும் ஒரு முழுப் பாரா?! படித்ததும் அட!என்று தோன்றியது. எல்லோருக்கும் தெரிந்த ஒன்றிலிருந்து இதுகாறும் எவரும் சொல்லாததைச் சொல்வது தொடர்ந்து உங்கள் எழுத்துக்களில் வெளிப்படுகின்றது.

 

சரோஜா தேவி புத்தகம்:-

 

கொஞ்சம் பிசகினாலும் சொதப்பிவிடக்கூடிய கதை. ஆனால், கதையின் அறிவியல், கதையை வேறொரு தளத்திற்கு நகர்த்திவிடுகிறது. இது போல் இதற்கு முன் கேட்டதே இல்லை.

 

பச்சிலை:-

 

கீரை, காய்கறிகளை உணவாக உண்கிறோம். ரசம், துவையல், சட்னி என்று. பச்சிலைகளுக்கு மனிதன் மருந்தானால்? கற்பனை வளம் அருமை. கதை படிக்க படிக்க படிப்பவருக்கேற்ப வேறு எதை எதையோ உணர்த்துகிறது. மிகவும் ஆழமான அர்த்தங்கள்.

 

எப்போதும் பெண்:-

 

'பெண் ஏன் அடிமையானால்?' என்று துவங்கி, மரபணுக்களில் மாற்றங்கள் செய்வது போன்ற கதை. இந்தக் கதையிலும் முடிவை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்தக் கதையும் யோசிக்கத் தூண்டுவதாக இருந்தது.

 

தழுவு கருவி:-

 

ஒரு மனுஷி தன் பேரனின் உடலில் மறுஜென்மம் எடுக்கிறாள். மரபணுக்கள் வழியாக... இது தமிழுக்கு புதுசு.சினிமாவில் பேய், ஆன்மா என்றெல்லாம் வரும். அது, அமானுஷ்யம். ஆனால், இது மரபணுக்கள். நிச்சயமாக மிக வினோதமான பார்வைதான்.  ஹாலிவுட் சினிமா கதை போலிருந்தது.

 

கண்ணாடிச்சுவர்:-

 

முதலில் தோன்றிய உயிர், பெண். ஆனால், இப்போது ஆண் இல்லாமல் குழந்தைப்பேறு இல்லை என்னும் நிலை. நாமெல்லாம் அறிந்ததுதான். அறியாதது, சிறுகதையில் வருகிறது. ஓரினச்சேர்க்கை திருமணங்கள் குறித்து எப்படியெல்லாமோ கேட்டிருக்கிறேன். கண்ணாடிச்சுவர் மிகவும் வித்தியாசமான கோணம்.

 

 

மாற்றுத்தீர்வு:-

 

விலங்கினங்களில் பாலுணர்வு, பகடி செய்யப்படும் ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது. அதற்கு இப்படியோரு அர்த்தம் தர முடியும் என்பதே ஆச்சர்யம் தான். 'ஒருவேளை இருக்குமோ' என்று தோன்றச் செய்கிறது அறிவியல் விளக்கம். மரபணுக்கள் ரீதியில் சாகாவரம், அருமை.

 

சோஃபி:-

 

ஒரு பரிசோதனையின் விளைவாக உருவாகிறது ஒரு உயிர். அது என்னவெல்லாம் செய்கிறது? போரிலிருந்து திரும்பும் வீரர்களால் நேரும் பக்கவிளைவுகள் வைத்து கதையை நகர்த்திய விதம் அருமை.

 

இப்படியெல்லாம் எப்படி ஒருவருக்கு யோசிக்கத் தோன்றியது? இப்படி யோசிக்க என்ன மனோநிலை இருக்க வேணும்? வியப்பாக இருக்கிறது. அறிவியல் கதைப் புத்தகங்களில் வினோதமான புத்தகங்களிலேயே மிகவும் வினோதமான தொகுப்பு "மரபணுக்கள்". பல கதைகள்  சுஜாதாவை நினைவூட்டின.  உங்கள் பல கதைகளில், வாதங்கள், தமிழ் இலக்கிய உலகிற்குப் புதியது. தேவையும் கூட. பல இடங்களில் புருவம் உயர்த்திவிட்டேன்.

 

மேலும் பல அறிவியல் சார்ந்த எழுத்துக்களை உங்கள் மூலமாக இந்த விஞ்ஞான உலகில் சமூகம் எதிர் நோக்கி காத்திருக்கிறது.மேலும் மேலும் உங்கள் எழுத்துக்கள் பல பரிமாணங்களை பெற வாழ்த்துக்கள்..